எழுபத்து ஆறாவது குடியரசு நாளான இன்று தியாகி வைரப்பன் என்பவரை வலைப்பூ வாசகர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இக் கட்டுரையை எழுதுகின்றேன்.
இந்தக் கட்டுரையை வேதாரண்யத்தை நோக்கி
400 கி.மீ, காந்திய நடைப்பயணம் மேற்கொண்டுள்ள ஈரோடு ‘முனை’ அமைப்பைச்
சார்ந்த இளைஞர்களுக்குக் காணிக்கை யாக்குகிறேன்.
இன்றைக்கு 125 ஆண்டுகளுக்குமுன்
நாகப்பட்டினத்தில் வேதாரண்யம் என்னும் ஊரில், நாவிதர்
என்னும் நற்குடியில் பிறந்தவர் வைரப்பன். தனது குடும்பத்துக்கே
உரிய முடிவெட்டும் கலையைத் தன் தந்தையாரிடமிருந்து சிறப்பாகக் கற்றுக்கொண்டு அதைத்
தன் ஊரில் திறம்படச் செய்து வந்தார்.
சுதந்திரப் போராட்டக் களத்தில் முன்னணியில்
நின்ற அக்காலத்துத் தலைவர்களில் ஒருவர் அவ்வூரில் வாழ்ந்த வேதரத்தினம் பிள்ளை. இவர்
1930 ஆம் ஆண்டு நடந்த வேதாரண்யம் உப்புச் சத்தியாகிரகத்தில் ராஜாஜியுடன் பங்கேற்றவர். இவருக்கு
முடிவெட்டவும் சவரம் செய்யவும் அழைக்கும் போதெல்லாம் ஓடிவரும் குடும்ப நாவிதன் வைரப்பன்.
பிள்ளையவர்கள் ஒரு போராட்டத்தில் கலந்துகொண்டபோது, அவரை வெள்ளையாதிக்கக்
காவலர்கள் அடித்துத் துவைத்து, காலில் விலங்கு பூட்டி இழுத்துச் சென்றதைப் பார்த்த வைரப்பன்
மிகவும் மனம் வருந்திக் கண்ணீர் விட்டான்.
பிள்ளையவர்கள் சிறையினின்று மீண்டு
வந்ததும் ஒருநாள் பிள்ளையவர்களுக்குச் முகச்சவரம் செய்துகொண்டிருந்த வைரப்பன் தானும்
சுதந்திரப் போராட்டத்தில் குதிக்கும் விருப்பத்தைத் தெரிவித்தான். “நீ சிறைசெல்ல
நேர்ந்தால் உன் பெண்டு பிள்ளை பசியால் வாடும். நீ வேறு
விதத்தில் போராட்டத்திற்கு ஆதரவு கொடு” எனச் சொல்லி அவன்
விருப்பத்திற்கு பிள்ளையவர்கள் முற்றுப்புள்ளி வைத்தார்.
வைரப்பன் அன்றிரவு படுத்தபடி நீண்ட
நேரம் யோசித்து ஒரு முடிவுக்கு வந்தான். மறுநாள் அவனுடைய
சலூன் கடையில் ஓர் அட்டையில் கொட்டை எழுத்துகளில் இப்படி
எழுதிவைத்தான்.
“இன்றுமுதல் வெள்ளைக்கார துரைகளுக்கும், வெள்ளையர் அரசாங்கத்தில் வேலைசெய்யும் போலீஸ்காரர்களுக்கும் முடிவெட்ட முடியாது.”
இதை யாரேனும் போட்டுக் கொடுத்தார்களோ
என்னவோ, பார்க்கலாம் என நினைத்த ஒரு போலீஸ்காரர் பணிமுடித்து வீடு
திரும்பும்போது வைரப்பனின் கடையில் நுழைந்து வழக்கமான விரட்டும் தொனியில் முகச்சவரம்
செய்யச் சொன்னார்; சட்டையைக் கழற்றி ஆணியில் மாட்டிவிட்டு அங்கிருந்த ஒரு மர
நாற்காலியில் அமர்ந்தார்.
“ஐயா, வெளியில
நான் வச்சிருக்கிற போர்ட நீங்க பாக்கலீங்களா?”
