Sunday, 16 February 2020

உலகெங்கும் அறிந்த உள்ளூர்ப் பழுத்த பயன்மரம்


    ஆடு மேய்த்துக் கொண்டிருந்தவர் அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஆனார் என்று சொன்னால் நம்புவீர்களா? அடுப்பெரிக்க விறகு சுமந்தவர் ஆந்திர மாநில அரசின் ஆலோசகராய் ஆனதை யார் நம்புவார்? திண்ணைப் பள்ளித் தொடங்கி உயர்நிலைப் பள்ளி முடிய தமிழ் வழியில் படித்தவர் பின்னாளில் நடுவண் அரசின் தேர்வாணையக் குழு உறுப்பினராகிக் கொடிகட்டிப் பறந்ததை எவர்தான் நம்புவார்? நானும் நம்பாதவர் கட்சியில்தான் இருந்தேன்.    ஆனால் அந்த மாமனிதரின் வழ்க்கை வரலாற்று நூலைப் படித்தபோது அவர் குறித்தான எனது மதிப்பீடு இமயம் அளவுக்கு உயர்ந்து நிற்கின்றது.

   அன்றாடம் காய்ச்சிக் குடும்பத்தில் பிறந்த ஒருவர் அண்ணாந்து பார்க்க முடியாத உயரத்தை நேர்மையான முறையில் எட்டமுடியும் என்பது அவரது வாழ்வியல் செய்தியாக உள்ளது.

   எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என நினைக்காமல் இப்படித்தான் அறவழியில் சென்று வெற்றி பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தால் யாரும் எட்டமுடியாத உயரத்தை எட்டமுடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக அவரது வாழ்க்கை அமைந்துள்ளது.

    செய்யும் செயலில் நேர்மையும் உள்ளத்தில் துணிவும் இருந்தால் யாருக்கும் அஞ்ச வேண்டியதில்லை என்பது அவரது வாழ்க்கை வரலாற்றின் மூலம் இன்றைய இளைய தலைமுறை கற்க வேண்டிய பாடமாகும். பதவியைத் தக்கவைத்துக் கொள்வதற்காக அணுவளவும் சமரசம் செய்து கொள்ளாத அந்த மன உறுதிதான் அவரது ஒரே சொத்தாக இருந்தது.

   வெளிநாட்டிலிருந்து வந்த வேலைவாய்ப்புகளை உதறித்தள்ளிவிட்டு உள்நாட்டின் நலனுக்காக உற்சாகமாகப் பணியாற்றியவர்.

     அவர் யார்? உங்களால் ஊகிக்க முடிகிறதா? அவர்தான் கரூர் மாவட்டம் ஆண்டிப்பட்டிக்கோட்டையில் பிறந்து அகிலமெங்கும் புகழ்பரப்பி வரும் முனைவர் எ.பாலகுருசாமி அவர்கள்; அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர்.

  நேர்மையாகத் தேர்வெழுதி வெற்றியடையலாம்; நேர்மையான முறையில் பணியில் சேரலாம்; நேர்மையான முறையில் பொருள் ஈட்டியே வளமாக வாழலாம் என்று வாழ்ந்து காட்டி வருகிறார் பேராசிரியர் எ.பாலகுருசாமி அவர்கள்.

   தன்னைப் படிக்கவைத்து உச்சத்தில் வைத்த இந்தச் சமுதாயத்திற்கு எதையாவது திருப்பிச் செய்ய வேண்டும் என்னும் நோக்கில் தன்னுடைய பெயரில் ஓர் அறக்கட்டளையை உருவாக்கி இன்றைய இளம் தலைமுறை மாணவர்களுக்கு இயன்ற உதவிகளைச் செய்து வருகிறார்.

  கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு
  உரிமை உடைத்து இவ்வுலகு
என்னும் குறளே இவரது வெற்றிக்கான சூத்திரம் ஆகும்.

மண்டை உடைத்திட வந்தாலும் – பொருள்
கொண்டு வந்துன்னிடம் தந்தாலும்
மன்னவரே எதிர் நின்றாலும்
மெய் சொல்லல் நல்லதப்பா –தம்பி
மெய்சொல்லல் நல்லதப்பா
என்னும் பாரதிதாசனின் பாடல்வரிகளை பாலபாடமாகப் படித்ததைப் பதவி நாற்காலிகளில் அமர்ந்தபோதெல்லாம் சிறிதும் வழுவாமல் கடைப்பிடித்தார்.
  
