Saturday, 24 December 2016

அங்கே அப்படி! இங்கே இப்படி!

   ராம் மோகன ராவ் ஆந்திராக்காரர் என்பதால் பாரதியின் பாடல் வரியை அறிந்திருக்க வாய்ப்பில்லை,


படிச்சவன் சூதும்  பாவமும்  பண்ணினால்
போவான் போவான்
 ஐயோ என்று போவான்

        என்று சாபமிட்டவர் பாரதியார்.

    நம் நாட்டில் அண்மைக் காலத்தில் படித்தவர் செய்யும் குற்றங்கள் (white collar crimes) மலிந்து காணப்படுகின்றன. நேர்காணலில் வெற்றி பெறுவது எப்படி என்று சொல்லிக்கொடுத்த நம் கல்வி முறை நேர்மையாக வாழ்வதற்குச் சொல்லிக் கொடுக்கவில்லை.

    மதிப்பெண்கள் பெறுவதற்கு வழிமுறைகளைச் சொன்ன ஆசிரியர்கள் மதிப்பீடுகள் (values) எவை என்பதை ஏனோ சொல்லித்தரவில்லை.

     எப்படியெல்லாம் வெற்றியடையலாம் என்று பட்டியல் போடுகிறோமே தவிர, அந்த வெற்றிகளை அடைவதற்குறிய வழிமுறைகள் அறம் சார்ந்தவையாக இருக்க வேண்டும் என்று காந்தி சொன்னாரே, அதை நாம் நம் குழந்தைகளுக்கு வலியுறுத்திச் சொன்னோமா?

    மனிதன் சூழலுக்கு அடிமையாகும்போது தன் சுயத்தை இழந்து விடுகிறான். பதவி என்பது பணி செய்யத்தானே யன்றி பணம் சேர்க்க அன்று. பணம் நம்மிடம் அளவாக இருக்கும்வரை அது நமக்குப் பணியாளாய் ஏவல் செய்யும். அதுவே கோடிக்கணக்கில் சேர்ந்தால் நாம் அதற்கு அடிமையாகி அல்லல்பட வேண்டியதுதான். பணம் அளவாக இருக்கும் வரை அன்புடைய நண்பர் பலர் இருப்பர். பணம் வரைமுறை இன்றி சேரும்போது பகைவர் பெருகி நம்மை ஒறுப்பர். “வறுமை கொடியது; வளமையும் கொடியது” என தீபம் நா.பார்த்தசாரதி கூறுவது உண்மையிலும் உண்மை.

   எவ்வளவு நேர்மையான மனிதரையும் சூழல் கெடுத்து விடுகிறது. மோசமான நட்பு வட்டம் முதலில் தடுமாறச் செய்கிறது. பிறகு தடம் மாறச் செய்கிறது..

   மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
   இனந்தூய்மை தூவா வரும்

என்ற குறள் தீய நண்பர்களால் மனமும் கெடும் செய்யும் வேலையும் கெடும் என்று எச்சரிக்கிறது. இந்த எச்சரிக்கையை அலட்சியப்படுத்துவோர் வேலையையும் இழந்து அவமானப்பட்டு அல்லல்படுகிறார்கள்.

   நற்குடியில் பிறந்தவர்கள் இயல்பாகவே அறவழியில் வாழ்வார்கள். அவர்களை யாரும் கெடுக்க முடியாது. பொறுப்பாகவும் இருப்பார்கள்; “தீயவை தீயினும் அஞ்சப்படும்” என்னும் திருக்குறள் கருத்தை வாழ்வியல் கோட்பாடாகக் கொள்வார்கள். தீமைக்குத் துணைபோகாமல் அவற்றைச் சுட்டெரிக்கும் நெருப்பாகவும் இருப்பார்கள். இதையும் திருவள்ளுவர்தான் கூறுகிறார்.

அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்
குன்றுவ செய்தல் இலர்

   இப்படி நற்குடியில் தோன்றிய ஒருவர் அண்டை மாநிலமான கேரளாவில் அரசு தலைமைச் செயலராக உள்ளார். கேரளாவில் பல துறைகளில் பாங்குறப் பணியாற்றியவர். பிறகு நடுவண் அரசுப் பணிக்குச் சென்றார். கடந்த ஏப்ரல் மாதம் தலைமைச் செயலராகப் பதவியேற்றார்.

   அணுகுவதற்கு எளியவராக இருக்கின்றார். நேர்மையின் மொத்த உருவம் எனக் கட்சி வேறுபாடு இல்லாமல் காட்சிப்படுத்துகிறார்கள்.

