புதுக்கோட்டை கணினித் தமிழ்ச்
சங்கம் நடத்திய இரண்டு நாள் இணையப் பயிற்சி முகாம் இரண்டு மணி நேரத்தில் முடிந்தது
போல் தோன்றியது. ஒருங்கிணைப்பாளர் குழுத் தலைவர்(?) திரு.நா.முத்துநிலவன் ஒரு
நிமிடத்தைக்கூட வீணடிக்காமல் பயிற்சி வகுப்பைக் கட்டுக்கோப்புடன் நடத்திய பாங்கு
பாராட்டுக்குரியது. அமைப்பில்லாத அமைப்பைக்கொண்டு இந்தப் போடு போடுகிறார். ஆனால் அமைப்புச்
சார்ந்த பல அமைப்புகள், வங்கிக் கணக்கில் பல இலட்சங்கள் இருந்தும் செயல்படாமல்
இருப்பதையும், அப்படியே செய்தாலும் ஒரு சடங்காகச் செய்வதையும் பாக்கிறோம். தூங்கி
வழியும் அமைப்புகளைத் தூசிதட்டிச் செயல்பட வைக்க இவர்கள் ஒரு பயிற்சி முகாமை
நடத்தினால் நன்றாக இருக்கும்.
உதிரிப் பூக்களை மாலையாக்கும்
வல்லமையாளர் நம் முத்துநிலவன் என்றாலும், மலரிடை நாராக இருப்பவர் முனைவர்
நா.அருள்முருகன் அவர்கள். அவர் தன்னுடைய தலைமையுரையில், தமிழ்மொழி கணினிக்கு உகந்த
மொழி என்பதை உணர வேண்டும் என்று அனைவரும் உணரும்படியாக உரையாற்றிய விதம் மிகுந்த
உற்சாகத்தைத் தந்தது.
முகாம் தமிழ்த்தாய் வாழ்த்துடன்
தொடங்கவில்லை என்றாலும் செல்வி சுபாஷினி தன் தங்கை கீர்த்திகாவுடன் சேர்ந்து பாடிய
பாரதி, பாரதிதாசன் பாடல்கள், பா,திவ்யபாரதியின் அழகே அழகே பாடல் ஆகியவை இன்னும்
எங்கள் செவிக்கழனிகளில் தேனிசை வெள்ளமாய்ப் பாய்கின்றன.
கணையாழி ஆசிரியர் முனைவர்
ம.இராசேந்திரன் நிகழ்த்திய உரை அறியாத் தகவல்களை அதிகம் கொண்டதாய் இருந்தது.
கணினிப் பயிற்சியை முறையாகப் பெற்று, சமகாலத்திற்குப் பொருத்தமானவராயும், நாம் எதிர்காலத்
தேவைக்கேற்ப தமிழை எடுத்துச் செல்லும் பொறுப்புடையவராயும் இருக்க வேண்டும்
என்பதைச் சரியான இடத்தில், சரியான நேரத்தில், சரியான விதத்தில் சொல்லிவிட்டார்.
கசடற கற்றலே ஒருவனுக்குச் செயல்படும் ஆற்றலை அளிக்கும் என்று அடித்துச் சொன்னதை
இனி நாம் பிடித்துக்கொள்ள வேண்டும்.
தலைமையுரை: முனைவர் நா.அருள்முருகன் |
தொடக்கவுரை: முனைவர் ம. இராசேந்திரன் |
பயிற்சிக் களமான ஜெ.ஜெ.கல்லூரி
வழங்கிய மனித வளமும், மகத்தான உட்கட்டமைப்பு வசதியும் முகாம் வெற்றியைத்
தீர்மானிக்கும் காரணிகளாய் இருந்தன என்பதை யாரும் மறுக்க முடியாது.
ஆவது பெண்ணாலே என்பது உண்மை;
சான்றாக நின்று சாதித்துக் காட்டிய சகோதரி மு.கீதாவும் அவருடைய குழுவினரும் நம்
பாராட்டுக்குரியவர்கள்.
திண்டுக்கல் தனபாலன் ஒரு வலைப்பித்தர்
என்பதற்கு அவர் எழுதி வழங்கிய பயிற்சிக் கையேடே சான்றாகும்.
கில்லர்ஜி, முனைவர்
பா.ஜம்புலிங்கம், கரந்தையார் போன்ற மூத்த வலைப்பதிவர்களைக் கண்டு அளவளாவும் பேறு
கிடைத்ததே! வள்ளுவர் சொல்வதுபோல் வகுத்தான் வகுத்த வகை அது!
திரு.ச.சுதந்திரராஜன் குடும்பத்தார்
எங்களை விருந்தினராக ஏற்று, விருந்தோம்பிய பாங்கினைத் தனிப்பதிவாகவே எழுதலாம். அவர்கள்
எங்கள் இதயத் தளத்தில் என்றும் இருப்பர்.
கம்பனுக்கு ஒரு சடையப்பன் என்றால்
நம் முத்துநிலவனுக்கு ஒரு தங்கம் மூர்த்தி. யாருக்கு அவசர உதவி என்றாலும் அவரை
அழைக்கச்சொல்லி தன் அலைபேசி எண்ணை மேடையில் அறிவித்தார் கவிஞர் தங்கம் மூர்த்தி. முயற்சியால் ஈட்டிய செல்வத்தைத் தக்கார்க்கு மனமுவந்து
அளிக்கும் தமிழ்ச்சான்றோர் அவர். அவருடைய புன்னகை புதுப்புது பண்களில் வெளிப்படும்
அழகே அழகு!
