அன்னம் போன்ற நடையுடையாள்
அழகாய்த்
தெருவில் நடந்துசென்றாள்!
என்னே வியப்பு! பார்த்தவர்கள்
இல்லை அவளுக்(கு) இடையென்றார்!
இன்னும் சிலபேர் உண்டென்றார்
இறைவன்
போன்ற இடையுடையாள்
முன்னும் பின்னும் பார்த்தபடி
முறுவல்
காட்டி நடைபயின்றாள்!
இடையே அவளுக்(கு) இல்லையெனின்
இயங்க அவளால்
முடியாதே!
நடையே அழகாய் உள்ளதென்றால்
நங்கைக்
கிடையும் இருப்பதனால்!
இடையில் புகுந்த ஒருசிலர்தாம்
இல்லை என்றார்
இறையிருப்பை!
விடையாய்ச் சொல்வேன் வியனுலகில்
விளங்கும் இறைவன் உளனென்றே!
குறிப்பு: கருத்து கம்பனுடையது; கவிதை என்னுடையது.
கம்பன் கவி இது:
பல்லியல் நெறியில் பார்க்கும்
பரம்பொருள் என்ன யார்க்கும்
இல்லையுண் டென்ன நின்ற
இடையினுக் கிடுக்கண் செய்தார்.
பரம்பொருளான இறைவன் உண்டு எனவும் இல்லை எனவும் மக்கள் பலவாறு பேசுவது போல, சீதைக்கு இடை உண்டு எனவும் இல்லை எனவும் தோழியர் பலவாறு பேசி, இறுதியில் இடை உண்டு எனக் கண்டு, அந்த இடைக்கு ஒட்டியாணம் போன்ற அழகிய அணிகலன்களைத் தோழியர் அணிவிக்க, அவற்றின் எடையைத் தாங்காமல் இடை வருந்தியது என்பது கம்பனின் கற்பனை!
இதனால் சகலருக்கும் தெரிவிப்பது என்னவென்றால், ஒரு
கவிநயத்திற்காகப் பெண்களுக்கு இடை இல்லை எனச் சொல்லலாமே தவிர, உண்மையில் இடை இல்லாமல் பெண்கள் இயங்க முடியாது. அதுபோல, ஒரு பேச்சுக்காகக் கடவுள் இல்லை எனச் சொல்லலாமே தவிர, உண்மையில் கடவுள் இல்லாமல் இந்த உலகம் இயங்காது.
கம்பன் புகழ் வாழ்க! அவன் கவி வாழ்க.
முனைவர் அ.கோவிந்தராஜூ, அமெரிக்காவிலிருந்து.
திருவிளையடல்
ReplyDeleteபாகம் 2
நல்ல கதைகளகம்
🙏🙏❤️❤️❤️
அருமை ஐயா!
ReplyDeleteஉண்மையை மறைத்து சுய லாபம் பார்க்க சிலர் செய்யும் செயலே கடவுள் இல்லை என்பது. அழகாக வெளிச்சம் போட்டு காட்டும் வரிகள்.
ReplyDeleteஅருமை ஐயா.
அருமை ஐயா...
ReplyDelete