Wednesday 10 June 2015

ஒரு லட்டு ஒரு லட்சம்

   அமெரிக்கா  வந்து பத்து நாள்கள் ஆகிவிட்டன. எங்காவது கோயில் இருந்தால் போகலாம் என்று தோன்றியது.
ஞாயிற்றுக் கிழமை காலையில் அழைத்துச் செல்வதாக என் பெரிய மகள் அருணா கூறினாள்.

    கிரேட்டர் ஃபோர்ட்வொர்த் என்னும் ஊரில், ஓக்மண்ட் சாலையில் சென்ற ஆண்டு புதியதாகக் கட்டப்பெற்ற இந்து கோவில் உள்ளது. சிவனும் சீனிவாசனும் நடு நாயகமாக அருகருகே அமர்ந்து அருள் பாலிக்க, கணேஷ், குமாரசாமி, துர்காதேவி, லட்சுமி தேவி, ராம் பரிவார் சிலைகள் இருபக்கமும் அமைந்துள்ளமை கண்கொள்ளாக் காட்சியாகும்.

   ஓராண்டு நிறைவையொட்டி சீனிவாசா திருக்கல்யாணம். அந் நிகழ்வில் பங்கேற்பது கோடி புண்ணியம் என்பார்கள். எனவே நானும் என் மனைவி சாந்தியும் ஞாயிறு அதிகாலையில் எழுந்து புறப்படத் தயாரானோம்.

   அருணா அந்தக் கோவில் இருக்கும் ஊருக்கு முன்பின் சென்று அறியாதவள். அவளுடைய காரில் வழிகாட்டும் GPS கருவி இருந்ததால் வழி கண்டுபிடிப்பது எளிதாக இருந்தது. 10.30 மணிக்குத் திருக்கல்யாண வைபவம். 10.25 மணிக்கு எங்களை கோவில் வாசலில் இறக்கிவிட்டாள். “எனக்கு முக்கிய வேலை இருக்கிறது. திருக்கல்யாண வைபவம் முடிந்தவுடன் போன் செய்யுங்கள்., வந்து அழைத்துக் கொள்கிறேன்” என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டாள்.


    உரிய இடத்தில் செருப்புகளைக் கழற்றி வைத்துவிட்டு, உள்ளே சென்றோம். திருக்கல்யாணத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. பக்தர்களால் அரங்கு நிறைந்திருந்தது. நம்மூர் கோவில் மாதிரி இல்லை. ஒரு கல்யாண மண்டபம்போல் இருந்தது. தரையில் நீண்ட நேரம்  உட்கார இயலாதவர்களுக்கு மடக்கு நாற்காலிகள் போடப்பட்டிருந்தன.

   மூன்று குருக்கள் முறையாக மந்திரங்களை உச்சரித்தபடி திருக்கல்யாண சடங்குகளைச் செய்து கொண்டிருந்தார்கள். ஏழு பெரிய வெள்ளித் தட்டுகளில் பழங்கள், தேங்காய்கள், லட்டுகள் என பல்வேறு பூஜை பொருள்களை அழகுற வைத்திருந்தார்கள். ஒரு தேங்காய் மூன்று டாலர் அதாவது 198 ரூபாய் விலை என்றாலும் தேங்காய்கள் குவிந்திருந்தன.

    குருக்கள் அணிந்திருந்த மேல் சட்டையில் கார்ட்லெஸ் மைக்குகள் பொருத்தப்பட்டிருந்தன. அவ்வப்போது மந்திர உச்சரிப்புக்கிடையே ஆங்கிலத்தில் வைபவம் குறித்த விளக்கத்தையும் கூறியது சிறப்பாக இருந்தது. வந்திருந்தோர் தமக்குள் எதுவும் பேசாமல் கவனமாகக் கேட்டனர். அவ்வப்போது கரவொலி எழுப்பி ஆரவாரம் செய்தது புதுமையாக இருந்தது.

   முன்னதாக, சிறுமியர் மூவர் பரதநாட்டிய உடையில் வந்து மிகச் சிறப்பாக நடனம் ஆடினார்கள். மூவரின் நடன அசைவுகள், முத்திரைகள் அனைத்தும் ஒரு நூல்கூட பிசகாமல் ஒத்து இருந்தன. நடனம் முடிந்து அவர்கள் பார்வையாளர் பகுதிக்கு வந்தபோது அவர்களை அணுகி பாராட்டிப் பேசினேன். அவர்களும் அழகான ஆங்கிலத்தில் நன்றி சொன்னார்கள். அவர்கள் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்களாம்.

