எங்கள் வீட்டுக்கு முன்னால் மூன்று
புளிய மரங்கள் இருந்தன. சிறு வயதில் அந்த மரங்களின் மீது ஏறி விளையாடுவேன். அம்
மரங்கள், அவற்றில் கூடி வாழ்ந்த காக்கை, குருவிகள் எல்லாம் எனது தோழர்கள். எங்கள்
கம்பங்கொல்லைக்குப் போனால் அங்கே இருந்த மாமரத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டுதான்
கம்பங்கொல்லையைக் காவல் காப்பேன்.
இன்றும் மரங்களைக் கண்டால்
மனத்தில் காட்டாற்று வெள்ளம்போல் மகிழ்ச்சி பெருகும். மரங்களைத் தொட்டுப்
பார்ப்பேன்., நின்று அண்ணாந்து பார்ப்பேன். ஏறிப் பார்க்கலாம்தான்., ஆனால் வயதாகி
விட்டதே!
இங்கே அமெரிக்காவில் எனக்குப்
பிடித்த விஷயங்களில் மரங்கள் முக்கியமானவை. எத்தனை எத்தனை விதமான மரங்கள்! வித
விதமான இலைகள். வித விதமான பூக்கள்! இதுவரை பார்க்காத காய்கள்., கனிகள்.
கோவில் இல்லாத ஊரில்
குடியிருக்க வேண்டாம் என்பது நம்மூர் பழமொழி. ஆனால் அமெரிக்கர்களைப் பொருத்தவரையில்
மரங்கள் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பதுதான் பொன்மொழி. அது மட்டுமல்ல.,
மரங்கள் இல்லாத வீட்டிற்கு வாடகைக்குக் கூட வரமாட்டார்கள். வீட்டுக்கு முன் உள்ள
மரங்களை அவர்கள் கண்ணும் கருத்துமாகப் போற்றி வளர்க்கும் அழகே அழகு!
சாலை
ஓரத்தில் மரங்கள் நடுவது இந்திய மரபு. இராணி மங்கம்மாள் மக்களுக்குச் செய்த நன்மைகள்
யாவை என்பது நான் ஐந்தாம் வகுப்பில் படித்தபோது பரிட்சையில் கேட்கப்பட்ட கேள்வி.
குளங்கள் வெட்டினார்., சாலை ஓரம் மரங்கள் நட்டார் என்பது விடை. அவர் நட்ட மரங்களை
எல்லாம் வெட்டிவிட்டு இப்போது நான்கு வழிச் சாலைகளை அமைத்துவிட்டோம். ஒரு நாள் புதியதாக
போடப்பட்ட நான்கு வழிச் சாலையில், கரூரிலிருந்து திண்டுக்கல் சென்றபோது சாலை
ஓரத்தில் எந்த மரமும் கண்ணில் படாததால் காரை நிறுத்தி எடுத்துச் சென்ற
சிற்றுண்டியை உண்ண முடியாமல் போயிற்று.
அமெரிக்காவில் எங்கு பார்த்தாலும் எட்டு வழிச்சாலைகள்.,ஆனால் அடர்ந்த மர
வரிசைக்கு நடுவில். பின்னால் உள்ள குன்றுகளை மறைக்கும் அளவுக்கு உயர்ந்து செழித்து
நிற்கும் மரங்களைக் காணலாம்.
இங்கே
குழந்தைகளையும் மரங்களையும் ஒன்றுபோல மதித்து வளர்க்கிறார்கள். கைக் குழந்தையைப் பார்த்துக் கொள்ளும் தாயைப்போல
நட்ட கன்றுகளைப் பராமரிக்கிறார்கள்.
இந்த
நாட்டில் மரங்கள் குறித்த தனிப் படிப்புக் கூட உள்ளது. Arboriculture என்று பெயர்.
பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் Eco club, Eco Tour என்பவை கட்டாயமாகும். பல பள்ளிகளில் உள்ளூர்
மரங்களை ஓரிடத்தில் வளர்க்கும்திட்டத்தைச் செயல்படுத்துகிறார்கள்.
நான் TNPL பள்ளியில் முதல்வராகப்
பணியாற்றியபோது School Arboretum என்னும் திட்டத்தின்
மூலம் மாணவர்களின் உழைப்பில் நூற்றுக்கணக்கான மரங்களை வகைக்கு ஒரு மரமாக நட்டேன்.
அப் பள்ளியின் வாகன ஓட்டுநர்களின் கைகளால் மரங்கள் நடச்செய்து Drivers Avenue எனப் பெயரிட்டேன். அவை வானுயர வளர்ந்து நின்று
இன்றும் நான் செல்லும் போதெல்லாம் என்னை வரவேற்கின்றன., அவை மட்டுமே வரவேற்கின்றன.
