நாட்டின் சுதந்திரதின விழாவை
முன்னிட்டு தொடர்புடைய நூல் எதையாவது படிக்க வேண்டும் என்ற உந்துதலால் என் இல்ல
நூலகத்தை அலசினேன். கண்ணில் பட்ட ஒருநூலை எடுத்து இரண்டு நாள்களில் படித்து
முடித்தேன். இந்த மறு வாசிப்பு சுதந்திரப் போராட்டம் குறித்த கூடுதல் புரிதலை
என்னுள் ஏற்படுத்தியது.
கோபி வைரவிழா மேனிலைப் பள்ளியில்
நான் தலைமையாசிரியராகப் பணையாற்றிய காலக்காட்டம் அது. 13.5.99 அன்று ஈரோட்டைச்
சேர்ந்த மருத்துவர் வெ.ஜீவானந்தம் அவர்களை அவருடைய ஈரோடு நலந்தா மருத்துவ மனையில்
சந்தித்தேன். டாக்டர் சத்திய சுந்தரி அவர்களின் தலைமையில் பவானி நதிநீர்
பாதுகாப்புக் கூட்டமைப்பு முன்னின்று நடத்த எண்ணியிருந்த ஒரு போராட்டம் தொடர்பாகப்
பேசினேன். பேச்சு நிறைவடைந்து விடை பெற்ற போது திப்பு விடுதலைப் போரின் முன்னோடி என்னும் தலைப்பிட்ட
ஒரு நூலை எடுத்து, அதன் முகப்புப் பக்கத்தில் முனைவர்
இனியன் கோவிந்தராஜூ அவர்களுடன் மனித நேயப் பணியில் என எழுதி
கையொப்பமிட்டுத் தந்தார்.
இல்லம் திரும்பியவுடன் அந்
நூலைப் படிக்கத் தொடங்கினேன். ஒரே வாரத்தில் படித்து முடித்தேன். இந்தியாவின்
விடுதலைப் பொன்விழா ஆண்டை முன்னிட்டு டாக்டர் ஜீவானந்தம் அவர்களே தொகுப்பாசிரியராக
இருந்து பதிப்பித்த நூல் அது.
ஆரம்பத்தில் வெள்ளையர் படையைப்
புறங்காணச் செய்த திப்புவால் தொடர்ந்து தாக்குப் பிடிக்க முடியவில்லை. இறுதியில்
தோல்வியைத் தழுவ நேர்ந்தது. தோல்விக்கான பல காரணங்களில் நம்பிக்கை வைத்த சிலரது துரோகச் செயல்களும் அடக்கம். 1799 ஆம்
ஆண்டு மே மாதம் நான்காம் நாள், போரின்
இறுதிக் கட்டத்தில், வெள்ளையரின் துப்பாக்கிக் குண்டுகள் நெஞ்சில் துளைக்க
வீர மரணம் அடைகிறான்.
இந்த நூலின் நிறைவுக் கட்டுரையை
டாக்டர் ஜீவானந்தம் அவர்கள் எழுதியுள்ளார். அக்கட்டுரையின் இறுதிப் பத்தி அதில்
அவர் தொடுத்துள்ள வினாக்கள் ஒவ்வொன்றும் ஈட்டியாக என் நெஞ்சில் பாய்கிறது. அன்று
கிழக்கிந்தியக் கம்பெனி என்ற பெயரில் புகுந்தார்கள். இன்று உலகமயமாக்கல், தாராளமயம்
என்னும் புதுப்புது பெயர்களில் நாட்டினுள் புகுந்த வண்ணம் இருக்கிறார்கள். நம்மூர்
தாமிரபரணி தண்ணீரை எடுத்து நம்மிடமே விற்கிறார்கள். விளம்பரங்களில் மயங்கி நமது நாட்டு
இளஞர்கள் பெப்சியையும் கோக்கையும் குடித்துத் திரிகிறார்கள்.
பணம் கொடுத்து ஓட்டு வாங்கும் அரசியல்வாதிகளை
நம்பிப் பயனில்லை; ஆட்சியாளர்களின் நிறமும் அவ்வப்போது மாறுகின்றன. நாட்டின்
நலனைக் கருத்தில் கொள்ளாமல் வணிக ஒப்பந்தம் என்ற பெயரில் சிவப்புக் கம்பளம்
விரித்து வெள்ளையரை வரவேற்கிறார்கள். இதனால் நமது மரபுகளும் பண்பாடுகளும்
சிதைக்கப் படுகின்றன.
டாக்டர் ஜீவானந்தம் தொடுக்கும்
வினாக்கள் இவை:
நமது சுதந்திரம் காக்கப்படுமா?
மீண்டும் ஒரு விடுதலைப் போர் தேவைப்படுமா?
சுதேசியம் வளர்க்க இன்னொரு திப்பு தேவையா?
திப்பு போன்றோர் தம் இன்னுயிர் ஈந்து பெற்ற விடுதலையைக்
காக்க மீண்டும் போராட நேருமா?
இந்த வினாக்கள் நம் நாட்டு இளைய
தலைமுறையினரின் இதயச் சுவர்களில் எதிரொலிக்க வேண்டும். இவ் வினாக்களுக்கு விடை
அளிக்க வேண்டிய பொறுப்பில் உள்ளவர்கள் அவர்கள்தாம்.
நன்னாளில் உரிய பதிவு. இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்.
ReplyDelete