Wednesday, 17 February 2021

பார்த்தோம் பனிப் புயலை

    இப்போது அமெரிக்காவைக் கடுங்குளிர் வாட்டி வதைக்கிறது. கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு இரவு நேர வெப்ப நிலை குறைந்து விட்டதாக என் மகள் சொல்கிறாள்.

   நேற்று வீசிய Appetizer எனப் பெயரிடப்பட்ட பனிப்புயலில் நாங்கள் வசிக்கும் டெக்சாஸ் மாநிலம் கதி கலங்கிவிட்டது. மாநில ஆளுநரின் வேண்டுகோளை ஏற்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அவசர நிலைப் பிரகடனம் செய்தார். நிலைமையைச் சமாளிக்க கூடுதல் நிதி. இராணுவ உதவி என்று உதவிக்கரம் நீட்டியுள்ளார். இரயில், விமான சேவைகள் நிறுத்தப்பட்டன. கல்விக் கூடங்கள், அரசு அலுவலகங்கள் இயங்கவில்லை.

  







தீயணைப்பு வாகனங்கள் அங்குமிங்கும் அடிக்கடி செல்கின்றன; கூடவே ஆம்புலன்ஸ் வாகனங்களும் செல்கின்றன. ஆதரவற்ற வயதான முதியவர்களை மீட்டு மருத்துவ மனைகளுக்கு அழைத்துச் செல்கிறார்கள். குளிரில் கிடந்து வாடுவோரை அழைத்துச் சென்று ஆங்காங்கே இயங்கும் முகாம்களில் தங்க வைக்கிறார்கள்.  

    நம் ஊரில் அடைமழை பெய்வது போல இங்கே தொடர்ந்து பனிமழை பெய்வதைப் பார்க்க முடிகிறது. விடிந்து எழுந்து பார்த்தால் வெளியே நிற்கும் கார்கள் எல்லாம் வெண்பனிப் போர்வையைக் போர்த்திக்கொண்டு நிற்கின்றன. வீட்டுக் கூரைகள் எல்லாம் வெள்ளித் தகட்டால் வேய்ந்தவைபோல் காணப்படுகின்றன.

     சாலைகளில் சுமார் மூன்றடி உயரத்தில் எங்கும் பனிப்படிவுகள் காணப்படுகின்றன. வீட்டின் முன் வளரும் செடிகள் மீது பனித்துகள் படிந்திருப்பதைப் பார்த்தால் பனிப்பூக்கள் பூத்துக் குலுங்குவதுபோல் காட்சி அளிக்கின்றன. வீட்டுக் கதவுகள், ஜன்னல்கள் எல்லாம் அடைபட்டுக் கிடக்கின்றன. மனிதர் நடமாட்டம் இல்லாமல் வீதிகள் வெறிச்சோடிக் கிடக்கின்றன.

    ‘வெளியில் செல்லக் கூடாது’ என்ற அறிவுறுத்தலையும் மீறி காமிராவுடன் வெளியில் சென்ற நான் சில படங்களை எடுத்துக்கொண்டு வீட்டிற்குள் ஓடிவந்து விட்டேன். அந்த ஒரு நிமிடத்தில் நான் வாங்கிய உறைபனிக் கடிக்கு(frostbite) அளவே இல்லை. என் முட்டாள் தனத்தை  எண்ணி வருந்தினேன். அஞ்சுவது அஞ்சாமை பேதைமை என்று வள்ளுவர் சொல்லியும் அதைக் கடைப்பிடிக்காத காரணத்தால் குளிரால் தாக்குண்டேன். பிறகென்ன இரண்டு கம்பளிகளை இழுத்துப் போர்த்திக்கொண்டு சற்று நேரம் படுத்திருந்த பிறகு சரியாயிற்று.

   மறுநாள் மதியம் கொஞ்சம் வெப்பநிலை கூடியதை அறிந்து வீட்டிற்கு முன்னால் சற்றே நின்றோம். அடுத்த நொடியில் ஆயிரம் தேள்கள் கொட்டியது போல உணர்ந்தோம். அவ்வளவு குளிர்! இருந்தாலும் துன்பம் வருங்கால் நகுக என்னும் குறள்மொழிக்கேற்ப என் சம்பந்தியும், என் துணைவியாரும் முகம் மலர எனது காமிராமுன் நின்றார்கள்.

