Sunday 4 December 2022

மறுபடியும் பிறப்போம்

 இன்று கரூர் மாவட்ட மைய நூலகத்தில் நடந்த சிந்தனை முற்றம்பேச்சரங்கில் முனைவர் சுந்தர ஆவுடையப்பன் அவர்கள் இந்தத் தலைப்பில்தான் பேசினார்.

   அவர் சைவ சமயச் சார்புடையவர் என்பதாலும், சைவ சித்தாந்தம் அறிந்தவர் என்பதாலும் ஒருவர் பண்ணும் பாவ புண்ணியத்திற்கேற்ப அவருக்கு வாய்க்கும் மறுபிறவி குறித்துப் பேசுவார் என எதிர்பார்த்தேன். ஆனால் முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் பேசி அனைவரையும் சிந்திக்க வைத்தார். சிந்தனை முற்றத்தில் நிகழ்ந்த உரைகளுள் இது ஒரு முத்திரைப் பேச்சு எனக் குறிப்பிடும் வண்ணம் ஆவுடையப்பன் அவர்களின் பேச்சு அமைந்தது.

முனைவர் சுந்தர ஆவுடையப்பன்

முனைவர் சுந்தர ஆவுடையப்பன்
எழுதிய 'மார்கழிப் பெருமை' நூல் வெளியீடு

நூல் மதிப்புரை: முனைவர் அ.கோவிந்தராஜூ


   மனிதரின் வாழ்க்கைப் பயணம் என்பது வகுத்தான் வகுத்த வகையில் அமைந்தாலும், சறுக்கல் வரும்போதெல்லாம் மறுபடியும் வெல்வோம் என்னும் நம்பிக்கையுடன் முயற்சி செய்ய வேண்டும் என்னும் இழையில் தன் சொல் மணிகளைத் தொடுத்து உரை மாலையாய் ஆக்கி அளித்த பாங்கு மிக அருமை. ஒட்டு மொத்தத் தமிழகம் இவரைத் தலைமேல் வைத்துக் கொண்டாடுவது ஏன் என எனக்கு இப்போது நன்றாகவே புரிகிறது.

   மனிதர்கள் சந்திக்கும் ஒவ்வொரு தோல்வியும் இறப்பு. இறப்புக்கு அடுத்தது என்ன? பிறப்புதானே? மீண்டும் முயன்றால் மீண்டும் வெற்றியாளராய்ப் பிறத்தல் சாத்தியமே என்பதற்கு, இலக்கிய மேற்கோள்களை நிரல்படக் காட்டி நினைவில் நிற்கும் வகையில் பேசி நோக்கர்கள் அனைவரையும் தன் பக்கம் ஈர்த்தார்.

   ‘சாதலும் புதுவதன்றேஎன்னும் புறநானூற்றுத் தொடருக்கு, ‘நாம் ஒரு செய்லைச் செய்யும்போது வீழ்தலும் புதுவதன்றேஎன்றும் பொருள் கொள்ளத்தக்க வகையில் விளக்கம் அளித்தது புதுமையாய் இருந்தது!

 சுருங்கச் சென்னால், ‘இன்று புதிதாய்ப் பிறந்தோம்என்னும் பாரதியாரின் பாடல் வரிக்கு ஒரு புதிய பரிமாணத்தைக் காட்டினார்.

  ‘இன்னாது அம்ம உலகம் இவ் வுலகம்என்று கூறித் தம் பாடலுக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்பாத பக்குடுக்கை நன்கணியார், “இனிய காண்க இதன் இயல்புணர்ந்தோரேஎன மறுபடியும் பிறக்க ஆற்றுப்படுத்தியதைத் தம் உரையில் சுட்டிக் காட்டினார்.

   ‘எழுத எழுத எழுத்து வசப்படும்; பேசப் பேச பேச்சு வசப்படும்; பாடப் பாட பாட்டு வசப்படும்அதுபோல் வாழ வாழ வாழ்வு வசப்படும்என முத்தாய்ப்பாகச் சொன்னபோது, அதை ஏற்கும் வகையில் எழுந்த கரவொலி மிகப் பெரிது.

    முனைவர் சுந்தர ஆவுடையப்பனின் உரை, கேட்டாரைச் சிந்திக்க வைத்த சிறப்புரை என்றால் அது மிகையான கூற்று அன்று.

முனைவர் அ.கோவிந்தராஜூ

11 comments:

 1. மிகச்சிறப்பு

  ReplyDelete
 2. உங்களது ஆய்வுரையும்கூட நிகழ்வுக்கு மகுடமாய் அமைந்ததுங்க.

  ReplyDelete
 3. அருமை ஐயா

  ReplyDelete
 4. Miga miga arumai

  ReplyDelete
 5. வாழ்க்கை நெறி

  ReplyDelete
 6. வணக்கம் ஐயா.
  நாங்கள் பார்க்க, கேட்க தவறவிட்டதை தங்களின் பதிவின் மூலம் பயனடைந்தோம்.மிக்க நன்றி ஐயா.

  ReplyDelete
 7. சிவராமன்4 December 2022 at 22:01

  அருமை ஐயா

  ReplyDelete
 8. நலல்தொரு சிந்தனை. அருமை. கூடவே வீழ்வேனென்று நினைத்தாயா என்ற பாரதியின் வரியும் நினைவுக்கு வருகிறது.

  கீதா

  ReplyDelete