Sunday, 9 January 2022

ஒன்று முதல் ஒன்பது வரை

         வலைப்பூ நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.

விரைவில்  வெண்பா யாப்பில் அமைந்த என் கவிதை நூல் வெளிவர உள்ளது. அதிலிருந்து ஒரு துளி இங்கே. 


  1

ஞாலத்தைக் காத்திடும் நல்லதோர் வானம்முக்

காலத்தைக் காட்டும் கதிரவன் பூமி

குறையும் நிறையும் குளிர்நிலா யாவும்

இறைவன் படைப்பினில் ஒன்று. 

(வானம் ஒன்று, கதிரவன் ஒன்று, பூமி ஒன்று, நிலா ஒன்று) 

2

உழைக்க உறுதியாய் உன்கை; நடக்க

கழைபோல் வலுவுடைக் கால்கள்; விழைந்தே

இறைஉரு காண இறைமொழி கேட்க

இறைவன் படைப்பில் இரண்டு.

 

(கைகள் இரண்டு, கால்கள் இரண்டு, கண்கள் இரண்டு, செவிகள்

இரண்டு)

 

3

முத்தமிழ் மூவேந்தர் முன்னிற்கும் முக்கனி

முத்திதரும் தேவார மூவரொடு பித்தனின்

முத்தொழில் முக்கண்கள் முச்சங்கம் முக்காலம்

அத்தனையும் முத்தமிழில் மூன்று. 

(முத்தமிழ் மூன்று- இயல்,இசை,நாடகம்; முக்கனி மூன்று- மா,பலா,வாழை; தேவாரம் பாடியோர் மூவர்- திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர்; சிவனின் முத்தொழில்- ஆக்கல், இயக்கல், அழித்தல்; சிவனின் நெற்றிக் கண்ணுடன் கண்கள் மூன்று; பண்டைய தமிழ்ச்சங்கம் மூன்று- முதல், இடை, கடை; காலம் மூன்று- இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம்) 

4

பண்டைத் தமிழர் பகுத்த நிலவகை

உண்டெனச் சொன்ன உறுதிப் பொருளொடு

சான்றோர் புகழும் சமயக் குரவர்கள்

ஊன்றி உணர்ந்திடின் நான்கு.

(நிலம் நான்கு- குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல்; உறுதிப் பொருள் நான்கு- அறம்,பொருள்,இன்பம்,வீடு; சமயக் குரவர் நால்வர்- திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்க வாசகர்) 

5

உளத்தால் இயங்கும் உடல்சார் புலன்கள்

அளவிலா ஆய்வின் அகம்சார் திணைகள்

எழுத்தில் தொடங்கும் இலக்கணம் எல்லாம்

பழுதிலாப் பாங்கினில் ஐந்து.

(புலன்கள் ஐந்து- சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம்; அகத்திணைகள் ஐந்து- குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தல்,பாலை; இலக்கணம் ஐந்து- எழுத்து,சொல்,பொருள்,யாப்பு,அணி) 

6

சுவையில் உணவில் சுவைசேர் சுவைகள்

அவனிக் கழகாய் அறுபடை வீடுகள்;மா

பாரதம் போற்றிடும் பாண்டவர் இல்லொடு

பாரோர் புகழ்ந்திடும் ஆறு. 

(சுவைகள் ஆறு- இனிப்பு,கார்ப்பு,கசப்பு,புளிப்பு,துவர்ப்பு,உவர்ப்பு; படை வீடுகள் ஆறு- திருப்பரங்குன்றம்,திருச்செந்தூர்,பழனி,சுவாமிமலை,திருத்தணி,பழமுதிர்சோலை; பாண்டவர் அறுவர்-தர்மன், பீமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன், திரௌபதி) 

7

வானவில் காட்டும் வனப்புறு வண்ணமும்

கானம் இசைத்திட கால்கோள் சுரங்களும்

உண்ட உணவால் உருவாகும் தாதுக்கள்

எண்ணி அறிந்திடின் ஏழு. 

