Sunday, 17 April 2016

அனல் விழியாள்

    இரவு பத்து மணி.

    அலைப்பேசியில் மனைவி அழைத்துக்கொண்டே இருந்தாள். அதை கண்டுகொள்ளாமல் கணினியில் தன் பணியைத் தொடர்ந்தான். ஒருவழியாக தான் செய்த வேலையை முடித்துவிட்டு தன் காரில் இல்லம் நோக்கி விரைந்தான் அர்ஜுன். இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் அவன் மென்பொறியாளராக உள்ளான்.


     ஸ்ரீ கிருஷ்ணருக்கு ஒரு வித்தியாசமான ஆசை வந்தது. பூவுலகு சென்று மக்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பதை அறிய வேண்டும் என்பதுதான் அந்த ஆசை. உடனே லேப்டாப் பையுடன் ஒரு மென் பொறியாளர் வடிவம் ஏற்று அர்ஜுன் காரை நிறுத்துமாறு சைகை செய்தார்.

    “என்னுடைய பெயர் கிருஷ்ணன் நாயர். சிடிஎஸ்ஸில் வேலை. எனது காரில் ஏதோ கோளாறு. மெக்கானிக் எடுத்துச் சென்றுவிட்டான். கால் டாக்சியும் வந்தபாடில்லை. எக்மோர் செல்ல வேண்டும்”

   “நானும் அங்கேதான் போகிறேன். ஏறுங்கள்.”

“தேங்க்ஸ். . யுவர் குட் நேம்”

“அர்ஜுன்”

     “மிஸ்டர் அர்ஜுன்! உங்கள் லைஃப் எப்படி போவுது? மக்கள் எல்லாம் நிக்க நேரமில்லாம ஓடிட்டே இருக்காங்க. நீங்க எப்படி?”

   “நீங்க என்னமோ தேவ லோகத்திலிருந்து வந்தது மாதிரி பேசுறீங்க. என்னா லைஃப் போங்க. வீட்டுக்காரிகிட்ட நாலு வார்த்தை நின்னு பேச முடியல. லைஃப் ஈஸ் போர் அண்ட் ஹெக்டிக். இதுபற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க கிருஷ்ணன்?”.

    “ எண்ணற்ற செயல்களைச் செய்கிறீர்கள். பல செயல்களைச் செய்வதை நிறுத்தி, சில பயனுள்ள செயல்களை செய்தால் வாழ்க்கை இனிக்கும். உங்கள் வாழ்வில் ஆக்டிவிட்டி அதிகம்; ப்ரடக்டிவிட்டி குறைவு.
வெற்றுச் செயலால் வேதனைதான் மிஞ்சும்.

“புரியவில்லை”

“ ஒரு நாளைக்கு பத்து சிகரெட் பிடிக்கிறாய்; டென் இன்ட்டு ஃபைவ் பிஃப்டி மினிட்ஸ் வீணா போகுது ; வீக் எண்ட் எஞ்சாய்மெண்ட் என்ற பெயரில் குடி கும்மாளம், சீட்டு என்று நான்கு மணி நேரம் செலவிடுகிறாய். ஃபேஸ்புக், ட்விட்டர், போர்னோ வெப்சைட் போன்றவற்றிலும் மூழ்கிவிடுகிறாய்”

   “ஸ்டாப்  இட். இதெல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும்?”

    “ஒரு பேச்சுக்காகத்தான் சொன்னேன். நெவர் மைண்ட்.. பயன் தரு செயல்களைச் செய். நூல்களைப் படி; வார இறுதியில் உன் வீட்டுச் சந்தில் கிடக்கும் வெற்றிடத்தைக் கொத்திக் கிளறி வெந்தயத்தைத் தூவு; நீர் விடு; களை எடு; செழித்து வளர்வதைப் பார்; பறித்து ஆய்ந்து உன் மனைவியிடம் கொடு. அப்போது மகிழ்ச்சி பொங்கும்; இப்படி இயல்பாக வாழப் பழகு. ஆக வெற்றுச் செயல்களால் சோர்வு; பயன்மிகு செயலே தீர்வு.”

