கோ. நம்மாழ்வார்
இயற்கை வேளாண்மையை மீட்டெடுத்த வெண்தாடி விவசாயி. வேளாண் அதிகாரிப் பதவியைத்
துச்சமெனத் தூக்கி எறிந்துவிட்டு இயற்கை வேளாண் இயக்கத்தைத் தொடங்கியவர். பசுமைப்
புரட்சியால் நிலம் கெட்டதுதான் மிச்சம் என்று நக்கீரத் துணிச்சலோடு பேசியவர்.,
எழுதியவர்.
வேம்பையும் மஞ்சளையும்
வெளிநாட்டார் சொந்தம் கொண்டாடியபோது அவற்றின் காப்புரிமையைப் போராடி
மீட்டுக்கொடுத்தவர்.
மாடு பூட்டி ஏர் ஓட்டிய விவசாயிகள்,
டிராக்டர் வாங்கி உழத் தொடங்கினர். உழவனின் நண்பனின் மண்புழு என்றால், உழவனின்
எதிரி டிராக்டர்தான். அது ஒரு வெள்ளை யானை என உணரவைத்தார் நம்மாழ்வார். மாடு
வைக்கோலைத் தின்றுவிட்டு ஏர் உழும். மாடு சாணி போடும். டிராக்டர் சாணி போடுமா
என்று கேட்டுவிட்டுக் கல கல எனச் சிரிப்பார்.
நம்மாழ்வாரின் வானகத்தில்
டிராக்டர் டில்லர் போன்றவை நுழைய முடியாது.
வாலைக் குழைத்துவரும் நாய்தான் - அது
வயலில் உழுதுவரும் மாடு,
ஆதரிக்க வேணுமடி பாப்பா.
என்று பாரதியார் பாராட்டி மகிழும் ஆடு, மாடு, நாய், குதிரை போன்றவை நுழையலாம்.
நம்மாழ்வார் அன்போடு வளர்த்த பொன்னி, வீரன் ஆகிய நாய்கள் இன்றும் வானகத்தில் வளைய
வருகின்றன.
இளைஞர்களும் இளம்பெண்களும் அணி
அணியாக வந்து பயிற்சி பெற்றுச் செல்கிறார்கள் என்பதை மகிழ்ச்சியோடு குறிப்பிட்டார்
வானகத்தின் பொறுப்பாளர் திரு. குமார். நாங்கள் சென்ற நேரம் மதிய உணவு நேரம்.
அன்போடு அழைத்தார் உணவு உண்ண., வானகத்தில் விளைந்த கீரை, காய்கள் என அமைந்த எளிய
உணவு அமிழ்தமாய் இருந்தது.
ஆங்காங்கே கூம்பு வடிவத்தில்
கொட்டகை அமைக்கப்பட்டிருந்தன. வெளியில் வெயில் கொளுத்தினாலும் உள்ளே ஏ.சி அறையில்
இருப்பது போன்று உணர்ந்தோம்.
பொட்டல்காட்டை பொன்விளையும் பூமியாக
மாற்ற முடியும் என்பதை வானகத்தில் மெய்ப்பித்துக் காட்டியுள்ளார்கள்.
உண்டு முடித்து ஓய்வெடுத்த சமயம்
என் நினைவுகள் பின்னோக்கி நகர்ந்தன. நம்மாழ்வாரோடு சேர்ந்து நடந்த நடைப்பயணம்,
முன்னிரவுகளில் குக்கிராமங்களில் அவரோடு சேர்ந்து ஆற்றிய இயற்கை வேளாண் பரப்புரைகள்,
அவர் மறைந்த போது பள்ளியில் நடத்திய இரங்கற்கூட்டம் என எல்லாம் நினைவுக்கு வந்தன. நம்மாழ்வாருடன்
25 ஆண்டுகால தொடர்பு என்பது என்னைப்பொறுத்தவரை மறக்கமுடியாத பொற்காலமாகும்.
“சார், வணக்கம். உங்கள் மாணவன்
அருணாசலம். வானகத்திற்கு அடிக்கடி வந்து பயிற்சி வகுப்புகள் எடுக்கிறேன்” என்று
அறிமுகப்படுத்திக்கொண்டார் அந்த இளைஞர். கோபி வைரவிழா மேல்நிலைப்பள்ளியில்
படித்தபோது தினமும் மாட்டுவண்டியில் வந்த மாணவர் அவர். இயற்கை வேளாண் காய்கறிகளை
விற்கும் திட்டத்தை நான் பள்ளி வளாகத்தில் தொடங்கியபோது அதற்குத் தலைமையேற்று
நடத்தியவர். 17 ஆண்டுகளுக்குப் பிறகு அவரை அங்கு சந்தித்தபோது right man in the right place என்ற ஆங்கிலப்
பொன்மொழி நினைவுக்கு வந்தது.
பாரம்பரிய வேளாண் அறிவின்
காப்பகமாக விளங்குகிறது வானகம்.
கலப்ப கெளப்பற மண்வாசத்துல
நெலத்தத் தொளைக்கிற மம்புழுவில
வைக்கோல் சலசலப்புல
வெவசாயி வேர்வையில
எல்லாத்தலேயும் பாருங்க
அங்க நிச்சயமா
ஆழ்வாரு வாழ்வாரு
என்ற கவிதைநேசனின் கவிதை வரிகளை வழிமொழிந்தபடி வானகத்திலிருந்து விடை
பெற்றோம்.
என் மாணவர் அருணாசலத்துடன் நான் எடுத்துக்கொண்ட படம்
தங்களின் மாணவர் போற்றுதலுக்கு உரியவர்
ReplyDelete