பதினெட்டாம் நூற்றாண்டில் வெளிவந்த
அமெரிக்க நாட்டின் பணத்தாள் இன்றும் செல்லும் என்றால் வியப்பாக உள்ளதா? சுதந்திரம்
அடைந்தபின் நான்கு முறைகள் பணமதிப்பு இழக்கச் செய்த நாட்டில் வாழும் நமக்கு
வியப்பாகத்தான் இருக்கும்.
அமெரிக்க பணத்தாள் அச்சடிப்பதை
நேரில் பார்க்கப் போகிறோம் என்று என் மாப்பிள்ளை சொன்னபோது என்னால் துளியும் நம்ப
முடியவில்லை. நம் நாட்டில் பணத்தாளை விடுங்கள் முத்திரைத்தாள் அச்சடிக்கும்
இடத்தைக்கூட பார்ப்பதற்கு அனுமதியில்லை.
விமான நிலையத்தில் இருப்பது போன்ற
பல்லடுக்குச் சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்பட்டோம். கேமரா, அலைப்பேசி
போன்றவற்றிற்கு அனுமதி இல்லை. நுழைவுக் கட்டணம் எதுவுமில்லை. பொதுமக்கள் எவரும்
பார்வையிடலாம்.
பாதுகாப்புக் கெடுபிடிகளைக் கடந்து,
நுழைவாயிலில் தயாராக நின்ற டிராம் வண்டியில் ஏறி அமர்ந்தோம். ஐந்து நிமிட
நேரத்தில் அச்சகம் வந்தது. தரைத்தளம், முதல்தளம் மட்டும் கொண்ட வளாகம் அது.
தரைத்தளத்தில் கொடைப்பொருள்
அங்காடியும், பணத்தாள் கண்காட்சியும் உள்ளன. ஒரு காலத்தில் பணத்தாள் சாதாரண லித்தோ
பிரஸில் அச்சடிக்கப்பட்டது என்பதையும் இப்போது அதிநவீன முறையில் எவ்வாறு
அச்சடிக்கப்படுகிறது என்பதையும் மிகத் தெளிவாக விளக்கும் ஒலி ஒளிக் காட்சிகள்
அங்கே இருக்கின்றன.
முதல் தளத்தில் நீண்ட ஆளோடிகள்(corridors) உள்ளன. அங்கிருந்து பெரிய பெரிய கண்ணாடி வழியே
தரைத் தளத்தில் அச்சகம் செயல்படுவதைத் தெளிவாகப் பார்க்க இயலும். அச்சகத்தைப்
பத்துப் பிரிவுகளாகப் பிரித்துள்ளனர்.
எந்தெந்தப் பிரிவில் என்னென்ன வேலை நடக்கிறது என்பதை
யாராவது விளக்கிக் கூறினால் நன்றாக இருக்குமே என நினைத்தபோது, உள்ளே நுழையும்போது
கொடுத்த ரேடியோ கருவி என் கழுத்தில் தொங்கியது நினைவுக்கு வந்தது. அதை எடுத்து
ஒன்று என்னும் எண்னை அழுத்தினேன். அந்தப் பிரிவில் என்ன நடக்கிறது என்பதை அழகான
ஆங்கிலத்தில் செவிமடுக்க முடிந்தது.
இந்த அச்சகத்திற்கு Bureau of
Engraving and Printingஎன்று பெயர். பணம்
அச்சடிக்கும் தாள் வழக்கமான தாளிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. 75% பருத்திப்
பஞ்சு, 25% செயற்கை இழை இவற்றால் செய்யப்பட்ட தாளில்தான் அமெரிக்கப் பணம்
அச்சடிக்கப்படுகிறது. இதன் காரணமாக புழக்கத்தில் விடப்படும் பணத்தாளை நான்காயிரம்
முறைகள் மடித்து விரித்தாலும் கிழிந்து போகாதாம்!
முதன்முதல் 1862 ஆம் ஆண்டில் தனியார்
அச்சகத்தில்தான் அமெரிக்கப் பணத்தாள் அச்சடிக்கப்பட்டதாம்! 1914ஆம் ஆண்டில் முதல்
அரசு அச்சகம் வாஷிங்டனிலும், பணத்தாள் தேவை அதிகமானதால் இரண்டாம் அச்சகம் 1991இல்
இங்கே டெல்லாசிலும் அமைந்ததாம்.
இப்படி அச்சடிக்கப்படும் தாள்கள்
பின்வருமாறு கட்டப்படுகின்றன.
100 தாள்கள் =1
ஸ்ட்ராப்(strap)
10 ஸ்ட்ராப்புகள் =1 கட்டு(bundle)
4 கட்டுகள் =1 பிரிக்(brick)
4 பிரிக்ஸ் =1 கேஷ் பேக்(cash-Pack)
40 கேஷ் பேக்ஸ் =1 ஸ்கிட்Skid (640000 பணத்தாள்கள்)
அச்சடித்த பணத்தாள் கட்டுகள் ரிஸர்வ் வங்கிக்குக் சென்று, அங்கிருந்து மற்ற
வங்கிகளுக்குச் செல்கின்றன.