  “மிஸ்டர் கிருஷ், என் வாழ்க்கையே ரொம்ப சிக்கலா இருக்கே”
ரொம்ப ஆராய்ச்சியும் எதிர்பார்ப்பும் வேண்டாம். வாழ்க்கையை அதன் போக்கில் வாழ்ந்து பார்”

   “வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ முடியவில்லையே ஏன்?”
“இன்னும் பதினேழு வருஷம் கழிச்சு பையனை எந்தக் கல்லூரியில் சேர்க்கலாம் என்று இப்பவே கவலைப்படற. கவலைப் படுவதே உன் வழக்கமாகிவிட்டது. அதனால்தான் மகிழ்ச்சியைத் தொலைத்துவிட்டு நிற்கிறாய்.”

  “கிருஷ்ணன், எனக்கு ஒரு சந்தேகம். நல்லவர்களுக்கு ஏன் சோதனைமேல் சோதனை வருகிறது?”

    “வைரம் பட்டை தீட்டப்பட்டால்தான் ஒளிவீசும். தங்கத்தைச் சூடாக்கி உருக்கினால்தான் நகையாகும். நல்லவர்களுக்குச் சோதனை வருமே தவிர, வேதனை வராது. சோதனைக்குப் பின் அவர்களுடைய புகழும் செல்வாக்கும் ஓங்கும்.”

   “ஆக சோதனை எங்கிற அனுபவம் நல்லது. அப்படித்தானே?”

   “ஆம். நம் பள்ளி ஆசிரியர் முதலில் பாடம் நடத்தி, பிறகு தேர்வு வைப்பார். ஆனால் அனுபவம் என்னும் ஆசிரியர் முதலில் தேர்வு வைத்து, பிறகு பாடம் கற்றுக் கொடுப்பார்.” 

  “தோல்வி என் பயணத்தில் தடைக்கல்லாக உள்ளதே!”

     “அதைப் படிக்கல்லாக மாற்று. வெற்றி என்பது பிறரால் நிர்ணியக்கப்படுவது; நிறைவு என்பது உன்னால் நிர்ணியக்கப் படுவது. நூறு மதிப்பெண் எதிர்பார்த்தவன் தொண்ணூற்று ஒன்பது பெற்றால் அது தோல்வியா? விரும்பியது கிடைக்காவிட்டால், கிடைத்ததை விரும்பு.”

   “கிருஷ்ணன், நானும் பார்க்கிறேன். உங்கள் கார் ப்ரேக் டவுன் ஆகியும் மிக உற்சாகமாக இருக்கிறீர்களெ, எப்படி?”

   “வாழ்க்கையில் எவ்வளவு தூரம் கடந்து வந்துள்ளேன் என்பதில் நிறைவுகொள்கிறேன். இனி எவ்வளவு தூரம் நடந்து செல்ல வேண்டும் என நினைத்துக் கவலைப்படுவதில்லை. அதனால்தான் எப்போதும் உற்சாகமாக இருக்கிறேன். இறையருளால் உனக்கு என்ன கிடைத்தது என்பதைப் பட்டியலிடு. எவை கிடைக்கவில்லை என்று எண்ணாதே.”

   “நமது ப்ரார்த்தனைகளில் பலவற்றுக்கு இறைவன் செவி சாய்ப்பதில்லையே.”

  “ஆஹா! என்னையும் உன் கட்சியில் சேர்த்துக் கொண்டாய்!. நீ சொல்வது தவறு. நியாயமான ப்ரார்த்தனைக்கு நிச்சயம் இறைவன் பதிலளிப்பான். இலஞ்சம் வாங்காத அதிகாரியின் பெண்ணுக்கு அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கிறதே, எப்படி?”

   ‘எக்மோரை நெருங்குகிறோம். கடைசியா ஒரு கேள்வி.”

“கேள் பக்தா.”

“என்ன, நான் உங்கள் பக்தனா?”

    “அதை விடு. ஏதோ பழக்க தோஷத்தில் சொன்னேன். உன் கேள்வி என்னவோ?”

    “மிகச் சிறப்பாக வாழ வழி என்ன?”

“கடந்த காலத்தை எண்ணி புலம்பாதே நிகழ்காலத்தை வெட்டிப் பொழுது போக்காமல் தன்னம்பிக்கையுடன் எதிர்கொள். எதிர்காலத்தை அச்சமின்றி, திட்டமிட்டுச் சந்திக்கத் தயாராகு. பிறகு பார். நீ வையத்துள் வாழ்வாங்கு வாழலாம்.”

