காலையில் எழுந்தவுடன் குறுஞ்செய்தியோ அழைப்போ வந்துள்ளதா எனப் பார்த்தபோது
அந்த அதிர்ச்சித் தகவல் என்னை ஒருகணம் உலுக்கிவிட்டது.
My dear husband
demised due to septic shock என்று அவர் நள்ளிரவில் அனுப்பியிருந்த குறுஞ்செய்திக்குள் பொதிந்து
கிடந்த சோகத்தை என்னால் எளிதில் உணர முடிந்தது. Shocked ., it is irreparable
loss., let the Almighty give you the strength to overcome the crisis என்று மறுமொழியாக ஒரு குறுஞ்செய்தியை அனுப்பிவிட்டுப்
பல்துலக்கச்சென்றேன். பின்னர் எழுந்து வந்த மனைவியிடமும் செய்தியைப் பகிர்ந்து கொண்டேன்., அவளும் வருந்தினாள்.
இரண்டு
தினங்களுக்கு முன் என்னைத் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு தன் கணவருக்கு
மிகவும் முடியவில்லை என்றும், கரூர் மருத்துவர்கள் கைவிட்ட காரணத்தால்,பாண்டிச்சேரி ஜிப்மரில் சேர்க்கப்போவதாகவும் தெரிவித்தார்.
அவ்வாறே சேர்த்தார். ஆனால் பயனில்லாமல் போய்விட்டது.
அவருடைய மகள் ஹரிணி நான் முதல்வராகப் பணியாற்றும் பள்ளியில் ஏழாம்
வகுப்பில் படிக்கிறாள். மறைவுச் செய்தி கிடைத்த அன்று, காலை வழிபாட்டுக் கூட்டத்தில் மாணவர்கள் ஆசிரியர்கள் அனைவரும் சேர்ந்து இரு
நிமிட மவுன அஞ்சலி செலுத்தினோம்.
இரண்டு வாரம் கழித்து ஹரிணி பள்ளிக்குத் திரும்பினாள். அவளை அழைத்துப் பேசி ஆறுதல் சொன்னேன். அன்று மாலையில் அவளுடைய அம்மா திருமதி சுபப்பிரதா அவர்களைச்
சந்தித்து இரங்கலைத் தெரிவித்தேன்.அவர் கரூர் செட்டிநாடு பொறியியல் கல்லூரியில்
ஆங்கிலப் பேராசிரியையாகப் பணியாற்றுகிறார். ஆங்கில மொழியில் அபாரமானப் புலமை
உடையவர். முன்னொருமுறை அவரை அழைத்து ஆங்கில இலக்கிய மன்றக் கூட்டத்தில் பேசச்
செய்தேன். எப்போதும் என்னிடத்தில் அன்பும் மதிப்பும் உடையவர். சற்றுநேரம் ஆறுதலாகப் பேசிக்கொண்டிருந்தேன்.
அவரது கணவர் எம்.எஸ்ஸி படித்தவர்., பிரபல மருந்து கம்பெனியில்
பணிபுரிந்தவர். ஆனால் விழிப்புணர்வு இல்லாத மனிதராய் இருந்திருக்கிறார். எதனாலோ
எப்போதோ காலில் ஏற்பட்ட ஒரு புண்., மருத்துவர் ஆலோசனையின்றி சில மருந்துகளை அவர் தொடர்ந்து எடுத்துக்கொண்டுள்ளார் .மாமனார் சொல்லியும் கேட்கவில்லை., மனைவியிடமும்
தன் உடல்நிலை குறித்துச் சரியாக பகிர்ந்து கொள்ளவில்லை என்று தெரிகிறது. கடைசியில் அந்த ஆறாத
புண்தான் அவருக்கு எமனாக அமைந்து விட்டது. அந்தப் புண்ணிலிருந்து பெருகிய நச்சுக்கிருமிகள் இரத்த
ஓட்டத்தில் கலந்து முக்கிய உறுப்புகளைச் செயலிழக்கச் செய்துவிட்டன. அதன் விளைவாக முதலில் மூளைச்சாவும் அடுத்த ஒருமணி நேரத்தில் சாவும்
நேர்ந்துவிட்டது. அந்த சோகத்திலும் அவருடைய மனைவி ஒரு முக்கிய முடிவெடுத்தார்.
தலைமை மருத்துவரைச் சந்தித்து உரிய படிவங்களில் கையெழுத்துப் போட்டவுடன் இரண்டு
விழிகளையும் அகற்றி மருத்துவர்கள் பத்திரப்படுத்தினர். இதனால் இரண்டு
பேர்களுக்குப் பார்வை கிடைத்தது.
இப்படித்
தெளிவாகச் சிந்தித்துச் செயல்பட்டதற்குக் காரணம் அப்பெண்மணி கற்ற கல்விதான்.
ஈடுசெய்ய முடியாத இழப்புதான் என்றாலும், பொருளாதாரச் சிக்கலின்றி தொடர்ந்து நன்றாக
வாழ்வதற்கும் துணை புரிவது அவர் கற்ற கல்விதான்.
இப்போது கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர்
பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி படிப்பை நிறைவு செய்து, வாய்மொழித் தேர்வை
எதிர்பார்த்து இருக்கிறார். டாக்டர் பட்டம் கிடைக்கப்பெற்றவுடன் பல்கலைக்கழகத்தில்
பணிசெய்யும் பேறு கூட வாய்க்கலாம்.
ஆக, பெண்களுக்குக்
கவசமாகத் திகழ்வது கல்வியைத் தவிர வேறு ஒன்றுமில்லை.
இந்தச் சோக நிகழ்வில் கற்றுக்கொள்ள வேண்டிய
பாடங்கள் பலவாம்.
·
நாற்பது வயதைக் கடந்த எவரும் ஆண்டுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்வது
அவசியமாகும்.
·
தன் உடலில் உள்ள நோய்கள் குறித்து மனைவியிடம்/கணவரிடம்/பெற்ற பிள்ளைகளிடம்
வெளிப்படையாகப் பேசவேண்டும்.
·
மருத்துவரின் ஆலோசனையின்றி மருந்துகளை உட்கொள்ளக்கூடாது. ஒருவர் உட்கொள்ளும்
மருந்து மற்றவருக்குப் பொருந்தாது.
·
முதலில் நாட்டு மருத்துவம் செய்து, பின்னர் அலோபதி மருத்துவரிடம்
செல்லக்கூடாது.
·
உடல்நலத்திற்கு எதிரான எந்தப்பழக்கத்தையும் ஓயாத உழைப்பு உட்பட கைக்கொள்ளல்
ஆகாது.
அடிப்படையில் நான் ஓர் ஆசிரியன். அதனால்தான் அடிக்கடி பாடம் நடத்தத் தொடங்கிவிடுகிறேன்.
பயனுள்ள யோசனைகள்
ReplyDeleteநன்றி
very useful and thoughtful piece of writing
ReplyDelete