Wednesday 3 July 2024

வியக்க வைத்த விமான அணி வகுப்பு

    கடந்த ஒரு வாரமாகவே கனடா நாள்(Canada Day) குறித்த பேச்சு காதில் விழுந்து கொண்டிருந்தது. Talk of the town என்று ஆங்கிலத்தில் சொல்வார்களே, அப்படியொரு பேச்சு அது.

   வேறு ஒன்றுமில்லை. கனடா நாள் என்பது கனடா நாட்டின் சுதந்திரத் திருநாள். நம் நாட்டைப் போலவே கனடாவும் ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டுக் கிடந்தது. 1867ஆம் ஆண்டு ஜூலை முதல் நாளில் கனடா சுதந்திரம் பெற்றது. ஆண்டுதோறும் இந்த நாளை கனடா நாள் என  வழங்கி, கனடா நாடு முழுவதும் மக்கள் கொண்டாடுகிறார்கள். கனடியர் அனைவரும் பொது வெளியில் திரண்டு அரசு ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சிகளைக் கண்டு களிப்பார்கள்.

   ஜூலை முதல் நாளன்று இந்தியர்களாகிய நாங்களும் ஒரு பெரும் பட்டாளமாகச் சென்று நிகழ்வில் பங்கேற்றோம். முதலில் எங்கள் இல்லத்திலிருந்து காரில் பயணம் செய்து இருபது நிமிடத்தில் Eagleson என்னும் இடத்தை அடைந்தோம். இங்கே Park and Ride என்னும் வசதி உள்ளது. பெரிய திறந்தவெளி உள்ளது; இங்கே வாகனத்தை நிறுத்திவிட்டு, நகரப் பேருந்தில் ஏறிப் பயணம் செய்யலாம். இங்கே அனைத்துப் பேருந்துகளும் குளிர் சாதன வசதி கொண்டவை. ஒரு மணி நேரம் பயணம் செய்து Tunney’s pasture என்னும் இடத்தில் இறங்கினோம். அங்கிருந்து சற்றுத் தூரம் நடந்து சென்று நகரத் தொடர் வண்டியில்    (Metro Train) ஏறினோம். கண் மூடிக் கண் திறப்பதற்குள் அடுத்தடுத்த இரயில் நிலையங்கள் வந்தன. முப்பது நிமிடத்தில் அகநகர்(Down Town) நிலையத்தில் இறங்கி, பின்னர் நகரும் படிகளில்(Escalator) ஏறி இறங்கி, நிலையத்தைவிட்டு வெளியில் வந்தால் கனடா நாட்டின் பழமையான பாராளுமன்றக் கட்டடம் கண்ணில் பட்டது.

   மெல்ல நடந்து சென்று பாராளுமன்றக் கட்டடத்தின் முன் பரந்து விரிந்து கிடந்த புல் தரையில் வசதியாக ஓர் இடத்தில் அமர்ந்து கொண்டோம்.

    உலகத்தின் அத்தனை நாட்டுக்காரர்களும் அங்கே ஓர் அரிய நிகழ்வைக் காண ஆவலுடன் காத்திருந்தனர். அங்கே அணி அணியாய்த் திரண்டிருந்த கனடியர்களைக் கூர்ந்து நோக்கினேன். மக்கள் தங்கள் முகம் நகம் என உடலெங்கும் கொடியை வரைந்திருக்கிறார்கள். தலைமீது கொடித் தொப்பிதொப்பித் தலைமீதும் கொடிகள். இவர்களுடைய நாட்டுப்பற்றுக்கு அளவே இல்லை.

   சிலர்  நம்மூர் ஜமுக்காளம் அளவிலான கொடியை நிலத்தில் தவழும்படி தம் முதுகில் அணிந்து, பழைய தமிழ்த் திரைப்பட்த்தில் வரும் மன்னர்களைப்போல் நடந்து சென்றதைப் பார்த்து வியந்தேன். இந்நாட்டுக் கொடியில் சிவப்பு வண்ணம் மிகுதி என்பதால் பெரும்பாலோர் சிவப்பு வண்ண ஆடைகளை அணிந்திருந்தனர். ஒருவர் 100% Canadian என அச்சிடப்பட்ட சட்டையை அணிந்திருந்தார்; மற்றொருவர் Canada 1867 என அச்சிடப்பட்ட சட்டையை அணிந்திருந்தார். நம் ஊரில்இவருக்கு என்ன கொம்பா முளைத்திருக்கிறதுஎன்று கேட்போம் அல்லவா? அப்படி என் அருகில் கொம்பு முளைத்த கனடியர் ஒருவர் வந்தார். அவரது தொப்பியில் இரண்டு கொடிகளைக் கொம்புகளைப்போல் பொருத்தியிருந்தார்! இவர்களோடு, ஒரு நாலு வயது சுட்டிப் பையன், கொடிகாத்த குமரன் போல, கனடா நாட்டுக் கொடியைக் கடைசி வரையில் கையில் பிடித்தபடியே வலம் வந்தான். அவன் எங்கள் பேரன்!



