இன்று(டிசம்பர் 1) உலக எய்ட்ஸ் தினம்.
எய்ட்ஸ் நோயை வருமுன் காக்கலாம்., வந்தபின்
பார்க்கலாம் என்பது மூடத்தனம். பத்து ஆண்டுகளுக்கு முன் நான் இயற்றிய பத்து குறட்பாக்கள் எனது கோப்பில் தேடியபோது கிடைத்தன. விழிப்புணர்வை ஏற்படுத்தும்
நோக்கில் அவற்றை உரையுடன் பதிவு செய்கிறேன்.
ஏமக்குறை நோய்(AIDS)
பலவகை நோய்கள் தொகுப்பென மாறி
உடலை அழிக்கும் உணர்.
பொருள்:பலவகை நோய்த் தொகுப்பே எய்ட்ஸ். அது உடலை
உருக்குலைத்து சாவில் கொண்டுவிடும்
ஏமக் குறைநோய்க் கிரையாகிச் சாதற்குக்
காமத் தொடர்பைக் கருது.
பொருள்: இல்லற இன்பத்தைத் தருவது கணவன் மனைவி
உறவு(Marital relationship) மட்டுமே. பிற
உறவுகள்(Extra marital relationship) எய்ட்ஸ் நோயைத் தரும்.
ஆய்வு செயப்பட்(ட) அருங்குருதி ஏற்றார்க்கு
மாய்தல் இலஏப்பி னால்.
பொருள்: சோதனை செய்யப்பட்ட இரத்தம் பெறுவதால்
எய்ட்சால் வரும்
இறப்பினைத் தவிர்க்கலாம்.
ஒருவர் பயன்படுத்தும் ஊசியை மற்றோர்
ஒருவுதல் ஒன்றே ஒழுங்கு.
பொருள்: மருந்தை உடலினுள் செலுத்த ஒருவர் பயன்படுத்திய ஊசியை மற்றவர் பயன்படுத்தக் கூடாது.
எள்ளிடும் ஏமக் குறைநோய் உடையவர்
பிள்ளைப் பெறாஅமை நன்று.
பொருள்: எய்ட்ஸ் நோயால் பாதிக்கபட்டவர்
கருவுறுதலைத் தவிர்ப்பது நன்று.
ஏமக் குறைநோய் எளிதில் பெறக்கூடும்
காம உறவைக் களை
பொருள்:பரத்தன் பரத்தையர் தொடர்பால்(prostitution) எய்ட்ஸ் வந்து
தொலைக்கும். அத் தகைய தகாத உறவு வேண்டாமே.
மணத்தல் நிகழ்வு நிறைவுறா
முன்னர்
புணர்தல் தவறே உணர்
பொருள்: திருமணத்திற்கு முன் உடற்புணர்ச்சி(pre-marital sex) அறவே கூடாது., அது தவறு.
கணவன் மனைவி கருதிடின்
கற்பைக்
கனவிலும் இல்லையாம் ஏப்பு
பொருள்: கணவனும் மனைவியும் நேர்மையாக(nuptial loyalty) கற்புடன்
வாழ்ந்தால் கனவில் கூட எய்ட்ஸ் நோய் வராது.
கொல்லுமோர் ஏமக் குறைநோய ராயினும்
ஒல்லும் வகையெல்லாம் ஓம்பு.
பொருள்: எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டோரை நல்லமுறையில்
காத்துப்
பராமரிக்க வேண்டும்., ஒதுக்கிவைத்தல் பாவம்.
முப்பாலை ஏற்று முழுதாகக் கற்றார்க்கு
எப்போதும் ஏப்பிலை காண்.
பொருள்: திருக்குறளைக் கற்று அதன்படி
வாழ்வார்க்கு எப்போதும் எய்ட்ஸ்
நோய் வராது.