   கடும் பனிப் பொழிவு காரணமாக சாலை பல ஊர்களில் விபத்துகள் ஏற்பட்டன. சில நாள்களுக்கு முன் எங்கள் குடியிருப்புக்கு அருகில் அமைந்துள்ள சாலையில் 135 வாகனங்கள் ஒரே சமயத்தில் ஒன்றன் பின் ஒன்றாக மோதிக்கொண்ட கோர விபத்தில் பத்து பேர் உயிரிழந்தனர்; மிகப் பலருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது.

     வெளியில் உறைய வைக்கும் குளிர் காற்று வீசுவதால் வீட்டின் மின்சாரத் தேவை இரு மடங்காக அதிகரிக்கும். முழு வீட்டையும் சூடாக்க எவ்வளவு மின்சாரம் தேவைப்படும்! எனவே சுழல் முறையில் மின்சாரம் பகிர்ந்து அளிக்கப்படுகிறது. இதன் காரணமாக மின்தடை என்பது தவிர்க்க முடியாத ஒன்று என ஆகிவிட்டது. இந்த இக்கட்டானச் சூழலைச் சமாளிக்கும் வகையில் பலரும் இப்போது தங்கள் உறவினர், நண்பர் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

  இந்த நெருக்கடியான சூழல் சீராகும் வரையில் மின்சாரத்தையும் நீரையும் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டுமென மாநில அரசு வேண்டுகோள் விடுக்கிறது. அவ் வேண்டுகோளை ஏற்று நாங்களும் சிக்கன முறைகளைக் கையாள்கின்றோம். மின் சாதனங்களின் பயன்பாட்டைப் பாதியாகக் குறைத்து விட்டோம். இனி வாரத்தில் இருநாள் குளியல்தான்!

     மின்சாரம் இல்லாமல் அமெரிக்காவில் ஒரு மணி நேரம் கூட தாக்குப் பிடிக்க முடியாது. பெரும்பாலான வீடுகளில் அடுப்பு உட்பட அனைத்துக் கருவிகளும் மின்சாதனங்களே. சில தனி வீடுகளில் எரிவாயு அடுப்புகள் உண்டு. அவசரத்திற்கு கார் கொட்டகையில் உள்ள காரை வெளியே எடுக்க முடியாது. அந்தக் கொட்டகையின் கதவுகள் கூட மின்சாரத்தில் இயங்குபவை! நம் ஊரில் இருக்கும் ஜெனரேட்டர், யுபிஎஸ் முதலியவற்றை இங்கே யாரும் வைத்துக்கொள்வதில்லை. காரணம் மின்தடை என்பது இங்கே எந்தக் காலத்திலும் இருந்ததில்லை.  

      வெப்பம் உறைநிலைக்கு இருபது டிகிரிக்கும் கீழே செல்வதால் வீட்டுக் குழாய்களில் தண்ணீர் வருவதில்லை. குழாய்களில் உள்ள நீர் பனிக்கட்டியாக மாறி விடுகிறது. சில சமயம் குழாய் தானாக உடையும். பல்வேறு முறைகளைக் கையாண்டு நீர் வரச் செய்வது வீட்டில் உள்ள ஆண்மக்களின் வேலையாக இருக்கும்.

     வீட்டில் சமைக்க முடியாத நிலையில் வெளியில் சென்று வாங்கலாம் என்று,  விண்வெளிக்குச் செல்லும் மனிதரைப் போல உடையணிந்து போனால் எந்த உணவு விடுதியும் இயங்குவதில்லை.

  சுற்றுச் சூழலை நொடிப் பொழுதில் தலைகீழாக மாற்றி மனிதனைக் கையை பிசைந்துகொண்டு உட்காரச் செய்து விடுகிறது இயற்கை. ஆனால் ஜன்னலை இலேசாகத் திறந்து பார்த்தால் தெரியும். இந்தக் கடும் குளிரிலும் சிட்டுக்குருவிகள் பறந்து திரிந்து இயற்கையில் கிடைப்பதை உண்டு வழக்கம்போல் இயங்குகின்றன!

