Thursday 18 July 2019

ஆங்கில நாவலாசிரியர் ஆர்.கே. நாராயண்


     2006 ஆம் ஆண்டு ஆர்.கே.நாராயண் அவர்களின் பிறந்த நூற்றாண்டாக நாடெங்கும் கொண்டாடப்பட்டது. அப்போது நான் புகழூர் டி.என்.பி.எல் பள்ளியில் முதல்வராகப் பணியாற்றினேன். அந்த ஆண்டில் அப் பள்ளியில் தொடங்கப்பெற்ற ஆங்கில இலக்கிய மன்றத்திற்கு “ஆர்.கே.நாராயண் ஆங்கில இலக்கிய மன்றம்என்று பெயர் சூட்டினேன். ஆங்கிலக் கட்டுரை எழுதும் போட்டியில் வென்றவர்களுக்கு அவர் எழுதிய நாவல்களைப் பரிசாக வழங்கினேன். ஆர்.கே.நாராயண் குறித்து அப்போது தொடங்கிய எனது தேடல் இன்றுவரை நின்றபாடில்லை.

    சென்றவாரம் என் நண்பர் சந்துரு வீட்டுத் திருமணத்தையொட்டி மைசூரு சென்றேன்.  மைசூரு நகரில் இருக்கும் ஆர்.கே.நாராயண் வீட்டைப் பார்க்க எண்ணியிருந்த திட்டம் அப்போதுதான் கைகூடியது.

    குஞ்சப்பா என குடும்பத்தாரால் அழைக்கப்பெற்ற இவரது இயற்பெயர் இராசிபுரம் கிருஷ்ணசாமி ஐயர் நாராயணசாமி என்பதாகும். தன்னுடைய நண்பரும் எழுத்தாளருமான இங்கிலாந்தைச் சேர்ந்த கிரஹாம் கிரீன் என்பவரின் அறிவுறுத்தலின்படி நாரயணசாமி என்பதைச் சுருக்கி ஆங்கிலேயர் உச்சரிக்க வசதியாக நாராயண் என மாற்றிக்கொண்டார்.

     சேலம் அருகிலுள்ள இராசிபுரம்தான் இவரது பூர்வீகம் என்றாலும், தந்தையின் பணி மாறுதல் காரணமாக பல்வேறு ஊர்களில் வசிக்க நேர்ந்தது. இவர் பிறந்ததும் இறந்ததும் சென்னையில்; நீண்டகாலம் வாழ்ந்தது மைசூரில்.

     சென்னையில் லுத்தரன் மிஷன் பள்ளி, கிறித்துவ கல்லூரி உயர்நிலைப்பள்ளி இரண்டிலும் பள்ளிப்படிப்பை முடித்ததும் மைசூர் சென்று மகாராஜா கல்லூரியில் பி.ஏ படிப்பை முடித்தார். அப்போது இவரது தந்தையார் மகாராஜா கல்லூரி உயர்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியராகப் பணியாற்றிக்கொண்டிருந்தார்.

   பி.ஏ. படிப்பின்போது ஒரு கோடை விடுமுறையில் கோவையில் வசித்த தன் மாமா வீட்டிற்குச் சென்றபோது பக்கத்து வீட்டு இளம்பெண்ணைக் கண்டு, காதல் கொண்டு, “மணந்தால் மகாதேவி இல்லையேல் மரணதேவி’ என்ற பாணியில் தானே ஒரு காதல் வலையை விரித்து அதில் விழுந்தார். காதல் பித்து தலைக்கேற ஒருநாள் அப்பெண்ணின் அப்பாவிடம், “உங்கள் பெண் ராஜம் மட்டுமே என் மனத்தில் உள்ளாள்; அவளைத்தான் மணப்பேன்” என்று கூறவும் இருதரப்பிலும் எதிர்ப்பு எரிதழலாய் எழுந்தது. எனினும் காதலர் இருவரும் எதிர்நீச்சல் போட்டுத் திருமணம் செய்துகொண்டனர். இனிய இல்லறத்தின் பயனாய் ஒரு பெண்குழந்தை பிறந்தது. ஹேமாவதி எனப் பெயரிட்டனர். அது ஓரு சிறந்த இராகத்தின் பெயராகும்.
ஆர்.கே.நாராயண்
     காதலில் வெற்றியடைந்த நாராயண் வாழ்வில் விதி விளையாடியது. ஹேமாவதிக்கு மூன்று வயது நிரம்பியபோது காய்ச்சலில் விழுந்த காதல் மனைவி இராஜம் இயற்கை எய்தினார். நாராயண் நிலைகுலைந்து போனார். இருப்பினும் மகளுக்காக உயிர்வாழ முடிவெடுத்தார். பலர் வற்புறுத்தியும் மறுமணம் செய்துகொள்ளாமல் ஆசை மனைவியுடன் வாழ்ந்த அந்த ஐந்தாண்டுகளை அசைபோட்டபடி எஞ்சிய  காலமெல்லாம் வாழ்வாங்கு வாழ்ந்தார்.

