திருப்பூர் நண்பர் முனைவர் ப.ரங்கசாமி அவர்கள் அனுப்பிய ‘நெதர்லாந்து பயண அனுபவங்கள்’ என்னும் நூல் தூதஞ்சல் மூலம் நேற்று வந்தது. பிரித்த கையோடு ஒரே மூச்சில் படித்து முடித்துவிட்டுதான் மறுவேலை பார்த்தேன்.
நூலாசிரியர் முனைவர் மா.நயினார் அவர்கள் தன் துணைவியாருடன், நெதர்லாந்தில் வசிக்கும் தன் மகன் இல்லத்திற்குச் சென்று எண்பத்து ஐந்து நாள்கள் தங்கி அந்நாட்டைச் சுற்றிப்பார்த்துத் தான் கண்டதையும் கேட்டதையும் இந்நூலில் சுவைபடச் சொல்லியுள்ளார்.
மிகச் சிறிய நாடான நெதர்லாந்தின் பரப்பளவு
41,543 சதுர கிலோமீட்டர். மூன்று நெதர்லாந்தை நம் தமிழ்நாட்டில் அடக்கலாம் என்றால்
அது எவ்வளவு சிறிய நாடு என்பதைக் கற்பனை செய்து பாருங்கள். மக்கள் தொகை வெறும் ஒன்றே
முக்கால் கோடி! இவ்வளவு சிறிய நாட்டில் இருபத்து ஒன்பது விமான நிலையங்கள்; அவற்றுள்
ஒன்று உலகின் பெரிய விமான நிலையங்களில் ஒன்றாக
விளங்குகிறது.
இந்த நாட்டில் ஆறுமாதமே ஆன குழந்தைகளைப் பகல்
நேர பாதுகாப்பு மையங்களுக்கு அனுப்புவதாக நூலாசிரியர் குறிப்பிடுகிறார். இன்னொரு வியப்பான
செய்தி – ஒரு வீட்டில் எத்தனைப் பேர் வசிக்கலாம் என்பதை அரசே முடிவு செய்து அனுமதி
அளிக்கிறது. இட வசதி குறைவான வீட்டில் அதிகம் பேர் தங்குவது தண்டனைக்குரிய குற்றமாகும்.
நம் மகன் வீடு என்றாலும் போதிய இடவசதி உள்ளது
என சான்றளித்தால்தான் நமக்கு அந்நாட்டில் நுழைய விசா கிடைக்குமாம். மேலும் கணவன் வீட்டு
உறவுகள் செல்வதாய் இருந்தால் மனைவியின் அனுமதிக் கடிதமும், மனைவியின் வீட்டு உறவுகள்
செல்வதாய் இருந்தால் கணவரின் அனுமதிக் கடிதமும் இருந்தால்தான் விசா கிடைக்குமாம்!
முற்றிலும் சமதளத் தரைப்பரப்பைக் கொண்டது நெதர்லாந்து.
மலைகளோ குன்றுகளோ இல்லாத நாடு. பல்லாயிரக் கணக்கான ஏக்கரில் துலிப் மலர்கள் பயிர் செய்யப்பட்டு
பல நாடுகளுக்கும் ஏற்றுமதி ஆகிறது. நம்ப முடியாத ஒரு செய்தி – இந்த நாடு கடல்மட்டத்திற்கு
கீழே உள்ளது.
ஏனோ தெரியவில்லை மாலை ஆறு மணிக்கு மேல் கடைகள்
இயங்க அனுமதி இல்லையாம். காரில் செல்வோர் அனைவரும் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டுமாம்.
குழந்தைகளை இடுப்பிலோ தோளிலோ தூக்கிச் செல்வது தடை செய்யப்பட்டுள்ளதாம். உரிய தள்ளுவண்டியில்
வைத்துதான் தள்ளிச்செல்ல வேண்டுமாம். பொதுமக்களில் பெரும்பாலோர் சைக்கிளைப் பயன்படுத்துகிறார்களாம்.
ஆம்ஸ்டர்டாம் என்னும் நகரில் தமிழர் நடத்தும்
சரவணபவன் கூட உண்டாம். இப்படி வியப்பில் ஆழ்த்தும் பல தகவல்களை உள்ளடக்கியது இப் புத்தகம்.
