எங்கள் உறவினர் வீட்டுக் குழந்தை படிக்கும் பள்ளியில்(Bear Creek School) நடந்த கலைவிழா ஒன்றைக் காண்பதற்காக நான், என் துணைவியார், மகள், மாப்பிள்ளை ஆகிய அனைவரும் சென்றோம்.
அமெரிக்காவில்
டெல்லாஸ் பகுதியில் உள்ள ஒரு நடுநிலைப் பள்ளி. ஐந்து, ஆறு, ஏழாம் வகுப்புக் குழந்தைகள் மட்டும் பயிலும்
பள்ளி. ஆனால் பெரிய கட்டடங்கள், விளையாட்டிடம், மாநாட்டரங்கு என அனைத்தும் அமைந்த பள்ளி.
பிற்பகல் இரண்டு
மணிக்கு நிகழ்ச்சி தொடங்கும் என மகள் சொன்னாள். 1.50 மணிக்கு, எங்களுக்கு முன்னரே வழங்கப்பட்டிருந்த
அனுமதிச்சீட்டின் மென்னகலைக் காட்டி அரங்கினுள் நுழைந்தோம். அரங்கு நிரம்பியிருந்தது. எங்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைகளை எளிதில்
கண்டறிந்து அமர்ந்தோம்.
அந்த அரங்கை
ஒரு நோட்டம் விட்டேன்.
அது ஒரு பல்நோக்கு
அரங்கம். அது ஒரு கூடைப்பந்து உள்விளையாட்டுக்கூடம். இப்போது ஒரு நாடக அரங்காக மாறியுள்ளது.
சரியாக இரண்டு
மணிக்கு ஓர் ஒளி வட்டம்(Spot
Light) மேடையை நோக்கி
நகர்ந்தது. அதில் ஓர் ஆணும் பெண்ணும் தெரிந்தனர். அவர்கள் மேடையேறி நிகழ்வு குறித்த ஓர் அறிமுகத்தைப்
படு உற்சாகமாகக் கூறினார்கள்.
அவர்கள் தாம் நாடக
இயக்குநர்கள். அரங்கில் பலத்த கைதட்டல்.
நேரடியாக மாணவர்களின்
நிகழ்ச்சி தொடங்கியது.
வரவேற்புரை, வாழ்த்துரை, சிறப்புரை ஒன்றும் இல்லை.
L.Frank Baum என்பார் எழுதிய The Wonderful Wizard of Oz என்னும் சிறுவர் நாவலின் கதையை நாடகமாக நடித்துக்
காட்டினர். நாடகத்தில்
ஒரு காட்சி மரம் பேசுவது போன்றது. ஒரு மரத்தின் அடிமரம் நடு மேடைக்கு நகர்ந்து வந்து
பெரிய வாயைத் திறந்து பேசியது அசத்தலாக இருந்தது. சிறகு முளைத்த குரங்காக வந்த மாணவியின்
நடிப்பு அட்டகாசம்!
ஒரு
குழந்தையாவது வசனத்தை மறந்து விழிபிதுங்கி நிற்கவில்லை. திரை மறைவில் நின்றுகொண்டு வசனத்தை நினைவூட்ட(Prompting) எந்த ஆசிரியரும் அங்கில்லை. பின்புலத் திரையும் காட்சிக்கு ஏற்ப மாறிக்கொண்டே
இருந்தது. மேடையில் பெரிய மைக் ஸ்டாண்டுகள்
எதுவும் இல்லை.
ஐம்பது அடி அகலம் கொண்ட
மேடையில் எந்தக் குழந்தை எங்கிருந்து பேசினாலும் அது விடும் பெருமூச்சு உட்பட மிகத்
துல்லியமாகக் கேட்டது. குழந்தைகளின் உடையில் சிறிய புளு டூத் மைக்குகள்
பொருத்தப்பட்டிருந்தன.
பார்வையாளரின் கண்களை உறுத்தாத ஒளியமைப்பு, செவிகளை உறுத்தாத ஒலியமைப்பு! அப்பப்பா
மிக அருமை!
