பணி
நிறைவுக்குப்பின் எங்காவது ஊர்ப்பயணம் செல்ல வேண்டும் என்று நினைத்துக்
கொண்டிருந்தேன். அதற்கு ஏற்றார்போல் கோபியிலிருந்து ஓர் அழைப்பு வந்தது.
கோபி
வேளாளர் விடுதி தொடங்கி நூறாண்டுகள் ஆகின்றன. நூற்றாண்டு விழாவைச் சிறப்பாகக்
கொண்டாடுவது குறித்து ஓர் ஆலோசனைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது விடுதி
நிர்வாகம். 1981 முதல் 1985 வரை அந்த விடுதியின் துணைக் காப்பாளராகவும், 1993 முதல் 2004 வரை வைரவிழா மேனிலைப்பள்ளியின்
தலைமையாசிரியர் என்ற வகையில் அதன் காப்பாளராகவும் பணியாற்றியவன் என்பதால் என்னை அழைத்திருந்தார்கள்.
சென்ற
நூற்றாண்டில் தமிழ் நாட்டிலேயே முதன் முதலாக
1917 இல் பள்ளிக்கென தொடங்கப்பட்ட
விடுதி என்னும் சிறப்புக்குரியது வேளாளர் விடுதியாகும். கோபி மற்றும் அதன்
சுற்றுப் பகுதியைச் சேர்ந்த குப்பாண்டா கவுண்டர் உள்ளிட்ட வேளாளர் பெருமக்கள் தம்
முயற்சியால் ஈட்டிய செல்வத்தைக் கொண்டு அவ் விடுதியை உருவாக்கினார்கள். சாதி, மத
பேதமின்றி எல்லா மாணவர்களும் தங்கிப் படிக்கும் வகையிலும், இலாப நோக்கின்றி
செயல்படும் வகையிலும் ஓர் அற நிறுவனமாக இன்றளவும் செயல்பட்டு வருகிறது.
இவ்
விடுதியில் தங்கிப் படித்த எனது மாணவர் பலர் மிக உயர்ந்த பதவிகளில் உள்ளார்கள். எம்.இரத்தினசாமி
வருமான வரித்துறை ஆணையராக உள்ளார். டாக்டர் க.குழந்தைசாமி தமிழக அரசின் மருத்துவத்
துறை இயக்குநராக உள்ளார். முனைவர் வி.ஜே.சந்திரன் புதுவை மாநிலத்தின் தலைமைக்
காவல்துறை அதிகாரியாக உள்ளார். முனைவர் ஒ.ப.செந்தில்குமார் ஆர்க்கிட் கெமிக்கல்ஸ்
நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானியாக உள்ளார். முனைவர் ஒ.ட்டி.புவனேஸ்வரன் கோவை
கே.எம்.சி.எச் கல்வி நிறுவனங்களின் முதன்மை செயல் அலுவலராக உள்ளார்.
கரூரின்
புகழ்பெற்ற அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் க.கண்ணன், மன நல மருத்துவர் டாக்டர்
கா.செந்தில்வேலன் ஆகியோரும் வேளாளர் விடுதியில் தங்கிப் படித்த எனது மாணாக்கர்களே.
இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போகும்.
8.5.16 மாலை
ஐந்து மணிக்குத் தொடங்கிய கூட்டத்தில் முன்னாள் மாணாக்கர், முன்னாள் காப்பாளர்கள்,
விடுதி நிர்வாகத்தைச் சார்ந்தோர் என முப்பதுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றுச்
சிறப்பித்தனர்.
நூற்றாண்டு
விழா என்ற பெயரில் கூடிக் கலையும் அதே வேளையில் உருப்படியாக தொடர்ந்து நினைக்கும்படியாக,
நிலைக்கும் படியாக இருக்க வேண்டும் என்னும் நோக்கில் சில யோசனைகளைத் தெரிவித்தேன்.
1. 1927 ஆம் ஆண்டில்
காந்தியடிகள் கோபிக்கு வந்தபோது வேளாளர் விடுதியில் சிறிது நேரம் தங்கியிருந்தார்.
