Thursday 28 January 2021

திருவெம்பாவை இனிய(ன்) உரை பகுதி 2

பாடல் 11
மொய்யார் தடம் பொய்கை புக்கு முகேர் என்னக்
கையால் குடைந்து குடைந்து உன் கழல்பாடி
ஐயா வழியடியோம் வாழ்ந்தோம் காண்
ஆரழல் போல் செய்யா! வெண்ணீறு ஆடி! செல்வா!
சிறு மருங்குல் மையார் தடங்கண் மடந்தை மணவாளா!
ஐயா! நீ ஆட்கொண்டருளும் விளையாட்டில்
உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம்
எய்யாமல் காப்பாய் எமையேலோர் எம்பாவாய்.

அருஞ்சொற்பொருள்:

மொய்யார் தடம் பொய்கை – வண்டுகள் மொய்க்கும் பெரிய குளம்; புக்கு –புகுந்து; முகேர் –நீரின் மேல் குதிக்கும்போது ஏற்படும் ஒலி; கழல் பாடி –திருவடிகளைப் பாடி; வழியடி –பரம்பரை பரம்பரையாக; ஆரழல் –நெருப்பு; மருங்குல் – இடை; செய்யா –செம்மை நிறத்தானே; உய்யும் –உருப்படும்; எய்யாமல் –தவறாமல்.

 

பொருள் விளக்கம்:

  கன்னிப் பெண்களாகிய நாங்கள் வண்டுகள் மொய்க்கும் பெரிய தாமரைக் குளத்தில் புகுந்து, படித்துறையிலிருந்து துடுமெனத் தண்ணீரில் குதித்து, தண்ணீரைக் கைகளால் குடைந்து குடைந்து நீராடுகின்றோம். அப்படி நீராடும்போது உன் திருவடிகளைப் போற்றிப் பாடுகின்றோம்.

  ஐயனே! சிவபெருமானே! நாங்கள் பரம்பரை பரம்பரையாக உனது அடியார்களாக இருக்கின்றோம். கொழுந்து விட்டெரியும் நெருப்பினை ஒத்த செம்மை நிறத்தானே! நீறு பூசிய மேனியனே! அருட்செல்வா! சிற்றிடையும் மையுண்ட பெரிய கண்களும் கொண்ட உமையவளின் மணாளனே! ஐயனே! நீ எங்களை ஆட்கொண்டு அருளும் விளையாட்டால் வாழ்வில் உருப்பட்டோம். இனியும் அவ்வாறே நாங்கள் உருப்படுவதற்கான வழிகளைத் தவறாமல் காட்டி எம்மைக் காத்தருள வேண்டுகின்றோம்.”

 

பாடல் 12
ஆர்த்த பிறவித்துயர் கெட நாம் ஆர்த்தாடும்
தீர்த்தன் நல் தில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும்
கூத்தன் இவ் வானும் குவலயமும் எல்லோமும்
காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார் கலைகள்
ஆர்ப்ப அரவம் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்ப
பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம்
ஏத்தி இருஞ்சுனை நீராடேலோர் எம்பாவாய்.

அருஞ்சொற்பொருள்:

    ஆர்த்த – பிணைத்த, சேர்ந்த; தீர்த்தன் –கங்கையைத் தலைமுடியில் அணிந்த சிவன்; குவலயம் –உலகம்; கரந்தும் –மறைத்தும்; சிலம்ப –ஒலியெழுப்ப; ஆர் –மிகுந்த; கலைகள் –பெண்களின் இடை ஆபரணம்; ஆர்ப்ப –சேர்ந்து; அரவம் –ஒலி; ஏத்தி –பாராட்டி; இருஞ்சுனை –பெரிய குளம்

 

பொருள் விளக்கம்:

  எம்மைப் பிணைத்துள்ள பிறவித் துன்பம் நீங்க வேண்டி,

 நாங்கள் அனைவரும் சேர்ந்து ஆடிக் கொண்டாடும், கங்கையைத் தன் தலைமுடியில் அணியாய்க் கொண்ட சிவபெருமான், அழகிய தில்லைச் சிற்றம்பலத்தில் கையில் தீயை ஏந்தியவாறு கூத்தாடுகின்றான்.

