இந்தியாவில் வசிக்கும் என் நண்பர் ஒருவர் என்னிடம் தொலைப்பேசியில்
தொடர்புகொண்டு “அமெரிக்காவில் உங்களுக்கு எப்படி பொழுது போகிறது?” என்று ஆவலுடன்
கேட்டார்.
மற்றவரைப் பற்றித் தெரிந்து கொள்வதில்தான் மனிதர்களுக்கு எத்தனை ஆர்வம்!
இது ஓர் அடிப்படை இயல்பூக்கம். நாம் கதைகளை விரும்பிக் கேட்பதற்கும் படிப்பதற்கும்,
ஏன், இருக்கையின் நுனியில் அமர்ந்து திரைப்படம் பார்ப்பதற்கும் கூட காரணம்
இதுதான்.
“குளிர் அதிகமாக இருப்பதால் வெளியில் செல்வதில்லை. குடியிருப்பில் உள்ள உடற்தகுதி
மேம்பாட்டு மையத்தில் கொஞ்ச நேரம், படிப்பதில் எழுதுவதில் கொஞ்ச நேரம், பகல்
உறக்கம் கொஞ்ச நேரம், இல்லத்தரசியுடன் கொஞ்சும் நேரம் கொஞ்ச நேரம்(!), இணையத்தில்
கொஞ்சம் அதிக நேரம்” என்று நண்பரிடம் சொன்னேன்.
அப்படி இணையத்தில் மூழ்கியபோது ஒரு அரிய முத்து கிடைத்தது. எதேச்சையாக
பேராசிரியர் பசுபதி அவர்களின் வலைப்பூவில் செல்ல, மெல்ல அதிலிருந்த ஓர் இணைப்பைச்
சொடுக்க, வாராது வந்த மாமணிபோல் இந்த முத்து என் கண்ணில் பட்டது. அதை எடுத்துக்
கொஞ்சம் கரந்தை ஜெயக்குமார் பாணியில் மெருகேற்றிக் கொடுக்கலாம் என முதலில்
நினைத்தேன். பல காரணங்களை முன்னிட்டு அப்படியே அதைப் பதிவிடுகிறேன்.
அப்படியே எழுபது ஆண்டுகள் பின்னோக்கிப் பயணிக்கத் தயாராகுங்கள்.
சென்னையில் நடந்த முதல் சுதந்திர தின
விழாக்களைப் பற்றி விகடன் உதவி ஆசிரியர் “கோபு” ( எஸ்.எஸ். கோபாலகிருஷ்ணன் ) 24 ஆகஸ்ட் 1947 ஆனந்த விகடன் இதழில் எழுதிய
கட்டுரை.
சுதந்திர விஜயம்
“கோபு”
அந்த வேளையில் தேனாம்பேட்டை ஆலயங்கள் எல்லாவற்றிலும்
இருந்து நாகஸ்வரம் கம்பீரமாய் எழுந்தது. ஒவ்வொரு வீட்டிலும் ரேடியோ முழக்கம்
செய்துகொண்டு இருந்தது. விடுதலை கீதம் வானைக் கிழித்துக் கொண்டு சென்றது.
இந்திய சுதந்திர விழாவைப் பார்ப்பதற்காக
சூரியனும் அந்த நிசி வேளையில் கண் விழித்துக் கொண்டு சென்னைக்கு விஜயம்
செய்துவிட்டானோ என்று அதிசயிக்கும்படி சென்னை மாநகரம் அப்போது ஜெகஜ்ஜோதியாக
விளங்கிக் கொண்டிருந்தது.
சிற்சில இடங்களில் ஜனங்கள் தங்கள்
வீட்டு அலங்காரத்தையும் தெரு அலங்காரத்தையும் மேலும் மேலும் மெருகுபடுத்திக்
கொண்டிருந்தார்கள். வேடிக்கை பார்த்துக் கொண்டே ஜார்ஜ் டவுனுக்குச் சென்றேன்.
