Thursday, 19 July 2018

தமிழோடு விளையாடு: நூல் மதிப்புரை

   இந்த நூலாசிரியர் திரு.த.ப.சுப்பிரமணியன் அவர்கள் எழுபத்தேழு வயது இளைஞர். நான் அவரினும் பத்து வயது இளையவன். அவரும் நானும் சம காலத்தில் தமிழாசிரியர், தலைமையாசிரியர், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் எனப் பற்பல பதவிகளை ஏற்று இணைந்துப் பணியாற்றியவர்கள்.      தமிழ்ப் பற்றுக் காரணமாக மரபை மீறி வருகைப் பதிவேட்டிலும் பிற ஆவணங்களிலும் தமிழில் கையொப்பம் இட்டவர்கள்; இடுகிறவர்கள்.
 
    
நூலாசிரியர் த.ப.சுப்பிரமணியன்
சந்திக்கும் போதெல்லாம் ஆங்கிலக் கலப்பில்லாமல் அவர் அழகுத் தமிழில் பேசுவதைச் செவிமடுப்பேன். சிந்திக்கும்படியாகச் செய்திகளைச் சொல்லுவார். பிறரைச் சிந்திக்க வைப்பது என்பது தனித்திறமை. அத் திறமையின் வெளிப்பாடாக
தமிழோடு விளையாடு என்னும் நூல் உருவாகி நம் கைகளில் தவழுகிறது.

   இந்நூலுக்கு பேராசிரியர் முனைவர் இரா.கா.மாணிக்கம் அவர்கள் அளித்துள்ள அணிந்துரை நூலின் நுழை வாயிலாய் அமைந்து வாசகர்களை வரவேற்கிறது.

    தமிழில் விடுகதை இலக்கியம் என்பது ஒரு தனிப்பிரிவாக இனம் காணப்படுகிறது. இது குறித்துச் சென்னை உலகத் தமிழாராய்ச்சிக் கழகத்தின் மேனாள் இயக்குநர் டாக்டர் ச.வே.சுப்பிரமணியன் அவர்கள் தமிழில் விடுகதைகள், தமிழில் விடுகதைகள் களஞ்சியம் என்னும் நூல்களை எழுதியுள்ளார்.

     அவர் விடுகதை வடிவங்களை ஆராய்ந்து ஒன்பது என வகைப்படுத்தினார். புதிர், சொல்விளையாட்டு, மாற்றெழுத்துப் புதிர், விடுகதை வார்த்தை, எழுத்துக் கட்டு, விகடப்பா, ஓவியப்புதிர், சொற்புதிர், நொடிவினா என்பன அவை. தமிழறிஞர் த.ப.சு. படைத்துள்ள இந்நூல் சொற்புதிர் என்னும் வகைப்பாட்டில் அடங்குவதாகும்.

   சொற்புதிர்களைப் படைப்பது என்பது எல்லோராலும் இயலாது. அதற்கு மிகுந்த முயற்சியும் பயிற்சியும் வேண்டும். மேலும் தமிழ்ச் சொற்களஞ்சியத்தில் திறனுடையவராய் இருத்தல் மிகவும் வேண்டற்பாலது. இத் திறமை இயற்கையாக வாய்க்கப் பெற்ற நூலாசிரியர் உண்மையில் தமிழோடு இயல்பாக விளையாடுகிறார். நூலிலிருந்து பதச் சோறாக சிலவற்றைப் பார்க்கலாம்.

முதல் எழுத்தே கவியாகும்
முதல் அழிந்தால்
விண்ணுலகின் பேரழகி
கண்டிடலாம் மையத்தை நீக்கி விட்டால்
அரைக் கூறாம்
முறுக்கிடு மீசையை
முண்டாசு கட்டிக்கொள்

முதல் ஐந்து வரிகளைக் கூர்ந்து நோக்கினால் பாரதி என்னும் சொல்லை விடையாகக் கண்டுபிடித்து விடலாம். கடைசி இரண்டு வரிகளில் விடையைச் சரி பார்ப்பதற்கான உத்தியையும் தருகின்றார். இந்த உத்தி த.ப.சு. அவர்களின் தனிப்பாணி எனச் சொல்லத் தக்கதாய் அமைந்துள்ளது.
 
