பண்டைக் காலத்து குருகுல
ஆசிரியர்கள் ஞானக் களஞ்சியமாகத் திகழ்ந்தவர்கள். தம்மிடத்தில் குருகுல வாசம் செய்த
சீடர்களையும் ஞானவான்களாக மாற்றினார்கள். இது உ..வே.சாமிநாதய்யர் காலம்வரை
தொடர்ந்தது. அன்றைய குரு சீடர் அதாவது ஆசிரியர் மாணவர் உறவு அவர்தம் இறுதி
மூச்சுவரை தொடர்ந்தது.
இன்றைய நிலை எப்படி உள்ளது?
பேராசிரியர் இரா. மோகன் அவர்கள் அண்மையில் கரூர் வள்ளுவர் கல்லூரியில் நடந்த ஒரு
பன்னாட்டுக் கருத்தரங்கில் குறிப்பிட்டது என் நினைவுக்கு வருகிறது.
“பி.ஏ தமிழ் படிக்கும் மாணவர்கள்
ஆசிரியரிடம் நெருங்கிப் பழகுவார்கள். எம்.ஏ படிக்கும்போது விலகியும் விலகாமலும்
பழகுவார்கள். எம்.ஃபில் படிக்கும்போது காரியத்தோடு பழகுவார்கள். பிஎச்.டி
முடித்ததும் நீ யாரோ நான் யாரோ என்று பறந்து விடுவார்கள் மறந்துவிடுவார்கள்” என்று அவர் கூறியதை நானும்
வழிமொழிகிறேன்.
சரி சரி நான் சொல்ல வந்த செய்தியை விட்டுவிட்டேனே.
பழங்கால குருகுல ஆசிரியர்கள் பாடம்
முடிந்ததும்,”சீடர்களே! உங்களுக்கு ஐயம் இருப்பின் வினாக்களைக் கேளுங்கள்’ என்று
சொல்லுவார். ஆனால் இக் காலத்து ஆசிரியர்கள் தம் மாணவர்களை கேள்வி கேட்க
அனுமதிப்பது இல்லை என்பதுதான் உண்மை. விதி விலக்காக சிலர் இருப்பர். அவர்களை
வணங்குகிறேன்.
எனக்குத் தெரிந்த மாணவர் ஒருவர்-
உங்களுக்கும் தெரிந்தவர்தான். அவர் கல்லூரியில்
பட்ட வகுப்பில் பயின்ற போது ஒரு நாள் அவருடைய பேராசிரியர் வகுப்பறையில் பாடம்
முடிந்ததும் ஒரு கேள்வி கேட்டார்;
ஆசிரியர்: இந்தப்
பேரண்டத்தைக் கடவுள்தான் தோற்றுவித்தாரா?
மாணவர்: ஆமாம், ஐயா.
ஆசிரியர்: அப்படியானால்
சாத்தானையும்(Evil spirit) கடவுள்தான் தோற்றுவித்தாரா?
மாணவர்: (சற்று நேர
அமைதிக்குப்பின்) ஐயா உங்களிடம் நான் ஒரு
கேள்வி கேட்கலாமா?
ஆசிரியர்: கேளேன்
மாணவர்: குளிர் என்று
ஒன்று உள்ளதா ஐயா?
ஆசிரியர்: நிச்சயமாக
உள்ளது. குளிரில் நீ நடுங்கியது இல்லையா?
மாணவர்; மன்னிக்க
வேண்டும் ஐயா. உங்கள் விடை தவறு.
ஆசிரியர்: (வியப்புடன்)
எப்படி!
மாணவர்: வெப்பம் குறைய
குறையத்தான் குளிர் தோன்றும்.
ஆசிரியர்: சிந்திக்க
வேண்டிய விஷயந்தான்.
மாணவர்: ஐயா மேலும் ஒரு
கேள்வி
ஆசிரியர்; கேள் கேள்!
மாணவர்: இருள் என்று
ஒன்று உள்ளதா?
ஆசிரியர்: உள்ளதே.
மாணவர்: ஐயா மீண்டும்
தவறாகச் சொல்கிறீர்கள்! ஒளி குறை
குறையத்தான் இருள் தோன்றும்.
இருள் எனத் தனியாக எதுவும்
இல்லை. எனவேதான்
இயற்பியலில் வெப்பம் பற்றியும்
ஒளி பற்றியும் மட்டுமே
படிக்கிறோம்.(There are chapters on Heat and Light only not on cold and dark)
ஆக, சாத்தான் என ஒன்று கடவுள்
படைப்பில் இல்லை. கடவுளிடத்தில் நம்பிக்கை
குறைய குறைய சாத்தான் உருவெடுக்கிறது; அன்பு குறை குறைய வெறுப்பு உருவாகிறது.
இதைக் கேட்ட அந்த ஆங்கிலேயப்
பேராசிரியர் அந்த மாணவரைக் கட்டித் தழுவிப் பாராட்டினார்.
யார் அந்த குருவை மிஞ்சிய சீடர்?
நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள் என்று சொன்னால்
சற்றே எரிச்சல் அடைவீர்கள். நானே சொல்லி விடுகிறேன்.
சுவாமி விவேகானந்தர் அவர்களே அந்த மாணவர்!
