Monday, 24 June 2024

வான் வழியே வலம் வந்தோம்

        சென்னை அண்ணா பன்னாட்டு விமான முனையம்.  21.6.2024 வெள்ளி நள்ளிரவு 12.20 மணி. மின் விளக்குகள் இரவைப் பகலாகக் காட்டுவதில் போட்டியிட்டன. நாங்கள் பயணம் செய்ய வேண்டிய கத்தார் வான்வழி நிறுவனத்தின் விமானம் நான்கு மணி நேரம் கழித்துப் புறப்படும்.

வந்தோம் விமானத்தில் ஏறிப் புறப்பட்டோம் என அமைவதில்லை விமானப் பயணம். பணியாளர் அனைவரும் நிதானமாக, கவனமாகச் செயல்படுவார்கள். எங்கு நோக்கினும் நீண்ட வரிசை; நின்ற வண்ணம் காத்துக் கிடக்க வேண்டும். எனவே மூன்று நான்கு மணி நேரம் முன்னதாக விமான நிலையம் வந்தடைவது எங்கள் வழக்கம்.

வழக்கத்திற்கு மாறாக இம் முறை மடிக்கணினிப் பையைக்கூட(Laptop Bag) எடை போட்டார்கள். நாங்கள் கொண்டு சென்ற மொத்த எடையில் சற்றே அளவுக்குக் கூடுதலாக இருந்ததால் ஆறாயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தினோம். நல்லவேளை போதிய பணம் வைத்திருந்தோம். கைப்பேசி அல்லது பற்றட்டை(Debit Card) மூலம் பணம் செலுத்தும் வசதி அங்கு இல்லை என்பது வியப்பாக உள்ளது!  ஒரு வழியாகப் பெட்டிகளை ஒப்படைத்தோம். உடனே விமான அனுமதிச் சீட்டுகளையும் (Boarding pass)பெற்றுக்கொண்டோம்.

   பெட்டிகளைப் பெற்றுக்கொண்டு இரசீது தந்த அம்மணியிடம், என் துணைவியார், "பெட்டிகள் பத்திரமாகப் போகுமா?" எனக்கேட்க, அதுவரை ஆங்கிலத்தில் பேசிக்கொண்டிருந்தவர் "போயிடும்" என்று சொல்லிச் சிரித்தார். என்னவளும் உடனே தன் கட்டை விரலை உயர்த்திக்காட்டி நன்றி சொன்னார். சைகை மொழி ஒன்றிருந்தால் உலகை வலம் வரலாம் போலும்!

  அடுத்து வந்தது பாதுகாப்புச் சோதனை. கைப்பை, கைப்பேசி, கைக்கடியாரம், காலணி, மடிக்கணினி அனைத்தையும் ஸ்கேன் இயந்திரத்தில் ஒரு புறம் நுழைத்து மறுபுறம் துப்பச் செய்தார்கள். ஒரு கைப்பையை மட்டும் எடுத்துத் தனியே வைத்தனர்; திறந்து காட்டச் சொன்னார் அந்தப் பாதுகாப்பு அதிகாரி. அதில் இருந்த ஒரு பால்கோவா பொட்டலத்தைப் பிரித்து ஸ்கேனர் மூலம் பலகாலும் சோதனை செய்தபின், போனால் போகட்டும் என்று எங்களைப் போகவிட்டார். பால்கோவா போன்ற கொழ கொழாப் பொருள்களைத் எடுத்துச் செல்வதைத் தவிர்ப்பது நல்லது என்னும் புதிய பாடத்தைக் கற்றுக்கொண்டு அடுத்த கட்டச் சோதனைக்கு உட்பட்டோம். முதலில் ஸ்கேனர் நுழைவாயில்வழியே செல்ல வேண்டும். பின்னர் குறிப்பிட்ட இடத்தில் இயேசு நாதர் சிலுவையில் நிற்பதுபோல் கைகளை விரித்து நிற்க வேண்டும். ஆண்களை ஆணும் பெண்களை பெண்ணும் உடல் முழுவதும் கிச்சு கிச்சு மூட்டுவது போல மெல்லத் தடவி சோதனை செய்து அனுப்புகிறார்கள்.

    இவை முடிந்ததும் நம்மை வழியனுப்பும் அதிகாரியின் (Emigration Officer)முன் நின்றோம். கடவுச் சீட்டை(Passport) ஆராய்ந்தபின், ஒளிப்படம் எடுத்தார். பின்னர் சில கேள்விக் கணைகளை ஆங்கிலத்தில் தொடுத்தார். கனடாவில் குடியுரிமை பெற்று வசிக்கும் என் மகளைப் பார்க்கப் போவதாகத் தமிழில் விடையளித்தேன். உடனே கடவுச் சீட்டில் தேதி முத்திரையிட்டுத் தந்தார். பயணம் சிறக்க வாழ்த்துகள் எனச் சொல்லவில்லை. வெளிநாட்டு விமான நிலையங்களில் இப்படி வாழ்த்தி வழியனுப்பும் வழக்கம் உள்ளது. இன்சொல் உரைப்பதன் சிறப்பைக் கூறும் திருக்குறளும் திருமந்திரமும் நம் நாட்டில் தோன்றியவை! ஆனாலும் நாங்கள் அவருக்கு நன்றி சொல்லி மெல்ல நகர்ந்தோம்.

