தூக்கணாம் குருவிக் கூட்டினை
உற்றுப் பார்த்தால்தான் தெரியும் அக் குருவியின் உழைப்பு எத்தகையது என்று. தேன்
கூட்டினை ஆராய்ந்து பார்த்தால்தான் தெரியும் தேனீக்களின் கூட்டுழைப்பு எவ்வளவு
மேலானது என்று.
நாம் வியந்து நோக்கும் உலக
அதிசயங்கள் எல்லாமே ஜீ பூம்பா என்று சொன்ன மாத்திரத்தில் உருவானவை அல்ல.
அத்தனையும் மனிதனின் மூளை உழைப்பாலும் உடல் உழைப்பாலும் உருவானவை.
ஓர் உ.வே.சா உழைக்காமல்
இருந்திருந்தால் நம் சங்க இலக்கியங்கள் காணாமல் போயிருக்கும். ஒரு ஜி.யு.போப் உழைக்காமல்
இருந்திருந்தால் திருக்குறளின் சிறப்பும், திருவாசகத்தின் பெருமையும் வெளி
உலகுக்குத் தெரியாமல் கிடந்திருக்கும்.
கனியும் கிழங்கும் தானியமும்
கணக்கின்றி கிடைக்கிறதே எப்படி? உழவன் உழைப்பதால்தான் அவை கிடைக்கின்றன.
ஆனால் கடந்த ஒரு நூற்றாண்டில்
உழைப்பில் ஆர்வமில்லாத ஒரு சமுதாயம் மெல்ல உருவாகி வருவதை யாரேனும் எண்ணிப்
பார்த்ததுண்டா?
இது குறித்துச் சிந்தித்தவர் மகாத்மா
காந்தியடிகள். உழைக்காமல் உண்பவன் திருடன் என்று சினம்பொங்கச் சொன்னவர் அவரே. அவர்
நிறுவிய ஆசிரமங்களில் வசிக்கும் அனைவரும் உழைத்தே ஆக வேண்டும் என்பதில் அவர்
உறுதியாக இருந்தார்.
அவருடைய கழிப்பறையை அவர்தான்
சுத்தம் செய்தார். அவர் உடுத்திய உடைகளுக்குத் தேவையான நூலை அவரே நூற்றார்.
படிக்கும்போதே உழைத்துப் பழக வேண்டும் என்பதற்காக பள்ளிக்கான ஆதாரக் கல்வித்
திட்டத்தை வடிவமைத்தார்.
முதலில் நமது பணத்தாளில்
காந்தியின் படம் அச்சிடப்படுவதை நிறுத்த வேண்டும். உழைப்பின் சிறப்பைச் சொன்ன அவருடைய
படம் போட்ட பணத்தாள் கட்டுகள் உழைக்காதவர்களிடத்தில் இன்று குவிந்து கிடக்கின்றன!
இன்றைய நாள் மிகவும் குறிப்பிடத்
தக்க நாள். காந்தியடிகள் மறைந்த நாள். உழைத்துப் பெற்ற விடுதலை என்பதை உணர்த்தும்
தியாகியர் நாளாகவும் அனுசரிக்கப்படும் நாள் இது.
உழைப்பில் பாலின
வேறுபாடு பார்க்கும் அவலமும் நாம் வாழும் சமுதாயத்தில்தான் நிலவுகிறது. காலையில்
எழுந்து கூட்டி வாசல் தெளிக்கும் வேலை பெண்களுக்கு மட்டுமே உரியதாம். இதை நான்
மாற்றி அமைத்துள்ளேன். அந்தப் பணியை அன்றாடம் நான்தான் செய்கிறேன்; மகிழ்ச்சியுடன்
செய்கிறேன்.
டூ
வீலரில் பால்கேனைக் கட்டிக்கொண்டு சென்று ஆண்கள்தாம் பால் விற்க வேண்டுமா என்ன?
நான் வசிக்கும் பகுதியில் பெண்கள் இவ்வேலையை முனைப்புடன் செய்கிறார்கள்!