 

   வானம், பூமி மற்றும் எல்லாவற்றையும் படைத்து, அவற்றைக் காத்து, உரிய காலம் வரும்போது அழிக்கவும் செய்கிறான். இந்த மூன்றையும் விளையாட்டாகச் செய்கிறான்.

 

   இத்தகைய பெருங்கடவுளைப் புகழ்ந்து பேசியவாறு, எங்கள் கைவளையல்கள் கலீர் கலீர் என ஓசை எழுப்ப, எங்கள் சிறுத்த இடையில் அணிந்துள்ள மேகலையில் தொங்கும் மணிகள் எல்லாம் சேர்ந்து ஒலியெழுப்ப, எங்கள் மணம் வீசும் அழகிய நீண்ட கூந்தலில் வண்டுகள் சேர்ந்து முரல, தாமரைப் பூக்கள் பூத்து விளங்கும் பொய்கையில், எங்கள் கைகளால் நீரைக் குடைந்தவாறு, அதேசமயம் சிவபெருமானின் பொற்பாதங்களை மனத்தில் நிறுத்திப் பாடித் துதித்தபடி நீராடுகின்றோம். 

 

பாடல் 13
பைங்குவளைக் கார் மலரால் செங்கமலப் பைம்போதால்
அங்கங் குருகினத்தாற் பின்னும் அரவத்தால்
தங்கள் மலங்கழுவு வார்வந்து சார்தலினால்
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த
பொங்கு மடுவிற் புகப்பாய்ந்து பாய்ந்து
நம் சங்கஞ் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்பக்
கொங்கைகள் பொங்கக் குடையும் புனல் பொங்கப்
பங்கயப் பூம்புனல் பாய்ந்தாடு ஏலோர் எம்பாவாய்.

 

அருஞ்சொற்பொருள்:

  பைங்குவளை –பச்சை இலைகளைக் கொண்ட குவளைச் செடி; கார்மலர் –கருங்குவளை மலர்; செங்கமலம் –தாமரை; பைம்போது –புதிய தாமரை மலர்; குருகு –கொக்கு; அரவம் –பாம்பு; மலம் –அழுக்கு(ஆணவம்,கன்மம்,மாயை); பிராட்டி –உமையவள்; எங்கோன் –சிவன்; சங்கம் –சங்கு வளையல்; சிலம்பு –காலில் அணியும் அணிகலன்; ஆர்ப்ப –ஒலிக்க; பங்கயம் –தாமரை; புனல் –நீர்.

 

பொருள் விளக்கம்:

   இந்த அழகான குளத்தின் ஒரு பாதியில் கருங்குவளை மலர்கள் பூத்துள்ளன. இன்னொரு பாதியில் செந்தாமரை மலர்கள் பூத்துள்ளன. அதனால் கரிய வண்ண உமையாளும், செவ்வண்ணச் சிவனும் சேர்ந்து காட்சியளிப்பதுபோல் இக் குளம் எங்களுக்குத் தெரிகிறது.

   அது மட்டுமா? குளத்தில் இரை தேடும் கொக்குகள் ‘க்ல க்ல’ என்று எழுப்பும் ஓசையானது உமையாளின் கைவளையல் கல கல என்று ஒலிப்பதுபோல் உள்ளது. குளத்தில் நீந்தித் திரியும் நீர்ப்பாம்புகள் சிவனின் கழுத்தை அழகு செய்யும் பாம்பு அணிகளாய்த் தெரிகின்றன. காலை நேரத்தில் ஊர் மக்கள் தங்கள் அழுக்கினை நீக்க இந்தக் குளத்திற்கு வந்து நீரில் விழுகின்றனர். இது முனிவர்கள் தங்கள் ஆணவம், கன்மம், மாயை என்னும் மன அழுக்குகளை நீக்க வேண்டி சிவனின் திருவடிகளில் வீழ்வதை ஒத்துள்ளது.