நான் தலைமையாசிரியராகப் பணியாற்றிய கோபி வைரவிழா மேனிலைப் பள்ளியில் வளாகம் முழுவதும் மரங்களை வளர்த்து ஈரோடு மாவட்ட ஆட்சியரிடமிருந்து பசுமைப் பள்ளி விருது பெற்றதும் இப்போது நினைவுக்கு வருகிறது. அந்தப் பள்ளியை விட்டு, அந்த ஊரை விட்டு வந்த பின்பும் ஆண்டு தோறும் சென்று அப்பள்ளியில் நான் நட்ட மரங்களைப் பார்த்து ஹலோ சொல்லி வருகிறேன்.
“மரம் நடு
விழா
அமைச்சர்
வந்து மரம் நட்டார்
அதே ஊரில்
அதே இடத்தில்
மூன்றாம்
முறையாக”
என்று எனது மாணவன் ஒருவன் கவிதை எழுதினான். ஆனால்
இந்த ஊரில் அப்படியில்லை. சாலை ஓரத்தில் அல்லது பூங்காவில் நகராட்சியினர் ஒரு மரக்
கன்றை நட்டால் அதற்கு ஒரு வரிசை எண் கொடுத்து, எண் அச்சடிக்கப்பட்ட பிளாஸ்டிக்
வளையம் ஒன்றைப் பொருத்தி அதன் வளர்ச்சியைக் கண்காணிக்கிறார்கள். நீர் பாய்ச்சுவதும், களை எடுப்பதும்,
எருவிடுவதும் கால அட்டவணைப்படி நடக்கிறது. புயலில் சாய்ந்துவிடாமல் இருக்க சிறப்பு
ஏற்பாடு செய்கிறார்கள்.(படத்தைப் பார்க்க)
இதன் காரணமாக நூறு செடிகள் நட்டால் நூறு
மரங்கள் ஆகின்றன. அவை மரமாக வளர்ந்த பின்னும் அவர்கள் பணி ஓய்வதில்லை. இங்கு பனிக்
காலங்களில் மிகுதியாகப் பனிமழை பெய்யும். மரத்தின் வேர்கள் பனியால் சேதாரம் ஆகாமல்
இருக்க பனிக்காலம் தொடங்குமுன் அடி மரத்தைச் சுற்றி மரத்தூளை வட்டமாகப் போட்டுப்
பாதுகாக்கிறார்கள். வசந்த காலத்தில் தேவையில்லாத அல்லது காய்ந்து போன கிளைகளை மின்
வாள் கொண்டு அறுத்து அப்புறப்படுத்துகிறார்கள். அவை அழகிப் போட்டியில் பங்கேற்கத்
தயாராக உள்ள இளம் பெண்களைப்போல மதர்த்து நிற்கின்றன.
மரங்களை வளர்க்க, வழி காட்ட பல்வேறு அமைப்புகள் செயல்படுகின்றன. Tree People, Seven Trees, Tall Trees என்பன அவற்றுள் சிலவாகும். நிதி வசதி இல்லாதவர்களுக்கு அதே சமயம் ஆர்வம் உடையவர்களுக்கு மரம் நடுவதற்குத் தேவையான மண்வெட்டி, கடப்பாரை போன்ற கருவிகளை இலவசமாக வழங்கும் தன்னார்வ அமைப்புகளும் உள்ளன. மரம் நடுவோருக்கு உதவும் வகையில் Dig in என்ற மாத இதழும் வெளிவருகிறது
நம்
நாட்டில் இத்தகைய முயற்சிகள் இல்லையா? நிச்சயமாக இருக்கிறது. கூடுதலாகவே
இருக்கிறது. பெங்களூரில் படித்த இளைஞர்கள் Saytrees என்னும் குழுமத்தை அமைத்து ஞாயிறு தோறும் மரம் நடுகிறார்கள். ஈரோடு பசுமை இயக்கம்,
கோவை சிறுதுளி, ஜக்கியின் ஈஷா யோகா போன்றவை மரம் நடுவதை ஓர் இயக்கமாக ஆக்கி
வருகின்றன. இப்போது நடிகர்களும் அரசியல்வாதிகளும் கூட மரம் நடுவதில் ஆர்வம்
காட்டுகின்றனர். துளிர் என்னும் மாத இதழும் குறிப்பிடத் தகுந்ததாகும்.
