Saturday 30 April 2016

திரும்பிப் பார்க்கிறேன்

    நாற்பது ஆண்டுகாலப் பள்ளிப் பணி. கோவை நேரு வித்யாலயா பள்ளியில் ஆய்வக உதவியாளராகச் சேர்ந்து, கரூர் லார்ட்ஸ் பார்க் பள்ளியின் முதல்வராக இன்றைக்கு எனது பணியை நிறைவு செய்கிறேன்.

Sunday 17 April 2016

அனல் விழியாள்

    இரவு பத்து மணி.

    அலைப்பேசியில் மனைவி அழைத்துக்கொண்டே இருந்தாள். அதை கண்டுகொள்ளாமல் கணினியில் தன் பணியைத் தொடர்ந்தான். ஒருவழியாக தான் செய்த வேலையை முடித்துவிட்டு தன் காரில் இல்லம் நோக்கி விரைந்தான் அர்ஜுன். இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் அவன் மென்பொறியாளராக உள்ளான்.

Friday 15 April 2016

அடுத்தப் பிறவியிலும்.......

   என்னுடைய பணிக்காலத்தில் எத்தனையோ சோதனைகளைச் செய்து பார்த்துள்ளேன். விழாக்களைக் கூட ஆண்டுதோறும் வெவ்வேறு விதமாக நடத்துவேன். ஒரு மாணவன் ஓடிவந்து ஒரு மாற்றத்தைப் புகுத்த விரும்பினால் கூட ஏற்றுக் கொள்வேன்.

Thursday 7 April 2016

முதுமையின் விண்ணப்பம்

என் அருமை மக்களே!
எனது இறுதி வேண்டுகோளுக்குக்
கொஞ்சம் செவிகளைத் தாருங்கள்!

நான் மூப்படையும்போது இன்னும்
என் கைகள் அதிகமாய் நடுங்கும்.
நடுங்கும் என் கைகளிலிருந்து
உணவுத் துகள்கள் சிதறி என்
நெஞ்சில் விழுவதைக் காண்பீர்கள்!
அப்போது சற்று உதவுங்களேன்.

உங்களுக்குக் கதைகள் சொல்லி
மகிழ்வித்த நாக்குக் குளறும்.
நான் வாய்தவறி உளறும்போது
பரிகாசம் செய்யாமல் இருங்கள்.
உங்கள் மழலை மொழியில்
மகிழ்ந்தேன்; எனது உளறுமொழியை
கொஞ்சம் பொறுத்துக்  கொள்ளுங்கள்.

உங்கள் உடலுக்கு நறுமணம் பூசி
அழகு பார்த்த காலம் அது!
 என் உடலில் துர்நாற்றம் வீசும்
மூக்கைச் சுளித்து வெறுக்காதீர்.

உங்கள் சிறுநீரையும் மலத்தையும்
உவந்து அகற்றிய நாள்கள் எத்தனை!
ஒன்றுக்கும் இரண்டுக்கும் குளிக்கவும்
முடியாமல் போகும் காலத்தில்
இந்த அடிப்படைத் தேவைகளுக்கு
உதவ மாட்டீர்களா? என் மக்களே!

என் கை விரல்களைப் பிடித்தபடி
சுற்றிச் சுற்றி வந்தீர்களே!
விரைவில் தளர்ந்து விழப்போகும் என்
கைகளைச் சற்றுத் தாங்கிப் பிடிப்பீர்களா?

உள்ளாடை அணிவிக்காமல் உங்களை
ஒருநாளும் விட்டு வைத்ததில்லை!
 எனது கீழாடைகள் நழுவும் வேளையில்
மானம் காக்க உங்கள் கைகள் உதவுமா?

நீ பிறக்கும் நிமிடத்திற்காக
காத்து நின்ற காலம் அது!
இறுதிக் காலத்தில் எனது படுக்கையைச்
சுற்றி நின்று கடைசி மூச்சு
அமைதியாக அன்புடன் விடைபெற
அனைவரும் உதவுவீர்களா?

குறிப்பு: கவிதை நடை மட்டுமே என்னுடையது. சவுக்கத் அலி என்பார் மலையாளத்தில் எழுதிய மூலக் கவிதையின் சாரமே இது. 
நன்றி: சமரசம் மதம் இருமுறை இதழ்-ஏப்ரல் 2016.