சென்றமாதம் சென்னை சென்றிருந்தபோது
என் சகலை வீட்டில் பவன்ஸ் ஜேர்னல் ஆங்கில இதழில் இருந்த அட்டைப் படத்தைப் பார்த்து
வியந்தேன். இன்றும் நோய் நொடியின்றி வாழ்ந்து கொண்டிருக்கும் 107 வயது பெண்மணியின்
படம்தான் அது.
திம்மக்கா: பத்மஸ்ரீ விருதாளர் |
உள்ளேயிருந்த அவர் பற்றிய கட்டுரை
எனக்கு மேலும் வியப்பூட்டியது.
கர்நாடக மாநிலம் தும்கூர்
மாவட்டத்தில் குபி என்னும் சிற்றூரில் 1912 ஆம் வருடம் ஜனவரி முதலாம் நாள் ஏழைப் பெற்றோருக்கு எழில்சேர் மகளாகப்
பிறந்தார். வளர்ந்தார்; மழைக்குக் கூட பள்ளிக்கூடத்துக் கூரையின்கீழ்
ஒதுங்கியதில்லை.ஆடு மாடு மேய்த்தார்; உரிய பருவத்தில் திருமணம் நடந்தது; மகப்பேறு
வாய்க்கவில்லை எனினும் மனம் சோர்ந்துவிடவில்லை. மரக்கன்றுகளை குழந்தைகளாக எண்ணி
வளர்க்க முடிவு செய்தனர் கணவரும் மனைவியும். இப்படித் தொடங்கி அவர்கள் வாழும்
பகுதியில் சாலையோரங்களில், ஏரிக்கரைகளில் நூற்றுக் கணக்கில் மரம் வளர்த்தார்கள். அவர்களைப்
பொருத்தவரை மரக்கன்று நடாத நாள் மகிழ்ச்ச்சியற்ற நாள்.
அவர்கள் நட்ட ஒவ்வொரு ஆலமரத்தின்
கீழும் இன்று ஆயிரம் பேர்கள் அமரலாம்! கணவர் இறந்த பின்னரும் அம்மையார் மரம்
வளர்க்கும் பணியைத் தொடர்ந்தார்; தொண்டர்களின் உதவியுடன் தொடர்கிறார். ஒரு
பனையோலைக் குடிசையில் மிக எளிமையாக வாழ்கிறார். கர்நாடக அரசு மாதந்தோறும் வழங்கும்
ரூபாய் ஐந்நூறுதான் அவருக்கு வாழ்வாதாரம்!
இந்த ஆண்டு ‘பத்மஸ்ரீ’ விருதினை அவருக்களித்து நாடு பெருமை
தேடிக்கொண்டது. இன்று உலகமே அவரைக் கொண்டாடுகிறது. திம்மக்கா என்னும் ஒற்றைச்
சொல்லைத் தந்து கூகுளில் தேடினால் ஓராயிரம் படங்களும் செய்திகளும் வந்து
குவிகின்றன. தோன்றின் புகழோடு தோன்றுக என்னும் குறளுக்குச் சான்றாகத் திகழ்கிறார்.
மரம் நட்டு விழிப்புணர்வை
ஏற்படுத்திய கென்யா நாட்டு வாங்கரி மாத்தாய் என்ற பெண்மணி நோபல் பரிசு
வழங்கப்பெற்றார். நம் நாட்டு திம்மக்காவுக்கும் அத்தகைய நோபல் பரிசு வழங்கப்பட
வேண்டும் என்பது என் ஆசை.
சென்ற நூற்றாண்டின் இடைப்பகுதியில்
இவர் ஏற்படுத்திய மரம் நடும் ஆர்வம் இன்று பலரையும் தொற்றிக்கொண்டது.
ஆயிரத்தித் தொள்ளாயிரத்தி
எண்பதுகளில் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் என்ற முறையில் மாணவர்களை அழைத்துச்
சென்று கொடைக்கானல் பெருமாள்மலையில் முகாமிட்டு ஆயிரக்கணக்கில் மரக்கன்றுகளை
நட்டோம்.
நான் முதல்வராகப் பணியாற்றிய
டி.என்.பி.எல் பள்ளியில் பல்மரப் பூங்காவை (Arboretum) உருவாக்கினோம்.
நிசப்தம் அறக்கட்டளையினர் ஈரோடு
மாவட்டம் கோட்டுப்புள்ளாம்பாளையத்தில் புறம்போக்கு நிலத்தில் ஓர் அடர்வனத்தை உருவாக்கிச் சாதனை படைத்துள்ளார்கள். இருபத்தைந்து செண்ட் நிலத்தில் 1500 பலவகை
மரக்கன்றுகளை நட்டு வளர்க்கிறார்கள். சென்றமாதம் அவ் வனத்தின் ஓராண்டு நிறைவு விழாவையும் கொண்டாடினார்கள்.
கோட்டுப்புள்ளாம்பாளையம் அடர்வனம் |
சேந்தங்குடி ‘மரம் தங்கசாமி’
என்பவர்தான் முதல்முதலில் மரக்கன்றுகளைத் திருமணத் தாம்பூலமாக வழங்குவதை
அறிமுகப்படுத்தினார். இது பரவலாகி நடைபெற்று வரும் நிலையில் இப்போது
விதைப்பந்துகளைத் திருமணத் தாம்பூலமகத் தரும் வழக்கம் நடைமுறைக்கு வந்துள்ளது.
என் சம்பந்தியை நேற்றுச்
சந்தித்தபோது அவர் ஒரு திருமணத்தில் பெற்றுவந்த விதைப்பந்துகளைத் தந்தார்.
மணமக்களின் படம், நம்மாழ்வார் படம் மற்றும் விதைப்பந்து குறித்த விவரம் அழகுத்
தமிழில் அச்சிடப்பட்ட அட்டைப் பெட்டியில் வைத்துக் கொடுத்துள்ளார்கள்.
சந்தனம், தேக்கு, அத்தி, வேம்பு
போன்ற நாட்டுமர விதைகளை செம்மண்ணின் நடுவில் வைத்து நெல்லிக்காய் அளவில் உருண்டைகளாக உருட்டிக் கொளுத்தும் வெயிலில் காயவைத்து
எடுக்கப்படுவதே விதைப்பந்துகளாகும்.
இவற்றை ஆற்றங்கரைகளில், மலைச்
சரிவுகளில், புறம்போக்கு நிலங்களில், சாலை ஓரங்களில் வீசி எறிய வேண்டும்.
அவ்வளவுதான் நம் வேலை. அவை அப்படியே கிடந்து மழை பெய்யும்போது முளைத்துச் செடியாகி
மரமாகின்றன.
சரி இந்த விதைப்பந்துகள் எங்கே
கிடைக்கும் என்றுதானே கேட்கிறீர்கள்?
www.seedballs.in என்னும் இணைய
தளத்தில் அனைத்து விவரங்களும் கிடைக்கின்றன. 9500914545 என்னும் தொலைபேசி
எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
நல்ல பதிவு.பாராட்டுக்கள்.
ReplyDeleteVaazthukkal
ReplyDeleteWow. Super.Role Model to all.
ReplyDeleteஅருமையான தகவலுக்கு நன்றி ஐயா...
ReplyDeleteGood write up,Sir. Timely too !