     இப்படி சிவன் பார்வதியைப் போல் இருக்கும் இந்தத் தாமரைக் குளத்தில். கதிரவன் எழும் காலை நேரத்தில், எங்கள் கைகளில் அணிந்துள்ள சங்கு வளையல்களும், கால்களில் அணிந்துள்ள சிலம்புகளும் ஒலிக்க, எமது கொங்கைகள் விம்மியெழ, நீரைக் கைகளால் குடைவதால் எழும் ஓசை மிக, சிவனின் நாமத்தை மனத்தில் துதித்தவாறு நீராடுகின்றோம்.

 

தத்துவ விளக்கம்:

   நீரால் உடலின் அழுக்கு நீங்குவது போல, இறைவனின் நாமத்தைச் சொல்வதால் மனத்தின் அழுக்குகள் நீங்கும் என்னும் கருத்து இப்பாடலில் மணியிடை இழையாக அமைந்துள்ளது.

 

பாடல் 14 /20
காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாம் ஆட
சீதப்புனலாடிச் சிற்றம்பலம் பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடி
சோதி திறம்பாடி சூழ்கொன்றைத் தார்பாடி
ஆதி திறம்பாடி அந்தமா மாபாடி
பேதித்து நம்மை வளர்ந்தெடுத்த பெய்வளை தன்
பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய்.

 

அருஞ்சொற்பொருள்:

  ஆர் குழை –அழகிய காதணி; பைம் பூண் கலன் –பச்சை நிற மரகதக் கற்கள் பதிக்கப்பெற்ற அணிகலன்கள்; குழல் –கூந்தல்;

குழாம் –கூட்டம்; சீதம் –குளிர்ச்சி; புனல் –நீர்; தார் –மாலை;

ஆதி –தொடக்கம்; அந்தம் –முடிவு; பேதித்து –வேறுபாட்டை உணரும்படிச் செய்து; பெய்வளை –நிறைய வளையல்களை அணிந்த உமையவள்.

 

பொருள்விளக்கம்:

   கன்னிப் பெண்டிராகிய நாங்கள் அதிகாலையில் தாமரைத் தடாகத்தில் இறங்கி மார்கழி நீராடுகின்றோம். எங்கள் அழகான காதணிகள் ஆட, உடல் எங்கும் அணிந்துள்ள மரகதக் கற்கள் பொருந்திய எல்லா அணிகலன்களும் ஆட, எங்களது நீண்ட கூந்தல் ஆட, அந்த மணம் மிக்க கூந்தலைச் சுற்றி வண்டுகள் கூட்டமாய் ஆட, நாங்கள் இந்த குளிர்ந்த தடாக நீரில் குதித்தும், எழுந்தும், விழுந்தும் நீராடுகின்றோம்.

 

    இவ்வாறு நீராடும்போது,  வேதத்தின் மறைபொருளாகவும், நாங்கள் விரும்பிய வண்ணம் எளியவனாகவும் உள்ள சிவனைப் பாடுகின்றோம். அவனைச் சோதிவடிவில் கண்டும் பாடுகின்றோம். கொன்றை மாலை அணிந்த திருக்கோலத்தையும் கண்டு வாயாரப் பாடுகின்றோம். சுருங்கச் சொன்னால் தொடக்கமான அருவ நிலையிலிருந்து முடிவான தில்லையில் ஆடும் உருவ நிலைவரை மனக்கண்ணால் கண்டு மனதாரப் பாடுகின்றோம்.

 

   நல்லது எது கெட்டது எது என வேறுபாடு அறியும் அறிவை எமக்கு அளித்து, பரிணாம வளர்ச்சியில் உயர்நிலை எட்டச் செய்த, அழகிய வளையல்கள் அணிந்த உமையவளின் திருவடித் திறம் வியந்தும் பாடுகின்றோம். 

