Saturday, 21 May 2016

அரும்புகள் எழுதிய குறும்பா (ஹைக்கூ)

    ஆசிரியர் எவரேனும் விடுப்பில் இருந்தால் என்னை அழையுங்கள் என்று மாணவர்களிடம் சொல்லியிருந்தேன். அப்படி கிடைத்த ஒரு வாய்ப்பைப் பயன்படுத்தி ஹைக்கூ கவிதைகளை எழுதுவது குறித்து ஒரு வகுப்பு எடுத்தேன்.

    மூன்று வரிக்கவிதை. இரண்டு வரிகள் இயல்பாய் இருக்கும். மூன்றாம் வரியில் ஒரு குத்து இருக்கும். அதாவது ஒரு பன்ச் இருக்கும். குடும்பம், காதல், நாடு, சமூகச் சிக்கல் என எதைப்பற்றி வேண்டுமானாலும் எழுதலாம் என்று உசுப்பி விட்டேன்.

     மறுநாள் கவிதைகள் வந்து குவிந்தன. கருவிலே திருவுடையார் மட்டுமே கவிதை எழுத முடியும் என்ற கருத்தை அடித்து நொறுக்கிவிட்டார்கள். முயன்றால் எவரும் எழுதலாம் என நிரூபித்து விட்டார்கள் எனது மாணவர்கள். இங்கே பதச் சோறாக சில குறும்பாக்கள்.

      படியில் நின்றபடி பயணம் செய்து தம் வாழ்க்கைப் பயணத்தைப் பாதியில் முடித்துக் கொள்ளும் இளைஞர்களைப் பற்றி எழுதுகிறார்கள்.

குடிமகன் பேருந்தில் ஏறினார்
படியில் நின்றார்
ஆம்புலன்சில் சென்றார்

என்பது எம்.எஸ்.கே.சரண்குமாரின் பதிவு.

பேருந்தில் சென்றான்
படியில் நின்றான்
நொடியில் மறைந்தான்

என்பது எஸ்.ஹரிஹரன் என்னும் மாணவனின் மனக் குமுறல்.

    அம்மா தெருக் குழாயில் தண்ணீர் அடிக்கிறாள். அப்பாவுந்தான் ஆனால் வேறு இடத்தில்.. போதையினால் பாதை மாறும் குடும்பத்தை அங்கதச் சுவையோடு படம்பிடித்துக் காட்டுகிறான் ஏ.எஸ்.தனுஷ் ஆதித்யா 

கஷ்டப்பட்டு அம்மா
இஷ்டப்பட்டு அப்பா
தண்ணி அடிக்கிறார்கள்.


டி.பிரதீபாவுக்கு தன் கணித  ஆசிரியருடன் ஏற்பட்ட அனுபவத்தை,

உனக்கு இன்று தீபாவளி
எனக்கு நாளை தீபாவளி
கணக்காசிரியர் பிரம்புடன் வருவார்

என்னும் ஹைக்கூவாக பதிவு செய்கிறாள்.

இன்று வாழ்வே ஒரு போராட்டமாக இருக்கிறது என்பதை நச்சென்று சொல்கிறான்  ச.வேத ஞானகுரு.

சுதந்திரம் வாங்குவதற்கு
முன்பும் போராட்டம்
பின்பும் போராட்டம்.

ம.காவ்யா எழுதியுள்ள ஒரு கவிதை நம் சமூகத்தின் மீது விழும் சாட்டை அடியாகவே உள்ளது.

மாடு பெண்கன்று ஈன்றால் மகிழ்ச்சி
ஆடு பெண்கன்று ஈன்றால் மகிழ்ச்சி
அகிலா பெண்ணைப் பெற்றால் இகழ்ச்சி!

Child is the father of men  என்பது ஆங்கிலப் பொன்மொழி. இதை அப்படியே ஒரு ஹைக்கூ வாகப் படைக்கிறாள் ஜி.மயூரி.

அம்மாவிடம் அன்பைப் பார்த்தேன்
அப்பாவிடம் கோபத்தைப் பார்த்தேன்
என்னிடம் அவர்களைப் பார்த்தேன்.

   போலீஸ்காரர் இலஞ்சம் வாங்குவதை எத்தனையோ திரைப் படங்களில் விதவிதமாகக் காட்டுகிறார்கள். ஆனால் கா.ஸ்ரீநிகா என்னும் மாணவி எழுதியுள்ள ஒரு ஹைக்கூ நம்மைச் சிந்திக்கவும் சிரிக்கவும் வைக்கிறது.

பிச்சைக்காரரும் போலீஸ்காரரும்
கடைக்காரரிடம் கேட்டார்கள்
ஒருவர் பணிவாக மற்றவர் மிடுக்காக.

