Monday 16 November 2015

நான் விரும்பும் நன்னூல்

   இங்கே நான் குறிப்பிடும் நூல் பவணந்தியார் எழுதிய நன்னூல் அன்று. பேராசிரியர் இரா. மோகன் எழுதியுள்ள இலக்கியச் சால்பு என்னும் நூலே நான் விரும்பும் நன்னூலாகும்.
பேராசிரியருக்குத் தமிழ் கூறும் நல்லுலகில் வாழும் இலக்கிய அன்பர்கள் சூட்டிய பெயர் தமிழ்த் தேனீஎன்பதாகும்.
பேராசிரியர் இரா.மோகன்


   மலரிலுள்ள தேனை எடுத்து நுகர்வோருக்குத் தரும் தேனீ ஓர் அஞ்சல்காரரைப் போல் வேலை செய்கிறது என்று பலரும் கூறுவது தவறாகும். மாறாக, மலர்த்தேனை வாயால் உறிஞ்சி மருத்துவ குணம் கொண்ட தம் உமிழ்நீரைக் கலந்து எத்தனை ஆண்டுகளானாலும் கெடாதத் தன்மையை ஊட்டி மதிப்புக் கூட்டப்பட்ட மாமருந்தாகத் தருவன தேனீக்கள் என்பதே உண்மை.

     இத்தகு தேனீக்களைப் போல இலக்கிய மலர்களிலும் இதிகாச மலர்களிலும், கவிதை மலர்களிலும் காப்பிய மலர்களிலும் அமர்ந்து ஆய்ந்து எடுத்த இலக்கியத் தேன் துளிகளுக்குத் தன் சிந்தனையால் மெருகூட்டி எப்போது படித்தாலும் ஏற்ற பயன் தரும் வகையில் மதிப்புக் கூட்டப்பட்ட சரக்காக மாற்றித் தர வல்லவர் பேராசிரியர் மோகன் என்பதற்குச் சான்றாகத் திகழ்கிறது இந் நூல்.

   செட்டி நாட்டில் பொருளின் தரம் பற்றிய ஒரு பழமொழி வழக்கில் உண்டு. சரக்கு முடுக்கா செட்டியார் முடுக்கா என்பதே அப் பழமொழியாகும்.  பேராசிரியர் அவர்கள் தம் சரக்கு முடுக்கான சரக்கு என்று நம்பியதால் இந்த நூலை 1997-இல் தாமே பதிப்பித்து வெளியிட்டார்.

   பள்ளி விட்டுப் பசியோடு வரும் குழந்தைக்கு எந்தத் தாமதமும் இல்லாமல் சிற்றுண்டி தரும் தாயைப்போல அணிந்துரை முன்னுரை என எதுவுமின்றி அறிவுப் பசிமிக்க வாசகர்களுக்கு நேரே கட்டுரைப் படையலைப் போடுகின்றார்.

   சங்க இலக்கியச் சால்பு, திருக்குறளின் பொதுமைப் பண்பும் தனித் திறனும், நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம், தெய்வப் புலவர் கம்பர், புதிய தமிழ்க்கவிதை என ஐந்து இயல்களாக வகுத்துக் கொண்டு, பல்வேறு செய்திகளை அரிமா நோக்கோடு பகுத்தும் தொகுத்தும் தரும் பாங்கு உண்மையில் பாராட்டத் தகுந்ததாகும்.

    மாமன்னர் வரும்போது கட்டியக்காரர் கட்டியங்கூறி வரவேற்பது போல் ஒவ்வொரு இயலுக்குள்ளும் வாசகர் நுழையும்போது  அறிஞரின் பொருத்தமான மேற்கோள் ஒன்று நின்று வருக வருக என வரவேற்கிறது.