 

பாடல் 15 / 20
ஓரொரு கால் எம்பெருமான் என்றென்றே
நம்பெருமான் சீரொருகால் வாய் ஓவாள்
சித்தம் களிகூர நீரொருகால் ஓவா
நெடுந்தாரை கண்பனிப்ப பாரொருகால் வந்து
அணையாள் விண்ணோரைத் தான் பணியாள்
பேரரையற்கு இங்ஙனே பித்தொருவர் ஆமாறும்
ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர் தாள்
வார் உருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி
ஏர் உருவப்பூம்புனல் பாய்ந்தாடலோர் எம்பாவாய்.

 

            அருஞ்சொற்பொருள்:

   ஒருகால் –ஒருசமயம்; ஓவாள் –ஓயாள்; சித்தம் –மனம்; களிகூர –மகிழ்ச்சியடைய; ஓவா –ஓயாது; பார் –பூமி; அணையாள் –சேராள்; விண்ணோரை –தேவர்களை; பேரரையர் –பேரரசன்; இங்ஙனே –இப்படியாக; பித்து –பித்தன்; ஆமாறும் –ஆகும்படியாய்; வார் உருவ –அழகிய உடல்; பூண் –அணிகலன்கள்; ஏர் –அழகு; புனல் –நீர்.

 

பொருள் விளக்கம்:

   அழகான உடல் வடிவமைப்பும் அணிகலன்கள் அணியப்பெற்ற அழகிய கொங்கைகளும் கொண்ட கன்னிப் பெண்களே! அதோ பாருங்கள். நம் தோழி ஒருத்தி வருகிறாள். அவளுடைய இறைபக்திக்கு முன்னால் நாமெல்லாம் எம்மாத்திரம்?

    ஒருசமயம் ‘எம்பெருமான்! எம்பெருமான்!  அவனே என் கடவுள்’ என்று சொல்வாள். இன்னொரு சமயம், மற்றொரு சமயம் என மீண்டும் மீண்டும் அதையே சொல்வாள். பலகாலும் தன் வாய் ஓயாமல் அந்தப் பெருமானின் புகழைப் பேசிக்கொண்டே இருப்பாள். அப்படி பேசிக்கொண்டே பேரானந்தப் பெருநிலையை அடைவாள். சூழலை மறந்து, மனம் மகிழ்ந்து தாரை தாரையாய்க் கண்ணீர் வடிப்பாள். பூமியில் கால் பதிக்காமல் ஆனந்தப் பெருவெளியில் மிதப்பாள். சுய நினைவுக்குத் திரும்பினாலும், “அவனே என் முழுமுதற் கடவுள். மற்ற தேவர்களை நான் வணங்கமாட்டேன்” என்று அரற்றுவாள்.

 

    இப்படி இவளைப் பைத்தியமாய் ஆக்கியவன் யார் எனின் உயிர்களுக்கெல்லாம் பேரரசனாய் விளங்குபவனும் இவ்வாறு அடியவர்களைத் தடுத்து ஆட்கொண்டு அருளும் வித்தகனும்  ஆகிய சிவபெருமான். அவனை மனத்தில் எண்ணி, உயிர் உருகி, வாயாரப் பாடி, அழகிய வடிவம் கொண்ட தாமரை, குவளை மலர்கள் பூத்துக் கிடக்கும் இந்தப் பொய்கையில் ஒன்று கூடிப் பாய்ந்தும் சாய்ந்தும்  நீராடலாம்; வாருங்கள். 

 

பாடல் 16 /20
முன்னிக்கடலை சுருக்கி எழுந்துடையாள்
என்னத் திகழ்ந்து எம்மை ஆளுடையாள்
மின்னிப் பொலிந்து எம்பிராட்டி திருவடிமேல்
பொன்னம் சிலம்பின் சிலம்பித் திருப்புருவம்
என்னச் சிலை குலவி நந்தம்மை ஆளுடையாள்
தன்னில் பிரிவிலா எம்கோமான் அன்பர்க்கு
முன்னியவள் நமக்கு முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய்.

