Friday, 15 January 2016

தமிழை மறக்கும் தமிழர்

   இன்று பொங்கல் விழா. தமிழருக்கே உரிய தமிழர் திருநாள். தமிழன் என்றொரு இனமுண்டு தனியே அவனுக்கொரு குணமுண்டு என்று பாடிய நாமக்கல் இராமலிங்கம் இன்று காலை என்னுடன் நடைப் பயிற்சிக்கு வந்திருந்தால் நாக்கைப் பிடுங்கிக்கொண்டு செத்திருப்பார்.


    மானத்தோடு வாழ்ந்த மறத்தமிழன் இன்றைக்கு மரத்தமிழன் ஆகிவிட்டான். கொங்கு வட்டார வழக்கில் சொல்வதென்றால் ஒணத்தி இல்லாத தமிழன் ஆகிவிட்டான். தமிழ் நாட்டுத் தமிழர்களுக்குச் சூடும் இல்லை சுரணையும் இல்லை என்று இலங்கைவாழ் தமிழரும் மலேசியத் தமிழரும் நம் காதுபடவே பேசுகிறார்கள்.

    சுப்பனும் குப்பனும் தமிழர்கள், ஆனால் அவர்களுடைய குழந்தைகள் அவர்கள் படிக்கும் பள்ளியில் தவறியும் தமிழில் பேசிவிட முடியாது; மீறி பேசினால் தண்டனை உண்டு. அந்தப் பள்ளிதான் சிறந்த பள்ளி என்று சுப்பனும் குப்பனும் சொல்லித் திரிகிறார்கள்.

    தமிழன் நடத்தும் கடைப்பெயர் தமிழில் இல்லை; விற்கும் பொருள் பட்டியல் தமிழில் இல்லை. பற்றுச்சீட்டு கொடுப்பதில்லை; கொடுத்தாலும் அது  தமிழில் இல்லை.

      தமிழாசிரியர் உட்பட அனைவரும் ஆங்கிலச் சொற்களைக் கலந்தே பேசும் அலங்கோலம் தமிழ் நாடு முழுவதிலும் காணப்படுகிறது. படிக்காதவர்களும் ஆங்கிலம் கலந்தே பேசுகிறார்கள். தமிழையும் ஆங்கிலத்தையும் கலந்து தமிங்கலம் பேசுகிற கேவலத்தை வேறு எங்கும் காண முடியாது. படித்தவன் தெரிந்து பேசுகிறான்; படிக்காதவன் தெரியாமல் பேசுகிறான். வேறுபாடு அவ்வளவுதான். 

   ஒரு நிமிடம்  நேரம் ஆங்கிலக் கலப்பு இல்லாமல் பேசுவதற்கு ஒரு போட்டி; அதற்குப் பரிசு வேறு. போட்டி யாருக்கு? தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட  தமிழருக்கு. அப் போட்டி எங்கே நடக்கிறது? கோடை பண்பலை வானொலியில் நடக்கிறது. ஒரு மணி நேரம் நடக்கும் போட்டியில் ஐம்பது பேர் பங்கேற்கிறார்கள்; ஒரு நிமிடம் முழுவதும் தமிழில் பேசி வெற்றி பெறுவார் எவருமிலர். அவமானமாக இருக்கிறது.

    பெயருக்கு முன்னால் ஆங்கிலத்தில் தலைப்பெழுத்திடும் மோசமான கலாச்சாரம்லகில் தமிழனைத் தவிர வேறு எந்த மொழிக்காரனிடத்தும் இல்லை.  எந்த ஆங்கிலேயனாவது  க.மா. Isac Joseph என்று எழுதுகிறானா? நாம் மட்டும் P.N. நடேசன் என்று ஏன் எழுத வேண்டும்?

    எத்தனைத் தமிழர் தமிழில் கையொப்பம் போடுகிறார்? ஆங்கிலத்தில் கையொப்பம் போடுவது பெருமையா? உண்மையில் அது சிறுமை. தமிழக அரசு ஊழியர் தமிழில்தான் கையொப்பம் இட வேண்டும் என்பதற்கு ஓர் ஆணை பிறப்பிக்க வேண்டிய அவல நிலையும் தமிழ் நாட்டில்தான் ஏற்பட்டது. அந்த ஆணையை மதித்துத் தமிழில் கையொப்பம் இடுவதை ஒரு சிலரே கடைப்பிடிக்கின்றனர். என்னே அறியாமை!

A.S.K இல்லத் திருமணம் என்று பதாகை வைப்பவனும் தமிழன்தான். தமிழன் தன் வீட்டுக்கு அன்பு இல்லம் என்று பெயர் வைத்தாலும் அதை Anbu Illam என ஆங்கிலத்தில்தானே எழுதி வைக்கிறான்?

    நம் குழந்தைகளிடத்தில் “ எங்கே ஒரு இங்கிலீஷ் ரைம் சொல்லு” எனக் கேட்டு மகிழ்ந்து போகிறோம். நான்கு திருக்குறளை அல்லது ஒளவையின் ஆத்திசூடியைச் சொல்லச் சொல்கிறோமா? இல்லையே. ஆங்கிலேயனுக்கு அடிமைப்பட்டுக் கிடந்ததுபோய் இப்போது ஆங்கிலத்திற்கு அடிமைப்பட்டுக் கிடக்கின்றோம்.

