இளம்பெருவழுதி என்னும் சங்கப் புலவன் மூவாயிரம்
ஆண்டுகளுக்கு முன்னர் பாடிய பாடல் இதுவாகும். இந்த உலகம் அழிந்து படாமல் இன்னும்
இயங்கிக் கொண்டு இருப்பதற்குக் காரணம் யார் என ஒரு வினாவை நாம் கேட்டால் அதற்குரிய
விடையாக அமைகிறது இப்பாடல்.
உண்டால் அம்ம இவ் வுலகம் இந்திரர்
அமிழ்தம் இயைவது ஆயினும் இனிது எனத்
தமியர் உண்டலும் இலரே; முனிவிலர்;
துஞ்சலும் இலர்; பிறர் அஞ்சுவது அஞ்சிப்
புகழ் எனின் உயிரும் கொடுக்குவர்; பழி எனின்
உலகுடன் பெறினும் கொள்ளலர்; அயர்விலர்;
அன்ன மாட்சி அனையர் ஆகித்
தமக்கு என முயலா நோன் தாள்
பிறர்க்கு என முயலுநர் உண்மை யானே.
கிடைத்தது
அமிழ்தம் என்றாலும் தனியாக உண்ணமாட்டார். எவரிடத்தும் வெறுப்பினைக் காட்டார்.
இலக்கை அடையுமுன் தூங்கமாட்டார். பழிக்கு அஞ்சுவார். புகழை மட்டுமே கருதுவார்;
பொருளை ஒருபோதும் கருதார். சோம்பலை ஒழித்து,, கொண்ட கடமையில் கருத்தாக இருப்பார்.
தனக்கு என எதையும் செய்யாது பிறர் நலத்திற்காகவே எதையும் செய்வார். இப்படிப்பட்ட
மாண்புடையார் சிலர் உலகில் வாழ்வதால்தான் வானம் பொழிகிறது பூமி விளைகிறது
என்பதுதான் இப்பாடலின் மையக் கருத்தாகும்.
இளம்பெருவழுதி குறிப்பிட்ட சிலரில் ஒருவரை ஒரு மாமாங்கத்திற்கு முன் கோபிசெட்டிப்பாளையத்தில் பார்த்தேன். அவருக்குப் பிறகு அண்மையில் ஒருவரைப் பார்த்தேன் என்றால் நீங்கள் நம்பமாட்டீர்கள்.
“வண்டி
ஏதாவது அனுப்பட்டுமா?”
“வேண்டாம் என் சொந்தக் காரில் வந்துவிடுகிறேன்.”
“மதிய உணவுக்கு ஏற்பாடு செய்து விடுகிறேன்”
“வேண்டாம் வேண்டாம் நானே கொண்டு வருகிறேன்”
எனக்கு ஒரே வியப்பு இப்படியும் ஓர் ஆய்வு
அலுவலர் இருப்பாரா என்று, உரிய நேரத்தில் வந்தார்; பள்ளி ஆவணங்களைப் பார்வை
இட்டார். ஒன்பது பள்ளிகள் ஒரே இடத்தில் கலந்து கொண்ட 'ஜமாபந்தி'! மதியம் இரண்டரை
மணிக்கு ஒரு பத்து நிமிட இடைவெளியில் தான் கொண்டு வந்திருந்த உணவை உண்டு
மகிழ்ந்தார். நான்கு மணி அளவில் எல்லோருக்கும் வழங்கப்பட்ட தேநீரை அருந்திவிட்டு
மாலை ஆறு மணிவரை ஆய்வுப் பணியைத் தொடர்ந்தார். நிறை கண்டபோது பாராட்டினார்; குறை
கண்டபோது சுட்டிக் காட்டினாரே தவிர குட்டிக்காட்டவில்லை. சோர்வு இல்லை; ஒரு சுடு
சொல் இல்லை. வழிகாட்டல் இருந்ததே தவிர வைதல் இல்லை.
அவர் விடைபெறும் நேரம் வந்தது. வழக்கம்போல்
ஒரு நூலைக் கொடுத்தேன்; வாங்க மறுத்துவிட்டார். “ஐயா, இது பணம் போட்டு
வாங்கப்பெற்ற நூல் இல்லை. இங்கே பாருங்கள் இது நான் எழுதிய நூல். நீங்கள் நூல்
வாசிக்கும் வழக்கம் உள்ளவர் என்பதை அறிவேன். அதனால் கொடுக்கிறேன்” என்று கூறினேன்.