   அப்போது ஒலிபெருக்கியில் வந்த அறிவிப்பைத் தொடர்ந்து நாங்கள் அனைவரும் வானத்தை நோக்கினோம். அடுத்த அரைமணி நேரம் நாங்கள் மண்ணுலகில் இல்லை; விண்ணுலகில் இருந்தோம்!

  கனடா நாட்டின் விமானப் படையைச் சேர்ந்த ஒன்பது விமானங்கள் செய்த சாகசங்கள்(Aircraft Air Show ) கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது. அந்தப் போர் விமானங்கள் Snow birds என்னும் பெயர் கொண்டவை. மணிக்கு ஐந்நூறு கிலோமீட்டர் வேகத்தில் - பறந்தன என்று சொல்ல முடியாது; பறந்தவாறு பல்வேறு வடிவங்களை உருவாக்கிக் காட்டி மக்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தின. வெண்புகையை மட்டும் கக்கிச் சென்ற விமானங்கள், ஒரு கட்டத்தில் சிவப்பு வெள்ளை வண்ணத்தில் புகையைக் கக்கி தேசியக் கொடியை அமைத்து வானில் பறக்கச் செய்தனர். அது நொடிப்பொழுதில் மறைந்து விட்டது. ‘கரணம் தப்பினால் கதை கந்தல்எனும்படி ஒன்பது விமானங்களும் ஒட்டி உரசுவதுபோல் பறந்தன. அந்த விமானிகளுக்கு எத்தகைய ஆற்றல் இருந்தால் அப்படிப் பறக்க முடியும் என வியந்தோம். இவற்றையெல்லாம் பார்த்து வியந்து மக்கள் செய்த ஆரவாரம் கடலின் அலையோசையைப் போல் இருந்தது.




    இனி இப்படி எந்த நாட்டில் என்று காண்போமோ என்னும் ஏக்கத்துடன் மீண்டும் தொடர்வண்டி, பேருந்து, மகிழுந்து ஆகியவற்றில் ஊர்ந்து இல்லம் வந்து சேர்ந்தோம். ஒன்று சொல்ல மறந்து விட்டேனே; இன்று ஒருநாள் மட்டும் நாடு முழுவதும் பேருந்து, தொடர் வண்டிகளில் பயணம் செய்ய கட்டணம் இல்லை!

    என் மனத்தில் ஏற்பட்ட மட்டற்ற மகிழ்ச்சிக்கு இடையில் ஒரு சிறு வருத்தமும் இருந்தது. என் துணைவியார் உடன் வரவில்லை என்னும் வருத்தமே அது. இரவு உணவு தயாரிக்கும் பணி இருந்ததால் அவர் வரமுடியாமல் போயிற்று. எனினும் உண்டு முடித்ததும் என் மகள் எடுத்த காணொளியைப் பார்த்து மகிழ்ந்தார்.

முனைவர் அ.கோவிந்தராஜூ

துச்சில்: ஒட்டாவா, கனடா.

  

 

9 comments:

  1. அற்புதமான ஒளிப்படங்கள்
    அழகான வர்ணனை.

    ReplyDelete
  2. உங்கள் படைப்பை எதிர்நோக்கியிருந்த எங்களுக்கு மகிழ்ச்சி

    ReplyDelete
  3. வரசுதேவன் திருச்சியிலிருந்து

    ReplyDelete
  4. தி.முருகையன்3 July 2024 at 09:12

    தங்கள் பதிவின் மூலம் கனடா நாளை நேரில் கண்டதைப்போல் மகிழ்ச்சி அடைகிறேன் ஐயா.

    ReplyDelete
  5. யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்பதற்கிணங்க இருக்கிறது உங்கள் பதிவு நன்றி ஐயா 👍🙏

    ReplyDelete
  6. நேரில் கண்டு உணர்வு
    நன்றி ஐயா

    ReplyDelete
  7. தங்களது விளக்கம் சுவாரஸ்யமாக இருந்தது ஐயா

    ReplyDelete
  8. படங்களும் உங்கள் விவரணமும் நன்று ஐயா

    கீதா

    ReplyDelete
  9. அறிவான தகவல்கள், அருமையான விளக்கம். கூடவே உங்கள் பேரனும் கனடாவின் கொடி காத்த குமரனாக வலம் வந்தது 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்பதை இந்தியர்களான நாம் எவ்வளவு உள்வாங்கியிருக்கிறோம் என்பதை தெளிவாகச் சொல்கிறது.

    துளசிதரன்

    ReplyDelete