முனைவர் அ.கோவிந்தராஜூ
இந்தத் தேர்தல் பரபரப்பிலும் ஊடகங்களில் பெரிதாகப் பேசப்பட்ட ஒரு செய்தி உண்டு என்றால் அது மருத்துவப்
படிப்பிற்கான நாடு தழுவிய பொது நுழைவுத் தேர்வு பற்றிய செய்திதான்.
மனித உயிர்களைக் காப்பாற்றும்
திறன் மருத்துவர்களுக்கு இருக்க வேண்டும். அத்
திறன்கள் நீர்த்துப் போகும் வகையில் மருத்துவப் படிப்புக்கான சேர்க்கையும்
மருத்துவப் படிப்பும் அமைதல் கூடாது என்பதை அடிப்படையாகக் கொண்டது உச்சநீதி மன்றத்
தீர்ப்பு. அண்மையில் அதிரடியாக
வழங்கப்பட்ட உச்ச நீதி மன்றத் தீர்ப்பு தமிழக மாணவர்களின் வயிற்றில் புளியைக்
கரைத்துவிட்டது. பெற்றோர்கள் கதிகலங்கிப் போனார்கள்.
மற்ற மாநிலங்களில் எந்த விதமான
எதிர்ப்புக்குரலும் எழாதபோது, தமிழகம் மற்றும் புதுவையில் மட்டும் ஆங்காங்கே சில போராட்டங்கள் நடந்துள்ளன.
அவற்றையும் சில அரசியல் சார்ந்த அமைப்புகளே நடத்தியுள்ளன என்பதையும் கவனத்தில்
கொள்ள வேண்டும். பொது நுழைவுத்தேர்வை நடத்தினால் நம் ஊர் மருத்துவக் கல்லூரிகளில்
பிற மாநிலத்தார் பெரிய எண்ணிக்கையில் சேர்ந்து தமிழக மாணவர்களின் வாய்ப்பைக்
கெடுத்து விடுவர் என்று ஒரு வாதத்தை முன்வைக்கின்றனர்.
இவர்கள் கூற்றைச் சற்று ஆராய்ந்து பார்த்தால்,
பொது நுழைவுத் தேர்வை எதிர்கொள்ளும் திறமை தமிழக மாணவர்களுக்கு இல்லை என்பதை
மறைமுகமாகத் தெரிவிக்கிறார்கள் என்று எண்ணத் தோன்றுகிறது.
நம் மாநிலத்து மாணவர்கள் ஏன் பொது நுழைவுத்
தேர்வைக் கண்டு அஞ்சி நடுங்குகிறார்கள்? அப்படியே சில நூறு மாணவர்கள் துணிந்து
எழுதினாலும் உரிய மதிப்பெண் பெற முடிவதில்லை. நாம் நடத்தும் வாரியத் தேர்வுகளில்
கேட்கப்படும் கேள்விகள் மனப்பாடத் திறனை அடிப்படையாகக் கொண்டவை. ஆனால் பொது நுழைவுத் தேர்வுகளில் அலசிப் பார்க்கும் வகையில், சிந்திக்கும்
வகையில் வினாக்கள் அமையும்.
மேலும், தமிழகத்துப் பள்ளிகளில், குறிப்பாகத் தனியார் பள்ளிகளில் பதினோராம்
வகுப்புக்குரிய பாடத் திட்டத்தை ஒதுக்கி வைக்கிறார்கள்; அல்லது ஒப்புக்கு
நடத்துகிறார்கள். பதினோராம் வகுப்பில் சேர்ந்த முதல் நாளே பன்னிரண்டாம் வகுப்புப்
பாடத்தை நடத்தத் தொடங்கிவிடுகிறார்கள். அஸ்திவாரம் இல்லாமல் அடுக்குமாடி
கட்டுவதற்கு ஒப்பானது இது. பதினோராம் வகுப்புப் பாடங்களை முறையாகப் படித்து,
அவற்றில் தேர்வெழுதி பயிற்சி பெறாத மாணவர்கள் பொது நுழைவுத் தேர்வுகளை அல்லது
போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும்போது கண்களைக் கட்டி காட்டில் விட்டதுபோல்
தவிக்கிறார்கள்.
ஓட்டைச் சட்டியானாலும் கொழுக்கட்டை வெந்தால் சரி என்னும் பழமொழிக்கு ஏற்ப,
எப்படியோ தன் மகன் வாரியத் தேர்வில் உயர்ந்த மதிப்பெண் பெற்று மருத்துவக்
கல்லூரியில் சேர்ந்தால் போதும் என்னும் நச்சு எண்ணம் பெற்றோருக்கு வந்துவிட்டது.
தனியார் பள்ளி நிர்வாகத்தினர் இந்த நச்சு எண்ணத்தை பெருத்த வருவாயாக
மாற்றிவிடுகின்றனர்.
அண்டை மாநிலமான ஆந்திராவில் பதினோராம் வகுப்பிலும் பொதுத் தேர்வு எழுதும் முறை
உள்ளது. அதன் காரணமாக ஒரு வரி விடாமல் பதினோராம் வகுப்புப் பாடத்திட்டத்தை நடத்த
வேண்டிய கட்டாயம் அங்கே உள்ளது. மேனிலைக் கல்வியை முழுமையாகப் படிக்கும் அம்
மாநிலத்து மாணவர்கள் பொது நுழைவுத் தேர்வுகளை எளிதாக எதிர்கொண்டு வெற்றி வாகை
சூடுகிறார்கள். அடிப்படைக் கோட்பாடுகளைப் புரிந்து படிப்பதால் அவர்கள் இந்தியக்
குடிமைப் பணித் தேர்வுகளிலும் முன்னணியில்
உள்ளார்கள்.
