Sunday 15 May 2016

தேர்தல் மரம்

    கட்செவி அஞ்சலில் கண்டதும் வரும். சில செய்திகள் நம் கருத்தைக் கவர்ந்து சிந்தனையைத் தூண்டும். அந்த வகையில் அண்மையில் வந்த இந்தச் செய்தி என்னை நிமிர்ந்து உட்காரச் செய்தது.

    “தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தலை நினைவு கூரும் வகையில் ஒரு மரக்கன்று நடுவோம். ஐந்து ஆண்டுகள் கழித்து நட்ட மரம் அதிக பலன்கொடுத்ததா அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் அதிக பலன் கொடுத்தாரா என்று பார்ப்போம்.”

     நல்ல விஷயமாயிற்றே என்று நண்பர்களோடு பகிர்ந்துகொண்டேன். எத்தனைப் பேர் அதைக் கவனித்தார்களோ? எத்தனைப் பேர் செடி நடுவார்களோ? நான் நட்டேன் ஒரு சரக்கொன்றை மரக்கன்றை.
tree seedling planted on the Eve of General election 2016

      எங்கள் தெருவில் இல்லத்திற்கு முன்னால் தெருவோரத்தில் ஆழ குழி தோண்டி சரக்கொன்றைச் செடியை நட்டேன். அது வளர்ந்து பூக்கத் தொடங்கிவிட்டால் கொள்ளை அழகாக இருக்கும். சரம் சரமாகத் தொங்கும் பொன்னிறப் பூக்கள் அனைவரையும் சுண்டியிழுக்கும்.

      அடுத்த ஐந்தாண்டுகளுக்கு நட்ட செடியையும், தேர்ந்தெடுக்கப்படும் சட்டமன்ற உறுப்பினரையும் கண்காணிக்க வேண்டும். செடியின் பெயர், தாவரவியல் பெயர், நட்ட தேதி போன்றவற்றையும், சட்டமன்ற உறுப்பினரின் பெயர், முகவரி, அலைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி, தேர்தலின்போது அவர் அளித்த வாக்குறுதிகள் ஆகியவற்றையும் பதிவு செய்துகொள்ள வேண்டும்.

      நட்ட செடி கிளை பரப்பி நிழல்தரும்போது நீரூற்றி எருவிட்டுப் பாராட்டுவோம். அவ்வாறே சட்டமன்ற உறுப்பினர் தொகுதிக்கு ஏதேனும் நன்மை செய்தால் அலைப்பேசியில் தொடர்பு கொண்டு பாராட்டுவோம்.

      ஐந்தாண்டு முடிவில் நட்ட மரம் தந்த  பயனையும், உறுப்பினர் தந்த பயனையும் ஒப்பிட்டுச் சீர்தூக்கிப் பார்க்கவேண்டும்.

      ஒவ்வோர் ஆண்டு நிறைவிலும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி, சட்டமன்ற உறுப்பினரிடம் பின்வரும் கேள்விகளைக் கேட்க வேண்டும்.

1.       வேட்பு மனு தாக்கல் செய்யும்போது உங்கள் சொத்து எவ்வளவு இருந்தது? இப்போது எவ்வளவு உள்ளது?

2.       உங்களுக்கு ஒதுக்கப்படும் தொகுதி நிதி எவ்வளவு? செலவின விவரம் தருக.

3.       சட்டமன்றம் எத்தனை நாள்கள் நடந்தன? நீங்கள் எத்தனை நாள் அவையில் இருந்தீர்கள்? சட்டமன்றத்தில் என்னென்ன கேள்வி கேட்டீர்கள்?

4.       தேர்தலின்போது தொகுதிக்குச் செய்வதாக அளித்த வாக்குறுதிகளில் எவ்வெவற்றை நிறைவேற்றினீர்கள்?

பார்க்கப் பார்க்கதான் மரம் வளர்ந்து பயன்தரும். மரம் மட்டுமல்ல; நாம் தேர்ந்தெடுத்து அனுப்பும் சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இது பொருந்தும்.

     நான் களத்தில் இறங்கிவிட்டேன். நீங்கள்?????????????



      

4 comments:

  1. அண்ணா வணக்கம். எது நடந்தாலும் நடக்காவிட்டாலும் என் தமிழ்ப் பணி தொடரும், அதிலும் ஒரு சமூக பிரக்ஞை இருக்கும் என்கிற வகையில் உங்கள் வலைப்பூ பதிவு அமைந்துள்ளது. பாராட்டுக்கள். நீங்கள் குறிப்பிட்டது போல நமது நாடாளுமன்ற /சட்டமன்ற உறுப்பினர்களை ஆண்டுக்கொரு முறை கேள்வி கேட்கும் மரபினை உருவாக்க வேண்டும்.

    ReplyDelete
  2. ஒரு முன்னுதாரண செயலைச் செய்துள்ளீர்கள். பாராட்டுகள்.

    ReplyDelete
  3. அய்யா நட்ட மரம் பலன் கண்டிப்பாகத் தரும் அதனால் தான் மரத்திற்கு “தரு” எனப் பெயரிட்டனர் நம் முன்னோர்கள். ஆனால் மரத்தை மனிதனோடு அதுவும் அரசியல்வாதியோடு ஒப்பிடுவது ஒரு செய்திக்காக இருக்கலாமே தவிற நிறைவைத் தந்திடாது. அதேசமயம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கு வேண்டுமானால் பயப்படலாம் அதனால் பயன் கிட்டலாம். எல்லா அரசியல்வாதியும் கர்மவீரர் ஆக முடியாது. பூதஉடல் மண்ணில் மறைந்தாலும் புகழுடம்பால் மக்கள் மனதில் வாழ்ந்துகொண்டுள்ளார். ஆலை இல்லா ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை என்பதைப்போல நாமும் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்துக் கடமை ஆற்றத் தவறுவதில்லை.

    ReplyDelete
  4. அய்யா நட்ட மரம் பலன் கண்டிப்பாகத் தரும் அதனால் தான் மரத்திற்கு “தரு” எனப் பெயரிட்டனர் நம் முன்னோர்கள். ஆனால் மரத்தை மனிதனோடு அதுவும் அரசியல்வாதியோடு ஒப்பிடுவது ஒரு செய்திக்காக இருக்கலாமே தவிற நிறைவைத் தந்திடாது. அதேசமயம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கு வேண்டுமானால் பயப்படலாம் அதனால் பயன் கிட்டலாம். எல்லா அரசியல்வாதியும் கர்மவீரர் ஆக முடியாது. பூதஉடல் மண்ணில் மறைந்தாலும் புகழுடம்பால் மக்கள் மனதில் வாழ்ந்துகொண்டுள்ளார். ஆலை இல்லா ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை என்பதைப்போல நாமும் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்துக் கடமை ஆற்றத் தவறுவதில்லை.

    ReplyDelete