அங்கு ஜனங்கள் கூட்டம் கூட்டமாக சமுத்திரக் கரையை நோக்கிப்
போய்க்கொண்டிருந்தார்கள். அவர்களில் ஓர் ஆசாமியை நிறுத்தி, “ எங்கே எல்லாரும் போகிறீர்கள்” என்று கேட்டேன். ‘ கோட்டையைப் பிடிக்க “ என்று சொல்லிவிட்டுச்
சிரித்துக் கொண்டே அந்த ஆசாமி போனார். “நாமுந்தான் அந்தக்
கோட்டையைப் பிடிக்கலாமே!” என்று அவரைப்
பின்தொடர்ந்தேன்.
கோட்டையில் இருந்து புறப்பட்டதும் நேராக வீடு திரும்ப எனக்கு மனம் வரவில்லை. சென்னையை இன்று அலசிப் பார்த்துவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பது என்று தீர்மானித்துக் கொண்டு பீச் ரோடில் நடந்தேன். “இரவோடு இரவாக எத்தனை கொடிகள் முளைத்திருக்கின்றன!’ என்று ஆச்சரியப்படும்படி சர்க்கார் மாளிகைகள், கட்டடங்கள் எல்லாவற்றிலும் கணக்கு வழக்கின்றி மூவர்ணக் கொடிகள் பறந்துகொண்டு இருந்தன.
சென்னையில் பிரிட்டிஷ் ஆதிக்கத்தின் பிரதான
சின்னமாக விளங்கிய செயின்ட் ஜார்ஜ் கோட்டையை அடைந்தபோதுதான் எனக்குக் கோட்டையைப்
பிடிக்கும். மர்மம் புரிந்தது. ஜனங்கள் அந்த சரித்திரப் பிரசித்தி பெற்ற
கோட்டையில் கொடியேற்ற விழாவைக் கண்டு களிக்கத்தான் அப்படிக் கூட்டம் கூட்டமாகப்
போய் இருக்கிறார்கள்.கோட்டை எல்லையில் காலை வைக்கக்கூட அஞ்சிய சென்னை வாசிகள், இன்று கோட்டையைப் பிடித்துவிட்டார்கள்.
கோட்டைக்கு வெளியேயும் உள்ளேயும் ஜனத் திரள் சூழ்ந்திருந்தது. இரவு முழுவதும்
காத்துக்கிடந்த கூட்டத்தினர் சூரியோதயத்தின்போது கோட்டை கொடி மரத்தில் மூவர்ணக்
கொடி ஜிலுஜிலு
என்று பறப்பதைப் பார்த்து மனம் மகிழ்ந்தார்கள் அவர்களிடையே ஒரு நீண்ட
பெருமூச்சும் ஏற்பட்டது. "அப்பா இப்போதுதான் மனம் நிம்மதியாயிற்று.
வெள்ளைக்காரர்கள் உண்மையிலேயேதான் நமக்குச் சுதந்திரம் வழங்கியிருக்கிறார்கள்.
அவர்கள் எண்ணத்தில் சூது வாது ஒன்றும் இல்லை" என்று திருப்தியோடு கோட்டையை
விட்டுத் திரும்பினார்கள்.
"இனி மேல் கோட்டையைக் கோட்டை விட
மாட்டோம்" என்ற உறுதியும் அவர்களுக்கு அப்போது ஏற்பட்டு இருக்க வேண்டும்.
"கட்டடங்களையே பார்த்துக்கொண்டு போகிறீர்களே!
நானும் இன்று மாறுதலோடு நிற்பதை நீங்கள் கவனிக்கவில்லையா?" என்று போட்டியிடுவதுபோல் பீச் ரோடில் தன்னந்
தனியே நின்றுகொண்டு இருந்த ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் உருவச் சிலை என் கவனத்தைக்
கவர்ந்தது. கிட்டத்தில் போய்ப் பார்த்தபோது, அந்த மன்னரின் கரங்களில் ஒன்று இந்திய தேசிய
மூவர்ணக் கொடியை அழகாகத் தாங்கிக் கொண்டு இருந்தது. இதைச் செய்தவரின் ரசிகத்
தன்மையைப் பாராட்டிவிட்டு, கலாசாலை கட்டடங்களைப் பார்க்கச் சென்றேன்.
