Saturday, 6 December 2014

அன்பிற்கும் உண்டு அடைக்கும் தாழ்

     கூட்டுக் குடும்பம் சிதைந்துபோய் இன்று தனிக்குடும்பங்கள் பெருகிவிட்டன. மேலும் தனிக்குடும்பங்கள் தங்கும் விடுதிகளாக மாறிவிட்டன. குடும்ப உறுப்பினர்கள் பட்டும் படாமலும் தொட்டும் தொடாமலும் சேர்ந்து வாழ்கின்றனர். பணம், புகழ், கெளரவம் இவற்றுக்காக அலையும் பெற்றோர்களிடம் குழந்தைகள் அன்புக்காக ஏங்கித் தவிக்கின்றன. 

     முன்பெல்லாம் குழந்தைகள் மூன்று வயது வரை அம்மாவின் முலைப்பாலை அருந்தும்.  ஐந்து வயது வரை அம்மா அப்பாவைச்  சுற்றிவரும்.  ஐந்து வயதில்தான் பள்ளியில் போடுவார்கள். இப்போது அப்படியா? பிறந்து மூன்று மாதங்கள் கூட தாய்ப்பால் கிடைப்பதில்லை. கிடைக்கும்., ஆனால் கொடுப்பதில்லை.,  அழகு கெட்டுவிடுமாம்!

      ஆறுமாதங்கள் ஆன குழந்தையைக் காப்பகத்தில் விட்டுவிட்டுப் பெற்றோர் இருவரும் வேலைக்குப் போய்விடுகிறார்கள். மாலை ஆறு மணிக்குமேல் அழைத்து வரும் குழந்தையைத் தொலைக்காட்சிப்பெட்டிக்கு முன்னால் உட்காரவைத்து, கடையில் வாங்கிவந்த நொறுக்குத் தீனியைக் கொடுத்துவிட்டுத் தாய் தனது வேலையைப் பார்ப்பாள். இரண்டு வயது ஆன உடனே பள்ளியில் சேர்த்துவிடுவார்கள். அங்கு ஆசிரியர் சொல்லிக்கொடுத்த நேரம் போக மீதி நேரங்களில் குழந்தைகளை வாய்ப்பொத்தி உட்காரவைத்துவிடுவார்.

                 காலையில் கைது
                 மாலையில் விடுதலை
                 மழலையர் பள்ளி

   என்று நான் முன்பு எழுதிய ஹைக்கூ இப்போது நினைவில் வந்து தொலைக்கிறது.

   இந்த இயந்திர கதி வாழ்க்கையில் பல நாள்களில் குழந்தை அப்பாவை பார்க்க முடியாமலும் போகும். காலையில் எழுவதற்குமுன் வேலைக்குப் போய்விடுவார். இரவில் வீடு திரும்பும் போது குழந்தை தூங்கிவிடும்.

   இப்படியே ஆண்டுகள் உருண்டோடும். நெடுநெடுவென வளர்ந்து நிற்பாள். அவள் வாங்கவேண்டிய மதிப்பெண்ணில்தான் பெற்றோர் குறியாக இருப்பார்கள். அவளுடைய உணர்வுகளை ஒருநாளும் புரிந்துகொள்ளமாட்டார்கள்.

   “அப்பா! உங்கள் ஒருநாள் சம்பளம் எவ்வளவு? என்று கேட்டாள். ஏதோ நினைப்பில் “எண்ணூறு ரூபாய் என்றார். உள்ளே ஓடிப்போய் தன் உண்டியலைக் கொண்டுவந்து கவிழ்த்தாள். “அப்பா, இதில் ஆயிரம் ரூபய் இருக்கிறது. என்னோடு ஒருநாள் முழுவதும் உங்கள் நேரத்தைச் செலவிடுங்கப்பா.  என்று ம்ன்றாடினாள். அவருக்குத் தன் பின்மண்டையில் யாரோ ஓங்கி அடித்தது போலிருந்தது. பெற்ற மகளிடம் அன்பு காட்டாத பாவி என்பதை உணர்த்திவிட்டாளே.

    கணக்குப் பாடத்தில் 98 மதிப்பெண் பெற்றபோது இரண்டு மதிப்பெண்ணை கோட்டை விட்டதற்காக அவளுடைய அம்மா காலில் சூடு வைத்ததை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த கொடூர அப்பாதானே அவர்.

   “ அடித்தது போதும் அணைத்திடல் வேண்டும் 
    அம்மை அப்பா இனி ஆற்றேன்

 என்று வள்ளலார் கூறுவார். இன்று அன்புக்காக ஏங்கும் ஒவ்வொரு குழந்தையும் தன் பெற்றோரைப் பார்த்து இப்படித்தான் கூறுகிறது.

   இந்தக் காலத்துப் பெற்றோர்கள் புரிந்து கொள்வார்களா?

   அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
   புன்கணீர் பூசல் தரும்

என்ற குறள் பொய்யாகிவிடுமோ?




3 comments:

  1. பெண்ணை யார் நினைக்கிறார்கள்,
    மதிப்பெண்ணையல்லவா எதிர்பார்க்கிறார்கள்

    ReplyDelete
  2. கட்டுரையும் கருத்தும் அற்புதம் ஐயா.
    அன்புக்கு ஏங்குவோர் தான் அனைவருமே .


    ஸ்ரீம்

    ReplyDelete