இந்தப் பணத்தாள்களுக்கு ஆயுட்காலம்
கூட உண்டாம். அதாவது அத்தனை ஆண்டுகளுக்குக் கிழியாமல் நையாமல் இருக்குமாம். $1 தாள் 5.8 ஆண்டுகள். $5 தாள் 5.5 ஆண்டுகள். $10 தாள் 4.5 ஆண்டுகள். $20 தாள் 7.9 ஆண்டுகள். $50 தாள் 8.5 ஆண்டுகள். $100 தாள் 15 ஆண்டுகள்.
எல்லாவற்றையும் மூக்கில் விரல்
வைத்தபடி பார்த்துவிட்டு வெளியில் வந்ததும் அங்கு நின்ற ஒரு அதிகாரியிடம் நன்றி
சொல்லிவிட்டு ஒரு வினா கேட்டேன்.
அவர் சொன்னார்:
“உங்கள் நாட்டில் பொதுமக்கள்
பார்வையிட அனுமதியில்லை என்பதை அறிய எனக்கு வியப்பாக உள்ளது. வெளிப்படைத்தன்மை இல்லை
என்பதை அது காட்டுகிறது. தான் பயன்படுத்தும் பணத்தாள் எவ்வாறு உருவாகிறது என்பதை
ஒரு குடிமகன் அறிந்து கொள்வது என்பது அவருடைய உரிமையல்லவா?”
அந்த வினாவை நான் கேட்காமலே வந்திருக்கலாம் என
எண்ணியபடி தயாராய் நின்ற டிராம் வண்டியில் ஏறி அமர்ந்தேன்.
Photo courtesy:BEP leaflet
..............................
முனைவர் அ.கோவிந்தராஜூ,
அமெரிக்காவிலிருந்து.
இது தான் சரியான SYSTEM...!
ReplyDeleteஅச்சகத்தின் உள்ளே செல்பேசியோ வேறு எந்தப் பொருளோ அனுமதிக்கப் படாத போது இவ்வளவு விசயங்களையும் மனதில் துல்லியமாக பதித்து வைத்து மிக நேர்த்தியான (இந்த பணத்தாளைப் போலவே) ஒரு பதிவினை எங்கள் "இனியன் அண்ணன்" மட்டுமே தர முடியும் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறீர்கள. வாழ்த்துக்கள்!
ReplyDeleteNice Message to know about it. Thank you Sir.
ReplyDeleteவியப்பான செய்தி ஐயா. வெளிப்படைத்தன்மை பல நிலைகளில் உதவும். ஒரு தெளிவினைத்தரும். அவ்வகையில் அவர்களுடைய இந்த முயற்சி பாராட்டத்தக்கது. உங்களுக்கும் நல்ல வாய்ப்பு நேரில் பார்க்க.
ReplyDeleteபடிக்கப் படிக்க வியப்பாக இருக்கிறது ஐயா
ReplyDeleteவெளிப்படைத் தன்மை போற்றுதலுக்கு உரியது
Bureau of Engraving and Printing பற்றிய மிக நுணுக்கமான செய்திகள். வெளிப்படைத் தன்மை மிகவும் தேவை. அங்கும் கூட சில துறைகளில் வெளிப்படைத்தன்மை இல்லை என்கிறார்கள்.
ReplyDeleteஅருமையான பதிவு! நிறைய தகவல்கள் அடங்கிய பதிவு. குறிப்பேடு எதுவும் இல்லாமல் எப்படி இத்தனையும் நினைவில் கொண்டு பகிர்ந்திருக்கின்றீர்கள் !!!! அதான் முனைவர்!!!
ReplyDeleteஉங்கள் வினா என்னவோ? ஐயா அதைச் சொல்லவே இல்லையே..இப்படிப் பார்வையிடுவதன் செக்யூரிட்டி குறித்த வினாவா?
கீதா
ஐயா வணக்கம், உழைத்து பணம் சம்பாதிக்கின்றவர்கள் அதிகமாக அங்கு இருக்கலாம் அதனால் வெளிப்படையாக நடக்கிறது. உழைக்காமல் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இங்கு அதிகமாக இருக்கிறார்களே ஐயா. (சிலநேரம் அனுமதிக்கக் கூடாது என்று கட்டளையிடுபவர்களே............)
ReplyDeleteஇந்தப் பதிவை படித்ததும் நம் இந்தியாவில் சமீபத்தில் ரூபாய் அச்சடிக்கும் அலுவலகத்தில் பணிபுரிந்த ஒருவர் தனது காலனியில் தினமும் மறைத்து வைத்து 90 லட்ச ரூபாய் வரை திருடிய செய்தி நினைவிற்கு வருகிறது.
ReplyDelete