சென்ற வாரம் கனடா முழுவதும் ஒரே கலக்கலாக இருந்தது! கடுங்குளிர் நிலவிய போதிலும் பரவசமாகக் கொண்டாடினார்கள். உலகில் ஆவிகளைக் கொண்டாடும் நாடுகள் பலவாக உள்ளன. அவற்றுள் கனடாவும் ஒன்று. அக்டோபர் 31ஆம் தேதிதான் அவர்களுக்கு ஆலவின் எனப்படும் பேய்கள் தினம். Halloween Day என ஆங்கிலத்தில் குறிப்பிடுகிறார்கள்.
பள்ளிகளில், அலுவலகங்களில் கூட இந்த நாளுக்குச் சிறப்பிடம் தந்து ஒரு விழாவாகக் கொண்டாடுகிறார்கள்.
இறந்து போனவர்கள் அன்றைய நாளில் ஆவி வடிவில் திரும்பி வருவதாக நம்புகிறார்கள். அவர்களை வரவேற்கும் வகையில் வீட்டின் வாயிலில் சிவப்புப் பூசணிக்காய்களை முழுதாகவோ பேயுருவம் செதுக்கியோ வைக்கிறார்கள்.
சிலர் வெண் துணியிலும், கருந்துணியிலும், வண்ணத் துணியிலும் பேய் உருவங்களை வடிவமைத்து, தம் வீட்டின்முன் இருக்கும் மேப்பிள் மரங்களில் தொங்க விட்டிருக்கிறார்கள்.
வேறு சிலர் மனித எலும்புக்கூடுகளையும் மனித மண்டை ஓடுகளையும் கலை நயத்துடன் அவரவர் வீட்டின் முன் வைத்திருப்பதைக் காணலாம்.
மற்றும் சிலர் வீட்டின்முன் கல்லறை மேடை அமைத்து அதன் மீது ஒரு மனித எலும்புக் கூட்டை உட்கார்ந்த நிலையில் வைத்து, இருட்டில் பயங்கரமாய்த் தெரியும் வகையில் மின் விளக்கொளி படுமாறு வைத்திருப்பர்.
இந்த இரவை Devil’s Night என்று சொல்கின்றனர். இந்த இரவுப் பொழுதில் மக்கள் சிலர் பேய் போல உடையணிந்து வலம் வருவர்!
பேய்த்தனமான ஆர்வக்கோளாறு காரணமாக, இரவு நேரத்தில் அதுவும் நள்ளிரவில் தம் வீட்டு வெளிப்புற வெள்ளைச் சுவரில் எல்.சி.டி.புரஜக்டர் மூலம் பற்பல பேய்ப் படங்களைக் காட்டுவோரும் உள்ளார்கள்! இந்தக் கூத்துகளெல்லாம் அன்றைய நாளுக்கு ஒரு வாரம் முன்பாகவே தொடங்கிவிடும்.
ஆவிகள் தினத்தில் சிறுவர் சிறுமியர் எல்லாம் மனித எலும்புக் கூடுகள் வரையப்பட்ட கருநிற ஆடைகளை அணிந்துகொண்டு வீட்டுக்கு வீடு சென்று கதவைத் தட்டுகிறார்கள். வீட்டில் உள்ளோர் கதவைத் திறந்து தயாராக வைத்துள்ள விதவிதமான இன்னட்டுகளை(Chocolates) விரும்பித் தருகிறார்கள். ஒருகால் வீட்டைப் பூட்டிக்கொண்டு வெளியில் செல்ல நேர்ந்தாலும் ஒரு பை நிறையப் போட்டுத் தெருக்கதவருகில் வைத்துச் செல்வது இங்கே வழக்கமாக உள்ளது.
உளவியலாளர் என்ற முறையில் இந்தக் கொண்டாட்டத்தில் ஒரு நன்மை இருப்பதாக நான் நினைக்கிறேன். எலும்புக் கூடுகளைப் பார்ப்பதாலும், அவற்றைத் தொடுவதாலும், தாமே பேய் வேடம் தரிப்பதாலும் குழந்தைகளுக்குப் பேய் குறித்த அச்சம் அறவே நீங்கிவிடுகிறது. நம் ஊரில் பேய்கள் பற்றிய பயம் சிறியவர்களுக்கு மட்டுமன்றிப் பெரியவர்களுக்கும் உள்ளதே!
உண்மையில் பேய் இருக்கிறதா இல்லையா என்ற வினா உலகில் எல்லா இடங்களிலும் எல்லாக் காலத்திலும் உலா வந்துகொண்டுதான் இருக்கிறது.
கலிங்கத்துப் பரணியில் பேய்கள் குருதியில் கூழ் காய்ச்சிக் குடித்துவிட்டுக் கொட்டமடிக்கும் காட்சியை செயங்கொண்டார் அப்படி வருணிப்பார்!
சிலப்பதிகாரத்தில்
சதுக்கப் பூதம் குறித்து இளங்கோவடிகள் விரிவாகப் பேசுகிறாரே!
பேயும் பேயும் சேர்ந்து துள்ளாட்டம் போட்டதைக் கலித்தொகையில்
காணலாம்!
உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து
அலகையா வைக்கப் படும் - குறள்: 850
என்று அலகை என்னும் பழந்தமிழ்ச் சொல்லால் பேய் உண்டு என ஆவணப்படுத்துகிறார் திருவள்ளுவர்.
ஆனால்,
“வேப்பமர உச்சியிலே பேயொண்ணு ஆடுதென- நீ
விளையாடப் போகும்போது சொல்லி வைப்பாங்க – உன்றன்
வீரத்தை முளையிலேயே கிள்ளி வைப்பாங்க –அந்த
மூளையற்றோர் வார்த்தைகளை வேடிக்கையாகக் கூட நம்பிவிடாதே”
என்று பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம் பேயே இல்லை எனச் சொல்கிறார்.
நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
முனைவர் அ. கோவிந்தராஜூ, கனடாவிலிருந்து.
Interesting uncle...
ReplyDelete