    தம் சகவயது மாணவ மாணவியர் பலரும் பள்ளியில் படிக்க முடியாத அவலநிலையில் இருப்பதை தம் கவிதைகளில் சுட்டிக் காட்டுகிறார்கள்; இல்லை இல்லை குட்டிக் காட்டுகிறார்கள்.

புத்தகப் பையை
சுமக்கும் வயதில்
குப்பைப் பையை சுமக்கிறது.
                 -சு.மெ.ஜூமர் நித்திஷ்

பதினைந்து வயதில் அவனுக்கு
அரசாங்க அலுவலகத்தில் வேலை
தேநீர் விற்கிறான்.
                  -ம.காவ்யா

அம்மா நோயில்
அப்பா போதையில்
நான் வேலையில்
                   -த.பிரதீபா

பெற்றக் குழந்தையை
வேலைக்கு அனுப்புவது
ஒரு புதுவிதமான பிச்சை!
                    -கா.ஸ்ரீநிகா

    இவர்களெல்லாம் வருங்காலத்தில் சிறுமை கண்டு பொங்கி எழும் நக்கீரத் துணிச்சல் மிகுந்த கவிஞர்களாகவும் கவிதாயினிகளாகவும் உருவெடுப்பார்கள் என்னும் நம்பிக்கை எனக்கு நிறையவே உள்ளது.



7 comments:

  1. அரும்புகள் நிச்சயம் மலர்ந்து மணம் வீசுவார்கள் இது உறுதி
    பாராட்டுவோம்

    ReplyDelete
  2. பதச்சோறுகளே அருமையாக உள்ளன ஐயா. வாழ்த்துகள் எழுதிய அவர்களுக்கு. நன்றி பகிர்ந்த உங்களுக்கு.

    ReplyDelete
  3. மிகவும் அருமையான பதிவு. "தான் கொண்ட பாண்டித்யம் பெருக என் இளைய சமுதாயம்" என்பதில் என் அண்ணனை விஞ்ச யாருமில்லை. தொடர்க உம் தமிழ்ப்பணி.

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. ’மே’ மாதப்பதிவிற்குக் காலம் தாழ்த்திக் கருத்து வழங்குவது குறித்து வருந்துகிறேன். கிடைத்த பொழுதையெல்லாம் தூங்கிக்கெடுத்தவன் தானும் கெட்டதுடன் சமுதாயத்தையும் கெடுத்தான் என்பர். ஆனால் தாங்கள் பிஞ்சுக்கரங்களுக்கு சமுதாயத்தின் போக்கை ஹைக்கூ கவிதைகளாக எழுதுவதற்குப் பயிற்சி வழங்கியுள்ளீர்கள். அதற்குக் குழந்தைகளும் அருமையாக கவிதை எழுதியுள்ளனர். வைரக்கல்லும் பட்டை தீட்டு முன்பு சாதாரணக்கல் தான். பட்டை தீட்டினால் தான் அது வைரம். மாதா ஊட்டாத சோற்றை மாங்காய் ஊட்டும் என்பது பழமொழி அதுபோல குழந்தைகளின் மனதில் எதை விதைகிறோமோ அதுவே பயிர் ஆகும். ஆகையினால் தான் ஒரு கவிஞர் கத்தியைத் தீட்டாதே உந்தன் புத்தியைத் தீட்டு என்கிறார். நான் புதுக்கவிதை பற்றிக் கூறும் வகுப்பில் நகைச்சுவைக்காக ஒரு கவிதை கூறுவேன். அது “கண்ணே நீ சப்போட்டா (பழம்) உங்கப்பா நமக்கு சப்போட்டா (ஆங்கிலச்சொல்)” மாணவர்கள் மகிழ்வர். அடுத்து அக்கவிதையைப் பற்றி ஒரு விளக்க்ம் தருவேன். இந்த ஆறு சொற்களில் வாழ்கைத் தத்துவமே அடங்கியுள்ளது எனத் தெரிவித்து முதல் வரியை ஆண் ஒரு பெண்ணைப்பார்த்துக் கூறுகிறான். அடுத்த வரியை அப்பெண் ஆணைப்பார்த்து உன் பாராட்டெல்லாம் போதும். நான் வாழ்ப்போகும் வீட்டில் உன் அப்பா இருப்பார் அவர் பெயரில் தான் வீடு, சொத்து எல்லாம் இருக்கும் முதலில் அவர் நம்ம காதலுக்குச் சம்மதிப்பாரா? எனக் கேட்பதாகக் கூறுவேன். வரி இரண்டாக இருப்பினும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தலே கவிதையின் வடிவம். எதிர்கால இளம் கவிஞர்களுக்கு வாழ்த்துகள்.
    டாக்டர். ரா.லட்சுமணசிங்
    பேராசிரியர்
    அரசு கலைக் கல்லூரி (தன்னாட்சி)
    கரூர் - 639 005

    ReplyDelete