    ஒரு தேர்ந்த பாடகர் இராக ஆலாபனை செய்வதுபோல  முதல் இயலின் தொடக்கத்தில்  சங்க இலக்கியத்தின் அக, புற அமைப்புகளை விரிவாகக் கூறுகின்றார். இதனைப் பட்ட வகுப்பில் தமிழைத் தனிப் பாடமாகப் படிக்கும் இக் காலத்து மாணவர்கள் எழுத்தெண்ணிப் படிக்க  வேண்டும். மேம்புல் மேயும் மனப்பாங்கை இவர்கள் முதலில் கைவிட வேண்டும்.
  தொடர்ந்து அகப்பொருளை எடுத்து ஆராய்கின்றார். சங்கக் காதலில் நயத்தகு நாகரிகம் இருந்தது, வரம்பு மீறாத வரைமுறை இருந்தது; அதில் உடற்கவர்ச்சி இல்லை மாறாக உயிர்க்கவர்ச்சியே இருந்தது என்பதை,
   யாக்கைக்கு
   உயிர் இயைந்தன்ன நட்பின் அவ்வுயிர்
   வாழ்தல் அன்ன காதல்

என்னும் அக நானூற்று வரிகளை விளக்கி,

உடம்பொடு உயிரிடை என்ன  மற்றன்ன
மடந்தையொடு எம்மிடை நட்பு

என்னும் குறள் கருத்தையும் ஒப்பிட்டுக் காட்டுவார்.

  காதல் கனிந்து திருமணத்தில் முடிகிறது. அவர்களை வாழ்த்தி வழியனுப்புகிறாள் தோழி.  அவள் என்ன சொல்லி வாழ்த்துகிறாள்?

    “ஒப்பற்ற அழகுடன் திகழும் உன் இளம் மனைவி இப்படியே இருந்துவிடப் போவதில்லை. ஒரு காலக்கட்டத்தில் அவளது பொன்மேனி பொலிவிழக்கும்., நறுங்கூந்தல் நரையாகிப் போகும்., மதர்த்து நின்ற அவளது அழகிய கொங்கைகள் தளர்ந்து தொங்கும். அந்த நிலையிலும் அவள்மீதுள்ள உன் காதல் பெருகுமே தவிர அருகாது என்பதை அறிவேன்”
என்னும் கருத்தமைந்த நற்றிணைப் பாடலை  எடுத்துக் காட்டும் நுட்பம் மிக அருமை, இதனைப் படிக்கும்போது பாவேந்தர் பாரதிதாசன் படைத்துக் காட்டும் முதியோர் காதல் நினைவுக்கு வருகிறது. இக் காலத்து இளைஞர்களும் இளம்பெண்களும் இவற்றை எல்லாம் படித்துணர்ந்து காதல் செய்தால், கல்யாணம் செய்தால் அவர்களிடையே மன முறிவும் இருக்காது., மண முறிவும் இருக்காது.

  நீண்ட பிரிவுக்குப்பின் தலைவன் குதிரைகள் பூட்டிய தேரில் காட்டு வழியே தலைவியைக் காணும் முகத்தான் விரைந்து வருகின்றான். வழியில் அவன் கண்ட காட்சி அவனுடைய மனத்தைப் பிசைகிறது; தேரோட்டியிடம் உடனே தேரை நிறுத்துமாறு கூறுகிறான். தொடர்ந்து பேராசிரியர் மோகன் கூறுவதைக் கேட்கலாம். “இணையாக இருக்கும் இயற்கை உறவுக்கு ஊறு நேர்ந்து விடக்கூடாது என எண்ணும் பண்பட்ட தலவனை நற்றிணை காட்டுகிறது. மலர்களில் தேன் உண்டு மயங்கிக் கிடக்கும் வண்டுகள் பதறாமல் இருக்க வேண்டும் என்பதற்காகத் தன் தேரிலிருந்து இறங்கி தேரில் பொருத்தப்பட்டிருந்த மணிகளின் நாவைப் பிணித்துக்கட்டி ஒலியெழாமல் செய்து பின்னர் தேரைச் செலுத்துகிறான்”

   எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது
     தானமர்ந்து வரூஉம் மேவற்றாகும்

 என்னும் தொல்காப்பியரின் கூற்றுப்படி எல்லா உயிரினங்களுக்கும் இன்பம் துய்க்கும் உரிமை உண்டு அதை மனிதன் மதிக்க வேண்டும் என்னும் கருத்தை பேராசிரியர் தக்க வண்ணம் நற்றிணை வழி நின்று சுட்டிக்காட்டுகின்ற பெற்றியை அறிந்து மகிழலாம்.