    திருக்கல்யாண வைபவத்தின் நிறைவில் மாலை மாற்றும் நிகழ்வு அருமையாக இருந்தது. இரு குருக்கள் கையில் மாலையோடு எழுந்தனர். மாலை மாற்றினாள் கோதை மாலை மாற்றினாள் என்னும் தமிழ்ப்பாடல் பின்னணியில் ஒலிக்க, அதன் தாளகதிக்கு ஏற்ப குருக்கள் மணமகனாகவும் மணமகளாகவும் பாவித்து நடனம் ஆடியபோது பார்வையாளர் பகுதியிலிருந்து பெரும் கரவொலி எழுந்தது. நிறைவாக, மணமக்கள் சிலைகளை அழகான பல்லக்கில் வைத்து ஆடவரும் பெண்டிரும் தம் தோள்மீது சுமந்து கோவிலை வலம் வந்தனர். நிறைவில், தீபம் காட்டி, தீர்த்தம் அளித்தனர்.

     மணி 12.30. விழாக் குழுவினர் சிலர் மைக்கை எடுத்துக் கொடையாளர்களைப் பாராட்டிப் பேசினர். பின்னர் நடந்ததுதான் மிகவும் சுவாரஸ்யமான நிகழ்ச்சி.

   கோவிலுக்கு நிதிதிரட்டும் வகையில், ஒரு பெண்மணி முன்னே வந்து ஒரு பெரிய லட்டை ஏலம் விட்டது வியப்பை ஏற்படுத்தியது. ஒரு  பெரிய தேங்காய் அளவில் இருந்த அந்த லட்டை 200 டாலர் என்றார். ஒருவர் 300 டாலர் என்றார். மற்றொருவர் 400 டாலர் என்றார். இப்படிப் பலரும் உயர்த்திக் கேட்டனர். நிறைவாக, அந்த லட்டு 1600 டாலருக்கு- அதாவது ஒரு லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது!

   அதில் பத்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள லட்டு எங்களுக்குக் கிடைத்தது. ஏலம் எடுத்தவர் சுற்றி நின்றவர்களுக்குப் பகிர்ந்தளித்தார்! இன்பத்தில் மிக உயர்ந்த இன்பம் ஈத்துவக்கும் இன்பம் என்னும் திருவள்ளுவரின் கருத்துக்குச் செயல் வடிவம் கொடுத்தார் அந்த அன்பர்.

    அடுத்து விருந்து வைபவம். ஆண் பெண் வேறுபாடு இல்லாமல் ஒரே வரிசை. யாரும் முண்டியடிக்கவில்லை., முட்டி மோதவில்லை. யாருக்கும் முன்னுரிமை இல்லை. அக் கோவிலுக்கு முப்பதாயிரம் டாலர் நன்கொடை அளித்திருந்த எங்கள் உறவினர் டாக்டர் சங்கரபாண்டியன், டாக்டர் பங்கஜம் சங்கரபாண்டியன் இருவரும் எங்களோடு வரிசையில்தான் நின்றனர்.

   தட்டேந்தி பெறும் வகையில்(Buffet System) ஏற்பாடு செய்திருந்தார்கள். நான்கைந்து பெண்மணிகள் புன்னகை சிந்தியபடி, சிந்தாமல் பதார்த்தங்களைப் பார்த்துப் பார்த்து வழங்கினார்கள். இட்லி, சட்னி, சாம்பார், வடை, சப்பாத்தி, பொங்கல், புளிசாதம், கெட்டித்தயிர் என அசத்திவிட்டார்கள். எல்லோருக்கும் எவர்சில்வர் ஸ்பூன், ஃபோர்க் வழங்கப்பட்டன. தேநீர், காபி, பால் ஆகியவை சேமச் செப்பில்(Flask) வைக்கப் பட்டிருந்தன. விரும்பியவர்கள் பிடித்துப் பருகினார்கள். ஏலக்காய் சேர்க்கப்பட்ட தேநீர் படு சுவையாக இருந்தது.

      உண்ட மகிழ்வோடு, மீண்டும் ஒருமுறை சீனிவாசப் பெருமாளை வணங்கிவிட்டு வெளியே வந்த போது மகள் அருணா எங்களை அழைத்துச் செல்லத் தயாராக நின்றாள்.

   தென்னாடு உடைய சிவனே போற்றி எந் நாட்டவருக்கும் இறைவா போற்றி என்று என் நா நவில, கைகள் இருக்கைப் பட்டையைப் பொருத்தின.



4 comments:

  1. Continuously I am reading all your postings. Really Superb and it has created feelings of joining hands with you sir. Without Passport and Visa you have taken all the blog readers to USA. Great Job. Best Wishes. Let it continue forever.

    ReplyDelete
  2. தங்களின் பயணங்களில் சிவ சீனிவாச தரிசனமும் சேர்ந்துள்ளது. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. தங்களின் பயணங்களில் சிவ சீனிவாச தரிசனமும் சேர்ந்துள்ளது. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. அருமை... அழகு... ஆனந்தம்... தொடரட்டும் இனிய புனிதயாத்திரை. மிக்க மகிழ்ச்சி.

    ReplyDelete