அருஞ்சொற்பொருள்:
ஏமக்குறை நோய், ஏப்பு = எய்ட்ஸ் நோய்
ஒருவுக = நீக்குக
......................................................................................................................................
முனைவர் அ. கோவிந்தராஜூ, அமெரிக்காவிலிருந்து.
1.12.2017
Nice awareness
ReplyDeleteNice awareness
ReplyDeleteதங்களின் குறட்பாக்கள் அருமையான விழிப்புணர்வுப் பாக்கள் ஐயா
ReplyDeleteநன்றி
அருமையான விழிப்புணர்வுப் பதிவிற்கு நன்றி ஐயா.
ReplyDeleteஇன்றைக்கு தனிமனித ஒழுக்கம் அருகி வரும் சூழலில் "ஏப்பு" பற்றிய தங்களது குறட்பாக்கள் காலத்தின் தேவையாய் உணர்கிறேன். வாழ்த்துக்கள் அண்ணா!
ReplyDeleteமிக மிக அருமையான பாக்கள்! ஐயா! ரொம்ப அழகா சொல்லியிருக்கீங்க!
ReplyDeleteதுளசிதரன், கீதா
அருமையான விழிப்புணர்வு குறட்பாக்கள். வள்ளுவரின் உணர்வுகளை வெளிப்படுதுவதில் உங்களுக்கு நிகர் எவருமில்லை என எண்ணத்தோன்றுகிறது. இருநாட்களுக்கு முன்னர் கரூர், ஆர்த்தி கண் மருத்துவமனை, கண் மருத்துவர் டாக்டர்.ப.இரமேஷ் அவர்களிடம் குறள் விளக்கங்களை, அதன் நுட்பங்களைக் கூறி அறிவுசார் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டோம். அவர் என்னிடம் வினவியது, மனித வாழ்க்கையில் ஏற்படும் நோய் தொடர்பான கருத்துக்கள் அடங்கிய குறட்பா நெறிகளைக் கூறுங்கள் எனக் கேட்டார். வள்ளுவரின் குறள் நெறி அனைவரும் அறிவர். நவீன இனியவள்ளுவராக ஏமக்குறை நோய் குறட்பா விளக்கங்களை வழங்கியுள்ளீர்கள். உங்கள் சார்பாக அவருக்குத் தெரிவிக்கிறேன்.
ReplyDelete“ஏமக் குறைநோய் எளிதில் பெறக்கூடும்
காம உறவைக் களை”
பொருள்:பரத்தன் பரத்தையர் தொடர்பால்(prostitution) எய்ட்ஸ் வந்து
தொலைக்கும். அத்தகைய தகாத உறவு வேண்டாமே. இக்குறட்பாவில் ’பரத்தன்’ என்ற வழக்கத்தில் அரிதான சொல்லைக் குறிப்பிட்டுள்ளீர்கள். சங்க இலக்கியம் கூட பரத்தை என்ற சொல்லை மட்டுமே சுட்டிக் காட்டியுள்ளது. இன்றைய நவீன யுகத்தில் தகாத உறவிற்குப் ‘பரத்தன்’ காரணமாக உள்ளதால் தங்களது கருத்து உற்று நோக்கத்தக்கது. ஆகவே, தான் இதனை இங்கு குறிப்பிட்டுள்ளேன். சங்க இலக்கியத்தில் ‘எய்ட்ஸ்’ நோயிற்கு ‘எசகுநோய்’ என்ற சொல்லையும் பயன்படுத்தி உள்ளனர்.
முனைவர் ரா.லட்சுமணசிங்
பேராசிரியர்
தமிழாய்வுத்துறை
அரசு கலைக் கல்லூரி (தன்னாட்சி)
கரூர் - 639 005
வருடா வருடம் டிசம்பர் 1 ஆம் தேதியன்று மீண்டும் மீண்டும் பிரசுரிக்க முற்றிலும் தகுதியானது இந்த இடுகை.
ReplyDelete