 

அருஞ்சொற்பொருள்:

   முன்னி – முந்திக்கொண்டு;

உடையாள் – உமையவள்;

என்ன – போல;

ஆளுடையாள் – ஆள்பவள்;

பொலிந்து – விளங்கி;

அம் சிலம்பு – அழகிய சிலம்பு;

சிலம்பி – ஒலித்து;

சிலை – வில்;

குலாவி – பழகி;

இன்னருள்=இனிமை+அருள்

 

பொருள் விளக்கம்:

  இந்தப் பாடலில் உருவக அணியை அமைத்துப் பாடியுள்ளார் மாணிக்கவாசகர். கடல் நீர் ஆவியாகி மேகமாக உருக்கொண்டு மழையாய்ப் பொழியும் அறிவியல் நுட்பத்தை இப்பாடலில் பொதிந்து வைத்துள்ளார். பாடற்பொருள் பின்வருமாறு:

 

   உலக உயிர்களுக்கு முந்திக்கொண்டு அருள் செய்யும் தாயுள்ளம் கொண்ட உமையவளின் கரிய மேனியைப்போல மேகங்கள் திகழ்கின்றன. கடலின் சுருக்க வடிவமே அந்த மேகங்கள்.

 

   எம்மை ஆளும் உமையவள் ஒருகணம் உள்ளத்தில் தோன்றி முகம் காட்டுவதைப்போல வானில் அழகான மின்னல் தோன்றி மறைகிறது. அவள் தன் கால்களில் அணிந்துள்ள பொற்சிலம்புகள் ஒலிப்பதைப் போல வானில் இடியோசை கேட்கின்றது. அவளது அழகிய வளைந்த புருவத்தைப் போல வானவில் காணப்படுகின்றது.

 

    சிவனைப் பிரிந்து அறியாதவளும் நம்மை ஆட்கொண்டவளும் ஆகிய உமையவள் தன் கணவனை முந்திக்கொண்டு அன்பர்களின் உயிர்கள் தழைக்க அருள் தருவதைப் போல இப்போது மேகம் குளிர்ந்து பூமியில் பயிர்கள் தழைக்க மழை பொழிகின்றது.

 

  வாருங்கள் தோழியரே மார்கழி நீராடி மாதொரு பாகனை மனத்தில் ஏற்றிப் போற்றிப் பாடி மகிழ்வோம். 

 

 பாடல் 17 /20
செங்கண் அவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்
எங்கும் இலாதோர் இன்பம் நம்பாலதாக்
கொங்கு உண் கருங்குழலி நந்தம்மை கோதாட்டி
இங்கு நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகனை
அங்கண் அரசை அடியோங்கட்கு ஆரமுதை
நங்கள் பெருமானைப் பாடி நலம் திகழப்
பங்கயப் பூம்புனல் பாய்ந்தாடேலோர் எம்பாவாய்.

 

அருஞ்சொற்பொருள்:

  செங்கண் அவன் – சிவந்த கண்களையுடைய திருமால்;

திசைமுகன் – நான்முகக் கடவுள்;

கொங்கு – மணம்;

குழல் – கூந்தல்;

கோது – குற்றம்;

அடியோங்கட்கு – அடியவர்களுக்கு;

ஆட்டி – நீக்கி;

அம் கண் – அழகிய கண்;

பங்கயம் – தாமரை

புனல் – நீர்

 

பொருள் விளக்கம்:

 

   நல்ல மணம் பொருந்திய கூந்தலையுடைய பெண்ணே! செந்தாமரை போன்ற கண்களையுடைய திருமாலிடத்தும், நான்முகனிடத்தும், தேவர்களிடத்தும் காட்டும் அன்பைவிட நம்மிடத்தில் அதிகமான அன்பைக் காட்டுபவன் நாம் வணங்கும் சிவபெருமான்.