    அரசு கொடுத்த பங்களாவை வேண்டாம் என மறுத்துவிட்டு தன் சொந்த வீட்டிலிருந்தே அலுவலகம் செல்கின்றார். வெளிப்படையான நிர்வாகத்தைச் செய்து காட்டுகிறார்.

 Where the mind is without fear the head is held high   என்று தாகூர் சொல்வதுபோல் தலைநிமிர்ந்து நிற்கிறார். பாரினில் யாருக்கும் அஞ்சாமல் அதே சமயம் எளிமையாகவும் பணிவாகவும் எவரிடமும் இனிய சொற்களைப் பேசி எல்லோரும் போற்றும்படி பணியாற்றுகின்றார்.

எஸ்.எம். விஜய ஆனந்த் ஐ,ஏ.எஸ் அவர் ஒரு

தமிழன் என்று சொல்லடா! தலை  நிமிர்ந்து நில்லடா!

ஆம். அவர் கன்னியாகுமரி அருகிலுள்ள தேங்காய்ப்பட்டணத்துக்காரர்.
1981-இல் நடந்த ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றிவாகை சூடியவர்.

  அவர் இருக்கும் திசை நோக்கி நின்று கையெடுத்துக் கும்பிடுகிறேன்.

பார்க்க:

http://www.thehindu.com/migration_catalog/article14200894.ece/alternates/FREE_300/20tvcgn02_Vijay+SMV-Photo.jpg.jpg

5 comments:

  1. போற்றுதலுக்கு உரிய மனிதர்

    ReplyDelete
  2. அய்யா, செய்தி நெடியதாக அமைந்துவிட்டது. சுருங்கக் கூற இயலவில்லை.
    படித்தவர்கள் பண்போடு நடந்து கொள்வர். பிறர் மனக்குறிப்பறிந்து அவர்களது வேண்டுகோள்களை நிறைவு செய்வர். படித்தவர்கள் தவறு செய்ய மாட்டார்கள் என்றெல்லாம் கடந்த காலங்களில் கேள்விப்பட்டிருக்கிறோம். அதன்படி நடந்தும் இருக்கின்றனர். அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் மக்களுக்காக வாழ்ந்த காலம் முற்றுப்பெற்றுவிட்டது. தற்பொழுது மக்களுக்காக எனக்குறிப்பிட்டு பதவி பெறுபவர்கள், அரசியல் தலைவர்களானாலும், அதிகாரிகளானாலும், அவர்கள் தவறாகக் குறிப்பிடவில்லை, தம் மக்கள்(தங்கள் பிள்ளைகள்) என்பதையே கூறியிருப்பார்கள் போலும். கடந்த காலத்தைப் பின்னோக்கிப் பார்த்தால் சுயநலமற்ற மக்களுக்காக வாழ்ந்த நல்லுள்ளங்களைப் பட்டியலிடலாம். முதலில் வெள்ளையன் என்றும் ஆங்கிலேயன் என்றும் கூறி அவனை வெளியேற்றினார்களே எதற்காக? நாங்களே திருடவேண்டும், நாங்களே சுறண்ட வேண்டும் தமிழனின் உழைப்பையும், ஊதியத்தையும் என்பதற்காக இருக்குமோ என்ற எண்ணம் வெளிப்படுகிறது. ஆங்கிலேயர்கள் காலத்தில் நீர் நிலைகள் கண்டறியப்பட்டு வேளாண்மைக்கு வழிவகுக்கப்பட்டது. முல்லைப்பெரியாறு அணைக்கட்டைக் கட்டிய திரு.பென்னிகுயிக் என்ன இம்மண்ணில் பிறந்தவரா? மேலைநாட்டில் பிறந்த அம்மாமனிதர் இங்குள்ள விவசாயிகளிடம் அணையை நிர்மானிக்க போதுமான நிதியைத் திரட்ட முயற்சித்தார். நிறைவேறவில்லை. ஆனால் அம்மனிதர் விடவில்லை தனது சொந்த ஊருக்குச் சென்று தனக்குச் சொந்தமான நிலபுலங்களை விற்றுப் பணமாக்கி இங்கு அணைகட்டினார். இன்றும் அங்கு வாழும் மக்கள் பென்னிக்குயிக்கிற்கு பொங்கல் வைத்து இறைவனாக வழிபடுகின்றனர். மதுரையில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்திற்கு பென்னிக்குயிக் வளாகம் எனப்பெயரிட்டுள்ளனர். தனக்காக வாழாமல், தன் பிள்ளைகளுக்காக வாழாமல் எங்கோ பிறந்து வளர்ந்து நம் மக்களுக்காக அணை கட்டினாரே அவர் மனிதர், மனிதரில் புனிதர். அவருக்கு நான் தலை வணங்குகிறேன். தூரத்தைக் கணக்கிட மைல் கல் அமைத்துக் கொடுத்த இராபர்ட் கிளைவ், மேட்டூர் நீர்த்தேக்கத்தை அமைத்த ஸ்டான்லி, ஊட்டியில் செயற்கை ஏரியை அமைத்த ஜான் சல்லிவன், அவரே அங்கு சிறந்த நூலகத்தையும் அமைத்துள்ளார். அந்நூலகம் ஜான்சல்லிவன் நூலகம் என அழைக்கப்படுகிறது. 1854இல் மதுரையை நகராட்சியாக்கி அங்குள்ள அகழிகளை அழித்து நகரை மேம்படுத்தத் திட்டமிட்டு செயல்படுத்திய ஜோகன்ஸ்பர்க், இவர்கள் எல்லாம் எதிர்காலத்திட்டமிட்டு செயல்படுத்திய மாவீரர்களல்லவா? இவர்கள் மக்களுக்காகத் திட்டமிட்டுச் செயல்படுத்திய திட்டங்களில் இருந்து திருடினார்கள், அதற்காகவே திட்டமிட்டார்கள் எனக் கூறிய வரலாறு உண்டா? என்ன தண்டனைகள் கடுமையாக்கப்பட்டால் குற்றங்கள் குறையும் என அநதமானில் காலாபானிச் சிறைசாலை அமைத்தது, வரி விதிப்பின் வாயிலாக மக்களைத் துன்புறுத்தியது வேண்டுமானால் குற்றமாக இருக்கலாம். அடுத்து சுதந்திர இந்தியாவின் சென்னை மாகாண முதலமைச்சராக இருந்தவர்களில் குறிப்பிடத்தகுந்தவர் கர்மவீரர் காமராசர். இவரும் நீர் நிலைகளை மேம்படுத்துவதில் கவனமாக இருந்தார். வைகை அணையைக் கட்டினார். கடலில் கலக்காத நதி வைகை. கையூட்டோ, ஆடம்பரமோ, பகட்டோ விரும்பாதவர். ஆனால், இன்று, அரசியல் தலைவர்கள் தான் அனைத்து நிலைகளிலும், அனைத்துப் பதவிகளையும் ”விலை” நிர்ணயம் செய்துவிட்டனர். இலை மறைக் காய் மறையாக இருந்த துணைவேந்தர்கள் பதவியை “விலை” வேந்தர்களாக்கி விட்டனர் என்ற செய்தியை 24-12-2016 தினமலர் நாளிதழில் படித்து மனம் நொந்து போனேன். அதுமல்ல விலையைக் கேட்டுத் தகுதியானவர்கள் ஒதுங்கிக்கொண்டனர் என்ற செய்தியும் அந்தப் பக்கத்திலேயே பிரசுரிக்கப் பட்டுள்ளது. இந்திய அமைச்சுப் பணித் தேர்வு எழுதிப் பணியமர்த்தப்படுபவர்கள், தங்களுக்குரிய மாவட்டத்திற்கு அனைத்து அதிகாரங்களும் வாய்க்கப்பெற்றவர்கள். இத்தகையோரில் சிலர் நேர்மையானவர்களாக வலம் வருகின்றனர். ”இலஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து” என்ற கொள்கையினை உடைய திரு.உ.சகாயம் போன்றவர்கள். இவர்களில் தற்பொழுது ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ள 12 இ.ஆ.ப., க்கள் பற்றிய விவரங்களைப் புகைப்படத்துடன் “புலனம்” வாயிலாகச் செல்லிடப்பேசியில் இடம்பெற்றுள்ளது. மிகுந்த வருத்தத்தைத் தருகிறது. நாட்டிற்குழைத்த நல்லவர்கள் ஒருபக்கம், நாட்டை வீழ்த்தும் பாதையை வகுப்பவர்கள் ஒருபக்கம். யாரைத் தான் நம்புவதோ பேதை நெஞ்சம், அம்மம்மா பூமியிலே யாவும் லஞ்சம்.
    பேராசிரியர் முனைவர் ரா.லட்சுமணசிங்
    கரூர்.

    ReplyDelete
  3. ஆங்காங்கே சில முன்னுதாரண மனிதர்களுக்கும் இருக்கிறார்கள் என்பதையறிந்து பெருமைப்பட்டுக்கொள்வோம்.

    ReplyDelete
  4. Very nice quotes from various literature!!!

    ReplyDelete