Thursday, 31 March 2016

விருதும் வியப்பும்

   நம் நாட்டில் பல்வேறு விதமான விருதுகள் மாநில மத்திய அரசுகளால் வழங்கப்படுகின்றன. சில விருதுகள் தரப்படுகின்றன. சில விருதுகள் பெறப்படுகின்றன. விருது பெறும் சிலரால் விருதுக்குப் பெருமையும் ஏற்படுகின்றன. வேறு சிலரால் விருதுக்குச் சிறுமையே ஏற்படுகின்றன.


     சிலரை இருக்கும்போது கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டு, இறந்தபின் விருது வழங்கும் கூத்தும் நம் நாட்டில் அரங்கேறும். இராணுவ வீரர்களுக்கு மட்டுமே இத்தகைய இறப்புக்குப்பின் விருது வழங்குவது பொருத்தமாக இருக்கும்.

   பத்ம விருதுகள் என்பவை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விருதுகளாகும். இவ் விருதுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவோர் அவரவர் துறையில்  தகுதி வாய்ந்த சான்றோர் பெருமக்களாக இருக்க வேண்டும். ஆனால் அதிலும் அரசியல் புகுந்து விட்டது. சில சமயங்களில் இவருக்கா விருது கிடைத்திருக்கிறது என புருவங்களை உயர்த்தி இருக்கிறோம் அல்லவா?

  விருதுப் பட்டியல் வெளியானதும் விமர்சனப் புயல் கிளம்பும். பட்டியல் வெளியானபோது அதில் சாய்னா நேவால் பெயர் இடம்பெறவில்லை. அவர் அழுது புலம்பவில்லை.  மாறாக பத்திரிகையாளர்களை அழைத்துத் தன்னை விருதுக்குத் தேர்ந்தெடுக்காததை எதிர்த்து வினா எழுப்பினார். உடனே தொடர்புடைய  அமைச்சர் சாய்னா நேவாலின் பெயர் பரிசீலனையில் உள்ளதாக அறிவித்தார். பத்மபூஷன் விருதினை வழங்கி தேநீர் கோப்பையில் எழுந்த புயலைச் சமாளித்தது நடுவண் அரசு. உலக அரங்கில் இந்தியக் கொடியை உயரத்தில் பறக்கச் செய்யும் சானியா நேவால் விருதுக்குத் தகுதியானவர்தான்.

  
இரு தினங்களுக்கு முன் குடியரசுத் தலைவர் மாளிகையில் பத்ம விருதுகள் வழங்கும் விழா நடந்தது. எல்லோரும் விலை உயர்ந்த ஆடை அணிகளை அணிந்து செல்ல ஒருவர் மட்டும் எளிய உடை அணிந்து எவருடைய கவனத்தையும் கவராமல் மேடை ஏறி விருதை பெற்றுக்கொண்டு இறங்கினார். ஒரு கரும யோகியைப் போல  சென்று பய பக்தியுடன் விருதினைப் பெற்றுக் கொண்டார். போட்டோகிராபர்களுக்கு போஸ் எதுவும் தரவில்லை; மற்ற எல்லோரும் போஸ் கொடுக்கத் தவறவில்லை!

     யார் அந்த எளிய மனிதர்? ஒடிசா மாநிலத்தில் ஒரு குக்கிராமத்தில் ஓர் ஏழைமையான குடும்பத்தில் 1950 ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி பிறந்தார். இளமையிலேயே தந்தை இறந்ததால் மூன்றாம் வகுப்புடன் பள்ளிப் படிப்பை முடித்துக் கொண்டர். பாத்திரம் கழுவும் வேலை பின்னர் ஒரு பள்ளியில் மதிய உணவுப் பிரிவில்  சமையல் வேலை என அவரது வாழ்க்கைச் சக்கரம் உருண்டோடியது. பிறகு அந்தப் பள்ளிக்கு அருகில் ஒரு பெட்டிக்கடையைத் தொடங்கினார். ஓய்வு நேரத்தில் படிக்கவும் எழுதவும் செய்தார். சிறு சிறு கவிதைகளை அவர் தாய் மொழியான கொசாலி மொழியில் எழுதினார். ஒரு பழைய ஆலமரம் என்னும் தலைப்பில் அவர் எழுதிய கவிதை ஒன்று உள்ளூர் நாளேட்டில் அச்சு வாகனம் ஏறியது. தொடர்ந்து கவிதை, கதை, காவியம் என எழுதிக் குவித்தார். நம் ஊர் பாரதிதாசனைப் போல ஒடுக்கப் பட்டவர்களுக்காகக் கவிதை பாடினார்; சாடினார்.