விவேகமான மாணவர்தான்
ReplyDeleteஆகா...!
ReplyDelete”குருவை மிஞ்சிய சீடன்” மிக அருமையான பதிவு. காரணம் நமது பழமொழிகள் என்ன சொல்கிறது என்றால் தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை, தாய்ப் புலி எட்டடி பாய்ந்தால் குட்டிப் புலி பதினாறு அடி பாயும். ஆகவே, ஆசிரியரைச் சோதித்துப் பார்க்கும் மாணவர்கள் உண்டு. ஒரு சில நேரங்களில் மாணவனிடம் இருந்து கற்றுக்கொள்ளவும் நேரிடும். அவ்வப்போது மாணவனின் சிந்தனைகளைக் கண்டு ஆச்சர்யப்படவும் வேண்டும். தன்னில் தன் மக்கள் உயர்ந்தவர்களாக இருப்பது நல்லதுதானே. எனக்கேற்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறேன். மதுரை, சப்பாணித்தெருவில் அமைந்துள்ள நாடார் வித்யாசாலையில் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்குத் தமிழ்ப்பாடம் கற்பித்துக்கொண்டிருந்தேன். அதில் பறவைகளைப் பற்றி ஒரு செய்தியைக் கூறிக்கொண்டிருந்தேன். அப்போது ஒரு மாணவன் எழுந்து அய்யா, பறவைகளில் காக்கை, கழுகு போன்றவை அழுகிய மாமிசங்களை உண்ணுகின்றன, அவற்றிற்கு எந்த நோய்த் தொற்றும் ஏற்படுவதில்லையே ஏன்? அதேசமயம் மனிதராக வாழும் நாம் வேக வைத்த மாமிசங்களையே உண்ணுகிறோம் அதிலும் சிலருக்கு ஒவ்வாமை ஏற்படுகிறதே எப்படி எனக்கேட்டான். சற்றே சிந்தித்த நான் பாடத்துக்குத் தொடர்பில்லாத ஒரு கேள்வியைக் கேட்டுவிட்டான் எனக்கருதியவாறே எனது அறிவியல் பார்வையை வெளிப்படுத்தினேன். நல்ல சிந்தனை எனக்கூறியவாறு பதிலளித்தேன். நம்மோடு வசிக்கின்ற இப்பறவை இனங்கள் பல நூறு ஆண்டுகளாகத் துப்புறவுப்பணியினை மேற்கொண்டு மனித இனத்தைக் நோய்த்தொற்றுகளிலிருந்து காப்பாற்றி வருகிறது. எப்படியென்றால் மனிதர்களைப் போன்று அதுவும் ஓர் உயிர், ஆனாலும் செரிமானமாவதில் மட்டும் சிறதளவு மாற்றமுண்டு, எப்படியென்றால் அதன் செரிமான உறுப்பான இரைப்பையில் அதிக ஆற்றலுடன் செரிமானத்தை ஏற்படுத்தும் என்சைம் எனப்படும் திரவம் சுரக்கிறது அதன் மூலம் எப்படிப்பட்ட கெட்டுப்போன உணவாக இருப்பினும் அதை உண்ணும் ஆற்றல் காக்கை மற்றும் கழுகு போன்ற பறவைகளுக்கு உண்டு எனக்கூறினேன். இன்னொரு சம்பவம், புவி ஈர்ப்பு பற்றி அறியாத மாணவன், வகுப்பில் திடீரென எழுந்து பூமி தன்னைத்தானே சுற்றுகிறது, அதனால் நாம் புவியின் மேற்பரப்பில் சென்று நின்றுகொண்டால் அமெரிக்கா வரும், சுற்றிப்பார்த்துவிட்டு மீண்டும் மேற்பரப்பில் நின்றுகொண்டால் நம்ம ஊர் வரும் இறங்கிகொள்ளலாம் எனக் கூறினான். இப்படிக்கேட்ட மாணவனுக்கு வானவியலை நடத்தவேண்டியதாயிற்று. புவி ஈர்ப்பின் காரணமாக மேற்பரப்பில் நிற்க இயலாது. அடுத்து பால்வெளி வீதி எனப்படும் அண்டவெளியைக் கடந்து சென்றால் மட்டுமே புவி ஈர்ப்பிலிருந்து விடுபடலாம். ஆனால் நாம் பூமிக்குத் திரும்பமுடியாது என விளக்கம் தரவேண்டியதாயிற்று.
ReplyDeleteதங்கள் பதிவின்படி எதிர் எதிர் வினைகள் இல்லை என்ற கருத்து விளங்குகிறது. பகல்-இரவு, இரவு இல்லை வெளிச்சப்பற்றாக்குறை, குளிர் - வெப்பம்- குளிர் இல்லை வெப்பப்பற்றாக்குறை, வெற்றி-தோல்வி-தோல்வி இல்லவே இல்லை வெற்றிக்கான முயற்சி குறைவு அவ்வளவு தான். எனவே, மாணவனின் சிந்தனை பற்றி ஏராளமான அனுபவங்களை ஆசியராகப் பணியாற்றுபவர்களுக்குக் கிட்டும்.
முனைவர் ரா.லட்சுமணசிங்
கரூர் - 5