ReplyDeleteகாலத்திற்கு தகுந்த பதிவு ஐயா
ReplyDeleteஉரக்கச் சொல்லும் நல்ல சிந்தனை. “மரம் நடுவோம் மழை பெறுவோம்”. ”மரப்பயிறும் பணப்பயிரே” என்றெல்லாம் நம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியுள்ளது. திம்மக்கா, மரம் தங்கச்சாமி போன்று இன்னும் பலர் இயற்கையைப் பாதுகாக்க பகீரத முயற்சி மேற்கொண்டுள்ளனர். அவர்களுக்கு என்ன விருது வழங்கினாலும் மகிழ்ச்சியே. படிப்பறிவு இல்லாத பாமரருக்கு (பாமரன் என்று கூற விரும்பவில்லை) இருக்கும் அறிவு கூட கற்றவர் மத்தியில் இல்லை என்பது வேதனையின் உச்சம். பணத்தைச் சம்பாதித்து விடலாம். உண்ணும் உணவைச் சம்பாதிக்க நிலம், நீர், காற்று, நெருப்பு மற்றும் சூரியனின் ஒளி (ஆகாயம்) என அனைத்தும் ஒத்துழைக்க வேண்டும். ஒரு நாள் நீரின்றி வாழ்ந்தால் நீரின் அருமை புரியும். ஒரு நாள் மூன்று வேளை வயிற்றுக்கு உணவில்லை என்றால் உணவின் தேவை புரியும். சில நிமிடங்கள் நல்ல பிராணவாயு இல்லை என்றால் காற்றின் அருமை புரியும். இப்படி உணவுச்சங்கிலியின் இணைப்பு இவ்வாறிருக்க, இத்தனையையும் ஒருங்கிணைக்கும் மனிதவாழ்க்கைக்குப் பயனுள்ள தா-வரமாம் மரத்தை நடுவதில் என்ன சிக்கல் இருக்கப் போகிறது. பாரத ஸ்டேட் வங்கியின் 64ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு விழாவின் இறுதியில் வந்திருந்த அனைவருக்கும் மரக்கன்றுகளை வழங்கினார் வங்கி மேலாளர் திருமதி. அறிவுமதி. இப்படி பலரும் ஆர்வமுடன் மரம் நடும் பணியைச் செய்வதன் நோக்கம் எதிர்காலத்தில் இந்தியா - ”இந்தியப் பாலைவனம்” என வரைபடத்தில் இடம் பெறக்கூடாது என்பதற்காகத்தான். அய்யா அவர்கள் அருமையான பதிவாக திம்மக்கா பற்றியும் அவரின் சேவை பற்றியும் புரிய வைத்துள்ளார். முன்றால் முடியாதது எதுவும் இல்லை. இன்னொரு தங்கச்சாமியாகவோ, திம்மக்காவாகவோ நாம் உருவெடுக்க இயலாது. ஆனால் சில மரங்களை நடுவதும், பராமரிப்பதும் செய்யலாம். வாருங்கள் மரம் நடுவோம், மழை பெறுவோம், மக்களைக் காப்போம்.
ReplyDeleteDr.R.LAKSHMANASINGH, PROFESSOR
GOVERNMENT ARTS COLLEGE (Autonomous)
KARUR -639005
திம்மக்கா பற்றி அறிந்திருந்தாலும் உங்கள் பதிவு அருமை. அவர் ஜனாதிபதியிடம் பத்மஸ்ரீ வாங்கியதைக் கூட யுட்யூபில் பார்த்தேன். மனம் நெகிழ்ந்தது
ReplyDeleteகீதா
மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்
ReplyDeleteதாங்கள் டி என் பி எல் பள்ளியில் மரம் நடுவிழா நடத்தியதை பார்த்தவன் நினைவுகள் இன்றும் பசுமையே
அருமை.. அவரவர் பங்குக்கு ஒவ்வொரு வரும் ஏதாவது செய்யணும்.
ReplyDeleteகடந்த ஆண்டு எங்கள் ஊரில் 100 மரக் கன்றுகள் நட்டோம்.. கொரோனவின் காரணத்தாலும், அமெரிக்கா செல்ல வேண்டிய சூழ் நிலை.. முறையாக பராமரிக்க காப்பாற்ற முடியவில்லை.
ஊரில் உள்ளவர்களை குறை கூற விரும்பவில்லை.. மீண்டும் நானும் என் துணைவியாரும் ஊருக்கு செல்கிறோம்.. மியாவாக்கி அடர்வனம் 10 சென்ட் இடத்தில் ஒரு பரி சோதனை அடிப்படையில் செய்ய இருக்கிறோம்
தங்களது ஆசை நிறைவேறி திம்மக்கா அம்மா நோபல் பரிசு பெற வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்று ஐயா. தாங்கள் விவேகானந்தா பள்ளியில் முதல்வராகப் பணியாற்றியபோது பள்ளி மைதானத்தில் நாம் மரக்கன்று நட்ட நினைவு என் மனதில் இன்றும் பசுமையாய்...
ReplyDelete