     அவருடைய கவிதைகள் பல்கலைக் கழகங்களில் பாடங்கள் ஆயின. தில்லி பல்கலைக்கழக மாணவர்கள் ஐவர் இவரது கவிதைகளை ஆராய்ந்து பிஎச்.டி பட்டங்கள் பெற்றனர். இலக்கிய ஆர்வலர்களின் நிதி உதவியால் அவருடைய எழுத்துகள் நூல்வடிவம் பெற்றன.

   இன்னொரு அசாத்தியமான திறமை அவரிடம் உள்ளது. தான் எழுதிய ஆயிரக்கணக்கான பாடல்களை ஒரு பிழையில்லாமல் மணிக்கணக்கில் சொல்கிறார்.

    இவரின் அடியொற்றி, எளிய அதே சமயம் காரசாரமான கவிதை எழுதும் இளங்கவிஞர் பட்டாளம் உருவானது. ஆனாலும் அரசுத் தரப்பில் எந்த அங்கீகாரமும் இல்லை. திடீர் என ஒருநாள் இலண்டன் பிபிசி காரர்கள் காமிராவும் கையுமாக வந்து இவரைப் பற்றி ஒரு  செய்திப் படத்தைத் தயாரித்து இவரை உலகத்திற்கு அறிமுகப்படுத்தினார்கள்.. பிறகுதான் நம்மவரின் அருமை அரசுக்குத் தெரியவந்து பத்ம ஸ்ரீ விருதுக்குப் பரிந்துரைத்தது.

    இப்படியாக பத்ம ஸ்ரீ விருது தகுதியான ஒருவரின் கரங்களில் தவழ்ந்து தனக்குப் பெருமையத் தேடிக்கொண்டது.

   கல்யாண சந்தடியில் தாலிகட்ட மறந்த கதையாக, இந்த விருது புராணத்தில் கதா நாயகரின் பெயரைக் குறிப்பிட மறந்துவிட்டேன்.

  அவருக்கு ஒரு மகள் உள்ளாள்; மனைவியின் பெயர் மாலதி.

சரி சரி அவருடைய பெயர் என்ன என்று நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது.

ஹால்தார் நாக் என்பது அவர் பெயராகும்.

அவர் சொல்கிறார்: “ஒரு வகையில் எல்லோரும் கவிஞர்களே. தாம்  எழுதும் கவிதைகளுக்கு வடிவம் கொடுப்பதில்தான் வேறுபடுகிறார்கள்.”


     

4 comments:

  1. என் இ மெயிலில் உங்கள் அழைப்பு கண்டு வந்தேன் உங்களை பற்றி அறிய தூண்ட மெயிலில் செய்தி அனுப்புவதை விட பிறர் பதிவுகளில் உங்கள் கருத்துக்களை வெளியிட்டுக் கவனம் ஈர்க்கலாம் என்பது எனக்குத் தோன்றியதுஎங்கள் ப்லாகில் இப்படிப்பட்ட பலரின் செயல்கள் குறித்து எழுதுகிறார்கள்

    ReplyDelete
  2. என் இ மெயிலில் உங்கள் அழைப்பு கண்டு வந்தேன் உங்களை பற்றி அறிய தூண்ட மெயிலில் செய்தி அனுப்புவதை விட பிறர் பதிவுகளில் உங்கள் கருத்துக்களை வெளியிட்டுக் கவனம் ஈர்க்கலாம் என்பது எனக்குத் தோன்றியதுஎங்கள் ப்லாகில் இப்படிப்பட்ட பலரின் செயல்கள் குறித்து எழுதுகிறார்கள்

    ReplyDelete
  3. நல்ல ஒரு சாதனையாளரை அறிமுகப்படுத்திய விதம் நன்று, வாழ்த்துகள்

    ReplyDelete
  4. சாதனையாளருக்கு வாழ்த்துக்கள்... அவரை அறிமுகப்படுத்தியதற்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete