இரண்டு ஆண்டுகளுக்கு
முன்னால் சென்னை தியாகராய நகரில் வசித்த என்
சம்பந்தி இல்லத்திற்குச் சென்றிருந்தேன். காலை தேநீர் அருந்தியதும் சம்பந்தி
இருவரும் நடைப் பயிற்சிக்குப் புறப்பட்டனர்; நானும் அவர்களோடு நடந்தேன்.
அந் நகரின்
ஒரு பகுதியில் இருந்த நடேசன் பூங்காவிற்குச் சென்றோம். இரண்டு மூன்று சுற்றுகள்
நடந்தபின் பூங்காவின் ஓர் இடத்தில் இருந்த சிறு குடிலுக்கு அழைத்துச் சென்றார்கள்.
ஓடுகள் வேயப்பட்ட அந்த அழகான குடிலில் ஒரு தரைவிரிப்பில் நான்கைந்து பேர்
அமர்ந்திருந்தனர். என் சம்பந்தியரை உற்சாகம் பொங்க ஒருவர் வரவேற்றார்; நானும்
அறிமுகமானேன்; அமர்ந்தோம். என்ன நடக்கிறது என்பதை ஆவலோடு கவனித்தேன்.
ஒருவர் பேட்டரியில்
இயங்கும் ஒலிபெருக்கியை அமைத்து ஒலிவாங்கியில் பேசி ஒலியளவைச் சரிபார்த்தார்.
அங்கே மற்றொருவர் ஒரு நோட்டுப் புத்தகத்தில் பெயர் தொலைபேசி விவரத்தை எழுதி
வாங்கினார். சற்று நேரத்தில் மேலும் ஏழெட்டுப் பேர் வந்து சேர்ந்தனர். எங்களை
வரவேற்ற மனிதர் எழுந்து அனைவரையும் வரவேற்றுப் பேசினார். நொடிக்கு ஒரு குறளை
மேற்கோள் காட்டிப் பேசியது வியப்பாக இருந்தது. சுருக்கமாகப் பேசிவிட்டு
ஒவ்வொருவராகப் பேச அழைத்தார். அவரவர் சொல்ல விரும்பியதைச் சொன்னார்கள். சிலர்
ஆற்றொழுக்காகப் பேச, சிலர் தயங்கித் தயங்கிப் பேசினார்கள். ஒருவர் பேசி
அமர்ந்தால், அந்த மனிதர் எழுந்து பேசியவரைப் பாராட்டி, கூடுதல் விளக்கமும்
தந்தார். என்னையும் அழைத்தார்; பேசினேன்.
இப்படி
அங்கே வந்திருந்த அனைவரையும் அவர் பேச வைத்து அழகு பார்த்தார். ஏராளமான பயனுள்ள
தகவல்கள் கிடைத்தன. இப்படியாக ஒவ்வொரு ஞாயிறன்றும் இக் கூட்டத்தை நடத்துகிறார். ஒரு மாதமன்று; ஒரு வருடமன்று; கடந்த பதினான்கு ஆண்டுகளாக நடத்திவருகிறார். இதில் பேசிப் பழகிய பலரும்
இன்று பட்டிமன்றங்களில் பேசுகிறார்கள்! இவர் நடத்தும் இந்த அமைப்புக்குப் பெயர் திரு.வி.க. பேச்சுப் பயிலரங்கம்.
சென்றவாரம் ஒரு வேலையாக சென்னைக்குச் சென்றிருந்தேன். கீழ்ப்பாக்கத்தில்
என் சகலை இல்லத்தில் தங்கினேன். ஞாயிற்றுக் கிழமை காலை தேநீருக்குப் பிறகு
நடைப்பயிற்சியைத் தொடங்கினேன். நான் எந்த ஊருக்குச் சென்றாலும் எந்த நாட்டிற்குச்
சென்றாலும் காலை நடைப்பயிற்சியைத் தவறாமல் செய்வேன். அந்த வகையில் அன்று ஓட்டேரி
மூலிகைப் பூங்காவிற்குச் சென்றேன். அங்கேயும் ஒரு குடில்; ஒரு ஒலிபெருக்கி; ஒரு
தரை விரிப்பு. அப்போது மணி காலை 7.25. இருவர் மட்டுமே வந்திருந்தனர். நான்
மூன்றாவது ஆள். ஒரு நோட்டுப்புத்தகத்தில் பெயர் எழுதி கையொப்பம் இட்டேன்.
சரியாக
7.30 மணிக்கு திரு.வேலுசாமி என்பார் எங்களை வரவேற்றுப் படு உற்சாகமாகப் பேசினார். பேச்சின்
நடுவே குறட்பாக்கள் வந்து உதிர்ந்தன. சிறிது நேரத்தில் ஐவர், பிறகு எழுவர் என வந்த
வண்ணம் இருந்தனர். ஒவ்வொருவராக பேச அழைக்கப்பட்ட்னர். ஒருவர் குறள் விளக்கம்
தந்தார்; இன்னொருவர் இயற்கை உணவு குறித்துப் பேசினார். மற்றொருவர் உணவு வீணாவது
குறித்து விளக்கினார். மகழ்ச்சியாக வாழ்வதற்குச் சில உளவியல் வழிமுறைகள் குறித்து
நான் பேசினேன். குறித்த நேரத்தில் கூட்டம் முடிந்தது.
அங்கே
குடிலுக்கு வெளியே தொங்க விடப்பட்டிருந்த பதாகையைப் பார்த்ததும் எனக்கு ஓர் இன்ப
அதிர்ச்சி ஏற்பட்டது. நடேசன் பூங்காவில் பார்த்த அந்த மாமனிதரின் பெயர் அதில்
இருந்தது. அவர் நிறுவிய திரு.வி.க.
