Wednesday, 3 December 2014

மதிப்பில்லாத மதிப்பெண்கள்



    நான் 1970 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு எழுதினேன். ஒரே நாளில் இரு தேர்வுகள். தொடர்ந்து நான்கே நாள்களில் எழுதி முடிக்கும் வகையில் அட்டவணை இருந்தது. தேர்வு பயம் ஏதுமின்றி எழுதியதை நினைத்துப்பார்க்கிறேன். பள்ளியில் நடந்த விழா, போட்டி, விளையாட்டு மற்றும் சாரணர் படை என எல்லாவற்றிலும் பங்கேற்றேன். நண்பர்களுடன் அரட்டைக்கச்சேரி வேறு. நா.பா., மு.வ., நூல்களைப் படிக்கவும் நேரம் இருந்தது. உண்மையில் அது ஒரு பொற்காலம்.

      இன்று எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது.   இன்றைக்குப் பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களின் நிலை பரிதாபமாக உள்ளது. பள்ளியில், விடுதியில், வீட்டில் எங்கும் ஓர் இனம்புரியாத இறுக்கமான சூழ்நிலையே நிலவுகிறது. மாணவர்களைப் பந்தயக் குதிரைகளாகத்தான் பார்க்கிறோம்.   மதிப்பே இல்லாத மதிப்பெண்கள்! 1180 மதிப்பெண் பெற்றாலும் விரும்பிய படிப்பில் சேர முடிவதில்லை.

    ஒன்பதாம் வகுப்புப் பாடத்தை நடத்தாமல் பத்தாம் வகுப்புப் பாடத்தை நடத்துகின்றனர்.. பதினோராம் வகுப்புப் பாடத்தை நடத்தாமல் பன்னிரண்டாம் வகுப்புப் பாடத்தை நடத்துகின்றனர்.

.   சைக்கிள் ஓட்டக்கற்றுக்கொடுக்காமல் பைக் ஓட்டக் கற்றுக்கொடுப்பது அறிவார்ந்த செயல் ஆகுமா? இதுவும் மாணவர்கள் மீது நடத்தப்படும் ஒருவகை வன்முறைதான்
.
    அரசு விடுமுறை நாள்களில் சிறப்பு வகுப்புகள் நடத்துவதும், ஞாயிற்றுக் கிழமைகளில் வகுப்புகள் நடத்துவதும் வன்முறைதான்.

    பொதுவாக, பள்ளிகளில் மாலையில் பள்ளி முடிந்ததும் ஆடிடத்தில் விளையாடுவோரைத் தவிர அனைவரும் சென்றுவிடுவார்கள். இப்போது அப்படியில்லை. நள்ளிரவு வரையில் பள்ளியில் வகுப்பறைகளில் விளக்குகள் எரிகின்றன். ஒருமுறை சேலத்திலிருந்து நாமக்கல்வரை இரவு பத்து மணிக்குமேல் பேருந்தில் பயணம் செய்து, நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ள பள்ளிகளைப் பாருங்கள். நான் சொல்வது உண்மை என்று உணர்வீர்கள். இதுவும் ஒருவகை வன்முறைதான்.

    விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவர்களின் நிலை இன்னும் மோசமானது. சிறுநீர் கழிப்பதற்குக் கூட அனுமதி தராமல், மணிக் கணக்கில் ஒரே இடத்தில் அமர்ந்து படிக்கச் செய்வது , ஒரே நாளில் மூன்று தேர்வுகளை நடத்துவது,முந்தைய தேர்வைவிட நான்கு மதிப்பெண் குறைந்தாலும் நையப் புடைப்பது,. என்ன கொடுமை இது?         பண்ணைக் கோழிகளுக்கும் இவர்களுக்கும் என்ன வேறுபாடு உள்ளது?
   
    இது இப்படி என்றால், வீட்டுச்சூழல் இன்னும் மோசம்.காலை நான்கு மணிக்கு எழுப்பி தனிப்பயிற்சிக்கு அனுப்புவதில் குறியாக இருப்பார்கள். காலை எட்டு மணிக்கு வீடு திரும்பி, நீராடி, சீருடை அணிந்து, அரைகுறையாக உணவருந்திப் பள்ளிக்குப் புறப்படுவார்கள். இதுதான் கொடூரமான வன்முறை.