 யாதும் ஊரே யாவரும் கேளிர் எனத் தொடங்கும் கணியன் பூங்குன்றனாரின் பாடலை அறிமுகப்படுத்தும் அழகே அழகு. “ஒவ்வொரு சொல்லிலும் தொடரிலும் ஆழ்ந்த கருத்தின் திட்பமும், வாழ்க்கை அனுபவத் தெளிவும் விளங்கும் புகழ் மிக்கப் புறப்பாடல் இது” என்பது பேராசிரியரின் வாக்கு மூலம் ஆகும்

  நிறைவாக, பேராசிரியர் அவர்கள் சங்க இலக்கியத்தின் மாண்புகளை சங்க இலக்கிய வரிகளையே அளவு கோலாகக் கொண்டு, ‘நிலத்தினும் பெரிது; வானினும் உயர்ந்தது; கடலினும் ஆழ மிக்கது’ என்று அளந்து  வியந்து நிற்கும்போது அவரோடு நாமும் வியந்து நிற்கிறோம்..

  அடுத்த இயலில், “நாடு, மொழி, காலம், இடம் என்ற குறுகிய எல்லைகளைக் கடந்து, எக்காலத்து மக்களுக்கும் எந்நாட்டு மக்களுக்கும், எம்மொழி பேசும் மக்களுக்கும், எந்நிலையில் வாழும் மக்களுக்கும் பயன்படத்தக்க அரிய பல உண்மைகளை அழகிய வடிவில் எடுத்துரைக்கிறது” என்னும் முன்னுரையோடு  திருக்குறளின் மாண்புகளை எடுத்துக் காட்டுகிறார்.

   தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியத்திலும் பரத்தமை ஊடுபொருளாக அதுவே பாடு பொருளாகிறது. ஆனால் பரத்தமையை கடிந்தொதுக்கும் திருவள்ளுவர் பரத்தையர் இல்லாமலே புது வகையில் பாடுவதாக ஒரு புது விளக்கம் தருகிறார் பேராசிரியர் மோகன். ஒரு தும்மல் கூட ஊடுபொருளாகும் என்பதை குறட்பாக்கள் வழிநின்று விளக்குகிறார்.

   திருக்குறளை மனு தரும சாத்திரம், அர்த்த சாத்திரம், தம்ம பதம் போன்ற  பிறமொழி நீதி நூல்களுடன் ஒப்பிட்டு, உடன்பட்டு நிற்பதையும் வேறுபட்டு நிற்பதையும் ஆராய்ந்து அறிந்து பட்டியலிடுகின்றார். அதேபோல் திருவள்ளுவரோடு சாக்ரட்டீசு, பிளேட்டோ, அரிஸ்டாட்டில், மார்க்கஸ் அரேலியஸ், கன்பூசியஸ் ஆகிய பிறநாட்டு அறிஞர்களை வர்சையாக நிற்கச் செய்து அவர்கள் யாரினும் வள்ளுவரே வானளவு உயர்ந்து நிற்பதைச் சான்றுகாட்டி நிறுவுகின்றார். அங்கேதான் பேராசிரியர் மோகன் நிற்கின்றார். சுருங்கச் சொன்னால், ‘குறளின் பெருந்தக்க யாவுள?” என்று நம்மையெல்லாம் வியந்து கூறச் செய்கிறார்.

  அடுத்த இயலில்,நெஞ்சை அள்ளும் காப்பியம், உறுதிப் பொருளைச் சொல்லும் காப்பியம், கலைத்திறத்தால் வெல்லும் காப்பியம் என்று தமக்கே உரிய பாணியில் சிலப்பதிகாரத்தை அறிமுகப்படுத்துகிறார். அதுவே தமிழில் தோன்றிய முழு முதல் காப்பியம் என்று பதிவு செய்து, அக் கூற்றுக்கு அரணாக அறிஞர்தம் கருத்துகளை அமைத்துக் காட்டுகிறார்.