நடக்கப் பயந்து சிற்றப்பன் வீட்டில் பெண்ணைக் கட்டினானாம் என்று ஒரு பழமொழி
உண்டு. ஒருவன் சிற்றப்பன் பெண்ணைக்
கட்டுவது எவ்வளவு தவறோ அவ்வளவு பெரிய தவறு போட்டித் தேர்வுகளை எழுதாமல் தொழில்சார்
படிப்புகளில் சேர நினைப்பது. கல்வி அரசியலாக்கப்பட்டதன் விளவுதான் இது.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு விழித்
திறப்பானாக அமைந்துள்ளது எனக் கருத வேண்டும். இப்போதாவது தமிழகத்தை வரும்
தேர்தலுக்குப்பின் ஆளவுள்ள கட்சியினர் தமிழக மாணவர்களின் நலன் கருதி கல்விக்
கொள்கைகளை மீளாய்வு செய்ய வேண்டும். பள்ளிக் கல்விப் பாடத்திட்டம், வாரியத் தேர்வு
நடைமுறை, தேர்வு வினாத்தாள், தேர்வு மதிப்பீட்டுமுறை முதலியவற்றை ஆராய்ந்து
அரசியல் நெருக்கடிகளுக்கு அஞ்சாமல் அதிரடியான முடிவுகளை எடுக்க வேண்டும்,
ஆறாம் வகுப்பிலிருந்தே மாணவர்களை ஆறாண்டுகளுக்குப் பின்னர் எழுதவுள்ள போட்டித்
தேர்வுகளுக்கு முதலில் மனதளவில் ஆயத்தப்படுத்த வேண்டும். பின்னர் படிப்படியாக
மாற்றி யோசித்து விடை எழுதும் வகையில் வினாக்களைப் புகுத்திப் பயிற்சித் தருவது
அவசியம் ஆகும். மேல் வகுப்புத் தேர்வுகளில் பயின்முறை வினாக்கள் இடம்பெற்றால்
மாணாவர்களின் சிந்தனைத் திறன் பெருகும். நாற்பது விழுக்காடு வினாக்கள்
மனப்பாடத்திறன் அடிப்படையிலும் எஞ்சிய அறுபது விழுக்காடு வினாக்கள் சிந்தித்து
எழுதும் வகையிலும் தேர்வுக் கட்டமைப்பு இருந்தால், பன்னிரண்டாம் வகுப்புக்குப்
பிறகு எந்த மாணவருக்கும் பொது நுழைவுத் தேர்வு குறித்த அச்சம் அணுவளவும்
இருக்காது.
அறிவியல் பாடம் தொடர்பான புதுப்புது நுட்பங்கள் நாளும்வந்த வண்ணம் உள்ளன. இது
குறித்தப் புரிதல் எதுவும் இல்லாமல் சமச்சீர் மற்றும் மேனிலைப் பாடத்திட்டத்தில்
ஐந்தாண்டுகள் பத்தாண்டுகள் என எவ்வித மாற்றமும் இன்றி ஒப்பேற்றிக் கொண்டிருப்பதில்
நியாயமில்லை.
பள்ளிக் கல்வி என்பது கீரை சாகுபடியாக இருக்கலாமா?. வளர்ந்து
பல்லாண்டுகளுக்குப் பயன்தரும் மரக்கன்றுகளை நடும் தொலைநோக்குத் திட்டமாக இருக்க
வேண்டாமா? பெற்றோர்கள், மாணவர்கள், கல்வியாளர்கள், உளவியலாளர்கள், தொழில்
நிறுவனத்தார் மற்றும் இன்ன பிற துறையினரும் ஒன்றாக அமர்ந்து சிந்திக்க வேண்டியது
காலத்தின் கட்டாயமாகும்.
இதுகுறித்த சிந்தனையோ, திட்டங்களோ எந்த ஒரு கட்சியின் தேர்தல் அறிக்கையிலும்
இடம்பெறவில்லை; அரசியல் தலைவர்களின் பரப்புரையிலும் இடம்பெறவில்லை. அவர்களுக்கு
தமிழக மாணவர்களின் எதிர்காலம் குறித்த சிந்தனை முக்கியமில்லை; தேர்தல் குறித்த
நிகழ்காலச் சிந்தனையே முக்கியம்!
சரியான நேரத்தில் எழுதப்பட்ட மிகச்சரியான கருத்து. மாணாக்கர்களின் சிந்தனைத் திறனை வளர்த்து, படைப்பாற்றலைக் கூட்டும் விதமாய் நம் கல்வி முறை இருக்க வேண்டும். அதேநேரம் இந்த ஆண்டு மேல்நிலைத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு போதிய கால அவகாசமும் பயிற்சியும் தந்திருந்தால்தமிழக மாணவர்கள் நிசாசயம் சந்திப்பார்கள்
ReplyDeleteசரியான நேரத்தில் எழுதப்பட்ட மிகச்சரியான கருத்து. மாணாக்கர்களின் சிந்தனைத் திறனை வளர்த்து, படைப்பாற்றலைக் கூட்டும் விதமாய் நம் கல்வி முறை இருக்க வேண்டும். அதேநேரம் இந்த ஆண்டு மேல்நிலைத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு போதிய கால அவகாசமும் பயிற்சியும் தந்திருந்தால்தமிழக மாணவர்கள் நிசாசயம் சந்திப்பார்கள்
ReplyDeleteதமிழகத்தில் பெரும்பாலான பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்புப் பாடமே நடத்துவதில்லை
ReplyDeleteதேர்ச்சி சதவீதத்தை உயர்த்தியாக வேண்டும்
தேர்ச்சி சதவீதம் உயர்ந்து கொண்டே இருக்கிறது
மாணவர்களின் நிலைமைதான் தாழ்ந்து கொண்டே இருக்கிறது