   ஒருமணி நேரக் காத்திருப்புக்குப்பின் எங்கள் விமான அனுமதிச் சீட்டை ஸ்கேன் செய்து விவரங்களைச் சரிபார்த்து விமானத்திற்குள் செல்ல அனுமதித்தனர். விமானத்தின் வயிற்றுப் பகுதியில் அமைந்த நுழைவாயிலின் வழியே சென்றபோது, ஓர் அழகிய விமானப் பணிப்பெண் (Air hostess) ஆங்கிலத்தில் நல்வரவு சொல்லி புன்முறுவல் பூத்து வரவேற்றாள். அதற்கும் சேர்த்துதான் விமானக் கட்டணம் செலுத்துகிறோம். ஒருவழிப் பயணக் கட்டணமே ஒருவருக்குத் தொண்ணூற்று ஐந்தாயிரம் ரூபாய்!

   சரியாக 4.20 மணிக்கு விமானம் பறக்கத் தொடங்கியது. ஒரு மணி நேரத்திற்குப்பின் சுவையான காலைச் சிற்றுண்டி தந்தனர். நான்கு மணி நேரம் பறந்து தோகா பன்னாட்டு விமான நிலையத்தில் தரையிறங்கினோம். அங்கும் இரண்டடுக்குச் சோதனைகளுக்கு உட்படுத்தினார்கள். காலை 8.20 மணிக்கு கனடா நாட்டின் மான்றியல்(Montreal) என்னும் நகருக்குச் செல்லும் விமானத்தில் ஏறிப் பறந்தோம்.

   இந்த விமானம் The Boeing 787-9 Dreamliner’ என்னும் வகையைச் சேர்ந்தது. 63 மீட்டர் நீளமும் 6 மீட்டர் அகலமும் கொண்டது. 290 பயணிகள் செல்லும் வண்ணம் வடிவமைக்கப் பெற்றது.

   புறப்பட்ட சில நிமிடங்களில் மேகத்திற்கு மேலே எழும்பி 11590 மீட்டர் உயரத்தைத் தொட்டு, மணிக்கு 900 கி.மீட்டர் வேகத்தில் மிக நேர்த்தியாகப் பறந்தது. இடி, மின்னல், மழை, ஆலங்கட்டி மழை முதலியவற்றால் விமானமும் விமானத்தில் உள்ள மின்னணுக் கருவிகளும் பாதிக்காமல் இருப்பதற்காக இப்படி முப்பதாயிரம் அடிக்குமேல் பறப்பது தேவையாகிறது. மேலும் ஜன்னல் அருகில் அமர்ந்து தூங்காமல் பயணம் செய்வோர்-பயணம் பகல் நேரத்தில் வாய்த்தால்- மேலிருந்து மேகக் கூட்டங்களைப் பார்ப்பது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்!

   இருக்கையை விட்டு எழுந்து ஜன்னல் வழியே வெளியேறி நான் மட்டும் தனியாகப் பறந்து கீழே வெண்பஞ்சு போல் கொட்டிக் கிடக்கும் மேகங்களைப் பார்ப்பதாகக் கற்பனை செய்வேன்!




Aerial view Photos: Dr.A.Govindaraju

    கற்பனை, கண் துஞ்சல், இருக்கையின் எதிரில் அமைந்துள்ள திரையில் திரைப்படம் பார்த்தல் என நேரம் சென்றது. நான் கையோடு எடுத்துச் சென்ற சிறுகதை நூல்கி.ராஜநாராயணன் எழுதிய வேட்டி’ – எந்த விமானமும் எட்டிப்பிடிக்க முடியாத கற்பனை உலகிற்கு என்னை இழுத்துச் சென்றது.

   நடுவில் இருவேளை உணவும் ஒருவேளை சிற்றுண்டியும் உண்டோம். அவ்வப்போது பெரிய காகிதக் குவளைகளில் தந்த பழச்சாறு, தேநீர் போன்றவற்றையும் அருந்தி மகிழ்ந்தோம்.

   வழங்கப்பட்ட சைவ உணவு வகைகள் பெயர் தெரியாதவை என்றாலும் அனைத்தும் மிகவும் சுவையாக இருந்தன. ‘கண்டறியாதன கண்டேன்என்று அப்பர் பெருமான் இறையுணர்வில் திளைத்ததுபோல் நான்உண்டறியாதன உண்டேன்என இரையுணர்வில் திளைத்தேன்!

    இப்படி 16 மணி 35 நிமிடங்கள் பறந்து கனடா நாட்டின் பெரிய பன்னாட்டு விமான நிலையங்களில் ஒன்றாக விளங்கும் மான்றியல் விமான நிலையத்தில் தரையிறங்கினோம். வழக்கமான கெடுபிடிகள் முடிந்து கடவுச் சீட்டில் தேதி முத்திரை பெற்று வெளியில் வந்தோம்.