      முழுநேர எழுத்தாளராக வாழத் தலைப்பட்டார். வறுமையில் வாடினார். ஆனந்த விகடனின் ஆங்கிலப் பதிப்பான Merry Magazine என்னும் இதழில் சிலகாலம் பணியாற்றினார். சந்தாதாரர் இன்மையால் அவ்விதழ் தொடர்ந்து வெளியாகவில்லை. எனினும் மனந்தளராமல் எழுதினார்.

   Swami and friends’ என்னும் முதல் நாவலை எழுதி ஒரு நண்பர் மூலமாக இங்கிலாந்துக்கு அனுப்பினார். முதலில் எந்தப் பதிப்பாளரும் ஏற்றுக்கொள்ளவில்லை. கடைசியில் மேலே குறிப்பிடப்பெற்ற கிரஹாம் கிரீன் என்பவரின் முயற்சியால் அந்த நாவல் அச்சுவாகனம் ஏறியது. அதிக எண்ணிக்கையில் அந்நூல் விற்பனையாயிற்று. தொடர்ந்து பலநாவல்களை எழுதினார். சில நாவலகள் அமெரிக்காவில் அச்சிடப்பெற்றன. பல நாவல்கள் இங்கிலாந்தில் அச்சிடப்பெற்றன.

    நூல்கள் எழுதி கணிசமான காசு பார்த்தவர்கள் எனக்குத் தெரிந்த அளவில் இருவர். ஒருவர் டாக்டர் மு.வரதராசன்; மற்றொருவர் ஆர்.கே.நாராயண்.

      நூல்கள் எழுதி ஈட்டிய  வருமானத்தில் மைசூர் புறநகரில் நகரில் இடம் வாங்கி தன் கனவு வீட்டைக் கட்டினார் நாராயண். தன் சகோதரர் ஆர்.கே.பட்டாபி குடும்பத்தையும் இணைத்துக்கொண்டு அவ்வீட்டில் நாற்பது ஆண்டுகள் வாழ்ந்தார். அந்த வீடுதான் இப்போது அருங்காட்சியகமாக உள்ளது. அந்த வீட்டில் எட்டு ஜன்னல்கள் கொண்ட மாடி அறையில் அமர்ந்துதான் உலகப்புகழ் பெற்ற Malgudi Days என்னும் சிறுகதைகள் நூலை எழுதினார். அது பின்னர் திரைப்படமாகவும் வெளிவந்தது. அதன் மூலம் கிடைத்த வருமானத்தில் புதிய மெர்சிடஸ் பென்ஸ் கார் வாங்கி தானே ஓட்டினார்! அக்காலத்தில் நம் நாட்டில் பென்ஸ் கார் வைத்திருந்தோர் மிகச்சிலரே.

காதல் மனைவி இராஜமும் நாராயண் அவர்களும்






    இந்து ஆங்கில நாளேட்டில் வாரந்தோறும் எழுதினார். அதன் காரணமாக அவர் பெயர் வீடுதோறும் உச்சரிக்கும் பெயராக மாறியது. அக் கட்டுரைகள் தொகுக்கப்பெற்றுப் பல நூல்களாக வெளிவந்தன. வெளிநாட்டு இதழ்களிலும் எழுதினார்.

    சாமர் செட் மாம் என்னும் ஆங்கில எழுத்தாளர் நாராயண் எழுத்தில் மயங்கி நண்பராக்கிக்கொண்டார்! அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்குச் சென்று இந்திய இலக்கியம் குறித்து உரையாற்றினார்.

    பல ஆண்டுகள் உழைத்து, இராமாயணத்தையும், மகாபாரதத்தையும் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து வெளியிட்டார். The Guide என்னும் நாவலுக்கு சாகித்திய அகாதமி  விருது கிடைத்தது. ஜவகர்லால் நேரு அவர்கள் ஆர்.கே.நாராயண் நாவல்களை ஆர்வமுடன் விரும்பிப் படித்தவர். அவர் பிரதமராக இருந்தபோது இந்திய அரசு பத்மபூஷன் விருதளித்துச் சிறப்பித்தது.

