Wednesday 28 June 2017

கல்வியில் சிறந்த கனடா

    கடந்த சில நாள்களாக இந் நாட்டில் வழங்கப்படும் பள்ளிக் கல்வி குறித்து இணையத்தில் அலசி வருகிறேன். மேலும் தொடர்புடைய சிலரிடம் பேசியும் வருகிறேன். குறிப்பாக பள்ளி மாணவர்களிடம்
பேசினேன்.

 
என் மனைவியும் மே என்ற சிறுமியும்
    இங்கே உள்ளூர்ப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பில் படிக்கும் மே(May) என்னும் பெயர் கொண்ட மாணவி என்னிடத்தில்  பல செய்திகளைப் பகிர்ந்து கொள்கிறாள். காலை நடைப்பயிற்சியின் போது பள்ளிப் பேருந்துக்காக அவள் காத்திருக்கும் நேரத்தில் அவளிடம் உரையாடுவதுண்டு. அந்தப் புதுத் தோழியை என் மனைவிக்கும் ஒருநாள் அறிமுகம் செய்து வைத்தேன். என் மனைவியும் உற்சாகமாய்ப் பேசி மகிழ்ந்தாள்.

   ஒரு நாற்பதண்டு காலம் ஆசிரியராக, தலைமையாசிரியராக, முதல்வராகப் பணியாற்றிய நான் கனடா நாட்டின் கல்வி முறையைக் கண்டு வியந்து நிற்கிறேன். நம் நாட்டின் நிலை எண்ணி நெஞ்சம் கலங்குகின்றேன்.

மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
சொல்வதிலோர் மகிமை யில்லை
திறமான புலமையெனில் வெளிநாட்டார்
அதை வணக்கம் செய்தல் வேண்டும்
என்பான் மகாகவி பாரதி.

 பன்னாட்டு மாணவர்களிடம் உள்ள திறமான புலமையினை(commendable proficiency) ஆய்ந்து அறிந்து எந்நாட்டு மாணவர்கள் சிறந்து விளங்குகிறார்கள் என அண்மையில் அறிவித்துள்ளது Centre for International Education Benchmarking என்ற தரம் பார்க்கும் நிறுவனம். அது  கல்வியில் சிறந்து விளங்கும் பதினோரு நாடுகளின் பட்டியலை வெளியிட்டது. அந்தப் பட்டியலில் கனடா முதலிடத்தில் உள்ளது. இப் பட்டியலில் இந்தியா இடம்பெறும் நாள் எந்நாளோ என்று என் மனம் ஏங்கியது.

    1960 வரை மனனம் செய்து ஒப்பிக்கும் முறையில்தான் இங்கும் கல்விமுறை இருந்தது. அடுத்த பத்தாண்டுகள் ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என்ற பாகுபாடு இல்லாமல் அரசியல் கலப்பில்லாமல் உரக்கச் சிந்தித்து ஒருமித்தக் கருத்துடன் பல சோதனைகளை நிகழ்த்தி 1970இல் திட்டவட்டமான நாட்டுக்கு நலம் பயக்கும் கல்விக் கொள்கையை உருவாக்கியது.

    குழந்தைகளை மையமாக வைத்து அந்தந்த மாநிலத்திற்கேற்ற பாடத்திட்டத்தை, கற்பிக்கும் முறையை, தேர்வுமுறையை வகுத்துக்கொள்ள ஃபெடரல் அரசு அதிகாரம் அளித்தது. பாடங்கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு அதிக சுதந்திரம் அளித்தார்கள். More freedom more responsibility என்னும் பொன்மொழிக்கேற்ப ஆசிரிய சமுதாயமும் தம் பொறுப்புணர்ந்து உழைத்தது. அதனால்தான் இன்று உலக  அரங்கில் இந்நாட்டுக் கொடி உயரப் பறக்கிறது. எல்லார்க்கும் பெரிய அண்ணன் எனப்படும் அமெரிக்க நாட்டுக்கொடி கூட  தாழ்ந்துதான் பறக்கிறது.

   
ஒரு தகவலைச் சொன்னால் நீங்கள் வியந்து போவீர்கள். இங்கே நூறு மாணவர்களில்  தொண்ணூற்று நான்கு பேர் அரசுப் பள்ளிகளில் படிக்கிறார்கள்.  அரசுப் பள்ளிகளில் தரம் மிகுந்த கல்வி எவ்வித கட்டணமும் இல்லாமல் கிடைக்கிறது.

