Sunday, 6 March 2016

தெனாலிராமனும் நானும்

   
 “அடியே! நல்லா கவனி! இண்ணைக்கு ராத்திரி வெளியூர் போறமில்ல. நம்ம நக நட்டு முட்டை எல்லாம் இந்த இரும்பு பெட்டியில வச்சி பூட்டி நம்ம தோட்டத்து கிணத்துல போட்டுடுவோம். ஊட்டுல வச்சிட்டுப்போனா திருடனுங்க எடுத்திட்டு போய்டுவானுங்க” என்று தெனாலிராமன் தன் மனைவியிடம் சொன்னதை திருடர்கள் எப்படியோ ஒட்டுக் கேட்டுவிட்டார்கள்.

     உண்மையில் தெனாலி ஊருக்கெல்லாம் போகவில்லை. அன்று இரவு விளக்கை அணைத்துவிட்டு, ஜன்னல் வழியாக தன் வீட்டுத் தோட்டத்தை உற்றுப் பார்த்தபடி உட்கார்ந்திருந்தார். ஊர் அடங்கியபின் ஒட்டுக்கேட்ட அந்த இரண்டு திருடர்கள் தெனாலியின் தோட்டத்தில் நுழைந்தார்கள். ஒருவன் சாலைப் பிடித்தான். சால் என்பது ஏற்றத்தின் ஒரு பகுதி; அண்டா போன்ற வாய் அகன்றது; கிணற்று நீரை முகக்கப்  பயன்படும். மற்றவன் ஏற்றத்தின் மீது ஏறினான், தமக்குள் எதுவும் பேசாமல் இருவரும் சேர்ந்து கிணற்று நீரை இறைக்கத் தொடங்கினார்கள். கிணற்று  நீர் முழுவதையும் இறைத்தபின் நகைப்பெட்டியை எடுப்பதுதான் அவர்கள் திட்டம்.

      நள்ளிரவு தாண்டிய பின்னரும் ஏற்றம் இறைத்துக் கொண்டே இருந்தார்கள். அவ்வப்போது தெனாலிராமன் எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் தோட்டம் முழுவதும் நீர் பாய்ந்திருப்பதை உறுதி செய்துகொண்டதும், “ஏய் திருட்டுப் பசங்களா, தோட்டமெல்லம் தண்ணி பாஞ்சிடிச்சி; ரொம்ப  நன்றி; கோழி கூவ போவுது நீங்க போகலாம்” என்று உரத்தக் குரலில் சொன்னார். அதைக்கேட்ட திருடர்கள் விழுந்தடித்து ஓடினார்கள்.

  நன்றாகத் தூங்கி எழுந்து காலையில் தோட்டத்தினுள் சென்று பார்த்தார். தோட்டம் முழுவதும் முழங்கால் அளவு தண்ணீர் தேங்கி இருந்தது. செலவு இல்லாமல் தண்ணீர் பாய்ச்சியதை அறிந்த மனைவி தெனாலியை மிகவும் பாராட்டினாள்.

     நானும் இன்று காலையில் என் வீட்டுத் தோட்டத்தைச் சென்று பார்த்தேன். ஐந்து சென்ட் பரப்புள்ள தோட்டத்தில் ஏகத்திற்கும் முழங்கால் அளவு தண்ணீர் பாய்ந்திருந்தது. வழிந்து தெருப்பக்கமும் கொஞ்சம் ஓடி இருந்தது.

    தெனாலிராமன் சொன்னதுபோல நானும் என் மனைவியிடம் சொன்னேன். பாராட்டவில்லை; மாறாக, திட்டித் தீர்த்தாள்.

  நேற்று மாலையில் தென்னம்பிள்ளைக்குக் கொஞ்சம் தண்ணீர் விடுவதற்காக போட்ட மோட்டாரை நிறுத்த மறந்த என்னைத் திட்டாமல் பாராட்டவா செய்வாள்? சுமார் பத்து மணி நேரம் மோட்டார் ஓடியிருக்கிறதே. நீர்மூழ்கி மோட்டார் என்பதால் சத்தமும் கேட்கவில்லை
.
    தெனாலிராமன் தண்ணீர் பாய்ச்சிய கதையை அவளிடம் சொல்லி விழுந்து விழுந்து சிரித்தேன். “ செய்வதையும் செய்திட்டு உங்களால் எப்படி சிரிக்க முடிகிறது?” என்று கேட்டாள்.

  “ நம்ம தாத்தன் திருவள்ளுவர் துன்பம் வரும்போது சிரிக்கச் சொல்லியிருக்கிறாரே உனக்குத் தெரியாதா?” என்று கேட்டுச் சமாளித்தேன்.

  அப்போது ஏதோ ஒரு விஷயமாக வந்த பக்கத்து வீட்டு நண்பர் பேராசிரியர் லட்சுமண சிங் அவர்களிடம் “இந்தக் கூத்தை கேட்டிங்களா?” என்று ஆரம்பித்தாள் என் மனைவி. அவரும் ஆர்வத்துடன் கேட்டார்.

       காலை ஐந்தரை மணிக்கு அழைப்பு மணியை ஒலிக்கச் செய்து தோட்டத்தில் தண்ணீர் குளம் கட்டி நின்றதை என்னிடம் சொன்னதே அவர்தான்!

     

11 comments:

  1. திருடர்கள் வேலையை மோட்டார் செய்தது. எப்படியோ தெனாலிராமனுடன் இணைந்துவிட்டீர்கள். நன்று. சகோதரியார் திட்டத் தேவை இல்லை. ஒரு இலக்கியப் படைப்புக் கிடைத்து விட்டது. நீதிபதி மூ.புகழேந்தி

    ReplyDelete
    Replies
    1. உண்மையில் ஊட்டமான பின்னூட்டம்
      வருகைக்கு நன்றி

      Delete
  2. This happened in my case too. Prof.R.Pandiaraj

    ReplyDelete
  3. ரசிக்கும் படி இருந்தது ஐயா!!!

    ReplyDelete
  4. தெனாலிராமன் வயலுக்கு நீர் பாய்ச்ச செய்த திட்டம் அருமை. அய்யா நீதிபதி அவர்கள் சொன்னதைப் போன்று திருடர்கள் செய்த பணியைத் தங்களது நீர் மூழ்கி மோட்டார் செய்திருக்கிறது. இந்த வெயில் காலத்தில் மரங்களும் செடிகளும் நீர் பாய்ந்தது கண்டு மகிழ்ச்சியில் திழைத்திருக்கும்.

    ReplyDelete
  5. தெனாலிராமன் வயலுக்கு நீர் பாய்ச்ச செய்த திட்டம் அருமை. அய்யா நீதிபதி அவர்கள் சொன்னதைப் போன்று திருடர்கள் செய்த பணியைத் தங்களது நீர் மூழ்கி மோட்டார் செய்திருக்கிறது. இந்த வெயில் காலத்தில் மரங்களும் செடிகளும் நீர் பாய்ந்தது கண்டு மகிழ்ச்சியில் திழைத்திருக்கும்.

    ReplyDelete