   விண்ணப்பிக்காமலேயே வியக்கத்தக்க பதவிகள் அவரை நாடி வந்தன. தான் வகித்த பதவிகளால் அவருக்கு ஒருபோதும் பெருமை சேரவில்லை. மாறாக அவரால் அவர் வகித்த பதவிக்குப் பெருமை சேர்ந்தது.

   விருது பெறும் நோக்கில் அவர் வினையாற்றினார் அல்லர். அவர் ஒருநாளும் விருதினைத் தேடிப்போனதில்லை; விருதுகளே அவரைத் தேடி வந்தன. ஒரு கருமயோகியைப் போல வினைமுடிக்கும் வித்தகராய் இருந்தார்; உயர் பதவிகளில் இருந்த போதெல்லாம் நாட்டு நலன் ஒன்றை மட்டும் குறியாகக்கொண்டு நேர்மையாகச் செயல்பட்டார் என்பதை நூலாசிரியர் திரு.பா.கிருஷ்ணன் அவர்கள் மிகத் துல்லியமாகப் பதிவு செய்துள்ளார்.

    நேர்மையின் பயணம் என்னும் தலைப்பில் அமைந்த அந் நூலின் அறிமுகவிழா கரூர் வள்ளுவர் கல்லூரியில் மிகச்சிறப்பாக நடந்தது. மேடையில் இருந்த பதாகையில், பேராசிரியரின் பெயருக்கு முன்னால் உள்ளூர்ப் பழுத்த பயன்மரம் என்னும் திருக்குக்குறள் தொடரை அடைமொழியாக அமைந்த பொருத்தப்பாட்டை அனைவரும் எண்ணி மகிழ்ந்தனர்.

   மூன்று மணிநேரம் நடந்த விழா முப்பது நிமிடங்களில் முடிந்தது போன்ற உணர்வு ஏற்பட்டது. அரங்கு கொள்ளாமல் கூடியிருந்த கல்லூரி மாணவர்கள் சலசலப்புச் சிறிதும் இல்லாமல் பேச்சைக் கூர்ந்து கேட்டமை கல்லூரியின் வளாகப் பண்பாடு எத்தகையது என்பதை எடுத்துக்காட்டியது.
நூலாசிரியர் திரு பா.கிருஷ்ணன்

கரூர் வைஸ்யா வங்கி தலைவர் திரு.ஜெ.நடராஜன்

குறள் மலைச்சங்கம் நிறுவுநர் திரு.பா.இரவிக்குமார்

காந்திகிராம நிகர்நிலைப் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர்
முனைவர் சோம.இராமசாமி

'பாமரருக்கும் பரிமேலழகர்' நூலாசிரியர்
திரு சி.இராஜேந்திரன்,I.R.S


Formerly Vice-Chancellor of Anna University Dr.E.Balagurusamy

Dr.Bindhu Vijayakumar, Secretary, EBG Foundation

நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிய எனக்கும் பாராட்டு!


பாராட்டு பெறும் தாளாளர் திரு.க.செங்குட்டுவன்

'திருக்குறள் திருமகன்' என்னும் விருதினைப் பெறுகிறார்
பேராசிரியர் எ.பாலகுருசாமி

   .

  

16 comments:

  1. நேர்வழி, உண்மையை பேசுதல் நம்மை என்றும் கை விடாது என்பதில் நான் ஆணித்தரமாக நம்பிக்கை வைத்துள்ளேன் ஐயா.

    சிறப்பான பதிவு.

    ReplyDelete
  2. Arumaiyana surkkamana thelivahaa oru pakkathil pathu seithirukkireerhal.. Thangalidam iruntha puthahathai ore nalil padithu mudutha pinbu Bala gurusamy avarhalai neril parkka vendum enra aavalal vilavil kalanthukonden.. Valluvar hotel reception avarai paarthu pesum vaippukidaithathu... His Simplicity, kalkalappana kalanthuraiyadal. Ennudan photo eduthu ennai mahilvhiyil aalthinaar

    ReplyDelete
  3. போற்றுதலுக்கு உரியவர்

    ReplyDelete
  4. "மகுடங்கள் அணிந்து கொள்வதற்கல்ல.... பிறரால் அணிவிக்கப் படுவதற்காக" என்று ஹிந்தியில் ஒரு சொலவடை கேட்டிருக்கிறேன். விருதுகளை அவரவர்களே கொடுத்து வாங்கிக் கொள்ளும் இன்றைய சூழலில் விருதுகளுக்கே பெருமை சேர்க்கும் ஐயா பாலகுருசாமி அவர்களுக்கு விருது வழங்கிய நிகழ்வினை நீங்கள் தொகுத்து வழங்கியது மகுடத்தில் பதித்த நன்முத்தாய் அமைந்திருக்கும் என்று நம்புகிறேன்.