   சிலம்பில் முடிமக்கள் மூவேந்தர் வலம் வந்தாலும்  சிலப்பதிகாரக் கதை அவர்தம் கதையன்று. மாறாக, கண்ணகி, கோவலன், மாதவி என்னும் மூன்று குடிமக்களுடைய கதைதான் சிலப்பதிகாரக் கதை என்பதை நிறுவுகின்றார் பேராசிரியர் மோகன்.

    கோவலனும் கண்ணகியும் பிறந்தது சோழநாடு; கதையின் திருப்பு முனையாக அமைந்தது பாண்டிநாடு; கண்ணகியைக் கடவுளாகக் கண்டது சேரநாடு. மூன்று நாடுகளைப் போற்றவும் மூன்று மன்னர்களைப் பாராட்டவும் களமாக அமைந்தது சிலப்பதிகாரம். எனவே தமிழில் எழுந்த முதல் ஒற்றுமைக் காப்பியம் என பேராசிரியர் கூறுவது ஈண்டு சிந்திக்கத்  தக்கதாகும்.

  பெண்ணின் பெருந்தக்க யாவுள என்று கற்பில் சிறந்த பெண்மணிகளைப் போற்றும் திருவளுவர் வழியில் வந்த இளங்கோவடிகள்

   கற்புக் கடம்பூண்ட இத் தெய்வம் அல்லது
   பொற்புடை தெய்வம் யாம் கண்டிலமால்

என்று கவுந்தி அடிகள் கூற்றாக அமைத்துப் பாராட்டுவதைத் தம் நூலில் பேராசிரியர் மோகன் அவர்கள் விரிவாகப் பேசுகின்றார்.

   மேலும் தமிழில் எழுந்த முதல் முத்தமிழ்க் காப்பியம் என்பதையும் அகச் சான்றுகளுடன் விளக்குகிறார். நிறைவாக, கோவலன் ஒரு கேவலன் என்ற பொதுக்கணிப்பை மாற்றி, மண் தேய்த்தப் புகழினான், குன்றாக் கொள்கை கோவலன் என்றெல்லாம் புகழப்படுவதை எடுத்துக்காட்டி கோவலனுக்குப் பெருமை சேர்க்கும் பேராசிரியரின் பெருந்தன்மையை என்னென்பது!

    தெய்வப் புலவர் கம்பர் என்னும் தலைப்பிலான கட்டுரை நான்காம் இயலாக அமைந்துள்ளது. திருவள்ளுவர், கம்பர், சேக்கிழார் ஆகிய மூவரும் தமிழ் கூறும் நல்லுலகில் தெய்வப் புலவர்கள் எனப் போற்றப்படுகிறார்கள் என்னும் செய்தியை முதலில் குறிப்பிடுகிறார். நாம் கம்பராமாயணம் என அழைத்தாலும், கம்பர் இட்ட பெயர் இராமாவதாரம் என்னும் செய்தியையும் பொதிந்து வைத்துள்ளார். கம்பராமாயணம் என்பது வான்மீகி இராமாயணத்தின் மொழிபெயர்ப்பும் அன்று தழுவலும் அன்று என்று எடுத்த எடுப்பிலேயே கூறுவதை நாம் நோக்க வேண்டும். ஆங்கிலத்தில் சொல்வதாயின் அதை translation என்றும் கூறமுடியாது; transliteration என்றும் கூறமுடியாது. மூலக்கதையை மட்டும் எடுத்துக் கொண்டு தமிழ் மரபுக் கேற்ப ஒரு புதியகாப்பியமாக அதாவது மொழிப்பிறப்புக் காப்பியமாகப் படைத்துள்ளார் என்பது நூலாசிரியர் தரும் பிறிதொரு செய்தி.. ஆங்கிலத்தில் சொல்வதாயின் trans creation என்று சொல்வது பொருத்தமாக இருக்கும். இப்படிச் சொல்லாராய்ச்சி செய்யும் பாங்கு பேராசிரியர் மோகன் அவர்களுக்கு மட்டும் வாய்த்தத் தனித்திறனாகும்.