பார்த்தவற்றை அப்படியே காட்சிப்படுத்தும் எழுத்து
நடை நூலாசிரியருக்கு வாய்த்துள்ளது. பாராட்டுகிறேன்.
உலகத் திருக்குறள் பேரவையின் திருப்பூர் மாநகரக்
கிளை இந்நூலை வெளியிட்டுள்ளது. 9443269767 என்னும் எண்ணில் தொடர்பு கொண்டால் நூலை வாங்கலாம்.
68 பக்கங்கள் கொண்ட நூலின் விலை ரூ.80.
அருமையான நூல். ஆனால் மெய்ப்பு திருத்தியவர் இன்னும்
கொஞ்சம் கவனமாக இருந்திருக்கலாம்.
முனைவர்
அ.கோவிந்தராஜூ, கரூர்.
நெதர்லாந்து குறித்து கொஞ்சம் தெரியும் என்றாலும் இது நேரடி அனுபவங்கள். மிக மிக சுவாரசியமான தகவல்கள்.
ReplyDelete//இந்த நாட்டில் ஆறுமாதமே ஆன குழந்தைகளைப் பகல் நேர பாதுகாப்பு மையங்களுக்கு அனுப்புவதாக நூலாசிரியர் குறிப்பிடுகிறார். இன்னொரு வியப்பான செய்தி – ஒரு வீட்டில் எத்தனைப் பேர் வசிக்கலாம் என்பதை அரசே முடிவு செய்து அனுமதி அளிக்கிறது. இட வசதி குறைவான வீட்டில் அதிகம் பேர் தங்குவது தண்டனைக்குரிய குற்றமாகும். நம் மகன் வீடு என்றாலும் போதிய இடவசதி உள்ளது என சான்றளித்தால்தான் நமக்கு அந்நாட்டில் நுழைய விசா கிடைக்குமாம். //
நம் நாடு கண் முன் வருகிறது. ஒரு அறையில் எத்தனைபேர் குடியிருக்க வேண்டிய சூழல்!
அமெரிக்காவில் கூட கணவன் மனைவி மட்டும் என்றால் ஒரு படுக்கை அறை உள்ள வீடு அனுமதிப்பார்கள் குழந்தைகள் அல்லது பெரியவர்கள் இரண்டிற்கு மேல் என்றால் இரு அறை அல்லது எண்ணிக்கை பொருத்துதான் வீடு வாடகைக்கு கலிஃபோர்னியாவில் அப்படித்தான் இருந்தது.
//மேலும் கணவன் வீட்டு உறவுகள் செல்வதாய் இருந்தால் மனைவியின் அனுமதிக் கடிதமும், மனைவியின் வீட்டு உறவுகள் செல்வதாய் இருந்தால் கணவரின் அனுமதிக் கடிதமும் இருந்தால்தான் விசா கிடைக்குமாம்!//
ஹாஹாஹா அப்ப உலகம் முழுக்க இந்தப் பிரச்சனை இருக்கிறது போலும்!!!!
கீதா
விமர்சனம் அருமை ஐயா...
ReplyDeleteExcellent comment.! .given by Dr
ReplyDeleteInian Govindaraj sir.He has covered all the.notable points.
நூலாசிரியரை அறிவேன். என் பௌத்த ஆய்வு தொடர்பாக 1990களின் இறுதியில் திருவனந்தபுரம் சென்றபோது அவர் செய்த உதவியை மறவேன். அவருடைய உதவிக்கு என் ஆய்வேட்டில் ஒப்புகை அளித்திருந்தேன்.
ReplyDeleteசிறப்பான மதிப்புரை. உங்களுக்கு நன்றி. நூலாசிரியருக்கு வாழ்த்துகள்.
என்னுடைய சோழ நாட்டில் பௌத்தம் நூல் பணி காரணமாக சில மாதங்களாக வலைப்பூ பக்கம் வருவதில் சற்றே சுணக்கம். இனி பதிவுகள் மூலமாகத் தொடர்வோம்.