Saturday, 14 February 2026

காதலர் தினத்தை இப்படிக் கொண்டாடுங்கள்

     நேற்று இரவு பன்னிரண்டு மணியளவில் தொடர்ந்து வேட்டுச் சத்தம் கேட்டது. இன்று காலையில் விசாரித்தபோது தெரிந்தது – காதலர் தினத்தை அப்படி வரவேற்றார்களாம்!

உடம்பொடு உயிரிடை என்னமற்று அன்ன

மடந்தையொடு எம்மிடை நட்பு.  (குறள் 1122)

    இந்தக் குறளை ஒரு தேராக உருவகப்படுத்தினால் அதன் அச்சாக விளங்குவது நட்பு என்னும் சொல்.

    கணவன் மனைவி உறவு என்பது தொடக்கத்தில் காமம் கலந்ததாகவே இருக்கும். வயது கூட கூட, காம உணர்வு குறைந்து பின்னர் முற்றாக மறையும். அப்போது துளிர்க்கும் நட்புணர்வு அலாதியானது; அருமையானது. கண்களால் பேசும் காலம் அது. ஒருவர் துன்பத்தை மற்றவர் காணும்போது கண்களில் துளிர்க்கும் ஒரு சொட்டுக் கண்ணீர் என்பது புனிதமான நட்பின் உருவம். அதனால்தான் இந்தக் குறளில் நட்பு என்னும் சொல்லை வைத்துக் கொண்டாடுகிறார் திருவள்ளுவர். எனவே காதலர் தினத்தைக் கொண்டாடுவோர் முதலில் இக் குறளின் பொருளறிந்து கொண்டாட வேண்டும்.

    காதல் திருமணமோ, பெற்றோர் செய்து வைத்த திருமணமோ எதுவாயினும் அது மண முறிவு, கணவனால் கைவிடப்படல் போன்ற பிரிவினையை எப்போதும் ஏற்காது. அதனால்தான் உயிருக்கும் உடம்புக்குமான தொடர்பை கணவன் மனைவியிடையே உள்ள உறவுக்கு உவமையாக்குகிறார்.  உயிரும் உடம்பும் பிரிந்து தனித்தனியே வாழ முடியுமா? ஒருபோதும் முடியாது.

    இதில் இன்னொரு நுட்பம் உள்ளது. உடம்புக்கு ஒரு துன்பம் என்றால் உயிர் வாடும்; உயிருக்கு ஒரு துன்பம் என்றால் உடல் வருந்தும். அவ்வாறே கணவனுக்கு ஒரு துன்பம் என்றால் மனைவி மனம் வாடுவாள்; மனைவிக்கு ஒரு துன்பம் என்றால் கணவன் துடித்துப் போவான். இப்படி ஒருவர் மற்றவருக்காக உருகி வருந்தும் உணர்வோடு வாழ எண்ணுவோர் காதலர் தினத்தோடு சேர்ந்து இந்தக் குறளையும் கொண்டாட வேண்டாமா?

      இந்த உவமையின் பின்னணியில் மேலும் ஒரு நுட்பம் உள்ளது. அது என்ன? ஓர் உடம்புக்கு ஓர் உயிர்தான்; அதேபோல் ஓர் உயிருக்கு ஓர் உடம்புதான்! ஓர் உடம்புக்குள் இரண்டு உயிர்கள் என்பதும், ஓர் உயிருக்கு இரண்டு உடம்புகள் என்பது எக்காலத்தும் சாத்தியமில்லை. ‘நான் மட்டும் உனக்கு, நீ மட்டும் எனக்கு’ என்னும் வரைமுறை கடவாது வாழும் கணவன் மனைவிக்கிடையே எக்காலத்தும் சிக்கல் தோன்றாது. பிறன்மனை நோக்காத பெருங்குணம் இருவரிடத்தும் அமையுமாயின், அக் குடும்பம் இறுதிவரை இன்பப் பூஞ்சோலையாகத் திகழும்.

 

   இந்தக் குறளின் வரிசை எண்ணைக் கவனித்தீர்களா? 11 22. இருபத்து இரண்டில் பாதி 11. என்னில் பாதி அவள் என்னும் உணர்வு அவனுக்கும், என்னில் பாதி அவன் என்னும் உணர்வு அவளுக்கும் வந்துவிட்டால் எல்லாம் இன்ப மயம்!

 காதலர் தினத்தைக் கொண்டாடுவோர்க்கு ஓர் அன்பு வேண்டுகோள்.

 காதலர் தினத்தை வள்ளுவர் வழியில் கொண்டாடுங்கள்.

 

முனைவர் அ.கோவிந்தராஜூ, கரூர்.

No comments:

Post a Comment