    பெற்றோர் சிலர் தம்முடைய நிறைவேறாத ஆசைகளைத் தம் மகன் மகள் மீது திணிப்பர். தான் மருத்துவப்படிப்பில் சேர நினைத்தது நிறைவேறவில்லை. இப்போது தன் மகன் மருத்துவப்படிப்பில் சேர்ந்தே ஆக வேண்டும் என கங்கணம் கட்டிகொண்டு அவனைப் போட்டு வாட்டுகிறார். இதுதான் மிகப்பெரிய வன்முறை.

    சிலர் மருத்துவ விடுப்பு எடுத்துக் கொண்டு படிக்கும் மகனுடன் மல்லுக்கு நிற்பார்கள். திருப்புத் தேர்வில் கணிதத்தில் 199 மதிப்பெண் வாங்கினால், ஒரு மதிப்பெண் ஏன் குறைந்தது என்று கூண்டில் ஏற்றிக்  குறுக்கு விசாரணை செய்யத்  தொடங்கி விடுவார்கள். இந்தக் குறைகாணும் போக்கு குழந்தைகளிடத்தில் தாழ்வு மனப்பான்மையை உருவாக்கிவிடும்.

     எப்போதோ வாங்கிய குறைந்த மதிப்பெண்ணைத்  தற்போது சுட்டிக் காட்டி ர்ச்சனை செய்வர். இப்படி மதிப்பெண் வாங்கினால் தோட்டி வேலைக்குக் கூட செல்லமாட்டாய் என்று பேசி அந்த அருமையான தொழிலின் புனிதத்துவத்தையும் கெடுத்து, பையனின் படிக்கும் ர்வத்தையும் கெடுத்து விடுவார்கள். “உன் அண்ணன் கணக்கில் சென்ட்டம் வாங்கினான். அவன் எங்கே நீ எங்கேஎன்று ஒப்பிட்டுப் பேசி, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயலையும் செய்வார்கள்.

     ஒப்பிட்டுப் பேசுவதை பெற்றோர் நிறுத்தினால் , ஒபாமா அளவுக்கு அவர்களுடைய குழந்தைகள் வாழ்வார்கள்., நிறுத்தாவிட்டால் ஒசாமா அளவுக்கு வீழ்வார்கள். பெற்றோர்களில் பலருக்கு இது தெரிவதில்லை.

    மேனிலைக்கல்வி தொடங்கப்பட்ட காலத்தில், அதாவது எண்பதுகளில், ஒரு பள்ளியில் 80% தேர்ச்சி என்றால் அது பெரிய சாதனையாகக் கருதப்பட்டது. ஒரு மாணவன் ஒரு பாடத்தில் 90% மதிப்பெண் பெற்றால் அதைச் சாதனை என்றார்கள். ஆனால் கடந்த பத்தாண்டுகளில் பள்ளி, ஆசிரியர், பெற்றோர் அனைவரது எதிர்பார்ப்பும் சென்ட்டம்...சென்ட்டம் என மாறிவிட்டது.! இது ஒரு நோயாகப் பரவிவிட்டது. இந்தப் புதுவகை மனநோய்க்கு Centum syndrome என்று பெயர் சூட்டியுள்ளேன்.