    எங்களை வரவேற்க வந்திருந்த மகள், மருமகன், குட்டிப்பேரன் ஆகியோரைக் கண்டதும் பயணக் களைப்பெல்லாம் நொடியில் பறந்தோடியது. அவர்களுடன் மகிழுந்தில் இரண்டு மணி நேரம் பயணம் செய்து ஒட்டாவா(Ottawa) நகரில் உள்ள இல்லம் சென்றடைந்தோம்.

 

முனைவர் ,கோவிந்தராஜூ,

துச்சில்: ஒட்டாவா, கனடா

20 comments:

  1. பயண கட்டுரை மிகவும் அருமை. அப்பர் பெருமான் 'கண்டறியாதன கண்டார்'. இனியனோ "உண்டறியாதென உண்டார்". நானும் "சென்றறியாதென சென்றேன்".
    உங்கள் அழகுத் தமிழதனை உண்டேன்

    ReplyDelete
  2. மிகவும் அருமையான பதிவுநண்பரே ; உங்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகள்.

    சி. இராமச்சந்திரன், கருவூர்.

    ReplyDelete
  3. This is the very first time I am reading your article sir. This is the most good one I have ever read! Good Luck to you and your family sir.

    ReplyDelete
  4. அழகு தமிழ் துள்ளி விளையாடுகிறது.இனிமை.

    ReplyDelete
  5. மிகவும் அருமை. தங்கள் பயணம் இனிமையாக, அதேசமயம் உண்ட உணவின் சுவையும் கலந்து தங்களது பயண அனுபவத்தை பகிர்ந்தது மகிழ்ச்சி . இனிய மகளின் வரவேற்புடன் அவர்களது இல்லத்தை அடைந்தது எங்களையும் அழைத்துச் சென்றது போன்று இருந்தது. முனைவர் ரா. லட்சுமணசிங் கரூர்

    ReplyDelete
  6. இனியனார் பயணப் பதிவை
    படிக்கப் படிக்க
    அவர் பக்கத்திலேயே நடந்தேன்
    வானில் பறந்தேன்
    கண்டங்களைக் கடந்தேன்
    காணதன கண்டேன்
    கனடாவில் நின்றேன்
    அடுத்த பயணத்திற்கும்
    ஆவலுடன் உள்ளேன் !!!
    நன்றி ஐயா...

    ReplyDelete
  7. நகைச்சுவை கலந்த இனிய தமிழ்.. படித்தேன் சுவைத்தேன்

    ReplyDelete
  8. Very nice thatha..

    ReplyDelete
  9. வாழ்த்துக்கள்👍👍💐💐💐💐

    ReplyDelete
  10. Happy to read and nice

    ReplyDelete
  11. மிகவும் ரசித்தேன் அய்யா

    ReplyDelete
  12. Congratulations

    ReplyDelete
  13. As usual you proved grate ness. Best Wishes.வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  14. இதோ நான் மீண்டும் உங்கள் பயணத்தில் பயணிக்கப் போகிறேன்.

    ReplyDelete
  15. அருளரசு24 June 2024 at 17:56

    ஐயா வணக்கம் தங்களுடைய பயணக் கட்டுரை வழக்கம் போல நாங்களும் உங்களுடன் பயணித்தது போலவே இருந்தது அதில் என் கருத்தில் பட்ட அந்த இமிகிரேஷனில் தங்களுக்கு வாழ்த்து சொல்லாமல் வழி அனுப்பிய அந்த நிகழ்வை அப்படியே என்னுடைய நண்பர் இமிகிரேஷன் ஆபீஸ் இருக்கு அனுப்பி வைத்து விட்டேன் இனிமேல் பயனுள்ள பயணிகளுக்கு வாழ்த்து கிடைத்தால் அது உங்கள் கட்டுரையின் பயன் நன்றி

    ReplyDelete
  16. உங்கள் பயணக்கட்டுரையோடு நாங்களும் பயணித்த மாதிரி இருந்தது. மிக்க மகிழ்ச்சி.

    ReplyDelete
  17. மீண்டும் உங்களுடன் ஒரு இனிய பயணம்!

    ReplyDelete
  18. கந்தசாமி24 June 2024 at 19:41

    மாதர்ப் பிறைக்கண்ணி யானை மலையான் மகளொடும் பாடிப்
    போதொடு நீர்சுமந் தேத்திப் புகுவா ரவர்பின் புகுவேன்
    யாதுஞ் சுவடு படாமல் ஐயா றடைகின்ற போது
    காதன் மடப்பிடி யோடுங் களிறு வருவன கண்டேன்
    கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்.

    ReplyDelete
  19. வணக்கம் முனைவர் அவர்களே....
    பயணத்தொடக்கம் சுவாரஸ்யமாக இருந்தது

    அடுத்து ஒட்டாவா நிகழ்வுகளை அறிந்து கொள்ள அவா!
    - கில்லர்ஜி அபுதாபி

    ReplyDelete