நான் பணியாற்றும் பள்ளியில் நாளைக்குச் சமுதாயப் பொங்கல் விழா கொண்டாடுகின்றோம். அதற்கு ஒரு சேர்ந்திசைப் பாடலை இயற்றித் தரவேண்டும் என மாணாக்கச் செல்வங்கள் கேட்டனர். அவர்களின் அன்புக் கட்டளையை மீறமுடியுமா?
இதோ அவர்களுக்காக ஒரு பாடல்........
தைமா தத்தின் முதல்நாளாம்
தமிழருக் கெல்லாம் திருநாளாம்!
மாந்தர் போற்றும் மறுநாளாம்
மன்புகழ் வள்ளுவர் திருநாளாம்!
கதிரவன் கதிர்கள் படுவதனால்
கழனியில் பயிர்கள் விளையுதம்மா!
ஆதவன் தந்திடும் ஒளிக்கொடையால்
அவனியில் உயிர்கள் தழைக்குதம்மா!
உழவர் சிந்தும் வியர்வையினை
உவந்து நிலமகள் பெறுவாளாம்!
பழங்கள் தானியம் பருப்பெனவே
பதமாய் மாற்றித் தருவாளாம்!
சூரிய சக்தி மட்டும்தான்
சூழலை இனிதாய்க் காத்திடுமே!
வீரியம் மிகுந்த சக்தியது
விந்தைப் புதுமைப் பூத்திடுமே!
பகலவன் அவனை வழிபடவே
பைந்தமிழ்ப் பொங்கல் திருநாளாம்!
சிகரம் தொட்டுப் பார்த்திடவே
சிறகை நமக்குத் தருநாளாம்!
13.1.15
-கவிஞர் இனியன்
அருமையான பாடல்
ReplyDeleteநன்றி நண்பரே
சமுதாயப் பொங்கல் விழா இனிதே நடைபெற வாழ்த்துக்கள்
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteமாநில அளவில் பெருமைபெற
ReplyDeleteமார்ச் திங்கள் பெருநாளாம்
முதல் மதிப்பெண் தொட்டுப் பார்த்திடவே
முயற்சி சிறகை நமக்குத் தருநாளாம்!
நன்றி முரளி நல்ல கவிதை
Delete