அன்புள்ள
மாணவக் கண்மணிக்கு,
நலமா?
முதன் முறையாக நீ பொதுத்தேர்வு எழுதப்போகிறாய். மனத்தில் பயமா? பயப்படாதே.
காலமே கடவுள்; காலமே ஆற்றல்.
காலத்தையும் காசையும் சிக்கனமாகச் செலவழிக்க வேண்டும்.
தேர்வு நெருங்கும் இந்தச் சமயத்திலும்,
சோம்பிக் கிடப்பதும்,
நண்பர்களுடன் சுற்றுவதும்,
அரட்டையில் ஈடுபடுவதும் அறிவுடைமை ஆகாது.
சாலையில் செல்லும் ஒருவர் கணநேர கவனக்குறைவால் விபத்தில் சிக்கி,
கால் முறிந்து காலம் முழுவதும் கஷ்டப்படுவது போல்,
நீயும் காலத்தின் அருமை தெரியாமல்,
போகிற
போக்கில் படித்து, ஏனோதானோ எனத் தேர்வெழுதி, குறைந்த மதிப்பெண் பெற்று,
வாழ்வின் வசந்த வாயில்கள் அடைக்கப்பட்டு,
வண்ணக் கனவுகள் சிதைந்து,
வாய்ப்புகளை இழந்து,
வாழ்நாள் முழுவதும் அவதிப்படப் போகிறாயா?
சற்றே சிந்தித்துப்பார்.
நேரத்திருட்டு
- இதுதான் மிக மோசமான திருட்டு.
உனது பொன்னான நேரத்தை உங்கள் நண்பர்கள் திருடுகிறார்கள்; செல்பேசி திருடுகிறது; இணையதளம் திருடுகிறது;
தொலைக்காட்சி திருடுகிறது;
சினிமா திருடுகிறது;
கிரிக்கெட் திருடுகிறது, வெட்டிப்பேச்சும்,
வீண் அரட்டையும் உன்
நேரத்தை வெகுவாகத் திருடுகிறது.
காசைத் திருடு கொடுத்தவன் கூட பிறகு சம்பாதித்து விடலாம்.
காலத்தைத் திருடு கொடுத்தவன் ஒரு போதும் மீண்டும் பெற முடியாது.
இனி உனது நேரத்தை யாரும் எதுவும் திருட அனுமதிக்காதே. நீயும் மற்றவருடைய நேரத்தைத் திருடாதே.
“இன்றைய
பொழுதை நீ கவனித்துக் கொண்டால் நாளைய பொழுது உன்னைக் கவனித்துக் கொள்ளும்” என்று டாக்டர்
செ.சைலேந்திர பாபு கூறுவார். இதை நீ படிக்கும் புத்தகத்தின் முகப்புப் பக்கத்தில்
உன் முத்தான கையெழுத்தில் முத்திரை வாசகமாக எழுதி வை.
தேர்வு என்னும் பழுக்கக் காய்ச்சிய இரும்பை மன ஒருமைப்பாடு என்னும் சம்மட்டியால் அடித்து விரும்பிய வண்ணம் வளைக்கலாம்; நீட்டலாம். திருவள்ளுவரின் வைரக் குறள் கூறுகிறது
:
:
எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியர்
திண்ணிய ராகப் பெறின்
இந்த ஒரு குறள் போதும் நீ பொதுத் தேர்வை எதிர்கொள்ள.
“படிக்கிறேன்; ஆனால் மறந்து விடுகிறது” என்று கூறுகிறாய்.
இக்கூற்றில் உண்மை ஏதும் இல்லை.
ஆர்வத்தோடு அம்மா சமைக்கிறாள்; அத்தனையும் சுவையாக உள்ளன.
ஆர்வத்தோடு திரைப்படப் பாடலைக் கேட்கிறாய்;
முழுப்பபாடலும் மனப்பாடமாகிறது.
அது மறப்பதும் இல்லை.
ஆக ஆர்வத்தோடு படித்தால் மனத்தில் பதியும்.
ஆர்வத்துடன் கூடிய முயற்சியும், தொடர் முயற்சியுடன் கூடிய பயிற்சியும்,
பயிற்சியுடன் கூடிய படிப்பும் இருந்தால் மறதி என்னும் நோய் புறமுதுகுக் காட்டி
ஓடிவிடும்.
ஊக்கத்தின் எதிர்ச்சொல் தூக்கம். ஊக்கம் இல்லாதவர்களுக்குத்தான் தூக்கம் வரும்.
டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் பற்றி உனக்கு
நீதி நெறி வகுப்பில் சொன்னேன் அல்லவா? அவர் இந்த வயதிலும் ஆறுமணி நேரம் மட்டுமே தூங்குகிறார்., நாள் தோறும் பல மணி நேரம் உழைக்கிறார்.
தான் ஏற்றுக்கொண்ட அத்துணைப் பணிகளையும் முரண்பாடின்றி செய்து முடிக்கிறார். எப்படி முடிகிறது? ஊக்கம் தான் - இடைவிடாத ஊக்கம்தான்.
இந்த ஊக்கம் உனது
உள்ளத்திலும் ஊற்றாய்ப் பெருகட்டும்.
பொதுத் தேர்வுக்கு இறுதிக் கட்டத் தயாரிப்பு என்பது மிக
முக்கியம்.
1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இறுதிச்சுற்றில் ஓடுவது போன்றது இது. இதுவரையில் உன்னிடம் பின் தங்கி இருந்தவர்கள் கூட திடீரென முழு வேகத்தில் ஓடி உன்னை முந்த முயற்சி செய்வார்கள். விழிப்புடன் செயல்படு. தொடர்ந்து முயலாமையால் முயல் ஆமையிடம் தோற்ற கதை
உனக்குத் தெரியுமல்லவா?
பொதுத் தேர்வில் எளிதில் வெற்றி பெற,
ஓர் எளிய சூத்திரம் உண்டு. முறையாகப் பள்ளிக்குச்
செல். அங்கு நடைபெறும் பயிற்சி வகுப்புகளில் பங்கேற்பதும்,
திருப்புத் தேர்வுகளை ஒழுங்காக எழுதுவதும் வெற்றிக் கனிகளை
ஈட்டித் தரும்.
சரியாகப் படிக்க வில்லை,
எனவே திருப்புத் தேர்வை எழுதவில்லை என்று கூறுவது உன்னை நீயே ஏமாற்றிக் கொள்ளும் நிலைதான்.
பள்ளித் தேர்வுகளை எழுதிப் பழகினால்தான் பொதுத் தேர்வு பொதுத்தேர்வாக இருக்கும்;
இல்லையேல் அது புதுத்தேர்வாகவே இருக்கும்.
பொதுத் தேர்வுக்குத் தயாராகும் இச் சமயத்தில் உடல் நலம் காப்பதில் உரிய கவனம் செலுத்துக. நேரம் தவறாமல் சத்தான உணவை உண்ண வேண்டும்.
குறிப்பாக காலை உணவைத் தவிர்த்தலோ, குறைத்தலோ கூடாது. அது
மூளைச் சோர்வை உண்டாக்கும். மேலும் படித்தது மறந்து விடும்.
தேர்வுக்குப் படிக்கும் காலத்தில்,
மசாலா நிறைந்த காரமான உணவைத் தவிர்த்தல் நன்று. ஐஸ்கிரீம், குளிர்பானம் - அறவே கூடாது. இளநீரும் மோரும் பருகுவது மிகவும் நல்லது.
அடுத்து,
மனத்தில் தேவையற்ற உணர்வுகளை வைத்து அடைகாத்தல் கூடாது.
இப்போது நீ வளர் இளம்பருவத்தில் உள்ளாய். உன் மனத்தில் தோன்றும் எதிர்பாலினக் கவர்ச்சிக்கு முக்கியத்துவம் தராதே. அத்தகைய உணர்வுகள் தற்காலிகமானது. அதை
ஆங்கிலத்தில் infatuation என்பார்கள். இவை
மனத்தில் தோன்றாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
இது மிகச் சிலருக்குப்
பள்ளியில் படிக்கும் பருவத்தில் ஏற்படும் மனமாசு.
இது மனத்தில் தோன்றும் முட்செடி.
படிப்பு என்னும் பயிரை வளர விடாமல் தடுக்கும். முட்செடிகளை முளைக்கும் போதே பிடுங்கி எறிக. இதைச் செய்யத் தவறினால், அவை முட்டுக் கட்டையாக மாறி
உன்னை முடக்கிவிடும்.
நீ செல்வழி நன்றாயின் வெல்வது
உறுதி.
நில், கவனி, செல், வெல்.
என்றென்றும் அன்புடன்,
உன்னை விரும்பும் ஆசிரியர்
Very good letter. No doubt this will motivate the students to reach their goal.
ReplyDeleteஅன்பூட்டும் அறிவூட்டும்
ReplyDeleteஅருமையான வழிகாட்டு மடல்.