      இயற்கையை அழித்து, வசதிகளைத்  தேவைக்கு அதிகமாகப் பெருக்கித் தலைகால் புரியாமல் அனுபவித்துவிட்டு, அந்த வசதிகளை இயற்கைச் சீற்றத்தால் இல்லை இல்லை இயற்கைச் சீரழிவால் இழந்து கையும் ஓடாமல் காலும் ஓடாமல் தவித்துக் கிடக்கும் ஒரே இனம் மனித இனம்தான்!

   ஆம். ஆறறிவு உள்ளவன் முடங்கிக் கிடக்கிறான்! ஐயறிவு உள்ளவை ஆனந்தமாய்த் திரிகின்றன!

 

முனைவர் .கோவிந்தராஜூ

துச்சில்: அமெரிக்கா

12 comments:

  1. நாங்களும் பார்த்தோம் தங்களது கட்டுரை வாயிலாக. அருமை மகிழ்ச்சி 🙏

    ReplyDelete
  2. மிகச் சிறந்த முறையில் பதிவு செய்த உங்களை மனமாற வாழ்த்துகிறேன்

    ReplyDelete
  3. அருமை ஐயா. நமக்கு ஆறறிவு என்பதை விட நமக்கு புல்லறிவு என்பது தான் உண்மை. இயற்கையை கணிக்க முடியாத நாம் ஆறறிவு பெற்றுள்ளோம் என்பதை மறந்து விடவேண்டும் ஐயா.

    ReplyDelete
  4. இயற்கையில் அனைத்து உயிர்களுமே தங்களுக்குத் தேவையான உண்வைத் தேடிக்கொள்கின்றன. மழைக்காலம் முடிந்து தொடங்கும் குளிர்காளங்களில் மரங்கள் தங்களது இலைகளை உதிர்த்து கோடை வரும் முன் கொடை கொடுப்போம் என்பதைப் போல மண்ணின் ஈரம் நீடிக்கச்செய்கின்றன.ஆனால் மனதனுக்கு இயற்கையில் வரவேண்டிய அறிவு எங்காவது சென்று கற்றுப் பெறவேண்டிய நிலையில் உள்ளது. ராசேந்திரசோழன் கடலில் கப்பல் புரட்சி செய்த காலத்தில் அவர்கள் தங்களை முழுவதும் இயற்கையோடு ஈடுபடுத்திக்கொண்டது தான் அவர்கள் உலகாண்ட வெற்றியின் காரணம். ஆனால் இன்று இருக்கும் தலைமுறை வெளியே சென்று வீடு திரும்பவே Google maps தேவைப்படுகிறது. பல ஆயிரம் மைல்கள் வரும் பறவைகள் ஆறறிவு பெற்றவையா அல்லது பக்கத்து ஊருக்கு Google maps போட்டுப்பயணிக்கும் நாம் ஆறறிவு கொண்டவர்களா என்பது எனது ஐயம். சிந்தனையைத் தூண்டும் பதிவைச் செய்ய தாங்கள் எடுத்த முயற்சிக்கு நன்றி ஐயா

    ReplyDelete
  5. You are looking like a Bollywood hero in your winter-dress.

    ReplyDelete
  6. செய்திகள் வியக்க வைக்கிறது ஐயா.

    ReplyDelete
  7. எனது தோழியும் டெக்ஸாஸ் பகுதியில் தான் இருக்கிறார். அவர் வழியேயும் படங்களும் தகவல்களும் அறிந்தேன்.

    கவனமாக இருங்கள் ஐயா.

    ReplyDelete
  8. கவனமாக இருங்கள் சார்.
    படிக்கவே பிரம்மிப்பாக இருக்கிறது.

    ReplyDelete
  9. கவனமாக இருக்கவேண்டுகிறேன்.

    ReplyDelete
  10. விவரிப்பு வியப்பு அளிக்கிறது ஐயா...

    ReplyDelete
  11. Good to see the images sir and be safe sir

    ReplyDelete