    ReplyDelete
  5. மிகவும் மகிழ்ச்சி... சிறப்பான மனிதர்...

    ReplyDelete
  6. Shanmugam. S HM (Rtd) kavindapadi16 February 2020 at 14:59

    பால குரு சாமி அல்லர்
    இவர்
    சாமி குரு பாலர்.
    அறத்தின் தேரில் அமர்ந்து
    இந்த
    "உள்ளூர்ப் பழுத்த பயன் மரம்"
    தன்
    திறத்தால் அடைந்த சிறப்புக்களை
    எண்ணியெண்ணி
    சிரத்தால் நிலம் குனிந்து
    என்னிரு
    கரத்தால் வணங்குகிரேன்.
    வாழ்க அவர்!
    வாழியவே அவர் தம் புகழ்
    பல்லாண்டு பல்லாண்டு.

    செதுக்கிய சொற்களால்
    தொகுத்து வழங்கிய
    இனியர்
    ஆசிரியப் புனிதர்
    வழிகாட்டி
    இனியன் கோவிந்தராஜ்
    அவர்களுக்கு என் வணக்கங்கள்.

    கவுந்தப்பாடி சண்முகம்
    தலைமை ஆசிரியர்
    (பணி ஓய்வு)

    ReplyDelete
  7. Shanmugam. S HM (Rtd)16 February 2020 at 15:06

    பால குரு சாமி அல்லர்
    இவர்
    சாமி குரு பாலர்.
    அறத்தின் தேரில் அமர்ந்து
    இந்த
    "உள்ளூர்ப் பழுத்த பயன் மரம்"
    தன்
    திறத்தால் அடைந்த சிறப்புக்களை
    எண்ணியெண்ணி
    சிரத்தால் நிலம் குனிந்து
    என்னிரு
    கரத்தால் வணங்குகிறேன்.
    வாழ்க அவர்!
    வாழியவே அவர் தம் புகழ்
    பல்லாண்டு பல்லாண்டு.

    செதுக்கிய சொற்களால்
    தொகுத்து வழங்கிய
    இனியர்
    ஆசிரியப் புனிதர்
    வழிகாட்டி
    இனியன் கோவிந்தராஜ்
    அவர்களுக்கு என் வணக்கங்கள்.

    கவுந்தப்பாடி சண்முகம்
    தலைமை ஆசிரியர்
    (பணி ஓய்வு)

    ReplyDelete
  8. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் வாய்ப்பை திரு செங்குட்டுவன், தாளாளர், வள்ளுவர் கவிக் குழுமம், கரூர் மூலம் கொடுத்த குருவருளை எண்ணி வியக்கிறேன்.
    நிகழ்ச்சியை நன்றாக வடிவமைத்து நெறிப்படுத்திய உங்களுக்கும் நன்றி.. வாழ்த்துகள்..

    It is a great honor for me to to be a part of this memorable event..

    ReplyDelete
  9. மகுடத்தைத் தேடும் மனிதர்கள் உண்டு.மகுடங்கள் தேடிவந்த மனிதர் நீங்களதான்.

    மெய்வருத்தக் கூலி தரும் குறளுக்கு உரு பாகுரு அவர்களே.

    ReplyDelete
  10. மகுடத்தைத் தேடும் மனிதர்கள் உண்டு.மகுடங்கள் தேடிவந்த மனிதர் நீங்களதான்.

    மெய்வருத்தக் கூலி தரும் குறளுக்கு உரு பாலகுரு அவர்களே

    ReplyDelete
  11. மகுடத்தைத் தேடும் மனிதர்கள் உண்டு.மகுடங்கள் தேடிவந்த மனிதர் நீங்களதான்.

    மெய்வருத்தக் கூலி தரும் குறளுக்கு உரு பாலகுரு அவர்களே

    ReplyDelete
  12. நன்றாகப் பதிவு செய்துள்ளீர்கள். நன்றிகள்.

    ReplyDelete
  13. அருமையான நிகழ்வுப் பகிர்வு ஐயா. அரிய மனிதரை அறிமுகப்படுத்தியுள்ளீர்கள்.

    ReplyDelete
  14. அது ஒர் அருமையான நிகழ்வு ஐயா ..அதில் நானும் பங்கு பெற்றது எனக்கு கிடைத்த பெறும் பாக்கியம்...

    ReplyDelete
  15. ஒரு குறளைக்கூட உண்மையாக பின்பாற்றமல் வாழும் மக்கள் குறளைக்கொண்டாடுவதும் பட்டங்கள் சூடிக்கொள்வதும் வேடிக்கை

    ReplyDelete