 

   நம்முடைய குற்றங்களை நீக்குவதற்காக நம் உள்ளமாகிய கோவிலில் சிவந்த கமலப்பூ போன்ற பொன்னார் திருவடிகளை எடுத்து வைத்து எழுந்தருளும் எளியவன் நம் சிவபெருமான்.

 

  அவன் நாம் அழைத்த குரலுக்கு இரங்கி வந்து அருள் செய்யும் எளிய சேவகன். அழகிய கண்களையுடைய  நம் தலைவனை, அடியார்க்கு அமுதமாய்த் திகழும் நம் பெருமானை, நம் வேண்டுதல் நிறைவேறும் பொருட்டு, இந்தத் தாமரைத் தடாகத்தில் நீராடி,  பாடிப் பணிவோம் வா. 

 

பாடல் 18 /20
அண்ணாமலையான் அடிக்கமலம் சென்றிறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகை வீறற்றாற் போல்
கண்ணார் இரவி கதிர் வந்து கார் கரப்பத்
தண்ணார் ஒளி மழுங்கித் தாரகைகள் தாமகல
பெண்ணாகி ஆணாய் அலியாய் பிறங்கொளிசேர்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகி
கண்ணா ரமுதமாய் நின்றான் கழல்பாடி
பெண்ணே இப்பூம்புனல் பாய்ந்தாடலோர் எம்பாவாய்.

       - மாணிக்கவாசகர்

 

 

அருஞ்சொற்பொருள்:

இறைஞ்சும் – வணங்கும்;

வீறு – வலிமை;

இரவி – சூரியன்;

கார் – இருட்டு;

கரப்ப – மறைய;

தண் – குளிர்ச்சி;

தாரகை – நட்சத்திரம்;

பிறங்கும் – விளங்கும்;

கழல் – திருவடி.

 

பொருள் விளக்கம்:

   பெண்ணே! பேரொளி சிந்தும் அண்ணாமலையானின் அழகிய தாமரை மலர் போன்ற திருவடிகளில் பணிந்து தேவர்கள் வணங்கும்போது, அவர்கள் தம் முடிமீது தரித்துள்ள மகுடங்களில் உள்ள மணிகளின் ஒளி மறைந்து போவதைப் போல, இரவுப் பொழுதில் மின்னிக் கொண்டிருந்த விண்மீன்கள் காலையில் கதிரவன் எழுந்து இருட்டை மறைத்ததும் தாமும் ஒளியை இழந்து அகன்று விடுகின்றன.

 

   பெண்ணாகி, ஆணாகி, அலியாகி, ஒளி விளங்கும் விண்ணாகி, மண்ணாகி, இன்னும் வேறு வேறு ஆகி, இனிய அமுதமாகி, இப்படிக் கண்கொள்ளாக் காட்சியாகி நம்முன் தோன்றும் சிவபெருமானின்  திருவடிகளைப் போற்றிப் பாடியவாறு இந்தப் பூம்பொய்கையில் பாய்ந்து நீராடுவோம்.

 

தத்துவ விளக்கம்:

   இறை உணர்வு நம் உள்ளத்தில் பெருகும்போது மனமாசுகள் அகன்றுவிடும் என்பது இப் பாடலின் உட்பொருளாகும்.  

 

பாடல் 19 /20
உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலமென்று
அங்கு அப்பழஞ் சொற் புதுக்குமெம் அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கொன்று உரைப்போம் கேள்
எம் கொங்கை நின் அன்பரல்லாதோர் தோள் சேரற்க
எம் கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க
கங்குல் பகலெங்கண் மற்றொன்றும் காணற்க
இங்கு இப்பரிசே எமக்கு எம்கோன் நல்குதியேல்
எங்கெழிலன் ஞாயிறு எமக்கேலோர் எம்பாவாய்.