உழைப்பில்
இழிவில்லை என்பதை அனைவரும் உணர வேண்டும். அண்ணன் சாப்பிட்ட எச்சில் தட்டைத் தங்கைதான்
கழுவ வேண்டுமா? கணவன் சாப்பிட்ட எச்சில் இலையை மனைவிதான் எடுக்க வேண்டும் என்பது
எந்த ஊர் நியாயம்?
உடல்
உழைப்பைத் தானமாகத் தரும் இயக்கம் ஊர் தோறும் உருவாக வேண்டும். இளைஞர்கள் ஒன்று
சேர்ந்து ஞாயிறு தோறும் இரண்டு மணி நேர உடலுழைப்பை ஊர் நன்மைக்காகத் தர வேண்டும்.
இப்படிச் செய்தால் ஊரில் மரங்கள் பெருகி ஊரெல்லாம் பசுமையாக மாறும். காட்டுக்கருவை
மரங்கள் ஒழிந்து சும்மா கிடக்கும் வீட்டு மனைகள் எல்லாம் விளையாட்டுத் திடல்களாக
மாறும்.
மெய்வருத்தக்
கூலி தரும் என்று வள்ளுவன் சொன்ன பிறகும் சோம்பேறிகளாய்க் கிடப்பதில் நியாயமில்லை.
இயலாக்
குழந்தைகளுக்கும் இயலா முதியவர்களுக்கும் உடல் உழைப்பிலிருந்து விலக்களிப்போம்.
மற்றவர்கள் உழைத்தே ஆக வேண்டும்.
“உழைக்கிற நோக்கம் உறுதியாகி விட்டால்
யாரும் யாரையும் கெடுக்கிற நோக்கம்
அறவே மறைந்துவிடும்”
என்னும் பட்டுக்கோட்டை கலியாணசுந்தரத்தின் பாடல்
வரிகளை நினைத்துப் பார்ப்போம். தியாகிகள் நாளான இன்றிலிருந்தே உழைக்கத்
தொடங்குவோம்.
உழைக்காதவர்களிடத்தில் பணம் குவிந்து கிடந்தாலும், அவை பிணமே...
ReplyDeleteஅருமை.
ReplyDeleteஉடல் உழைப்பு தானம்.. பின்பற்றத் தக்க நல்ல செயல். அன்னலின் நினைவு நாள் கட்டுரையும் கருத்தும் அருமை ஐயா.
ReplyDeleteஉண்மை ஐயா உண்மை
ReplyDeleteஅருமை
அருமையான கருத்துக்கள். நீங்கள் எதிலுமே எடுத்துக்காட்டுத்தான். நீதிபதி மூ.புகழேந்தி
ReplyDeleteஅருமையான கருத்துக்கள். நீங்கள் எதிலுமே எடுத்துக்காட்டுத்தான். நீதிபதி மூ.புகழேந்தி
ReplyDeleteஉடல் உழைப்பைத் தானமாகத் தரும் இயக்கம் ஊர் தோறும் உருவாக வேண்டும். இளைஞர்கள் ஒன்று சேர்ந்து ஞாயிறு தோறும் இரண்டு மணி நேர உடலுழைப்பை ஊர் நன்மைக்காகத் தர வேண்டும். இப்படிச் செய்தால் ஊரில் மரங்கள் பெருகி ஊரெல்லாம் பசுமையாக மாறும். காட்டுக்கருவை மரங்கள் ஒழிந்து சும்மா கிடக்கும் வீட்டு மனைகள் எல்லாம் விளையாட்டுத் திடல்களாக மாறும். பதிவின் வரிகள் மிகவும் அருமை ஐயா. உழைப்பின் அருமை குறையத்தொடங்கியதால் தான் இன்று நம் நாடு நீரிழிவு நோயில் முதலிடம் பெற்றுள்ளது.
ReplyDeleteசிறந்த சிந்தனை.....
ReplyDeleteமிகச் சிறந்த சிந்தனை. ரூபாய் தாள் ஊழல செய்பவர்களிடமும் இருக்கிறதே..எனவே உங்கள் கருத்து அதாவது காந்தி படம் இல்லாதிருப்பது நல்லது....
ReplyDelete