Wednesday, 14 January 2026

மார்கழிக் கொண்டாட்டம்

 மார்கழி என்றாலே எங்கள் இல்லத்தில் கொண்டாட்டம்தான். காலை ஐந்து மணிக்கு எழுந்தவுடன் முதல் வேலையாக எம்.எல்.வசந்தகுமாரியின் திருப்பாவையை ஒலிக்க விடுவேன்.

    வாராது வந்த மாமணிபோல் வாய்த்த என் துணைவியார், ஆண்டாள் அருளிய  திருப்பாவையின் முப்பது பாடல்களையும் தப்பாமல் பாடும் திறன் படைத்தவர். ஒவ்வொரு நாள் காலையிலும் பூசை அறையில் அமர்ந்து முப்பது பாடல்களையும் மனப்பாடமாகச் சொல்லும் அழகு தனியழகு.

   ஒரு பாடல் கூட எனக்கு மனப்பாடமாய்த் தெரியாது. அவர் சொல்வதைக் கேட்பதோடு சரி. அவர் திருப்பாவை சொல்லி முடித்தவுடன் நான் மாணிக்கவாசகர் பாடியருளிய திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சியிலிருந்து நாள் பாசுரங்களை மட்டும் பார்த்துப் படிப்பேன்.

      இவையெல்லாம் முடிந்தவுடன் சுவையான சுண்டல் கிடைக்கும். சில நாள்களில் சக்கரைப் பொங்கல், வெண்பொங்கல் ஆகியனவும் சுடச்சுட கிடைக்கும்.

      இப்படியாக நாள்தோறும் கேட்டதை மீண்டும் அசைபோடுவேன். திருப்பாவை திருவெம்பாவை இரண்டிலும் உள்ள ஒற்றுமைகள் எனக்கு வியப்பைத் தந்தன.

    இரண்டுமே கன்னிப் பெண்கள் பாடுவதுபோல் அமைந்துள்ளன.

திருப்பாவை திருவெம்பாவை இரண்டும் ஏலோர் எம்பாவாய் என்றே முடிகின்றன.

ஆண்டாள் மாணிக்கவாசகர் இருவரும் அதிகாலையை வருணிக்கும்போது பறவைகளின் கீச்சொலியை ஒரே சொல்லால் குறிப்பிடுகின்றனர்.’புள்ளும் சிலம்பின காண்’ என்பது திருப்பாவை. ‘கோழி சிலம்பச் சிலம்பும் குருகு’ என்பது திருவெம்பாவை.

ஆண்டாள் மாணிக்கவாசகர் இருவரும் தத்தம் இறைவனை ‘இனியான்’ எனப் பாடிப் பரவுகின்றனர். ‘மனத்துக்கு இனியானை நீ பாடவும் வாய் திறவாய்’ என்பது திருப்பாவை. ‘கண்ணுக்கு இனியானைப் பாடி’ என்பது திருவெம்பாவை.

   இரு பாவைகளிலும் மார்கழி நீராடல் குறிக்கப்பெறுகின்றன. ‘மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்’ என ஆண்டாளும், ‘ மார்கழி நீராடலோர் எம்பாவாய்’ என மாணிக்க வாசகரும் ஈற்றடியை அமைக்கின்றனர்.

  பெண்களிடையே நிகழும் உரையாடல் கூட ஒரே மாதிரி அமைவது வியப்பளிக்கிறது. திருப்பாவையில் துயில் எழுப்ப வந்த பெண்ணிடம் உறங்கிக் கிடக்கும் பெண், எல்லாரும் வந்துவிட்டார்களா எனக் கேட்க, அதற்கு எழுப்ப வந்த பெண், நீயே வந்து எண்ணிச் சரிபார்த்துகொள் என்கிறாள். ‘எல்லோரும் போந்தாரோ போந்தார் போந்தெண்ணிக் கொள்’ என்பது திருப்பாவை பாடல் வரி. ‘நீயே வந்து எண்ணிக் குறையில் துயிலேலோர் எம்பாவாய்’ என்பது திருவெம்பாவை.

   நல்ல மழை பொழிய வேண்டும், நல்ல கணவரை அடைய வேண்டும் என்று வேண்டுவதாய் இரண்டு பாவை நூல்களும் அமைந்துள்ளன.

   இன்னும் பல ஒற்றுமைகள் உள. விரிக்கின் கட்டுரை நீளும்.

மாணிக்கவாசகர் காலத்தால் முந்தியவர்; ஆண்டாள் பிந்தியவர். ‘போலச்செய்தல்’ என்னும் உளவியல் கோட்பாட்டின்படி, ஆண்டாள் மாணிக்கவாசகரை அடியொற்றிப் பாடினார் எனக் கொள்ளலாமா?

 -முனைவர் அ.கோவிந்தராஜூ, கரூர்.

  

    

 

 

    

1 comment:

  1. வாழ்க உங்கள் சேவை.

    ReplyDelete