முதலில் நிற்பது
கொடு என்னும் பொருளுடையது
முதல் போனால் மானாகும்
நடு ஓடின் வாலி மனைவி
குளத்தில் உள்ளது மலர்
கூர்ந்து நோக்கிப் பறி.
   தமிழில் ஆழங்கால் பட்ட வாசகர்கள் இப் புதிரைப் படித்த மாத்திரத்தில் தாமரை என விடை சொல்லிவிடுவார்கள். குளத்தில் உள்ளது மலர் என்னும் வரியால் விடையை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

 ஊர் தொடர்பான புதிர்களை அமைப்பதில் இந் நூலாசிரியர் வல்லவராய் உள்ளார். ஊர் தொடர்பாக இருபது புதிர்களை ஆக்கியுள்ளார்.

முதலிரண்டும் ஐந்தும் கூடின் தகுதி
முதலோடு மூன்றும் நான்கைந்தும் இணைந்தால் பொன்,
ஆறாம் எழுத்து கவிதை
நான்கும் ஈறும் சேர்ந்தால் பல்லால் இறுக்குதல்
முதலும் முடிவும் கூடின் நீளமான மரத்துண்டு
கடையிரண்டும் கூட்டும் ஆயர் குடியிருப்பு
அலையின் பாட்டு அழகாய்க் கேட்டுரை.
   ஒரு தாளை எடுத்து எழுதிப் பார்த்து முயன்றால் இப் புதிரில் உள்ள ஊரை எளிதில் கண்டுபிடித்துவிடலாம். தரங்கம்பாடி என்பது விடை. புதிரின் கடைசி வரியில் பொடி வைத்திருப்பதைப் பொறுமையாகப் படித்துப்பார்த்து அறிந்து மகிழலாம்.

    இந் நூலாசிரியர் சிறந்த மரபுக் கவிஞர் என அறியப்பட்டாலும், புதுக்கவிதை புனைவதிலும், ஹைக்கூ கவிதை எழுதுவதிலும் வல்லவர். அதனால்தான் தாம் ஆக்கிய சொற்புதிரை புதுக்கவிதை வடிவில் புனைந்துள்ளார்.

    நூலின் பின்னிணைப்பாக விடைகள் கொடுக்கப்பட்டுள்ளன. விடை மட்டுமன்று விடைக்கான விளக்கக் குறிப்பும் அமைந்திருப்பது நூலின் தனிச் சிறப்பாகும்.

  இந்த நூலை மிகுந்த பொருட்செலவில் நூலாசிரியரே வெளியிட்டுள்ளார். 120 பக்கங்கள் கொண்ட நூலுக்கு அறுபது ரூபாய் என விலையிட்டுள்ளார். இலாப நோக்கில்லாமல் அடக்க விலையில் அளிக்கிறார். உண்மையில் வியப்பாக உள்ளது.

     இனி வாசகர்கள் நூலின் உள்ளே நுழைந்து விளையாடலாம். சோம்பிக் கிடக்கும் மூளையைச் சுறுசுறுப்பாக்கலாம். இந்த நூலை பதின்ம வயது குழந்தைகள் படித்து விடைகளைக் காண முயற்சி செய்தால் அவர்களுடைய மூளையின் செயல்திறன் அதிகரிக்கும். தாய் மொழியான தமிழில் படிக்கவும் படைக்கவும் ஆர்வம் உண்டாகும். எனவே இந்த நூல் தமிழ் நாட்டில் உள்ள அனைத்து நூலகங்களிலும் இடம்பெற வேண்டும்.

   யாரும் தொடாத துறையைத் தொட்டு, அதில் இமயம் தொட்டுள்ள திரு.த.ப.சு. அவர்களை வணங்கி மகிழ்கிறேன்.
..........................................................................................................................................................
நூல் விவரம்

நூலின் பெயர்: தமிழோடு விளையாடு-      சொல்புதிர் விளையாட்டு

ஆசிரியர்     : த.ப.சுப்பிரமணியன் (9842343813)

வெளியீடு:    நளாயினி பதிப்பகம், 11,காளிதாசு குடியிருப்பு,               தவுட்டுப்பாளையம், அந்தியூர், ஈரோடு மாவட்டம்- 638501

பக்கங்கள்     : 120  விலை ரூ.60
                                                                                                                          

  

6 comments:

  1. நன்றி. நன்று

    ReplyDelete
  2. விரைவில் வாங்கி கண்டுபிடிக்க வேண்டும்... புதிர் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும்... நன்றி ஐயா....

    ReplyDelete
  3. மனதில் பதிய வைக்க இது நல்ல உத்தி. அருமையான நூலை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  4. நல்ல நூல்...! நல்ல மதிப்புரை...! நீங்களே குறிப்பிட்டதைப் போல யாரும் தொடாத துறையைத் தொட்டு அதில் இமயம் தொட்டுள்ளதை உணர முடிகிறது. "வேண்டற்பாலது", "ஆழங்கால்" போன்ற தங்களது சொல்லாக்கம் தங்களின் ஆழ்ந்த தமிழ்ப் புலமையைக் காட்டுகிறது. எனக்கு ஓர் ஐந்து பிரதிகள் (பிரதிகள் சரியான தமிழ்ச் சொல்லா...?) தேவை.