இந்தியக் கலாசாரப் பண்புகளை இது வரை பிரிட்டிஷ்
ஆதிக்க போர்வை கொண்டு போர்த்தி மறைத்துவைத்திருந்த அந்தக் கட்டடங்கள் இதோ சுதந்திர
இந்தியாவுக்கு சேவை புரியத் தயாராகிவிட்டோம்: என்று பறைசாற்றுபவைபோல்காலைக்
கதிரவனின் செங்கிரணங்களை, மூவர்ணக் கொடியைத் தாங்கியவண்ணம், வரவேற்றுக்கொண்டு இருந்தன.
சென்னையில், திருவல்லிக்கேணியும் ஆயிரம் விளக்கும் தனி
முக்கியத்துவம் பெற்றிருக்கும் இடங்கள். ஏனெனில், முஸ்லிம்களும் ஹிந்துக்களும் அதிகமாகக்
கலந்து வாழும் இடங்கள் அவை, அங்கே சென்று முஸ்லிம் சிறுவர்கள், பெரியவர்கள் எல்லாரும் இந்திய மூவர்ணக்
கொடியைச் சட்டைகளில் குத்திக்கொண்டு வெகு உற்சாகமாகத் தெருவில் நடமாடிக்கொண்டு
இருந்ததைப் பார்த்ததும் எந்த விதமான இடையூறும் இன்றி சுதந்திர விழா சென்னையில்
நடந்தேறிவிடும் என்ற தைரியம் எனக்கு ஏற்பட்டது.
அடுத்தபடியாக மயிலாப்பூரை அடைந்தேன்.
வியாழக்கிழமை இரவிலேயே சுதந்திரம் பெரிய அதிர்ச்சியோடு மயிலாப்பூருக்கு விஜயம்
செய்துவிட்டதாகக் கேள்விப்பட்டேன். திடும் திடும் என்று அதிர்வேட்டுகள்
நிசப்தத்தைக் கலைத்துக்கொண்டு ஊரறிய அடிமை அரக்கனை விரட்டியதாகச்
சொல்லிக்கொண்டார்கள். மயிலாப்பூர்_பெரிய மனிதர்களின் பெரிய பங்களாக்களில் மூவர்ணக் கொடிகள் பெருந் தன்மையோடும்
கம்பீரத்தோடும் பறந்து காட்சி அளித்தன.
கார்ப்பரேஷன் கட்டடத்தை நெருங்கிப்
பார்த்தபோது, “ பலே! அழகுக்கு
அழகு செய்து இருக்கிறார்கள்!" என்று வியந்துகொண்டு குழுமி இருந்த ஜனத்திரளோடு
கலந்துகொண்டேன். அப்போது திடீர் என்று எழுந்த கரகோஷம் காரணமாக அண்ணாந்து
பார்த்தேன். பிரதமர் ஓமந்துர் ரெட்டியார் பக்தி சிரத்தையோடு கொடியேற்றி வைத்தார்.
மேயர் குதூகலத்தோடு குதித்துப் பேசினார்.
இப்படி சர்க்கார் மாளிகைகளிலும்
காரியாலயங்களிலும், தேசியக் கொடி பறந்ததுதான் மக்களுக்கு
உற்சாகத்தை உண்டாக்கியிருந்தது. வெற்றி வீரர்களைப்போல ஜனங்கள் சர்க்கார்
கட்டடங்களை நிமிர்ந்து பார்த்தவண்ணம் சென்றார்கள்.
சில
இடங்களில் அவர்கள் மகிழ்ச்சி அசுர உற்சாகமாகவும் மாறிவிட்டிருந்தது. கோட்டையைப்
பிடித்த ஜனங்கள் அங்கே தங்கள் மனம் போனபடி எல்லாம் நடந்துகொண்டு இருந்தார்கள்.
மந்திரிகளின் அந்தரங்க ஆபீஸ் அறைகளில் புகுந்து தஸ்தாவேஜ்களைக் கிழித்து
விளையாடிவிட்டார்கள் ஜனப் பிரதிநிதிகள். சர்க்கார் ஆட்சி நாட்டில் நிலைத்து
விட்டது, இனிமேலும்
பொதுமக்கள் கட்டுப்பாடு இல்லாமல் இப்படி எல்லாம் பழகிக்கொண்டார்களானால்
சுதந்திரத்தின் பலனை அவர்கள் அடைவதில் கட்டாயம் தாமதம் ஏற்படத்தான் செய்யும்.
மாலை இரண்டு மணியில் இருந்தே கோட்டை மைதானம்
திமிலோகப்பட்டது. நகரின் எல்லா பாகங்களில் இருந்தும் ஜனங்கள் வந்து குழுமியவண்ணம்
இருந்தார்கள். சென்னை சர்க்காரின் பிரதிநிதியாக கவர்னர் ஸர் ஆர்ச்சிபால்ட் துரை, மன்றோ உருவச் சிலையின் முன்பு தேசியக் கொடியை
ஏற்றிவைத்து வணங்கும் வைபவம் அது என்று அறிந்தேன். அப்புறம், கோட்டை மைதானம் பொங்கி வழிந்ததிலும், உற்சாகிகள் பலர் மரக் கிளைகளில்
தொத்திக்கொண்டும் மின்சார விளக்குக் கம்பங்களில் வெளவால்போல் தொங்கிக்கொண்டு
இருந்ததிலும் எனக்கு ஆச்சர்யமே இல்லை. இந்த உயர்ந்த நிலையை அடைந்ததாலோ என்னவோ இவர்களில் சிலருடைய சேஷ்டைகள் அன்று
விரும்பத் தகாதவையாகக் கூட இருந்தனவாம்.
குறிப்பிட்ட
நேரத்துக்கு கவர்னர் விஜயம் செய்துவிட்டார். ஆனால், பிரதம மந்திரி ஓமந்தூர் ரெட்டியார் அவர்கள்
வந்து சேரவில்லை. கூட்டத்தினரும் கவர்னரும் சிறிது நேரம் சுற்று முற்றும் கவலையோடு
பார்த்துக்கொண்டு இருந்தபோது, "போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு விட்டதால்
கூட்டத்தை நெருக்கிக்கொண்டு உள்ளே வரத் தாமதம் ஏற்பட்டுவிட்டது. மன்னிக்க
வேண்டும்" என்று சொல்லிக்கொண்டே பிரதம மந்திரி பாய்ந்து வந்து கவர்னர்
துரையின் கை குலுக்கினார்.
குறிப்பிட்ட நேரத்தில் விழாவை நடத்தத் தவறிய
குற்றத்துக்காக சம்பந்தப்பட்டவர்களைத் தண்டிப்பதுபோல் கவர்னர் ஏற்றிவைத்த அந்தக்
கொடி சற்று மக்கர் செய்துகொண்டுதான் மேலே சென்றது. ஜனங்களும் கிட்டத்தில்
கூடியிருந்த பிரமுகர்களும், இதை முன்கூட்டியே சரி பார்த்து
வைத்துக்கொள்ளக் கூடாதா? என்று எண்ணி பதைபதைத்துப் போனார்கள்.
பரபரப்பு அடங்குவதற்கு முன் அந்தக் கொடி கம்பத்தின் மேலே சென்று கம்பீரமாகப்
பறந்து காட்சிஅளித்தது.
சர்க்கார் மேற்படி வைபவத்துக்குச்
செய்திருந்த ஏற்பாடுகளும் சபாஷ் என்று சொல்லக்கூடியவையாக அமையவில்லை. பத்திரிகைப்
பிரதிநிதிகளுக்குச் சரியான இடம் கொடுத்திருந்தார்களானால் அவர்களாவது சரியாகப்
பார்க்க முடியாத ஜனங்களுக்கு மேற்படி வைபவத்தைப் பற்றி சாங்கோபாங்கமாக எழுதி, பளிச் பளிச் என்று போட்டோக்களையும்
பிரசுரித்திருப்பார்கள்.
கோட்டை மைதானத்தில் இருந்து புறப்பட்டபோது
நன்றாக இருட்டிவிட்டது. நகரின் தீபாலங்காரத்தைப் பார்க்கச் செளகரியமாக இருந்தது. ஜெனரல் ஆஸ்பத்திரியில் கண்ணைப்
பறிக்கும் விளக்குகளைப் போட்டு, அதைப் பிரமாண்டமானதொரு பொம்மைபோல் தோற்றம்
அளிக்கும்படி செய்திருந்தார்கள். எதிரே சென்ட்ரல் ஸ்டேஷன் ஒளிர்ந்தது. பக்கத்தில்
ரிப்பன் கட்டடம், பஞ்சவர்ணங்களை வாரி வீசிக்கொண்டு இருந்தது.