   ஆண்டில் எட்டு மாதங்கள் கடும் பனிப்பொழிவு நிலவும். -10 டிகிரி என்ற அளவில் குளிர் கூத்தாடும். இதன் காரணமாக, குறைந்த அளவு 170 நாள்களும் அதிக அளவாக 190 நாள்களும் பள்ளிகள் செயல்படுகின்றன. பத்து மாதங்கள் பாங்கான தட்பவெப்ப நிலை இருந்தும், 220 அல்லது 240 நாள்கள் செயல்பட்டும் நம்மால் தரமான கல்வியைத் தர முடியவில்லையே ஏன்?

     இன்னொரு தகவலைக் கேட்டால் மயக்கம் போட்டு விழுந்து விடுவீர்கள். இந் நாட்டில் ஐந்து வயது நிறைவடைந்த குழந்தைகளை மட்டுமே பள்ளிகளில் சேர்க்க முடியும். நம்மூர் போல இரண்டரை வயது தளிர்களைப் பள்ளி என்னும் கொடுஞ்சிறையில் தள்ளும் வழக்கம் இங்கு இல்லை.

    இந்தச் சின்னஞ்சிறு குழந்தைகளுக்குப் பெற்றோர் தம் நேரத்தைப் பெரிதும் செலவிடுகின்றனர். உள்ளூர் நூலகங்களுக்கும், பூங்காக்களுக்கும், ஆறு, கடல், மலைகளுக்கும் அழைத்துச் செல்கிறார்கள். குழந்தை தன் பெற்றோருடன் ஐந்து ஆண்டுகள் சுற்றிச் சுற்றி வருவதால் தாய்மொழியை நன்றாக பேசப் பழகிவிடுகிறது.

   ஆறாம் வயது தொடக்கத்தில் கே.ஜி. வகுப்பில் சேர்க்கிறார்கள். அது ஓராண்டு படிப்புதான். பிறகு பன்னிரண்டு வயதுவரை தொடக்கக் கல்வி; அதன்பிறகு பதினெட்டு வயது வரை உயர்நிலைப் பள்ளிப்படிப்பு. பன்னிரண்டாம் வகுப்பின் இறுதியில் மட்டுமே சுகமாகக் கருதப்படும் பொதுத் தேர்வு இருக்கும். .ஆங்கிலம் அல்லது ஃபிரென்ச் மொழி வாயிலாக கல்வி கற்பிக்கப்படுகிறது.

    குழந்தைக்கு ஐந்து வயது ஆனபிறகு பள்ளியில் சேர்ப்பதும், பதினெட்டு வயதுவரைப் பள்ளியில் படிக்கவைப்பதும் கட்டாயமாகும். தவறினால் பெற்றோர் சிறைசெல்ல நேரிடுமாம். பெண்கல்விக்கு அரசு முன்னுரிமை வழங்குகிறது. Every girl child counts என்பது அரசு முன்வைக்கும் முழக்கமாகும்.

   கற்றலில் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு தனிப் பள்ளிகள் செயல்படுகின்றன. விடுதியுடன் கூடிய பள்ளிகள் அத்தி பூத்தாற்போல் சிலவாக உள்ளன.

    அண்மைப் பள்ளித் திட்டம் அமலில் உள்ள நாடு இது. வசிப்பிடத்திற்கு அருகில் மூன்று கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள பள்ளிகளில் மட்டுமே குழந்தைகளைச் சேர்க்க முடியும். கட்டணமில்லாப் பள்ளிப் பேருந்துகள் வசதி உண்டு. வீதி தோறும் இரண்டொரு பள்ளி என்று பாரதி சொன்னது இந் நாட்டுக்கு மிகவும் பொருந்தும். சல்லடை போட்டுச் சலித்தாலும் ஆடிட வசதி இல்லாத பள்ளியைப் பார்க்க முடியாது.

  
பள்ளிகள் மாலை மூன்று மணிக்கு முடிந்து விடுகின்றன. அடுத்த நிமிடம் பள்ளி இழுத்துப் பூட்டப்படும்; ஆடிடக் கதவுகள் திறக்கப்படும். பள்ளியில் தனி வகுப்புகள் நடைபெறா. தனிப்பயிற்சிக் கலாச்சாரமும் இல்லாததால் குழந்தைகள் மாலை முழுவதும் விளையாடுகிறார்கள். அதனால்தான் தொந்தி, தொப்பை எதுவுமின்றி சிறுவர் சிறுமியர் அழகான உடலமைப்புடன் காணப்படுகிறார்கள்.