மேடைக் காட்சியை
மறைத்தபடி வீடியோகிராபர்கள் யாரும் மேடையின் முன்புறமோ அரங்கின் நடுவிலோ நிற்கவில்லை. அவர்கள் எல்லாரும் பின்னால் அரங்கின் கடைசி
வரிசையில் நின்றனர்.
அவர்களைத் தவிர குழந்தையின்
பெற்றோர் உட்பட யாருக்கும் போட்டோ, வீடியோ
எடுக்க அனுமதி இல்லை.
அரங்கில் இருந்த அனைவரும்
யாரும் சொல்லாமலேயே தத்தம் கைப்பேசிகளைச் சிணுங்கா நிலையில் வைத்திருந்தனர்.
காட்சிக்குக்
காட்சி கைதட்டி ஆரவாரம் செய்த பார்வையாளர்கள், காட்சி மாறும்போது அரங்கம் முழுதும்
இருட்டில் மூழ்கும் நேரத்திலும் நூறு விழுக்காடு அமைதி காத்தனர். இது எனக்கு வியப்பாயிருந்தது!
மேடையில் மட்டும்
நாடகம் நடக்கவில்லை; அரங்கத்திலும் நடந்தது. இடைவெளி விட்டு இருக்கைகள்
போடப்பட்டிருந்தன. அவ்வப்போது சில பாத்திரங்கள் அரங்கின் நடுவே நடனம் ஆடியது
இதுவரை நான் பார்த்தறியாத ஒன்று.
நாடக இடைவேளை என
அறிவித்தனர். எங்களைத் தவிர மொத்த அரங்கமும் வெளியேறியது. என்ன அத்தனை பேருக்குமா என
யோசித்தபடி சிறிது நேரம் கழித்து வெளியில் சென்று பார்த்தேன். ஒரு நீண்ட வரிசையைக்
கண்டேன். அங்கே இருந்த நொறுக்குணவுக் கடையில் வாங்கித் தின்னவே அந்த வரிசை.
அங்கும் பெரிய கூச்சல் குழப்பம் இல்லை. பதினைந்து நிமிடங்கள் இடைவேளை முடிந்து
மீண்டும் நாடகம் தொடர்ந்தது.
சில காட்சிகளில்
ஒரே சமயத்தில் இருபது பேர்கள் கூட நடித்தனர். பாட்டு, இசை என ஒரே அமர்க்களம்.
எனக்கு அவர்கள் பேசிய அமெரிக்க ஆங்கிலம் அவ்வளவாக புரியாததால் மற்றவர்கள்
கைதட்டியபோது நானும் கைதட்டினேன்; மற்றவர்கள் சிரித்தபோது நானும்
சேர்ந்துகொண்டேன்.
இந்த நாடகத்தில் குறையென ஒன்றையாவது சுட்டிக்காட்ட இயலவில்லை. நாடகத்தின் வெற்றிக்கான
காரணத்தை ஒற்றைச் சொல்லில் சொல்வதென்றால் அது ‘பயிற்சி’. Practice makes men
perfect என்பது அவர்கள் நாட்டுப் பழமொழி.
சரியாக நான்கு
மணிக்கு நாடகம் நிறைவடைந்தது. நாடகத்தில் நடித்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் மேடையில் தள்ளுமுள்ளு எதுவும்
இல்லாமல் அங்கு அமைக்கப்பட்டிருந்த உடனடி கேலரியில் யாரும் யாரையும் மறைக்காமல்
சில மணித்துளிகளில் நின்ற காட்சி இன்னும் என் மனத்திரையில் அப்படியே உள்ளது.
இரண்டு மணிநேரம்
சென்றதே தெரியவில்லை.
எல்லாரும் சென்றபின் சற்றே நின்று அரங்கைக் கூர்ந்து பார்த்தேன். பார்வையாளர்
யாரும் எந்தக் குப்பைகளையும் போடாததால் அரங்கம் அவ்வளவு தூய்மையாக இருந்தது.
மறுநாளே
அப் பள்ளியின் முதல்வருக்கு எனது பாராட்டினை
மின்னஞ்சல் வாயிலாக அனுப்பிவைத்தேன்.
முனைவர் அ.கோவிந்தராஜூ, அமெரிக்காவிலிருந்து.
No comments:
Post a Comment