பயிலரங்கம் இன்று பதினேழு கிளைகளைப் பரப்பி நிற்கின்றது.
ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 26ஆம் நாள் திரு.வி.க.வின் பிறந்த நாளைச் சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள். விழாவின்போது தமிழ் ஆர்வலர் ஒருவருக்குத் தமிழ்ப்பெரியார் திரு.வி.க.விருது என அளிக்கிறார்கள்.
“சொல்லுக சொல்லில் பயனுடைய சொல்’ என்னும் வள்ளுவர் வாக்கிற்கு ஏற்ப நூற்றுக் கணக்கானவர்களுக்குப் பேச வாய்ப்பளித்து, பயத்தை நீக்கி, பயனுள்ளவற்றைப் பேசவைக்கும் முயற்சியில் பெரிய வெற்றி கண்டுள்ள அவரை மனதார வாழ்த்துகிறேன்.
ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 26ஆம் நாள் திரு.வி.க.வின் பிறந்த நாளைச் சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள். விழாவின்போது தமிழ் ஆர்வலர் ஒருவருக்குத் தமிழ்ப்பெரியார் திரு.வி.க.விருது என அளிக்கிறார்கள்.
“சொல்லுக சொல்லில் பயனுடைய சொல்’ என்னும் வள்ளுவர் வாக்கிற்கு ஏற்ப நூற்றுக் கணக்கானவர்களுக்குப் பேச வாய்ப்பளித்து, பயத்தை நீக்கி, பயனுள்ளவற்றைப் பேசவைக்கும் முயற்சியில் பெரிய வெற்றி கண்டுள்ள அவரை மனதார வாழ்த்துகிறேன்.
அந்த
மாமனிதரின் பெயர் முனைவர் திருக்குறள் பா.தாமோதரன். இவர் ஒரு வழக்கறிஞர். இவருக்கு 1330
குறட்பாக்களும் மனப்பாடம். வள்ளுவர் சொல்லும் உள்ளூரில் உள்ள பயன்தரு மரமாக, ஊர்
நடுவே உள்ள ஊருணியாக வாழ்வாங்கு வாழ்கிறார்.
ஒன்றுமட்டும் உண்மை. விருதுகளை எதிர்பார்க்காமல் விழுதுகளைப்
பரப்பிவருகிறார்.
போற்றுதலுக்கு உரிய மாமனிதர்
ReplyDeleteபோற்றுவோம்வாழ்த்துவோம்
அவரை ஒரு நாள் சந்திக்க வேண்டும்... நன்றி ஐயா...
ReplyDeleteNalla padhivu. I like it very much. Prof.Pandiaraj
ReplyDeleteசமூகத்தின் அனைத்து பிரச்சினைகளுக்கும் ஒரே தீர்வு வள்ளுவம் தான். வள்ளுவத்தை சமுதாயத்தின் எல்லா பகுதிகளுக்கும் கொண்டு சேர்க்கும் முயற்சிக்கு பாராட்டுக்கள்..... வாழ்த்துக்கள்...
ReplyDeleteGood. MR Damoran has taken lot of efforts to improve communication skills with emphasise on Tirukkural in all Parks in Chennai. Hats off to him.
ReplyDeleteI agree fully on every one comments..more than commitment with returns is impossible to followed by normal person... undoubtedly he is mamanither dr.damodharan
ReplyDeleteSorry.. I missed the sentence COMMITMENT WITHOUT RETURNS .height light
ReplyDelete"இணரூழ்த்தும் நாறா மலரனையர் கற்றது
ReplyDeleteஉணர விரித்துரையாதார்” - சொல்வன்மை-குறள் எண்:650
இந்த அதிகாரத்தில் வள்ளுவப்பெருந்தகை மிக அழகாகக் குறிப்பிட்டிருக்கிறார். தான் அறிந்த நல்ல அறிவிப்பூர்வமான தகவல்களைப் பிறர் அறியும் வகையில் எடுத்துக் கூறவேண்டும். அத்தகையவர்களே மணம் பரப்பும் மலர்கள் போன்றவர்கள். கற்றிருந்தும், பிற செய்திகளை நன்முறையில் அறிந்திருந்தும் பிறருக்குத் தெரிவிக்காதவர்கள் அல்லது கூற மனமில்லாதவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்றால், பார்ப்பதற்க்கு மிக அழகாகக் காட்சியளிக்கும் காகித மலருக்கு அதாவது மலர்ந்தும் பிறருக்குப் பயன் தராத மலரைப்போன்றவர்கள் என வள்ளுவர் குறிப்பிடுகின்றார். ஆகையால் கல்வி அறிவு பெற்றவர்கள், கேள்வி ஞானம் பெற்றவர்கள் தாங்கள் அறிந்த செய்திகளைப் பலரும் அறிந்துகொள்ளக்கூடிய வகையில் வாய்ப்பு கிட்டும் போது தெரிவிக்க வேண்டும். இத்தகைய பணியை தாங்கள் சந்தித்த முனைவர் திருக்குறள் பா.தாமோதரன் அவர்கள் பதினான்கு ஆண்டுகளாகச் செய்து வருவது மகிழ்வைத்தருகிறது. தொடரட்டும் அவரது சேவை. அவருக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றேன்.
முனைவர் ரா.லட்சுமணசிங்
பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி(தன்னாட்சி)
கரூர் - 5
drlakshmanasingh@gmail.com
இவ்வாறானோரும் இருக்கிறார்கள் என்பதை நினைக்கும்போது பெருமையாக இருக்கிறது ஐயா. அதனை நீங்கள் பகிர்ந்த விதம் அருமை.
ReplyDeleteI require Dr. Dhamodhran contact number..Muthu S
ReplyDelete