    ஆண்டுதோறும் பாடத் திட்டத்தை மேம்படுத்துகிறார்கள். ஆசிரியர்களுக்குத் தேர்வுடன் கூடிய பணியிடைப் பயிற்சி கட்டாயமாகும். மொக்கை காரணம் சொல்லித் தப்பிக்க நினைத்தால் முதலுக்கே மோசம் வந்துவிடும்; ஆம் பணி இழக்க நேரிடும். ஆசிரியர்கள் பள்ளி நேரத்தில் பள்ளீயில்தான் இருக்க வேண்டும். இல்லையேல் நேரத்திருட்டு என்னும் குற்றத்திற்கு ஆளாக நேரிடும்! அதற்குரிய ஊதியத்தையும் இழக்க நேரிடும்.

    பள்ளிப் பாடத்திட்டத்தில் citizenship education என்னும் ஒழுக்கக் கல்வி இடம் பெற்றுள்ளது; முறையாகக் கற்றுத் தரப்படுகிறது.  grabbing others' property is a sin என்று ஆசிரியர்கள் சொல்லிக் கொடுத்ததாக அந்த மே என்ற சிறுமி குறிப்பிட்டாள். நானும் மூன்று வாரமாக ஒட்டாவா மெட்ரோ என்னும் செய்தித்தாளைப் படிக்கிறேன். திருட்டு, கொள்ளை தொடர்பாக ஒரு செய்திகூட கண்ணில் படவில்லை. நான் குடியிருக்கும் பகுதியில் குழந்தைகள் தாம் ஓட்டி விளையாடிய சைக்கிள்களை அப்படியே புல்வெளியில் விட்டுச் சென்றாலும் யாரும் அதைத் தொடமாட்டார்கள். கிடந்தது கிடந்தபடி அப்படியே இருக்கும். இந்த நாட்டு மக்கள் கசடறக் கற்று, கற்றபடி நிற்கிறார்களோ?

   தேர்வில் காப்பியடித்தல் குற்றம் என்பதைக் கற்றுக் கொண்டதாகச் சொன்னாள் மற்றொரு சிறுமி. “காப்பி அடிக்கும் வித்தையை நான் என்றுமே கற்றுக் கொண்டதில்லை” என்று உரைத்த காந்தி பிறந்த நாட்டில் இந்த இழிநிலை நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறதே.

    வட இந்தியப் பள்ளி ஒன்றில் பெற்றோரே தம் பிள்ளைகளுக்குச் பள்ளியின் சுவரேறி பிட் பேப்பர் கொடுத்த அசிங்கத்தை, In India, ”reach for the top” taken to new heights as parents scale walls to help students cheat on exams என்ற தலைப்பில்  இந்த ஊர் National Post என்னும் ஆங்கில நாளேடு படத்துடன் வெளியிட்ட செய்தியைப் படித்து வெட்கித் தலைகுனிந்தேன்.

    இந்த நாட்டு அரசியல்வாதிகளிடத்தில் நம் நாட்டு அரசியல்வாதிகள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் நிறையவே இருக்கின்றன. அப்படிக் கற்றால் மட்டுமே நம் நாட்டின் கல்வித்தரம் ஓங்கும் என்பது என் கருத்து.  கண்ணதாசனுடைய வார்த்தைகளில் சொல்கிறேன்:

“கொள்வோர் கொள்க; குரைப்போர் குரைக்க”

முனைவர் .கோவிந்தராஜூ
கனடா நாட்டிலிருந்து

குறிப்பு:
அமெரிக்காவில் பள்ளிகளைப் பார்வையிட்டு ஒரு கட்டுரை எழுதினேன். அது தினமணி நடுப்பக்கத்தில் வெளியாகி வாசகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது.
என்னும் இணைப்பில் பார்க்க.  
  

    

11 comments:

 1. நல்ல பழக்க வழக்கங்களை மற்றவரிடம் கற்றுக்கொள்ளும் பழக்கம் நம் அரசியல்வாதிகளுக்கு இருந்திருந்தால் இந்தியா என்றோ முன்னேறிருக்கும்
  வாலி அவர்கள் சொன்னார்
  1947க்கை மன்னால்
  பாரதத்தின் கையில்
  விலங்கு இருந்தது
  இன்று
  விலங்குகளின் கையில்
  பாரதம் இருக்கிறது
  அரசுப்பள்ளி ஆசிரியர்களே தங்கள் பிள்றைகளை தனியார் பள்ளிகளில் படிக்க வைப்பதும். அவர்களே சில தனியார் பள்ளிகளை நடத்துவதையும் காண்கிறோம்
  என்று தணியும் இந்த தனியார் மோகம்?
  இன்றைய தமிழ் இந்துவில் இதைப்பற்றிய விவாதம் வந்துள்ளது

  ReplyDelete
 2. திருத்தம் 1947க்கு முன்னால்

  ReplyDelete
 3. மற்ற நாடுகளைப் பொறுத்தவரை, படிப்பு என்பது, அந்நாட்டின் எதிர்காலம்,
  நம்மைப் பொறுத்தவரை, கல்வி என்பது வணிகம், வணிகம்

  ReplyDelete
 4. பதிவை
  படித்து
  மனம்
  ஏனோ
  எதையோ
  நினைத்து
  வருந்துகிறது..

