Thursday, 24 October 2019

முயற்சியால் கிடைத்த முனைவர் பட்டம்


   டாக்டர்  பட்டங்களில் மூன்று வகை உண்டு.
   முதல் வகை: ஒரு முழுநேர அல்லது பகுதிநேர ஆய்வு மாணவர் ஒரு  குறிப்பிட்ட தலைப்பில் ஆண்டுக்கணக்கில் ஆய்வு செய்து உருவாக்கிய ஆய்வேட்டை மூன்று புறத் தேர்வர்கள் மதிப்பீடு செய்து, பொது வாய்மொழித்தேர்வு நடத்திப் பல்கலைக்கழகத்தால் அளிக்கப்படும் டாக்டர் பட்டம்.

  இரண்டாம் வகை: சமூகத்தில், அரசியலில் உள்ள புகழ் வாய்ந்த மனிதர்களுக்கு அவர்களுடைய சமூக, அரசியல் பணிகளைக் கருத்தில் கொண்டு பல்கலைக்கழகங்களால் வழங்கப்படும் மதிப்புறு டாக்டர் பட்டம்.

  மூன்றாம் வகை: ஐம்பதாயிரம் முதல் ஐந்து இலட்சம் வரை பணம் பெற்றுக்கொண்டு சில தனியார் பல்கலைக்கழகங்கள் யாருக்கு வேண்டுமானாலும் வழங்கும் டாக்டர் பட்டம். பள்ளி, கல்லூரிகள் நடத்தும் பல கல்வித் தந்தைகள் இப்படித்தான் டாக்டர் பட்டம் பெறுகிறார்கள்!

   இன்றைய(24.10.19) ‘தி இந்து’ ஆங்கில நாளிதழில், நடிகர் சார்லி என அனைவராலும் அறியப்படும் வே.த.மனோகர் அவர்கள் தன் ஐம்பத்து ஒன்பதாம் வயதில் டாக்டர் பட்டம் பெற்றது குறித்த செய்திக் கட்டுரையைப் படித்து வியந்து போனேன். என் வியப்புக்குக் காரணம் அவர் மேலே குறிப்பிட்ட முதல் வகையில் பட்டம் பெற்றதே ஆகும்.

   அடிப்படையில் சார்லி ஒரு நாடக நடிகர். அதுவும் நகைச்சுவை நடிகர் தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக் கழகத்தில் பகுதி நேர மாணவராகச் சேர்ந்து, “தமிழ்த் திரைப்படங்களில் நகைச்சுவை” என்னும் தலைப்பில் ஆறு ஆண்டுகள் ஆய்வு செய்து பிஎச்.டி பட்டம் பெற்றுள்ளார்.
மேதகு ஆளுநரிடமிருந்து பிஎச்.டி பட்டம் பெறும் சார்லி
பட உதவி: தி இந்து நாளேடு

   சார்லியின் ஆய்வு நெறியாளர் தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக்கழக நாடகவியல் துறை மேனாள் முதன்மையர் முனைவர் இரவீந்திரன் அவர்கள் “சார்லியின் கடின உழைப்பிற்குக் கிடைத்த பரிசு இந்தப் பட்டம். சார்லி செய்துள்ளது ஓர் ஆழமான ஆராய்ச்சியாகும். பேச்சில்லாப் படங்கள் தொடங்கி நவீன படங்கள் வரை காலமுறையில் ஆய்வு செய்துள்ளார். முக்கியமாக நகைச் சுவை நடிகர்களின் உடல்மொழி குறித்து ஆய்வு செய்துள்ளார். என்.எஸ்.கிருஷ்ணன், சந்திர பாபு போன்ற ஆளுமைகளின் பங்களிப்பைத் தன் ஆய்வில் சிறப்பாகப் பதிவு செய்துள்ளார்.” என்று புகழாரம் சூட்டுகிறார்.

    “கற்றாரே கற்றாரைக் காமுறுவர்” என்னும் ஒளவையின் மூதுரைக்கு ஒப்ப சார்லியின் மீதான என் மதிப்பு இப்போது பன்மடங்காக உயர்ந்துவிட்டது.

    டாக்டர் சார்லி அவர்களின்  பிஎச்.டி ஆய்வேடு விரைவில் நூலாக வெளியிடப்பட வேண்டும் என்பது என் விருப்பம்.

முனைவர்.அ.கோவிந்தராஜூ, தேசிய விருதாளர், கரூர்

5 comments:

  1. டாக்டர் சார்லி அவர்களுக்கு வாழ்த்துக்கள்... எனக்கும் வியப்பாக இருந்தது... சென்னையில் இருந்தபோது ஒரு முறை அவரை சந்தித்துப் பேசியுள்ளேன்...

    ReplyDelete
  2. டாக்டர் சார்லி அவர்களின் இந்த உழைப்பும் சாதனையும் என்றும் நிலைத்து நிற்கும். Very Inspiring. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  3. அட! வியத்தகு செய்தி. டாக்டர் சார்லி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! திரைப்படத் துறையில் இருப்பவர்களும் உழைத்துப் படித்து முனைவர் பட்டம் பெறலாம் என்பதற்கான முன்னுதாரணம்.

    துளசிதரன், கீதா

    ReplyDelete
  4. அவர் ஆய்வு தொடர்பாக வந்தபோது ஒரு முறை அலுவலகத்தில் சந்திக்கும் வாய்ப்பினைப் பெற்றேன். என் பௌத்த ஆய்வினைப் பற்றியும், குறிப்பாக களப்பணியைப் பற்றியும் கூறினேன். ஆர்வமோடு கேட்டார். பௌத்தம் பற்றிப் பேசியபோது வியந்தார். முழுக்க முழுக்க ஆய்வு நிலையில் பல செய்திகளைப் பகிர்ந்தார். துறையின்மீதான அவருடைய ஈடுபாடு வியக்க வைத்தது. இவரைப் போன்று துறையில் இருந்துகொண்டே முனைவர் பட்டம் மேற்கொண்டு சாதிப்பவர்கள் மிகவும் சிலரே. அந்நிலையில் சார்லி பாராட்டப்படவேண்டியவர்.

    ReplyDelete