“பாத்தேனே. ம்…சீக்கிரமா
ஷேவ் பண்ணிவுடு.”
“முடியாதுங்கய்யா.”
கோபத்தோடு வெளியே சென்ற அந்த போலீஸ்காரர்
மற்ற போலீசாரிடம் சொல்லிக் கூச்சலிட்டார்.
நாள்கள் கழிந்தன.
ஒருநாள் வழக்கம்போல கடையில் இளைஞர் ஒருவருக்குச் சவரம் செய்துகொண்டிருந்தான் வைரப்பன். அப்போது
அவனிடம் முடிவெட்ட வந்த ஒருவர் கடைக்கு வெளியில் தொங்கிய வாசகத்தையும் சவரம் பண்ணிக் கொண்டிருந்தவரையும்
மாறி மாறிப் பார்த்தார்.
“என்ன வைரப்பா, திரும்பவும்
போலீஸ்காரர்களுக்குச் சவரம் பண்றியா?”
“அப்படியெல்லாம்
இல்லியே.”
வந்தவர் சென்னார்: “நீ இப்ப
போலீஸ்காரருக்குதான் சவரம் பண்ற.”
முகத்தில் வைத்த கத்தியை வைத்தவாறு, “ஐயா, நீங்க போலீசா?” என்று கேட்டான்
வைரப்பன்.
“முதலில்
கத்தியை அப்பால எடு. ஆமா, நான் போலீசுதான். அதற்கென்ன?” என்றார்
போலீஸ்.
‘ஒங்களுக்கு
சவரம் பண்ணமாட்டேன். எழுந்து போங்கய்யா.”
அவர் கெஞ்சிப் பார்த்தார்; விரட்டியும்
பார்த்தார். வைரப்பன் கேட்கவில்லை.
அந்த போலீஸ்காரர் நீதிமன்றத்தை நாடினார். கூண்டில்
நின்ற வைரப்பனிடம் நீதிபதி சொன்னார்:
“அவருக்கு
மீதி இருக்கும் பாதிச் சவரத்தைச் செய்து முடித்தால்
உனக்குத் தண்டனையில்லை.”
“எஜமானே, என்னால
முடியாதுங்கய்யா. நீங்க வேணுமானா அந்த ஆளுக்கு
மீதிச் சவரத்த செய்யுங்கய்யா” எனச் சொல்லிய வைரப்பன் தன் சவரப்பெட்டியை நீதிபதியின் மேசைமீது
வைத்தான்.
அப்புறம் என்ன? நீதிமன்றத்தில்
இருந்த வக்கீல்கள், ஏவலர்கள் எல்லாரும் சிரித்தனர். நீதிபதி
மரச்சுத்தியலை எடுத்து மேசைமீது பலமுறைகள் தட்டியபிறகு அமைதி திரும்பியது. கடுப்பாகிப்
போன நீதிபதி வைரப்பனுக்கு ஆறுமாதம் சிறைத் தண்டனையைக் கொடுத்தார்.
சிறை வாசம்
முடிந்து வைரப்பன் வெளியே வந்தபோது, சிறைவாயிலில் வேதரத்தினம்
பிள்ளையவர்கள் வந்து கதர்த்துண்டு அணிவித்து வரவேற்றார். வைரப்பனை
ஊர்மக்கள் தம் தோளில் சுமந்து, வந்தே மாதர முழக்கம் வானத்தைப் பிளக்க, பறைகள்
முழங்க அழைத்துச் சென்று வீட்டில் விட்டார்கள்.
ஆம். நமக்குச் சும்மா
வரவில்லை சுதந்திரம்.
------------------------------------
முனைவர் அ.கோவிந்தராஜூ, அமெரிக்காவிலிருந்து.
இவரைப் போன்று நமக்குத் தெறியாத ஏராளமான தியாகிகள் இருக்கின்றனர். இவர்கள் மறக்கப்பட்டார்களா அல்லது மறைக்கப்பட்டார்களா என்பது தெறியவில்லை. ஐயா தங்களது கட்டுரையால் தியாகி ஒருவர் பற்றி அறிய முடிந்தது. நன்றிகள் பல.
ReplyDeleteSuper
ReplyDeleteVery good
ReplyDelete