Sunday, 14 December 2025

வேர்களைக் கொண்டாடிய விழுதுகள்

    என் வாழ்க்கையில் கால் நூற்றாண்டு காலம் பயனுள்ள வகையில் கழிந்தது கோபி வைரவிழா மேனிலைப்பள்ளியில். முதுகலைத் தமிழாசிரியராக, நாட்டு நலப்பணித்திட்ட அலுவலராக, உதவித் தலைமையாசிரியராக, தலைமையாசிரியராக அப் பள்ளியில் பணீயாற்றியபோது என் பாசவலைக்குள் சிக்கிய மாணாக்கச் செல்வங்கள் பல்லாயிரம் பேர்கள். அவர்களுள் முப்பது நாற்பது பேர்கள் நேற்று(13.12.2025) என்னைக் கண்டு வணங்கி வாழ்த்து பெற்றார்கள். பள்ளி நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்கள்  எனக்கு இந்த அரிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது கோபி திருக்குறள் பேரவை.

    கோபி திருக்குறள் பேரவையின் 52-ஆவது ஆண்டு விழாவின் ஒரு பகுதியாக தவத்திரு குன்றக்குடி பெரிய அடிகளார், தவத்திரு பேரூர் சாந்தலிங்க இராமசாமி அடிகளார் ஆகியோரின் நூற்றாண்டுவிழா நினைவுப் பேருரையை பேரூர் தவத்திரு சாந்தலிங்க மருதாச்சல அடிகளாரும், ஈரோடு ஸ்டாலின் குணசேகரன் அவர்களும் நிகழ்த்தினார்கள். கேட்டாரைப் பிணிக்கும் வகையிலே இருபெரும் உரைகளும் அமைந்தன.

    தொடர்ந்து சாதனையாளர்க்கு விருதுகள் வழங்கும் விழாவும், நூல்கள் வெளியீட்டு விழாவும் சிறப்பாக நடைபெற்றது. பின்னர் பேராசிரியர் இரா.கா.மாணிக்கம் அவர்களுக்கான நினைவு மலரை வெளியிட்டு உரையும் நிகழ்த்தினார் ஈரோடு மாவட்ட ஆட்சியர் திரு.ச.கந்தசாமி அவர்கள். அவரே போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கிச் சிறப்பித்தார்.


   முன்னதாக , என்னை முனைவர் பேற்றுக்கு ஆளாக்கி மகிழ்ந்த என் ஆசான் பேராசிரியர் இரா.கா. மாணிக்கனார் குறித்து ஓர் உரையாற்றுவதற்கும் வாய்ப்புக் கிடைத்ததைப் பெரும் பேறாக எண்ணி மகிழ்கிறேன்.

        நான் கோபியில் பணீயாற்றிய காலத்தில் கோபி திருக்குறள் பேரவையில் இணைந்து செயல்பட்டதைக் கருத்தில் கொண்டு, இந்த விழாவில்  அடியேனுக்குத்திருவள்ளுவர் விருது’ வழங்கியபோது அதை நன்றியுடன் பெற்றுக்கொண்டேன். இதே விழாவில் இந்த எளியவன் எழுதிய திருக்குறள் உரைவெண்பா நூல் வெளியான நிகழ்வும் என் வாழ்வில் என்றும் நினைக்கத்தக்க நிகழ்வாகும். இவற்றுக்கு ஏற்பாடு செய்தவர்கள் என்னிடம் படித்த மாணவர்களே. அவர்களுக்கெல்லாம் எப்படி நன்றி சொல்வேன்!

    கோபி முத்துமகால் அரங்கம் மிகப்பெரியது. அதில் கூட்டம் நிரம்பி வழிந்ததைக் கண்டபோது பெரிதும் வியப்படைந்தேன்.

    இந்த விழாவின் வெற்றிக்குப் பாடுபட்டவர்கள் பலராக இருந்தாலும் இருவர் குறிப்பிடத் தகுந்தவர்கள். ஒருவர் பேராசிரியர் அரங்கசாமி அவர்களின் இளையமகன் அர.அருளரசு. மற்றவர் திருக்குறள் பேரவையின் தலைவர் பேராசிரியர் நீ.வ.கருப்புசாமி. கடந்த இரு மாதங்களில் இவர்கள் நன்கு திட்டமிட்டுச் செயல்பட்ட பாங்கினை நான் அறிவேன்.

   விழா முடிந்ததும் மிகுந்த மகிழ்ச்சியுடனும் நெகிழ்ச்சியுடனும் அனைவரிடமும் விடைபெற்றோம் நானும் என் துணவியாரும்.

முனைவர் அ.கோவிந்தராஜூ, கரூர்.

    

4 comments:

  1. Dr S T GUNASEKHAR14 December 2025 at 12:48

    Glad to read your written form of your thoughts , rewound sweet memories and the time that you have spent with your students . What else a great teacher experts from the society !

    ReplyDelete
  2. Very nice Sir. Yesterday I had an golden opportunity to meet you in person after 2 decades sir. You gave me valuable points in our discussion sir. I thank God to make this happen.

    ReplyDelete
  3. தி.முருகையன்14 December 2025 at 14:09

    ஐயா உங்கள் எண்ண ஓட்டத்தின் எழுத்து வடிவத்தைப் படித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன் ,
    உங்களைப் போன்ற வேர்கள் தாங்கி நிற்பதால் தான் விழுதுகளாகிய நாங்கள் வளர்ச்சி பெறுகிறோம்.

    ReplyDelete
  4. சிறப்புங்ஐ ஐயா! வாழ்த்துகள்!

    ReplyDelete