அதைக் குறிக்கும் வகையில் விடுதி வளாகத்தில் காந்தியடிகளுக்கு ஒரு சிலையெழுப்பி
கல்வெட்டும் வைக்கலாம்.
2. நூற்றாண்டு விழா
குழந்தைகள் நூலகம் அமைத்துப் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு விடலாம்.
3. நூற்றாண்டு விழா நினைவு நிதியம் ஒன்றை
உருவாக்கி, அதில் வரும் வட்டியில் ஏழை எளிய மாணவர்களை விடுதிக் கட்டணமின்றி இலவசமாகப்
படிக்க வைக்கலாம்.
இவற்றில் முதலாவதாகத் தெரிவித்தக்
கருத்து கூட்டத்தில் எடுபடவில்லை. மற்ற இரண்டு கருத்துகளைப் பலரும் வரவேற்றார்கள்.
1952-53 இல் வைரவிழாப் பள்ளியில்
எஸ்.எஸ்.எல்.ஸி படித்த முன்னாள் மாணவரும், கோபி கலை அறிவியல் கல்லூரியின் முன்னாள்
முதல்வரும், கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தின் முன்னாள் பதிவாளருமான பேராசிரியர்
சிலம்பண்ணன் அவர்கள் வந்து பங்கேற்றுப் பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டது
கூட்டத்தின் தனிப்பெரும் சிறப்பாக அமைந்தது.
எண்பதுகளில் என்னிடம் படித்த பல
மாணவர்களை இக் கூட்டத்தில் சந்திக்க முடிந்தது கூடுதல் மகிழ்ச்சியைத் தந்தது.
வேளாளர் விடுதியில் தங்கி,
வைரவிழாப் பள்ளியில் படித்த மாணவர்கள் தங்கள் தற்போதைய முகவரி, தொலைப்பேசி
விவரத்தை 9443019884 என்னும் அலைப்பேசி எண்ணுக்கு ஒரு குறுஞ்செய்தியாகவோ கட்செவி அஞ்சலாகவோ
அனுப்பினால் அடுத்தக் கூட்டத்தில் தெரிவித்து அவர்களைத் தொடர்பு கொள்ளவும் அழைப்பிதழ்
அனுப்பவும் ஆவன செய்வேன்.
வைரவிழாப் பள்ளியின் நூற்றாண்டு
விழாவை நடத்தி அனுபவப்பட்டவன் நான். நூற்றாண்டு விழா நடத்துவது என்பது ஊர் கூடி
தேர் இழுப்பதைப் போன்றது.
இணைந்து செயல்பட்டால் இனிதே
நடத்தி முடிக்கலாம்.
போற்றுதலுக்கு உரிய முயற்சி
ReplyDeleteமுயற்சி வெல்லட்டும் ஐயா
அவ்விடுதி மாணவன் என்பதில் எப்போதும் எனக்கு மகிழ்ச்சியே.நூற்றாண்டு விழா சிறக்கட்டும் ஐயா.
ReplyDeleteபாராட்டத்தக்கவேண்டிய முயற்சி. தாங்கள் பகிர்ந்த விதம் அருமை.
ReplyDeleteமரம் வைத்துக் மரத்தையும் சட்டமன்ற உறுப்பினரையும் கூர்ந்து கவனிப்பது என்பது ஒரு புதிய யுக்தி. ஒருவர் கண்காணிக்கின்றார் என்றாலே கண்காணிக்கப்படுபவர் விழிப்படைவார். அப்படியானால் தவறு செய்யத் தயங்குவார். முயற்சித்தால் இது வெற்றியைத் தருமென்பதில் ஐயமில்லை. இந்த கண்டுபிடிப்பிற்கு என் பாராட்டுக்கள்.
ReplyDeleteஎன் மகன் தன்மைருத்துவ மாணவன் என்பதை மறந்துவிட்டீர்கள். அவர் பல்லாவரத்தில் ஸ்கேன் சென்டர் வைத்துள்ளார் என்பது உங்களுக்குத் தெரிந்ததே.அவர் ஒரு மருத்துவர் குழுவமைத்து ஒரு வார காலம் உதவிகளை புரிந்துள்ளார். தங்களின் இனிய பண்பு எவரையும் விளக்கவிடாது. நீதிபதி மூ.புகழேந்தி