    இவ் வியலில் கம்பனின் பாத்திரமும் பாத்திறமும் பேராசிரியரால் பெரிதும் பேசப்படுகின்றன. அதுவும் துணைப் பாத்திரமான சுமித்திரையை எடுத்துக்கொண்டு பல்வேறு கோணங்களில் பார்க்கின்றார். சிறிதளவே பேசியவளைப் பற்றி பெரிதளவு பேசுகின்றார்.

  “மகனே! இலக்குமணா! காட்டுக்குச் செல்லும் இராமனோடு நீயும் செல்வாயாக. தம்பி என்ற முறையில் செல்லாதே., அடிமையைப்போல் சென்று அவனுக்கு ஏவல் செய்., இராமன் அயோத்திக்குத் திரும்பி வந்தால் நீயும் அவனுடன்  வா. இல்லையாயின் அவனுக்கு முன்னால் உன் உயிரை மாய்த்துக் கொள்.” சுமித்திரை தன் மகன் இலக்குவனுக்குக் கூறும் இந்த மகத்தான அறிவுரையை மாண்புடைய அறிவுரை என்று பேராசிரியர் பாராட்டுகின்றார். சுமித்திரையின் இக் கூற்றில் இராமன்மேல் அவள் கொண்டிருக்கும் அளவிடற்கரிய அன்பு, பரிவு, பற்று, பாசம் அனைத்தும் மண்டிக் கிடப்பதைக் காட்டுகின்றார்.

    கம்பனின் சொல்வண்ணத்தில் சொக்கிப்போன பேராசிரியர், “கம்பரின் காப்பியத்தில் சொல்வண்ணம் சிறந்து விளங்கும் இடங்கள் வானத்து மீனினும் வையை மணலினும் பலவாகும்” என்று சான்றிதழ் கொடுக்கின்றார். இனியும் நாம் கம்ப வாயிலுக்குள் நுழையாமல் வெளியில் நிற்கலாமா?

    ஆங்காங்கே ஒன்று இரண்டு என தலை காட்டிய அருகம்புல் காலப்போக்கில் தோட்டம் முழுவதையும் ஆக்கிரமித்துக் கொள்வதுபோல் இன்று தமிழ் இலக்கிய உலகில் புதுக் கவிதைகள் பல்வகை உருவங்களில் பரவிக் கிடப்பதைக் காணலாம். இவற்றின் தாக்கத்தை உணர்ந்து கொண்ட நூலாசிரியர், புதிய தமிழ்க் கவிதை என்னும் தலைப்பில் ஓர் இயலை வகுத்துக் காட்டுகிறார்.

   இலக்கணத் தளைகளை உடைத்தெறிந்து ஊழிக் காற்றெனப் புறப்பட்டது தானே புதுக்கவிதை? இப் போக்கினை உணர்த்துவதற்கு வைரமுத்துவின்,

    புதுக் கவிதை
    என்பது
    சொற்கள் கொண்டாடும்
    சுதந்திர தினவிழா

என்னும் புதுக் கவிதை பற்றிய புதுக் கருத்தைப் பதிவு செய்கிறார் பேராசிரியர் மோகன்.

    புதுக் கவிதை எடுத்த பல அவதாரங்களில் ஐக்கூ அவதாரம் எல்லோரையும் கவர்ந்து இழுக்கிறது. ஐக்கூவின் இயல்புகளைப் பட்டியலிடும் பேராசிரியர், பதச்சோறாக, தமிழ் நெஞ்சன் எழுதியுள்ள ஓர் ஐக்கூவை எடுத்துக் காட்டுகிறார்:

   என்ன நிகழ்ந்துவிட்டது
   அந்த 1947-இல்?
   ஆண்டைகள் மாற்றம்.

இந்த ஐக்கூவைப் படித்ததும் யாரோ நம் கன்னத்தில் பளாரென்று அறைந்ததுபோல் உணர்கின்றோம் அல்லவா?

   இக் கவிதைக்கு ‘நமக்குக் கிடைத்திருப்பது ஆனந்த சுதந்திரமன்று., வெறும் ஆகஸ்ட் சுதந்திரம் தான்” என்று உரை எழுதி, தமிழ் நெஞ்சனின் கருத்தை வழிமொழிகிறார்.