   அது மட்டுமா? எண்பதுகளில் மாநிலங்கள் அவையில் அவரை நியமன உறுப்பினராக்கிப் பெருமை சேர்த்தது. நோபல் பரிசுக்கும் இவர் பெயரைப் பரிந்துரைத்தது. அவர் பிறந்த நூற்றாண்டில் அஞ்சல் தலை வெளியிட்டது.

    1990 இல் உடல்நலம் குன்றிய நாராயண், . மைசூரு வீட்டைப் பூட்டித்தள்ளிவிட்டு சென்னைக்குச் சென்று தன் மகளுடன் வசித்தார். தொடர்ந்து எழுதினார். மீண்டும் அவர் வாழ்வில் விதி விளையாடியது. தன் ஒரே மகள் ஹேமா புற்று நோய்க்கிரையாகிக் காலமானார். மனம் நொறுங்கிய நிலையில் மருமகன் சந்துரு கண்காணிப்பில், பேத்தி புவனேஸ்வரியின் அன்பான அரவணைப்பில் சென்னையில் வாழ்ந்தார்.

    இந்து நாளிதழ் ஆசிரியர் இராம் அவர்கள் நாள்தோறும் நாராயண் அவர்களை  முன்னிரவில் கண்டு உரையாடியது அவருக்குப் பெரும் ஆறுதலாய் இருந்தது. தொடர்ந்து எழுதிக்கொண்டே இருந்தார். Indian Thought Publications என்னும் பத்திப்பகத்தைச் சொந்தமாகத் தொடங்கி தன் எழுத்துகளைப் பதிப்பித்தார். அது இன்றும் வெற்றிகரமாக இயங்குகிறது.

     தன் பேத்தியை விடுதலைப் போராட்ட வீரர் தீரர் சத்தியமூர்த்தியின் பேரனுக்கு மணம் முடித்துக் கொடுத்தார். கொள்ளுப்பேத்தியைக் கொஞ்சி மகிழும் பேறும் பெற்றார்.

    இவருடைய தம்பி ஆர்.கே.இலட்சுமண் கேலிச்சித்திரம் வரைவதில் புகழ்பெற்றவர். நாராயண் நாவல்களுக்கு ஓவியங்கள் வரைந்து கூடுதல் சிறப்புச் சேர்த்தது இவரே.

   13.5.2001 அன்று அவரது பேனா எழுதுவதை நிறுத்திக்கொண்டது. தொண்ணூற்று நான்கு ஆண்டுகள் வாழ்ந்த மாமனிதர் அவர். ஏழாம் வகுப்பு மாணவன் கூட எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் எளிய ஆங்கிலத்தில் எழுதிய மாபெரும் எழுத்தாளர்.

   ஆர்.கே.நாராயண் அவர்களின் மறைவுக்குப்பின்  அவரது மைசூரு வீட்டை ஒருவர் வாங்கி, அடுக்குமாடி வீடுகள் கட்டும் நோக்கில் இடிக்கத் தொடங்கினார். அதையறிந்த உள்ளூர் நாளேடு அதுகுறித்து எழுத, ஊரே திரண்டு நின்று இடிப்பதைத் தடுத்து நிறுத்தி, அவ்வீட்டை அருங்காட்சியகமாக மாற்றவேண்டும் என்னும் வேண்டுகோளை முன்வைத்தது. கர்நாடக அரசும் அதை ஏற்று, ரூபாய் மூன்று கோடிக்கு அவ்வீட்டை வாங்கி, ஒரு கோடி ரூபாய் செலவில் அவ்வீட்டை முன்னர் இருந்தவாறே புதுப்பித்து சிறந்த அருங்காட்சியகமாக அமைத்துக் கொடுத்தது.  அவர் ஆங்கிலத்தில் எழுதினார் என்பதாலோ என்னவோ நம் தமிழ்நாட்டரசு நாராயண் வாழ்ந்த புரசைவாக்கம் வெள்ளாள தெருவில் எண் ஒன்று என கதவெண் கொண்ட வீட்டை கண்டுகொள்ளவே இல்லை.

     மைசூரு மாநகருக்குச் செல்லும் தமிழர்கள் தவறாது பார்க்க வேண்டிய இடம் இதுவாகும். ஆங்கில இலக்கியம் பயிற்றும் பேராசிரியர்கள், பயிலும் கல்லூரி மாணவர்கள் அனைவரும் சென்று பார்க்க வேண்டிய இடமும் இதுவாகும்.

  ஆர்.கே.நாராயண்  அமர்ந்து எழுதிய நாற்காலியும் மேசையும் அங்கே அப்படியே உள்ளன. அவர் படித்த நூல்கள், எழுதிய நூல்கள், அவர் அணிந்த உடைகள், கண்கண்ணாடி, கைக்கடியாரம், அவர் பெற்ற விருதுகள், பரிசுகள் எல்லாம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இரண்டு மணிநேரம் ஒதுக்கிப் பார்க்க வேண்டும்; படிக்க வேண்டும். நுழைவுக் கட்டணம் எதுவுமில்லை. ஆனாலும் அருங்காட்சியகம் அரசுச் செலவில் மிக நன்றாகப் பராமரிக்கப்படுகிறது.
பார்வையாளர் குறிப்பேட்டில் நான் எழுதியபோது
   நான் சென்றபோது பள்ளி மாணவர் சிலர் அங்கு வந்திருந்தனர். அவர்களிடம் ஆர்.கே.நாராயண் யாரெனக் கேட்டேன். ‘An Indian writer in English’ என்று ஒருமித்தக் குரலில் சொன்னார்கள். வியந்து நின்றேன்.

  


  கரூர் திரும்பியதும் மேனிலை வகுப்பில் படிக்கும் மாணவர் சிலரிடம் அதே கேள்வியைக் கேட்டேன். விடை தெரியாமல் விழிபிதுங்கி நின்றனர். அப்போதும் வியந்து நின்றேன்.
Dr.A.Govindaraju, National Awardee,
Karur.

  

11 comments:

  1. நல்லதொரு செய்திகளை நாளும் தரும் தங்கள் மூலம் இன்று ஆங்கில எழுத்துலகின் தவப்புதல்வர் ஆர் கே நாராயண் பற்றி இன்று தெரிந்துகொண்டேன். தொடரட்டும் தங்கள் பணி. நன்றி. அன்பு ஆறுமிகம்

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. Bhuvana Govindaraju18 July 2019 at 17:01

    Wonderful blogpost! He was one of the authors whose novels made me start reading more English books. I still remember a train journey when you bought us his novels and we finished reading it before we reached the destination!

    ReplyDelete
  4. Came to know the sad part of life of R K Narayan thro' your write up. Sadness is a fertile ground for humour,it seems !

    ReplyDelete
  5. Karur students may not be able to answer for I taught most of them English !

    ReplyDelete
  6. பல புதிய தகவல்களை அறிய முடிந்தது... நன்றி ஐயா...

    ReplyDelete
  7. நல்ல அரிய செய்திகளை அறிந்தோம் ஐயா.

    ReplyDelete
  8. Mind blowing description about him. To be frank, I have never read his book so far. This blogpost gave me urge to read his books and know more about him. Also, looking forward to know about another famous writer (DR.Varadharajan). Hope you can write a post about him too.

    ReplyDelete
  9. அறியாத பல செய்திகளைஅறிந்து கொண்டேன்
    நன்றி ஐயா

    ReplyDelete
  10. My favourite writer. What a fluent and simple English! The flow is touching.

    ReplyDelete
  11. அசோகமித்ரனையும் கி.ராஜ நாராயணனையும் பற்றிக் கேட்டாலும் நம் மாணவர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. பாடப் புத்தகங்கள் தவிர எதையும் பிள்ளைகளுக்கு வாங்கித் தருவதில்லையே பெற்றோர்கள்! நான் பல்லாண்டுகள் பெங்களூரிலும் மங்களூரிலும் பனி புரிந்திருந்தாலும் மைசூர் சென்று ஆர்.கே.நாராயணன் நினைவு இல்லத்தைப் பார்க்கவேண்டும் என்று தோன்றியதில்லை. தங்கள் கட்டுரையால் ஊக்கம் பெறுகிறேன். அடுத்த முறை நிச்சயம் சென்று பார்க்கவேண்டும். இந்து பத்திரிகை தமிழ் எழுத்தாளர்களுக்கு விளம்பரம் கொடுப்பதில்லை என்பது அறிந்ததே. ஆனால் ஆர்.கே.நாராயணனுக்கு மட்டும் இந்து பத்திரிகையின் விளம்பரம் இல்லாமல் போயிருந்தால் அவரை இன்று உலகம் மறந்தே போயிருக்கும். அதற்காக இந்துவுக்கு நன்றி தெரிவித்தாக வேண்டும். மால்குடி நாட்கள் ஒன்று போதும், அவருடைய நினைவை நிரந்தரப்படுத்துவதற்கு. தங்கள் கட்டுரைக்கு நன்றி.

    -இராய செல்லப்பா நியூ ஜெர்சியில் இருந்து

    ReplyDelete