(வானவில் வண்ணம் ஏழு- சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், பச்சை, நீலம், கருநீலம், ஊதா; சுரங்கள் ஏழு-ஸரிகமபதநி; தாதுக்கள் ஏழு-  இரத்தம், தசை, கொழுப்பு, எலும்பு, எலும்பு மஜ்ஜை, நிண நீர், சுக்கிலம்/சுரோணிதம்) 

8

செந்தமிழ் நாடுவாழ் சித்தர்கள் கண்டவை

நந்தமிழ் காப்பியர் தந்தமெய்ப் பாடுகள்

தண்டமிழ் காட்டிடும் திக்குகள் என்பன

எண்ணித் தொகுத்திடின் எட்டு.

 

(அட்டமா சித்திகள் எட்டு-அணிமா, மகிமா, இலகிமா, கரிமா, பிராத்தி, , பிராகமியம், ஈசத்துவம், வசித்துவம்; மெய்ப்பாடுகள் எட்டு- நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம்,பெருமிதம், வெகுளி, உவகை; திக்குகள் எட்டு- கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, வடகிழக்கு, தென்கிழக்கு, வடமேற்கு, தென் மேற்கு) 

9

உடலில் அமைந்தவை ஒன்பான் துளைகள்

உடலில் அணிமணி ஒன்பது நம்மவர்

தேர்நற் சடங்கில் திகழ்நவ தானியம்

பார்த்தால் அவைஒன் பது. 

(உடலில் துளைகள் ஒன்பது- கண் 2, காது 2, மூக்குத் துளைகள் 2, வாய், கருவாய், எருவாய்; மணிகள் ஒன்பது- வைரம், மரகதம், நீலம், கோமேதகம், பவழம், மாணிக்கம், முத்து, புட்பராகம், வைடூரியம்; தானியம் ஒன்பது- நெல், கோதுமை, பாசிப்பயறு, துவரை, மொச்சை, எள், கொள்ளு, உளுந்து, கொண்டைக்கடலை)

                           &&&&&&

 

7 comments:

  1. பிரமிப்பாக இருக்கிறது ஐயா வாழ்த்த அகவையில்லை எமக்கு...

    ReplyDelete
  2. அனைத்தும் ரசித்தோம் ஐயா. ஒன்று இரண்டு என்று அணிவகுத்து!!!
    நிலம் பொருள், குரவர் என்று சொன்னது அருமை என்றால் என் மனதில் அட என்றும் தோன்ற வைத்த ஒரு எண்ணம்... நிலத்தின் மீது பொருளின் மீது ஆசை வைக்காதே என்று சமயக் குரவர் சொன்னதும்!!!!

    கீதா

    ReplyDelete
  3. நல்ல சிந்தனை ஆக்கம் ஐயா.

    கீதா

    ReplyDelete
  4. மிகவும் சிறப்பு அண்ணா! வெண்பாவின் ஈற்றுச் சீர் "நாள், மலர், காசு, பிறப்பு" என்கிற சட்டகத்துள் அமைய வேண்டுமே. "ஓன்று முதல் எட்டு" வரை அன்னைத் தமிழே அமைத்துக் கொடுத்துவிட்டாள்.

    ஒன்பதை அண்ணன் எப்படிக் கையாளப் போகிறார் என்கிற எதிர்பார்ப்போடு பார்வையினை கீழே கொண்டு போன எனக்கு "பார்த்தால் அவைஒன் பது" என்ற ஈற்றடியைக் கண்டு பெரும் வியப்பு.

    நூல் வெளிவரும் நாளை பெரும் அவாவுடன் எதிர் நோக்கியிருக்கிறேன்.

    ReplyDelete
  5. மகிழ்ச்சி ஐயா. வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. *செய்யுள் சொற்களையும் விளக்கங்களையும் தனித் தமிழில் இடுவதே சிறப்பு.. முயற்சி திருவினை ஆக்கும்.*

    ReplyDelete