நான் மட்டும் சளைத்துவிட்டேனா என்று கேட்பதுபோல் தூரத்தில் எழும்பூர் ஸ்டேஷன்
பிரகாசித்தது.
நன்றாக இருட்டிய பிறகுதான் கொண்டாட்டம்
பிரமாதப்படத் தொடங்கியது. வாண வேடிக்கைகள், ஊர்வலங்கள் எல்லாவற்றையும் பார்த்து விட்டு
ஜனங்கள் சற்று களைப்புத் தீர காற்று வாங்க பீச்சுக்குப் போனபோது அங்கே அவர்களை
வரவேற்கப் பலவித களியாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. பல்லாயிரக் கணக்கான
மக்கள் இரவைப் பரந்த மணற் பரப்பில் கழித்துவிட்டு மறுநாள் காலையில்தான் வீடு
திரும்பினார்கள்.
சுதந்திர விழாவில் மிக உற்சாகம் காட்டியவர்கள், ஸ்திரீகளும் குழந்தைகளும்தான் என்று நான்
நிச்சயமாகச் சொல்வேன். ஸ்திரீகள் தங்கள் ஜடையை மூவர்ண புஷ்பக் கொத்துகளினால்
அலங்கரித்துக்கொண்டு இருந்த அழகையும் இடையில் மூவர்ண சேலை உடுத்தியிருந்த
விமர்சையையும் பார்க்கக் கொடுத்துத்தான் வைத்திருக்க வேண்டும். குழந்தைகள் குதூகலத்துக்கு
எல்லையே இல்லை. அவர்கள் சட்டைகளில் கணக்குவழக்கின்றி தேசியக் கொடிகளைக்
குத்திக்கொண்டும் வாய் நிறைய மிட்டாய்களைத் திணித்துக்கொண்டும் தலை, கால்
தெரியாமல் ஓடும் மோட்டார் கார்களோடும் சைக்கிள்களோடும் போட்டியிட்டுக்கொண்டும் போன
காட்சி இன்னும் என் கண் முன் தாண்டவம் ஆடுகிறது.
சென்னையில் சுதந்திர விஜய வைபவக்
கொண்டாட்டத்தைப் பார்த்து அனுபவித்தவர்கள் ஒவ்வொருவரும் "எதிர்காலத்தில்
வருஷா வருஷம் நடக்கப்போகும் இந்த சுதந்திர தின விழாவைப் பார்க்க எனக்கு இந்த இரு
கண்கள் போதாது. இதைப் போல் ஆயிரம் கோடி கண்கள் வேண்டும்" என்று பிரார்த்தனை
செய்து கொண்டு இருப்பார்கள் என்று முடிவோடு வீட்டுக்குத் திரும்பினேன்.
வாழ்க
சுதந்திரம், வாழ்க பாரத நாடு !
..........................................
முனைவர் அ. கோவிந்தராஜூ,
அமெரிக்காவிலிருந்து.
இனிமேலும் பொதுமக்கள் கட்டுப்பாடு இல்லாமல் இப்படி எல்லாம் பழகிக்கொண்டார்களானால் சுதந்திரத்தின் பலனை அவர்கள் அடைவதில் கட்டாயம் தாமதம் ஏற்படத்தான் செய்யும்.//
ReplyDeleteஇப்போதும் இது தொடர்ந்து கொண்டுதானே இருக்கு ஐயா இங்கு.
இந்த உயர்ந்த நிலையை அடைந்ததாலோ என்னவோ இவர்களில் சிலருடைய சேஷ்டைகள் அன்று விரும்பத் தகாதவையாகக் கூட இருந்தனவாம்.//
இன்று இது எல்லை மீறி பலரும் சேஷ்டைகள் செய்வதா நம்மை ஆள்பவர்களும் செய்வதாய் ஆகிவிட்டதே. பல சமயங்களில் நமக்குச் சுதந்திரம் கிடைத்தது என்பது நாம் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் யாரும் தட்டிக் கேட்க முடியாது என்பது போல் ஆகிவிட்டதே. திருட்டுத்தனமும். கொள்ளையும், ஊழலும் மலிந்து போய் அல்லவா இருக்கு. உன்மையைச் சொல்ல வேண்டுமென்றால் உலகிலேயே மிகவும் சுதந்திரமான நாடு இந்தியாதான்...!!!!!