  ReplyDelete
 5. பிற துறைகளைப் போல கல்வித்துறையிலும் பின் தங்கி அல்ல..கொஞ்சம் கொஞ்சமாக பின்னுக்குப்போகிறோம் என்பதை நினைக்கும்போது வேதனையாக உள்ளது. தவிர, இங்கு கல்வி வணிகமயமாகிவிட்டதே என்ன செய்வது.

  ReplyDelete
 6. நம் தேசத்தில் கல்வி விற்பனைக்கு வந்து விட்ட பிறகு தங்களைப் போன்று எத்தனை அறிஞர்கள் உரைத்தாலும் அரசு எந்திரம் அசைந்து கொடுக்காது.
  ஆனாலும் விளக்கமான ஒரு பதிவினைக் கொடுப்பதற்காக நிறைய உழைத்திருக்கிறீர்கள். Great...!

  ReplyDelete
 7. How marvellous! When will India come to this level? Modi's tours do not yield any good result. As many people say he works for the corp[orates.

  ReplyDelete
 8. பயனுள்ள பல நல்ல பதிவுகளை அறிந்து கொள்கிறோம் . அந்நாட்டை நினைத்து பொறாமையும் நம் நாட்டின் இயலாமையும் தெரிகிறது. மாற்றங்கள் வருமா அல்லது ஏமாற்றம் தான் மிஞ்சுமா?

  ReplyDelete
 9. வெந்தனலால் வேகாதது, கொடுங்காற்றால் கொண்டு போகமுடியாதது, வேந்தனால் அழிக்க இயலாதது கல்வி மட்டுமே. அத்தகைய கல்வியை ஆசிரியர்கள் முறையாகக் கற்பிக்க வேண்டும். முதலில் காலந்தவறாமை வேண்டும். மே தங்களிடம் தெரிவித்ததைப் போல தரமான் கல்வி முறையே எதிர்காலச் சந்ததியினரைத் தலை நிமிறச் செய்யும். எத்தனை நாட்கள் பள்ளி வேலை என்பதைவிட எப்படி கற்பிக்கிறோம் என்பதே சிறப்பு. இந்திய அமைச்சுப் பணிகளில் நம் மாநிலத்தவர்கள் தேர்ச்சியடையாதற்கு நம் நாட்டுக் கல்விமுறையும் ஒரு காரணமாகும். கல்வி முறையை நவீனப்படுத்தி அறிவிற்சிறந்த ஆசிரியர்களை உருவாக்கினால் மட்டுமே நாடும் வீடும் உருப்படும். இல்லையேல் மேலை நாட்டுக் கல்விமுறையைக் கண்டு நாம் அதிசயிப்பதைத் தவிற வேறு வழியில்லை.
  முனைவர் ரா.லட்சுமணசிங்
  பேராசிரியர்
  அரசு கலைக் கல்லூரி(தன்னாட்சி)
  கரூர் - 639 005

  ReplyDelete
 10. நம் நாட்டுக் கல்வி முறை மாறாத வரை நம் நாடு முன்னேறியிருக்கிறது என்று சொல்லுவது மடமை!

  கீதா: ஆமாம் ஐயா மகன் சொன்னான் அங்கு கல்வி முறை மிகவும் நன்றாக இருக்கிறது என்று அது மட்டுமல்ல அங்கு மருத்துவமும் அரசு மருத்துவமனைகளில் நன்றாக இருக்குமாம். அது பற்றியும் தாங்கள் அறிய நேர்ந்தால் எழுதுங்கள் ஐயா...

  ReplyDelete
 11. Whatsapp feedback from Mr T.P.Subramaniam, Anthiyur

  இன்றையகல்விநிலை பற்றிஎண்ணி ஏங்கும்
  எம்போன்றோர்க்கு
  கல்வியில் சிறந்த கானடா
  கட்டுரை பாரதத்திலும்
  விரைவில் மாற்றம்
  வரலாம் என்னும்
  நம்பிக்கை ஒளிக்கீற்றுத்
  தெரிகிறது.நன்றி.

  ReplyDelete