அமெரிக்க நாட்டில் காணமுடியாத தனிமனித மரம் நடும்
சாதனை நம் ஊரில் உண்டு. ஈரோடு மாவட்டம் காஞ்சிக்கோவிலைச் சேர்ந்த ஏழை நெசவாளர்
நாகராஜன் கடந்த நாற்பது ஆண்டுகளில் பத்தாயிரம் மரங்களை நட்டு வளர்த்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் பங்களாப்புதூருக்கு அருகில் ஒரு குக்கிராமத்தைச் சேர்ந்த 74
வயதுடைய முதியவர் அய்யாசாமி மூவாயிரம் மரங்களை வளர்த்துள்ளார். இவர்களுடைய பணியை ஒப்பிட்டால்
மேற்சொன்ன எனது பணி ஒரு குண்டூசி முனை அளவுதான்.
வீட்டுக்கு
மிக அருகில் மரம் நட்டால் அவற்றின் வேர்களால் பாதிப்பு உண்டாகும் என்பதை இவர்கள்
உறுதியாக மறுக்கிறார்கள். வீட்டுச் சுவருக்கு அருகிலேயே இரண்டு பேர் சேர்ந்து
கட்டித் தழுவ முடியாதபடி சுற்றளவு கொண்ட மரங்கள் வளர்ந்து நிற்கின்றன. அவை சொந்த
வீட்டில் வளரும் மரங்கள் என்றாலும் அரசு அனுமதியின்றி வெட்ட முடியாது.
தவிர்க்க
இயலாத நிலையில், வளர்ந்த மரத்தை அகற்ற நினைத்தால், அதை அலுங்காமல் எடுத்து வேறு இடத்தில் நட்டு வளரச் செய்ய மரம்
பிடுங்கி இயந்திரங்கள் உள்ளன.
ஊரெங்கும் நகரெங்கும் மரங்கள் செழித்து வளர்ந்துள்ளதால் பறவைக்
கூட்டங்களுக்குப் பஞ்சமில்லை. நம் நாட்டில் சிட்டுக் குருவிகள் அருகிவரும்
நிலையில் இங்கே பெருகி வருகின்றன. ஆயிரக் கணக்கில் சேர்ந்து கூட்டமாகப் பறப்பது
கொள்ளை அழகு.
மரம்
நடுவதால் ஏற்படும் நன்மைகளை அமெரிக்கர்கள் வித்தியாசமான கோணத்தில்
சிந்திக்கிறார்கள். இவர்களது பட்டியல் இப்படி நீள்கிறது:
மரங்கள் நகரைக்
குளிர்ச்சியாக வைக்கின்றன.
மரங்கள் நம்மை புற ஊதா
கதிர் வீச்சிலிருந்து காக்கின்றன.
மரங்களால் மனைகளின்
சந்தை மதிப்பு கூடுகிறது
மரங்களால் வன்முறைகள்
குறைகின்றன.
மரங்களைக் கண் குளிரப்
பார்ப்பதால் நோயின் தாக்கம் குறைகிறது.
மரங்கள் மக்களை
ஒன்றிணைக்கின்றன.
மரங்கள் நம்முடைய
ஆசிரியர்கள்., தோழர்கள்
மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழல்
காடும் உடையது அரண்
என்பார் திருவள்ளுவர். நீர், நிலம், மலை, காடு இவற்றை நாட்டின் அரண்கள் என்பதை
முழுமையாக உணர்ந்து செயல்படுகிறார்கள்.
நடை உடை பாவனையில் இவர்களைப் பின்பற்ற முயற்சி
செய்யும் நாம் மரம் வளர்ப்பதிலும் இவர்களைப் பின்பற்றலாமே.
DR A GOVINDARAJU from USA
மரம் நடுவதொடு இல்லாமல் பராமரிக்கவும் வேண்டும்... அருமை ஐயா...
ReplyDeleteமரங்கள் மண்ணின் சீதனங்கள். மரமில்லையேல் மழையில்லை. மழையில்லையேல் மனிதனில்லை. மனித இனம் வாழ மரம் வேண்டும். நட்ட மரத்தை வெட்டுபவனின் கையினைத் துண்டிக்க வேண்டும். மரம் நடுவதனால் நாடு செழிக்கும். நாடு செழித்தால் வீடும் செழிக்கும். நாமும் நலமாக வாழலாம். இதனை மனிதன் என்று உணர்கிறானோ அன்றே அவன் ஞானியாகிறான்.
ReplyDeleteஆகா
ReplyDeleteபடிக்கப் படிக்க மனம் மகிழ்கிறது ஐயா
நன்றி
புதியதாய் கட்டிய எங்க வீட்டை சுற்றி 5 மரங்கள் 2 வருடங்களாக என் தம்பி அருமையாக வளர்த்து வருகிறான்.
ReplyDeleteபதிவைப் படித்தமைக்கு நன்றி
Deleteஉங்கள் அருமைத் தம்பிக்குப் பாராட்டுகள்