Thursday, 15 March 2018

புத்துணர்வு தரும் பூங்கா

     ஒரு நூறு ஏக்கர் பரப்பில், அதுவும் நகரின் நடுவில், ஓர் அழகான தாவரவியல் பூங்கா அமைந்துள்ளது என்னும் செய்தியை நம்பாமல்தான் அங்கு போனேன். நம்பினேன் நேரில் பார்த்தபின்.

   கண்டு களிக்கும் பூங்கா என எண்ணிச் சென்றேன். சென்றபின்தான் தெரிந்து கொண்டேன். அது கண்டு களிக்கும் பூங்கா மட்டுமன்று கண்டு கற்கும் பூங்காவும் கூட. ஆம், எல்லா வயதினரும் குறிப்பாக மாணவ மாணவியர் கற்றுக் கொள்ளும் வகையில் ஆங்காங்கே கட்செவி துணைக்கருவிகளை அமைத்துள்ளனர். ஒரு மாணவர் அவை அனைத்தையும் பொறுமையாகப் பார்த்துப் படித்து, கேட்டு மனத்தில் பதிந்தால், அவர் இயற்கையை நேசிக்கும் நற்குடிமகனாக உருவாவது உறுதி. இத்தகைய ஏற்பாடுகள் நம் நாட்டில் உள்ள தாவரவியல் பூங்காக்களில் இல்லையே எனும் ஏக்கப் பெருமூச்சும் உடன் எழுந்தது.

    வாட்டும் கடுங்குளிர் குறைந்து வசந்த காலம் தொடங்கி விட்டதால், பூங்காவில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. கூட்டம் கூட்டமாக அமர்ந்து உண்டு உரையாடுவோர் ஒரு பக்கம். நன்னீர் குட்டைகளில் வாழும் ஆமை, வண்ண மீன்களைக் கண்டு களிப்போர் இன்னொரு பக்கம். புல் தரைகளில் பந்து விளையாடி மகிழ்வோர் பிறிதொரு பக்கம். மிகுதியான கூட்டமாக இருந்தாலும் அது தகுதியான கூட்டமாக இருந்தது. உண்டு முடித்தோர் மிச்சம் மீதிகளை உரிய இடத்தில் மட்டுமே போட்டார்கள். நெகிழிப் பொருள்கள் பயன்பாட்டில் எந்தத் தடையும் இல்லை. ஆனால் அவை கண்ட இடங்களில் போடப்படுவதில்லை. அப்படியொரு சமூக உணர்வு பொதுமக்களிடையே காணப்பட்டது.
   

 கண்ணைக் கவரும் பூக்கள் கணக்கின்றிப் பூத்துக் கிடக்கின்றன. ஆனால் யாரும் பறிப்பதில்லை; தொடுவதும் இல்லை. அப்படியொரு பொதுக் கட்டுப்பாடு பொதுமக்களிடையே காணப்படுகிறது. இங்கே மகளிர் தம் கொண்டையில் பூச்சூடும் வழக்கமில்லை என்பதும் ஒரு காரணமாக இருக்குமோ?

   பூங்காவின் ஒரு பகுதியில் வீட்டுத் தோட்டம் அமைப்பது பற்றிய இலவச பயிற்சிக் கூடமும் அமைந்துள்ளது. கோஸ், காலிஃபிளவர் முதலியன அங்கு செழித்து வளர்ந்து நிற்கின்றன.

   அரிய வகைத் தாவரங்களை தட்ப வெப்ப கட்டுப்பாட்டுக் கூடாரங்களில் வைத்துப் பாதுகாக்கும் தனிப்பிரிவு உள்ளது. பயிற்சிப் பட்டறைகளை நடத்த வசதியாக உள்ளரங்கு ஒன்றும் உள்ளது.

   ஒரு செய்தி. ஆனால் நீங்கள் நம்பமாட்டீர்கள். இந்தப் பூங்காவில் திருமணம், பிறந்தநாள் விழா போன்றவை நடந்த வண்ணம் உள்ளன. சுமார் நூறு பேர்கள் கூடும் அளவுக்கு ஒளி, ஒலி, இருக்கை போன்ற எல்லா வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. அமெரிக்கர் பூங்காவில் திருமணம் செய்து கொள்வதைப் பெருமையாகக் கருதுகின்றனர்.
  

  வண்ணப் பூச்செடி முதல் வானை முட்டும் மரங்கள் வரை இங்கே நாம் காண முடியும். அனைத்துக்கும் விவரங்கள் எழுதப்பட்டுள்ளன. இங்கே பறந்து திரியும் பறவைகள் பல வகையின. அவை எழுப்பும் ஒலிகளைப் பதிவு செய்து ஒரு பொத்தானை அழுத்தினால் கேட்கும் வகையில் ஏற்பாடு செய்துள்ளனர்.
  

  இந்தப் பூங்காவிற்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. இங்கு நடப்பெற்றுள்ள மரங்கள், போடப்பட்டுள்ள இருக்கைகள் எல்லாம் பொதுமக்களின் பங்களிப்பு ஆகும். இப் பூங்காவைப் பராமரிப்பதற்கு ஒரு தன்னார்வலர் குழுவும் செயல்படுகின்றது!
   