பயிற்றுநர் அனைவரும் பயிற்சியாளர்களின்
எதிர்பார்ப்பைப் பெருமளவு நிறைவு செய்தனர் என்றாலும் பயிற்சியாளர் பெறும் அளவு
மாறுபடத்தான் செய்யும்.
பயிற்றுநர்களும் பயிற்சியாளர்களும் |
இத்தகைய பயிற்சி முகாம்கள் பல
ஊர்களிலும் நடக்க வேண்டும்; பதிவர்களின் எண்ணிக்கையும் தரமும் பலமடங்கு
உயரவேண்டும்.
முனைவர் அ.கோவிந்தராஜூ, கரூரிலிருந்து.
மிக்க நன்றி ஐயா...
ReplyDeleteவிரைவில் கரூரில் நடத்துவோம்...
சொல்வதெல்லாம் உண்மை. சிறப்பான நிகழ்ச்சி தொகுப்பு,சிறப்பான பயிற்சி,சிறப்பான உரைகள் இவை யாவும் இன்னும் கணினி மீதான ஆர்வத்தை தூண்டுகிறது.
ReplyDeleteமிக்க நன்றி அய்யா.உங்களின் பாராட்டு மேலும் செயல்படும் ஊக்கத்தை அளிக்கிறது
ReplyDeleteபயிற்சி குறித்த பின்னூட்டமாக இப்பதிவினைக் கண்டதில் மட்டற்ற மகிழ்ச்சி அய்யா. தங்களைப் போன்றோரின் நட்பும் ஊக்கமும் இன்னமும் செயல்படத் தூண்டுகிறது.
ReplyDeleteவணக்கம் ஐயா
ReplyDeleteமிகவும் சிறப்பாக விமர்சித்து அழகு படுத்தி இருக்கிறீர்கள்.
என்னையும் பதிவராக அங்கீகரித்து சொல்லி இருப்பது அறிந்து மிக்க மகிழ்ச்சி.
இரண்டு நாள் கணினி பயிற்சி வகுப்பு நடந்ததை உள்ளது உள்ளபடி மிகச் சிறப்பாக பதிவு செய்தமைக்கு எங்கள் நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் ஐயா லாப நோக்கு எதுவும் இன்றி முற்றிலும் பொதுநலத்துடன் நடத்தப்பட்ட இதைப் போன்ற பயிற்சி வகுப்புகளை தற்காலத்தில் காணுவது மிகவும் அரிது பயிற்சி கொடுத்தவர்களும் பயிற்சி எடுத்தவர்களும் பயிற்சிக்கு உறுதுணை புரிந்தவர்களும் ஒரே அலைவரிசையில் செயல்பட்டது முற்றிலும் வியப்பிற்குரியது பயிற்சியை ஏற்பாடு செய்ததற்கு நடத்தியதற்கு சரியான முறையில் நிறைவு செய்ததற்கு தங்குவதற்கு இடமும் உணவும் வழங்கியமைக்குநா என்ன கைமாறு செய்வது என்று தெரியவில்லை இது போன்ற பயிற்சிகளை தொடர்ந்து மாவட்டங்கள் தோறும் தொழில்நுட்ப ஆர்வலர்கள் அனைவருக்கும் சென்று சேருமாறு நடத்தினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உடனடியாக பயிற்சியில் கலந்துகொண்ட மற்றும் பயிற்சி கொடுத்த அனைவரையும் குழுவில் இணைத்தமைக்கு மிகுந்த நன்றி
ReplyDeleteஇப்பயிற்சியை நடத்துவதற்கு பெரிதும் துணை புரிந்த அத்துணை நல் உள்ளங்களுக்கும் எங்கள் நெஞ்சம் நிறைந்த சிரம் தாழ்ந்த நன்றி களையும் வணக்கங்களையும் உரித்தாக்கிக் கொள்கின்றோம்
ReplyDelete"அமைப்பில்லாத அமைப்பைக்கொண்டு இந்தப் போடு போடுகிறார். "
ReplyDelete"சாதித்துக் காட்டிய சகோதரி மு.கீதாவும் அவருடைய குழுவினரும் நம் பாராட்டுக்குரியவர்கள்.
திண்டுக்கல் தனபாலன் ஒரு வலைப்பித்தர் என்பதற்கு அவர் எழுதி வழங்கிய பயிற்சிக் கையேடே சான்றாகும்."
"யாருக்கு அவசர உதவி என்றாலும் அவரை அழைக்கச்சொல்லி தன் அலைபேசி எண்ணை மேடையில் அறிவித்தார் கவிஞர் தங்கம் மூர்த்தி. "
வாவ்! வாவ்! என்ன சொல்ல!! மகிழ்வும் பெருமையும்! பங்காற்றிய அனைவருக்கும் பகிர்ந்த தங்களுக்கும் நன்றிகள்.
உங்களையும் மற்ற நண்பர்களையும் கண்டதில் மகிழ்ச்சி ஐயா. விக்கிபீடியாவில் பதிவது தொடர்பாக பயிற்சி தந்தது நிறைவினைத் தந்தது. வாய்ப்பு தந்த கணினி தமிழ்ச்சங்கப் பொறுப்பாளர்களுக்கு நன்றி. அன்று ஆரம்பித்த திரு நா.அருள்முருகன் அவர்களின் கட்டுரையை தற்போது இன்னும் மேம்படுத்தியுள்ளேன். வாய்ப்பு கிடைக்கும்போது காண வேண்டுகிறேன்.
ReplyDelete