  - மாணிக்கவாசகர்

 

அருஞ்சொற்பொருள்:

புதுக்கும் – புதுப்பிக்கும்;

கங்குல் – இரவு;

கோன் – அரசன்;

நல்குதி – கொடு;

எழில் – எழுந்தால்

 

பொருள் விளக்கம்:

   திருமணத்தின்போது தந்தை தன் பெண்ணை மாப்பிள்ளையுடன் அனுப்புகையில், “இனி இவள் உனக்கே அடைக்கலம்” என்று சொல்லி அனுப்புவது மரபு. இது இப்போது எங்கள் நினைவுக்கு வருவதால், உன்னிடம் சில வரங்களைக் கேட்கின்றோம்.

 

  உன் அடியார்கள் மட்டுமே எமக்குக் கணவராய் வாய்க்க வேண்டும். மற்ற எவரையும் திருமணம் செய்யும் நிலை எங்களுக்கு ஏற்படுதல் கூடாது. எங்கள் கைகள் உனக்கும் உன் அடியார்க்கும் தொண்டு செய்ய வேண்டும். வேறு வெட்டி வேலையில் அவை ஈடுபடுதல் கூடா. இரவு பகல் எப்போதும் உன்னையும் உன் அடியார்களையும் மட்டும் எம் கண்கள் காண வேண்டும். மற்ற எவற்றையும் அவை காணுதல் கூடா. இந்த வரங்களை எம் தலைவனாகிய நீ மனமுவந்து வழங்கிவிட்டால், ‘சூரியன் கிழக்கில் உதித்தாலென்ன மேற்கில் உதித்தாலென்ன’ என்று எந்தக் கவலையும் இல்லாமல் நாங்கள் வாழ்வோம்.

 

திருவெம்பாவை பாடல் 20 /20
போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்
போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரீகம்
போற்றி யாம் உய்ய ஆட்கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றி யாம் மார்கழி நீராடேலோர் எம்பாவாய்.

  - மாணிக்கவாசகர்

 

அருஞ்சொற்பொருள்:

ஆதி – முதல்; அந்தம் – முடிவு;

போகம் – இன்பம்;

ஈறு – இறுதி;

புண்டரீகம் – தாமரை;

உய்ய – உருப்பட.

 

பொருள் விளக்கம்:

  முதலும் முடிவுமாய் விளங்கும் சிவபெருமானே! நினது மலர்ப்பாதங்களைப் போற்றுகிறோம். அருள்வாயாக. நீயே எல்லா உயிர்களின் பிறப்புக்கும் காரணமாகிறாய். உன் பொற்பாதங்களைப் போற்றுகிறோம். உலகின் எல்லா உயிர்களும் இன்பத்தில் திளைத்திடச் செய்கிறாய். உன் பூப்போன்ற பாதங்களைப் போற்றுகிறோம். எல்லா உயிர்களும் வாழ்வாங்கு வாழ்ந்தபின் அவர்களுக்கு முடிவைத் தருகிறாய். உன் இணையடிகளைப் போற்றுகிறோம். நான்முகனாலும் தேடிக் காணக் கிடைக்காத உன் தாமரை மலர் போன்ற திருவடிகளைப் போற்றுகிறோம். நாங்கள் கடைத்தேற்றம் பெறக் காரணமாயிருக்கும் உன் பொன்மலர்ப் பாதங்களைப் போற்றுகிறோம். உன் பொன்னார் திருவடிகளே சரணம் என்று சொல்லியவாறு மார்கழி நீராடி பாவை நோன்பு நோற்கின்றோம்.

 

தத்துவ விளக்கம்:

  இறைவனின் திருவடிகளைச் சிக்கெனப் பிடித்துச் சரணடைந்தால் நாம் பிறவித் துன்பத்திலிருந்து விடுதலை பெற்று, இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறலாம் என்பது இப்பாடல் மூலம் அறியக்கூடிய நுட்பமான செய்தியாகும்.

 

       திருவெம்பாவை உரை நிறைவுற்றது.

.....................................................................................................

 

 

 


No comments:

Post a Comment