Green snake

  1933 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட இப் பூங்கா ஆட்சி மாற்றங்களால் இதன் மாட்சி பெருகியது என்பதே வரலாறு. நம் ஊரில் ஓர் ஆட்சியில் உருவானது அடுத்த ஆட்சியில் என்ன ஆகும் என்பது நமக்குத் தெரியுமே. இதற்கு சென்னை வள்ளுவர் கோட்டமும், பூம்புகாரும் சான்றாக உள்ளன.

    பூங்காவில் நடந்து திரிந்த களைப்பு அறவே இல்லை. அதற்கு இரண்டு காரணங்கள்: ஒன்று பூங்காவின் அமைப்பு அப்படி. இன்னொன்று என் துணைவியாரும், என் நண்பரின் துணைவியாரும் தயாரித்துக் கொண்டுவந்த விதவிதமான, சுவையான உணவு மற்றும் தின்பண்டங்கள்.

முனைவர் அ.கோவிந்தராஜூ,
அமெரிக்காவிலிருந்து.




10 comments:

  1. என்ன அழகான பூங்கா! ஆம் ஐயா! அங்கு எல்லாமே மிகவும் திட்டமிட்ட முறையில் இயங்குகின்றன. மக்களும் பொது நல விழிப்புணர்வுடன் இருக்கின்றார்கள். சிறு வயது முதலே அது அவர்களிடம் ஊறிவிடுகிறது. செய்வதைத் திருந்தச் செய் என்பது அங்கு காணலாம். பூங்கா இங்கு இப்படி இல்லையே என்ற வருத்தம் எனக்கும் அடிக்கடி எழுவதுண்டு...ஐயா...மற்றொன்றும் நான் கவனித்ததுண்டு அங்கு நடந்தால் அத்தனை களைப்பாக உணர்வதில்லை...என்ன காரணம் என்று தெரியவில்லை..

    நான் இருந்த பகுதியிலும் பூங்கா, அங்கும் குருவிகள், ஆமை என்று விலங்குகள், பறவைகள் எல்லாம் இருந்தன. அங்கேயே அவற்றிற்கான உணவும் விற்பார்கள் நாம் அதை வாங்கிக் கொடுக்கலாம்...என் மகன் தன் கையில் வைத்திருக்க அதைப் பறவைகள் வந்து கொத்திச் சென்றது அழகு! இப்படி இயற்கையுடன் அவர்கள் ஒன்றித்தான் இருக்கிறார்கள்.

    நல்ல அனுபவம் ஐயா உங்கள் அனுபவம். படங்கள் அருமை பச்சைப்பாம்பு உட்பட....அழகு...

    கீதா

    ReplyDelete
  2. நம் ஊரில் ஓர் ஆட்சியில் உருவானது அடுத்த ஆட்சியில் என்ன ஆகும் என்பது நமக்குத் தெரியுமே. இதற்கு சென்னை வள்ளுவர் கோட்டமும், பூம்புகாரும் சான்றாக உள்ளன.//

    மிக மிக உண்மை...இதுவும் ஒரு முக்கியமான காரணம் நம் ஊரின் வளங்கள் பாதுகாக்க்ப்படாமைக்கு...அங்கெல்லாம் அப்படிக் கட்சி சார்ந்து பார்ப்பதில்லை. எல்லோருமே நாடு நம்நாடு என்ற ரீதியில் யோசிப்பதால்....நல்லன பல நடக்கின்றது...

    கீதா

    ReplyDelete
  3. நாங்களும் களைப்பின்றி உங்களோடு வந்த உணர்வு.

    ReplyDelete
  4. நம் ஊரை நினைத்து ஏக்கம் தான் வருகிறது...

    ReplyDelete
  5. Sir, Very good message for students and Teachers. Thank you Sir.

    ReplyDelete
  6. Sir, Very good message for students and Teachers. Thank you Sir.

    ReplyDelete
  7. When will our country become like this ? Yearning for that day! Dr S T Gunasekhar Karur.

    ReplyDelete
  8. When will our country become like this ? Yearning for that day! Dr S T Gunasekhar Karur.

    ReplyDelete
  9. தங்களால் நாங்களும் பூங்காவைக் கண்டு மகிழ்ந்தோம் ஐயா
    நன்றி
    இத்தகைய ஏற்பாடுகள் நம் நாட்டில் உள்ள தாவரவியல் பூங்காக்களில் இல்லையே எனும் ஏக்கப் பெருமூச்சும் உடன் எழுந்தது.
    உண்மைதான் ஐயா

    ReplyDelete
  10. நகரின் நடுவில் நூறு ஏக்கர் பரப்பில் விளை நிலம் இருந்தால் தமிழ்நாட்டில் என்ன நடக்கும்? ரியல் எஸ்ட்டேட் அதிபர்கள், அரசியல்வாதிகள் என்று எல்லோரும் கபளீகரம் செய்யப் பார்ப்பார்கள். ஆனால் இங்கு பொதுமக்களும் தன்னார்வத் தொண்டர்களும் இணைந்து பூங்கா அமைத்த செயல் வியப்பிலும் வியப்பு. எல்லா வயதினரும் கண்டு கற்கும் (கண்டு களிப்பது மட்டும் அல்ல) விதத்தில் பூங்கா அமைந்துள்ளது புதிய செய்தி. கட்டுரை முழுதும் நம்பமுடியாத, ஆனால் நம்பியே ஆக வேண்டிய பல செய்திகள் உள்ளன. இதன்மூலம் நம்முடைய அரசாங்கமும், சமுகமும், பொதுமக்களும் குடும்பங்களும் பல பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம் அல்லவா!

    ReplyDelete