   நமது திரைப்படங்களும் தொலைக்காட்சிகளும் இன்னும் மோசம். திரையிசைப் பாடல்களில் ஆங்கிலக் கலப்பிற்கு அளவே இல்லை. தமிழில் பேசிப் பேசியே ஆட்சிக்கு வந்தவர்களின் தொலைக்காட்சியிலும் நாளேடுகளிலும் எத்தனை எழுத்துப் பிழைகள்! அருவறுக்கத் தக்க ஆங்கிலக் கலப்படம்!.

      இவர்களெல்லாம் அரிசியைச் சமைத்துச் சாப்பிடுகிறார்களா அல்லது அரிசியுடன் கற்களையும் கலந்து சமைத்துச் சாப்பிடுகிறார்களா?


     இப்படியெல்லாம்  இன்று சிந்திக்கவும் எழுதவும் காரணமாக இருந்தவை காலை நடைப் பயிற்சியின்போது நான் பார்த்த கோலங்கள்தாம். ஐம்பது வீடுகளின் முன் ஐம்பது கோலங்களைப் பார்த்தேன். அவற்றுள் நாற்பத்தெட்டு என்னவோ அலங்கோலங்கள்; இரண்டே இரண்டு கோலங்கள். நாற்பத்தெட்டு வீட்டுப் பெண்மணிகள், அதுவும் தமிழ்ப் பெண்மணிகள் கோலம்போட்டு கூடவே Happy Pongal என்று எழுதி வைத்திருந்தார்கள். இரண்டு பெண்மணிகள் மட்டும் கோலம்போட்டு இனிய பொங்கல் வாழ்த்துகள் என எழுதியிருந்தார்கள். அதனால்தான் அலங்கோலங்கள் கோலங்கள் என வகைப் படுத்தினேன். அந்த இரண்டு பெண்மணிகளையும் அழைத்துப் பாராட்டி மகிழ்ந்தேன்.

    ஆக, தமிழரின் உடையும் கெட்டது; உணவும் கெட்டது; உணர்வும் கெட்டது.

       இவற்றை மீட்டெடுக்க வேண்டாமா? சிந்திப்போம்; செயல் படுவோம்.

வலைப்பதிவர் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்!



   
     

     .  

6 comments:

  1. நல்ல சிந்தனைப் பதிவு. நன்றி.

    ReplyDelete
  2. அனைவரும் உணர வேண்டிய கருத்துகள்...

    இனிய தமிழர் தின நல்வாழ்த்துகள்...

    ReplyDelete
  3. தமிழர்கள் தமிழை மறந்து நீண்ட... நெடுங்காலமாகிவிட்டது. தங்களது கோபம் நியாயமானது தான். தமிழர் திருநாள் என்று கூறும் பொங்கல் திருநாளில் “பொங்கல் என்பதற்குப் பதில் பொங்கள்” என்று குறிப்பிடாமல் "PONGAL"என ஆங்கிலத்திலாவது குறிப்பிடுகின்றனரே என நினைக்க வேண்டி உள்ளது. எதிர்காலச் சந்ததியினர் பொங்கல் திருநாளை விடுமுறை நாளாகக் கருதாமல் பொங்கல் வைத்துக்கொண்டாடும் வரை மொழிக்கான அடையாளம் அழியாது. HAPPY PONGAL என்று கோலப்பொடியில் எழுதிய எழுத்தின் மீது நாய் நின்று பார்ப்பதைத் தங்கள் நிழற்ப்படக்கருவி சரியாகப் பதிவு செய்துள்ளது. வலைப்பதிவைப் பார்ப்பவர்கள் தங்களைப் போன்று தவறுகளைச் சுட்டுபவர்களாக மாறட்டும்.

    ReplyDelete
  4. தமிழர்கள் தமிழை மறந்து நீண்ட... நெடுங்காலமாகிவிட்டது. தங்களது கோபம் நியாயமானது தான். தமிழர் திருநாள் என்று கூறும் பொங்கல் திருநாளில் “பொங்கல் என்பதற்குப் பதில் பொங்கள்” என்று குறிப்பிடாமல் "PONGAL"என ஆங்கிலத்திலாவது குறிப்பிடுகின்றனரே என நினைக்க வேண்டி உள்ளது. எதிர்காலச் சந்ததியினர் பொங்கல் திருநாளை விடுமுறை நாளாகக் கருதாமல் பொங்கல் வைத்துக்கொண்டாடும் வரை மொழிக்கான அடையாளம் அழியாது. HAPPY PONGAL என்று கோலப்பொடியில் எழுதிய எழுத்தின் மீது நாய் நின்று பார்ப்பதைத் தங்கள் நிழற்ப்படக்கருவி சரியாகப் பதிவு செய்துள்ளது. வலைப்பதிவைப் பார்ப்பவர்கள் தங்களைப் போன்று தவறுகளைச் சுட்டுபவர்களாக மாறட்டும்.

    ReplyDelete
  5. Really true. Prof.Pandiaraj

    ReplyDelete