கீதா
நம் சுதந்திரத்தைக் குறித்து முன்பே பதிவும் ஒன்று இட்டிருக்கிறோம் ஐயா..
ReplyDeleteகீதா
மிக மிக் நல்ல பகிர்வு! அப்போது எப்படி மகிழ்வுற்றிருப்பார்கள்...இப்போது இந்தியா குரங்குகள் கையில் கிடைத்த பூமாலையாய் ஆகிவிட்டதோ என்ற எண்ணமும் வராமல் இல்லை...தவறாக இருந்தால் மன்னிகக்வும் ஐயா.
ReplyDeleteகீதா
பொது ஜனத்தினை விட அதிகார வர்க்கம் தான் பெற்ற சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்துகிறது. அதனால் தான் பாரதி சொன்னான்.... படித்தவன் சூதும் வாதும் செய்தால், போவான்.. போவான்... ஐயோன்னு போவான் என்று.
ReplyDeleteமீள்பதிவுக் கட்டுரை அருமை ஐயா.
ReplyDeleteஅடிமைகளே அறிவர் சுதந்திரத்தின் சுவையை.
அந்நியனிமிருந்து விடுதலை பெற்று , காஷ்மீர் பிராமணக் குடும்ப ஆட்சிக்கு அடிமையாவோம் . எனவே சுதந்திர நாள் துக்கநாள் என்றார் பெரியார். அவர் விழைந்தது பாகிஸ்தான் மாதிரி தனிநாடாக திராவிட நாடு.
சுதந்திர தின நள்ளிரவில் ,கல்கத்தா நகரில், கங்கையாற்றின் கரையில், துண்டு விரித்துப் படுத்துக் கிடந்தார் , காந்தி மகான். அவரும் சுதந்திர நாள் துக்கநாள் என்றார். கொண்டாட்டம் கூடாது என்றார். இந்தியாவை இரண்டாக உடைத்துவிட்டார்களே என்ற துக்கம் அவருக்கு.
உடற்தகுதி மேம்பாட்டு மையம்.
ReplyDeleteGYM க்கான அற்புதமான தமிழாக்கம் ஐயா.
This comment has been removed by the author.
ReplyDeleteஅருமையான கட்டுரை
ReplyDeleteகோபு அவர்களின் கட்டுரையினைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி ஐயா
எனது பெயரினைக் குறிப்பிட்டதற்கும் தனி நன்றி ஐயா
எழுபது ஆண்டுகள் பின்னோக்கிச் சென்று அருமையான பகிர்வினைத் தந்தமைக்கு நன்றி.
ReplyDeleteI travelled to 1947 without a time machine.. 😍 wonderful article ever
ReplyDeleteவணக்கம். பின்னோக்கிப் பார்ப்பதில் ஓர் ஆனந்தம் உண்டு. அதிலும் காலம் பல கடந்து உங்கள் நினைவில் நின்ற சுதந்திர தின நிகழ்வுகளை கோபு அவர்களது கட்டுரையுடன் வெளிப்படுத்தியது சிறப்பு. தற்கால சுதந்திரம் விடுமுறை என்ற எண்ணத்துடன் நடந்து முடிகிறது. அன்றைய சுதந்திரம் ஆனந்த களிப்பாக நிகழ்ந்திருக்கிறது. மீண்டும் ஒருமுறை கட்டுரையைப் படித்து நினைவில் இருத்திக்கொள்ளவேண்டும். வாழ்க சுதந்திரம், வாழ்க பாரத நாடு !
ReplyDeleteமுனைவர் ரா.லட்சுமணசிங்
கரூர்
சும்மாவா கிடைத்தது சுதந்திரம். 70 ஆண்டுகளுக்கு முந்தைய தினத்தை இணையம் எனற டைம் மெஷின் வாயிலாக நினைவுகூற உதவியமைக்கு நன்றி.
ReplyDelete