   “நன்றி மிக்க நன்றி; நீங்கள் இறங்கலாம்” என்று சொல்லியவாறே அர்ஜுன் தன் காரை மெல்ல ஓரம்கட்ட பிரேக் மீது காலை வைக்க எண்ணினான்.. ஆனால் காருக்கு முன்னால் கண்ட காட்சி அவனைத் திகைக்க வைத்தது.

   இதுவரை தன் அருகில் அமர்ந்து பேசிக்கொண்டு வந்த கிருஷ்ணன் நாயர் ஒரு ஆட்டோவில் ஏறி பை பை சொல்லியபடி சென்றார்.

  இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்ற உணர்வோடு காரை விட்டு இறங்கி தன் இல்லக் கதவைத் தட்ட எண்ணினான்.

தட்டுமுன் தாழ் திறந்து வரவேற்றாள் அர்ஜுன் மனைவி அனல்விழியாள்.
.................................................................................................................................................................
குறிப்பு: An interesting conversation between Krishna and today’s Arjun என்னும் தலைப்பில் தம்பி தங்க பாண்டி அனுப்பியிருந்த வாட்சப் செய்தியின் அடிப்படையில் புனையப்பட்ட சிறுகதை.
  “


8 comments:

  1. கடந்த காலத்தை எண்ணி புலம்பாதே நிகழ்காலத்தை வெட்டிப் பொழுது போக்காமல் தன்னம்பிக்கையுடன் எதிர்கொள். எதிர்காலத்தை அச்சமின்றி, திட்டமிட்டுச் சந்திக்கத் தயாராகு. பிறகு பார். நீ வையத்துள் வாழ்வாங்கு வாழலாம்.”

    அருமைஐயா

    ReplyDelete
  2. No doubt the story developed based on the whats up message makes the reader to feel rejuvenated. The realistic of the today's world is clearly explored. This message is a massage to the squeezing hearts. Avoid alcohol and smoke. Instead be a workaholic to reach the acme. வெற்றுச் செயல்களால் சோர்வு; பயன்மிகு செயலே தீர்வு. (Very Good compilation sir) As usual in your touch it has come out wonderful. Keep on posting sir.

    ReplyDelete
  3. Prof.R.Pandiaraj19 April 2016 at 16:35

    Very interesting. அலைப்பேசி அலைபேசி Which is correct? Prof.R.Pandiaraj

    ReplyDelete
  4. Superb Anna. I have not expected such a marvelous story line based on that tiny piece of information. Great.

    ReplyDelete
  5. Professor Pandiaraj Cellphone can be called Selpesi in Tamil. Sellum Pesi, Sellukindra Pesi mattrum Sellum Pesi.

    ReplyDelete
  6. Professor Pandiaraj Cellphone can be called Selpesi in Tamil. Sellum Pesi, Sellukindra Pesi mattrum Sellum Pesi.

    ReplyDelete
  7. அனல் விழியாள் பெயரே சூடாக உள்ளது. தன்னம்பிக்கை தான் மனிதனின் மூன்றாவது கை. தனக்கு யாரேனும் உதவுவார்களா என எண்ணுவதை விட்டுவிட்டு முன்னேற்றத்திற்கான விடியலைத் தேடுவது நன்று. கடிகாரத்தின் நொடிமுல்லைப் போன்று செயல்பட்டால் மனிதன் வாழ்க்கையில் வெற்றி அடையலாம். புனையப்பட்ட கதை என்றாலும் கதைக்கரு அருமை. நன்றி அய்யா.

    ReplyDelete
  8. அனல் விழியாள் பெயரே சூடாக உள்ளது. தன்னம்பிக்கை தான் மனிதனின் மூன்றாவது கை. தனக்கு யாரேனும் உதவுவார்களா என எண்ணுவதை விட்டுவிட்டு முன்னேற்றத்திற்கான விடியலைத் தேடுவது நன்று. கடிகாரத்தின் நொடிமுல்லைப் போன்று செயல்பட்டால் மனிதன் வாழ்க்கையில் வெற்றி அடையலாம். புனையப்பட்ட கதை என்றாலும் கதைக்கரு அருமை. நன்றி அய்யா.

    ReplyDelete