    மாணவருடைய அறிவுத் திறனையும், அடைவுத் திறனையும் பார்க்காமல், உயர்ந்த மதிப்பெண் பெற வைக்க வேண்டும் என்று பெறறோர், ஆசிரியர், உறவினர் அனைவரும் ஏற்றும் சுமையை சுமக்க முடியாமல் திணறும் அவலம் எங்கும் அரங்கேறிக் கொண்டுள்ளது. வினா விடைகளைக் குருட்டு மனப்பாடம் செய்து தேர்வில் அப்படியே எழுதுவதற்குத் தீவிரப்பயிற்சி அளிக்கின்றனர். சொல்லப் போனால், ஆங்கிலப் பாடல்களை அப்படியே ஒப்பிக்கும் மழலையர் வகுப்புக் குழந்தைக்கும், பன்னிரெண்டாம் வகுப்பு மாணவனுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. அவன் என்ன ஒப்பிக்கிறான் என்று அவனுக்குத் தெரியாது. இவன் என்ன எழுதுகிறான் என்று இவனுக்குத் தெரியாது. குருட்டு மனப்பாடம் செய்து நூற்றுக்கு நூறு மதிப்பெண் வாங்குவதால் என்ன பயன் விளையும்?  இந்த நிலை தொடர்ந்தால் ஆய்வுக் கட்டுரை எழுதுதல், நூல் எழுதுதல்,  நோபல் பரிசு பெறுதல் என்பதெல்லாம் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு வெறும்  கானல் நீராகி விடும்
.
   தேனீக்கள் மலருக்கு வலிக்காமல் தேனை எடுப்பதுபோல் குழந்தைகளிடத்தில் வன்முறை நடத்தாமல் வேலைவாங்க வேண்டும்பொன்முட்டை போடும் வாத்தை , நிறைய முட்டை கிடைக்கும் என அதன் வயிற்றை அறுத்துப்பார்த்தானாம் பேராசைக்காரன் ஒருவன். இந்தப் பேராசைக்காரனின் உருவில்தான் பல பெற்றோர்கள் உள்ளனர்., பல பள்ளிகள் உள்ளன.

   படிப்பது சுகம் என்ற நிலைமாறி, படிப்பது சுமை என்ற நிலைக்கு மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். சிலர் மன அழுத்தம் காரணமாக எடுக்கக்கூடாத முடிவையும் எடுத்துவிடுகின்றனர்.படிப்பது சுகம், படித்ததைத் தேர்வில் எழுதுவது அதைவிட சுகம் என்று  குழந்தைகள் நினைக்கும் காலம் மீண்டும் வருமா?

    படிப்பதில் மகிழ்ச்சிகொள்., தேர்வுகளைக் கொண்டாடு., தேர்வுகளில் விடை எழுதுவது இனிய அனுபவமாக அமையட்டும் என்று இறையன்பு அவர்கள் கூறுவார். அந்த  வகையில் பள்ளிச்சூழல், வீட்டுச்சூழல், தமிழ் நாட்டுச்சூழல் அமைந்தால்தான் மனவளம் மிகுந்த குடிமக்கள் உருவாவார்கள்.

  இச் சிக்கலுக்குத் தீர்வு எதேனும் உண்டா?  உண்டு.

அரசு ஓர் அவசர சட்டத்தின் மூலம் தனிப்பயிற்சியை ஒழிக்க வேண்டும்.

பதினோராம் வகுப்பில் அதற்குரிய பாடத்திட்டத்தில் 600 மதிபெண்களுக்குத் பொதுத்தேர்வு நடத்தப்பட வேண்டும். பன்னிரண்டாம் வகுப்புப் பாடத்திட்டத்தில் 600 மதிப்பெண்களுக்குப் பொதுத்தேர்வை நடத்த வேண்டும்.

ஞாயிற்றுக் கிழமைகளிலும் அரசு விடுமுறை நாள்களிலும் வகுப்புகள் நடப்பதைத் தடுக்க நீதிமன்றங்கள் முன்வர வேண்டும்.

குருட்டு மனப்பாடம் செய்யாமல் சிந்தித்து விடை எழுதும் வகையில் தேர்வு வினாத்தாள் அமைய வேண்டும்.

மேனிலைக்கல்வி பயிலும் மாணவர்களுக்கு வாரம் இரு பிரிவேளைகள் விளையாட்டும், ஒரு பிரிவேளை நன்னெறிக்கல்வியும் கட்டாயமாக்கப்பட வேண்டும்.

  இது குறித்து, சிந்திக்க வேண்டியவர்கள் சிந்திக்கலாமே.

2 comments:

  1. நான் படித்த காலத்தை நினைத்துப் பார்க்கின்றேன்
    அதுபோல் இப்பொழுதுள்ள மாணவர்களுக்கு
    வாய்ப்பில்லையே

    ReplyDelete
  2. A change is much needed. Luckily I didn't have to go through a lot of pressure. Because of that I can still enjoy reading and learning without aversion.

    ReplyDelete