தயங்கியபடி பெற்றுக்கொண்டு விடைபெற்றுச் சென்றார்.
நாற்பது ஆண்டு கால நீண்ட நெடிய என் ஆசிரியப் பணி
அனுபவத்தில் பல ஆய்வு அலுவலர்களைப் பார்த்திருக்கிறேன். திண்டுக்கல் பிரியாணி
மட்டுமே வேண்டும் என அடம்பிடித்தவர்கள் உண்டு. அரசு ஊர்தியில் வந்தாலும் எரிபொருள்
நிரப்பித்தர வேண்டியிருக்கும். ஆய்வு முடிந்து “உறை”யைப் பெற்றுக் கொண்டு
ஆய்வறிக்கையில் கையொப்பமிட்ட அதிகாரிகள் பலராக இருந்தனர்.
நல்லாசிரியர் விருதுக்குப் பரிந்துரை செய்ய
அவர்களைத் தனியாகக் கவனித்ததை என் நண்பர்கள்
கதை கதையாகச் சொன்னது என் நினைவில் இப்போது வந்து தொலைக்கிறது. நல்ல
வேளையாக மாநில விருது எதுவும் பெறாமல் நேரடியாக தேசிய விருதைப் பெற்றவன் நான்.
தேசிய விருதுக்கு என்னைப் பரிந்துரைத்தவர் கோபியில் பணியாற்றிய அன்றைய மாவட்டக் கல்வி அலுவலர். அவர் ஒரு
நேர்மையான அதிகாரி. திரு.பி.ஏ.நரேஷ் என்று பெயர்.
என் மனக் கோவிலில் இன்றும் வீற்றிருக்கும் மாமனிதர் அவர். அவருக்குப் பின்னால்
நான் சந்தித்த மற்றொரு மாமனிதரைப் பற்றிதான் மேலே குறிப்பிட்டேன். நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை என்பார் ஒளவையார். அந்த நல்லாருள் ஒருவர் அவர்.
அவர்தான் திரு எஸ்.சிவக்குமார்.
மெட்ரிக் பள்ளிகளுக்கான துணை ஆய்வர். ஓர் அரசு ஊழியர் எவ்வாறு இருக்க வேண்டும்
என்பதற்கான இலக்கணமாக வாழ்பவர்.
மாசற்ற அவரை எவரும் மாசுபடுத்திவிடக் கூடாதே
என்பதுதான் என் கவலை. அவர் வாழ்க; அவர்தம் குலம் வாழ்க.
வாழ்த்துக்கள்...
ReplyDeleteகண்டதை பகன்றீர்கள். காணாதவற்குப் பாடமாகும். நீதிபதி மூ.புகழேந்தி
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteபோற்றுதலுக்கு உரிய மனிதர்
ReplyDeleteபோற்றுவோம்
நல்லவர்களை அடையாளம் காண்பது அரிது. அதனினும் அன்பளிப்போ, கையூட்டோ பெறாமல் வாழ்பவரைக் காண்டல் அரிதினும் அரிது. நல்ல மனிதரை அடையாளம் காட்டியுள்ளீர்கள். வாழ்க! வளர்க! வெல்க! அவரது பணி.
ReplyDeleteநல்லவர்களை அடையாளம் காண்பது அரிது. அதனினும் அன்பளிப்போ, கையூட்டோ பெறாமல் வாழ்பவரைக் காண்டல் அரிதினும் அரிது. நல்ல மனிதரை அடையாளம் காட்டியுள்ளீர்கள். வாழ்க! வளர்க! வெல்க! அவரது பணி.
ReplyDeleteநல்ல மனிதரை சுட்டிக் காட்டியதர்காக நன்றி
ReplyDeleteThanks for sharing sir. That is why our mother Earth still revolves in its axis. I salute this great personality Mr.Sivakumar. You are this generation's "Ilamperu Valuthi" (illustrating good things thro' blog to repair this society)
ReplyDeleteGreat personality. Well narrated.
ReplyDeleteI pray to the Almighty to bless this "GENTLEMAN" with long life, good health and what not. Prof.R.Pandiaraj
ReplyDelete