    புதுக் கவிதைத் திறன் என்னும் உட்தலைப்பில் புதுக் கவிதையின் உருவம், உள்ளடக்கம், உத்தி, முரண், அங்கதம், குறியீடு, தொன்மம், படிமம் போன்ற பல்வேறு கூறுகளை எடுத்துக் காட்டுக் கவிதைகளுடன் எவரும் புரிந்துகொள்ளும் எளிய நடையில் விளக்குகிறார். ஒரே மூச்சில் கட்டுரையை வாசிக்கச் செய்து புதுக் கவிதையின் வீச்சை உணர்த்திவிடுகிறார்.

   முப்பது ஆண்டுகளுக்குமுன் மு.வ. வின் ஓவச்செய்தி என்னும் நூலைப் படித்து முடித்தபோது பெற்ற பெருமித உணர்வை, பெரும் நிறைவை இப்போது எனது தமிழ்ப் பேராசிரியர் தமிழ்த் தேனீ மோகன் அவர்களுடைய இலக்கியச் சால்பு என்னும் நூலைப் படித்து முடித்தபோதும் பெற்றேன் என்பதே உண்மை.
                                       -முனைவர் அ.கோவிந்தராஜூ
                22222222222222222222222222222222222226 comments:

 1. நல்ல நூல் அறிமுகத்திற்கு நன்றி. தங்களின் பதிவைப் பார்த்ததும் நூலைப் படிக்கும் ஆர்வம் எழுந்துள்ளது. நன்றி.

  ReplyDelete
 2. பேராசிரியர் மோகன் ஐயா அவர்களுக்கு வாழ்த்துகள்...

  அறிய வைத்தமைக்கு நன்றி ஐயா...

  ReplyDelete
 3. பேராசிரியர் மோகன் ஐயாஅவர்கள் போற்றுதலுக்கு உரியவர்
  நன்றி ஐயா

  ReplyDelete
 4. பேராசிரியர் மோகன் அவர்களது “” இலக்கிய சால்பு”” நூலை மின்படி எடுத்துப் பல ஆண்டுகளுக்கு முன் படித்து அதன் சாற்றை ருசித்தவன் என்றாலும் தங்களது இக்கட்டுரையின் வாயிலாக மீண்டும் ஒருமுறை படித்த உணர்வை ஏற்படுத்தி விட்டீர்கள். அதற்குத் தங்களுக்கு நன்றி. அதுமல்ல தமிழ்த் தேனீயின் படைப்பிலிருந்து இன்னும் ஒரு அகப்பைத் தேனை எடுத்து வழங்கியுள்ளீர்கள்.

  ReplyDelete
 5. பேராசிரியர் மோகன் அவர்களது “” இலக்கியச் சால்பு”” நூலை மின்படி எடுத்துப் பல ஆண்டுகளுக்கு முன் படித்து அதன் சாற்றை ருசித்தவன் என்றாலும் தங்களது இக்கட்டுரையின் வாயிலாக மீண்டும் ஒருமுறை படித்த உணர்வை ஏற்படுத்தி விட்டீர்கள். அதற்குத் தங்களுக்கு நன்றி. அதுமல்ல தமிழ்த் தேனீயின் படைப்பிலிருந்து இன்னும் ஒரு அகப்பைத் தேனை எடுத்து வழங்கியுள்ளீர்கள்.

  ReplyDelete
 6. பேராசிரியர் மோகன் அவர்களது “” இலக்கியச் சால்பு”” நூலை மின்படி எடுத்துப் பல ஆண்டுகளுக்கு முன் படித்து அதன் சாற்றை ருசித்தவன் என்றாலும் தங்களது இக்கட்டுரையின் வாயிலாக மீண்டும் ஒருமுறை படித்த உணர்வை ஏற்படுத்தி விட்டீர்கள். அதற்குத் தங்களுக்கு நன்றி. அதுமல்ல தமிழ்த் தேனீயின் படைப்பிலிருந்து இன்னும் ஒரு அகப்பைத் தேனை எடுத்து வழங்கியுள்ளீர்கள்.

  ReplyDelete