    ReplyDelete
  5. த.ப.சுப்பிரமணியத்தின் தமிழோடு விளையாடு நூல் பற்றிய அறிமுகம் சிறப்பு. விடுகதைகள் பற்றி தமிழில் எழுதப்பட்ட இந்த நூல் எல்லோருக்கும் பிடிக்கும்...

    ReplyDelete
  6. வணக்கம். நல்ல பதிவு. ’’தமிழோடு விளையாடு’’. இன்றைய விஞ்ஞான உலகத்தில் கணக்குப் போட கால்குலேட்டர் தேடும் நிலையில் இளைஞர்கள் வடிவமைக்கப்பட்டுள்ளனர். அறிவைத் தேட கூகுளை நாடுகின்றனர். தமிழ் அறிந்தவர்களுக்குத் தமிழைத் தவிற வேறு என்ன தெரியும் என நினைக்கின்றனர். நான்கு திருக்குறளைத் தெரிந்து வைத்துக்கொண்டு தமிழை முழுமையாக அறிந்தது போல், இவ்வளவு தான் தமிழ் என குட்டைத் தவளை போல் பிதற்றுகின்றனர். இவர்களெல்லாம் அய்யா அவர்களின் ”தமிழோடு விளையாடு” நூலைப் பார்க்க வேண்டும், அப்புறம் படிக்க வேண்டும், அப்புறம் தமிழின் சிறப்பை உணர வேண்டும். கடிகை முத்துப் புலவரைப்பற்றி நான் ஏற்கனவே ஒரு பதிவிற்குப் பதிலிட்டுள்ளேன். இருப்பினும் மறுமுறைப் பதிவிடுகிறேன். அவர் இறக்கும் தருவாயில் அவரது மகள் அவருக்கு பாலைத் துணியில் தோய்த்து வாயில் பிழிகின்றார், அதைச் சுவைத்த மாத்திரத்தில் ’தூ’ என துப்புகின்றார். அதற்கு மகள் “ஏன் அப்பா, பால் கசக்கின்றதா?” என்கிறார். இறப்பின் விளிம்பில் கூட நகைச்சுவையுடன் பதில் தருகிறார். “பாலும் கசக்கவில்லை, நீ பால் பிழிந்த துணியும் கசக்கவில்லை” என்கிறார். இன்னொன்று, சொற்புதிருக்காக, “பத்துரதன் புத்திரனின் மித்திரனின் சத்துருவின் பத்தினியின் காலை எடுத்துத் தேய்” என்பது புதிர், புதிருக்கான விடை, காலில் நெருஞ்சிமுள் தைத்துவிட்டால் கடுமையான வலி ஏற்படும். அவ்வலியைப் போக்க தரையில் காலைத் தேய்க்க வேண்டும், வலி போய்விடும். இதைத் தமிழறிஞ்ர்கள் எக்காலத்தும் மறக்காமல் இருப்பதற்காகவும், அறிவு நிலையைத் தூண்டுவதற்காகவும் இத்தகைய சிலபுதிர்களை உருவாக்கியுள்ளனர் எனலாம். இதில் பத்துரதன் - தசரதன், புத்திரன் - இராமன், மித்திரன் - சுக்ரீவன், சத்துரு - பகைவனான வாலி, பத்தினி - வாலியின் மனைவியான தாரை, விடை: தாரை என்பதில் உள்ள துணைக் காலை நீக்க ‘தரை’ என பதில் கிடைக்கும். அய்யா, த.ப.சுப்பிரமணியம் அவர்களின் ”தமிழோடு விளையாடு” நூலைப் படுக்கும் ஆர்வத்தை தூண்டிவிடுள்ளீர்கள். நன்றி.
    புலனம் வாயிலாக தினம் ஒரு புத்தக அறிமுகம் பற்றி அறிய மு.வீரகடம்ப கோபு, திண்டுக்கல், அலைபேசி எண்: 8489277070
    1-10-2018 அறிமுக நூல்: இட ஒதுக்கீட்டு உரிமை, விலை:ரூ:10/= தொகுப்பு ஆசிரியர்: ஆதி அசுரன், காட்டாறு பதிப்பகம்.
    முனைவர் ரா. லட்சுமணசிங்
    பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி(தன்னாட்சி)
    கரூர் - 639 005

    ReplyDelete