Wednesday, 13 September 2017

இரவில் தூக்கம் பகலில் ஊக்கம்

  தனி மனித வருமானம் மிகுதியாக உள்ள நாடு கனடா. வசதி வாய்ப்புகளுக்குப் பஞ்சமில்லை. இருந்தும் நூற்றுக்கு முப்பத்து மூன்று பேர்கள் இரவில் போதிய அளவுக்குத் தூக்கம் இல்லாமல் தவிக்கிறார்கள். இப்படித் தவிப்பவர்களில் பெண்களின் எண்ணிக்கை அதிகமாம். இப்படி ஒரு செய்தியை இன்றைய மெட்ரோ நியூஸ் நாளேட்டில் படித்ததும் என் சிந்தனைப் பறவைக்குச் சிறகுகள் முளைத்து விட்டன. இதன் விளைவுதான் இந்தப் பதிவு.

   சரி தூங்கி என்ன ஆகப்போகிறது என்கிறீர்களா? ஒழுங்காகத் தூங்காவிட்டால் பல பிரச்சனைகள் வரும். முதலில் பணியிடத்தில் கருத்தூன்றி வேலை செய்யமுடியாது. ஊக்கமும் உற்சாகமும் இருக்காது. கொட்டாவி கொட்டாவியாக வரும். பணியின்போது கொட்டாவி விடுதல் அருவருக்கத் தக்கது; கேவலமானது.

   தூக்கமின்மையால் மனநிலை ஒழுங்காக இருக்காது. பெற்றோரிடம் எரிந்து விழுவர்கள். பெற்றப் பிள்ளைகளிடம் காரணமின்றி கோபத்தைக் காட்டுவார்கள். பணியிடத்தில் உடன் பணியாற்றுவோரிடம் நல்லிணக்கம் இருக்காது. நடத்தை மாறுபாடு என்பது தவிர்க்க முடியாத அளவுக்குப் போய்விடும்.

  அது மட்டுமா? இரத்த ஓட்டம் பாதிக்கப்படும். சர்க்கரை, இரத்த அழுத்த அளவுகள் தாறுமாறாக இருக்கும். இரத்த அழுத்த வேறுபாட்டால் மூளை திறம்பட வேலை செய்யாது. எடுக்கும் முடிவுகள் தவறாக இருக்கும். சாலை விபத்துகள் ஏற்படுவதற்கு இதுதான் முக்கிய காரணம்.

   ஆர்வத்துடன் வேலை செய்யவும் ஆழ்ந்து தூங்கவும் உடலில் சரியான அளவில் ஹார்மோன்கள் சுரக்க வேண்டும். மனநலம் குறைந்தால் இவை சரியான அளவில், தரத்தில் சுரக்காது.

   மனநலம் குன்றுவதற்கு பல காரணங்கள் உள்ளன. இப்போது மக்களின் வாழ்க்கை முறைகள் மாறிவிட்டன. ஆண் பெண் வேறுபாடு இல்லாமல் குடிக்கிறார்கள்; புகைக்கிறார்கள். இரவில் தொலைக்காட்சிப் பெட்டிமுன் பழியாய்க் கிடக்கிறார்கள். மனித இனம் செல்லும் கையுமாகவே திரியும் செல்லினமாக மாறிவிட்டது. சமூக வலைத்தளங்கள் சுமூக வலைத்தளங்களாக இல்லை. தற்கொலைக்குத் தூண்டும் வகையில் தரங்கெட்டு விட்டன.

   அமைதியான மனமுடையோர் மட்டுமே அழகாக ஆழ்ந்து உறங்க முடியும். சரி போனது போகட்டும் இனி ஆழ்ந்து உறங்க என்ன வழி என்றுதானே கேட்கிறீர்கள்?

சொல்கிறேன்.

  தூக்கத்தின் முதல் எதிரி செல்போன் தான். அதை உறக்கநிலையில் வைத்தால்தான் நீங்கள் உறக்க நிலைக்குச் செல்ல முடியும். அடுத்ததாக மிக முக்கியமானது. சிலிப் ரிதம் என ஆங்கிலத்தில் சொல்லப்படும் உறக்க ஒழுங்கு என்பதாகும். வெளியூர்ப்பயணம் அல்லது நோயுற்ற நிலை தவிர்த்த மற்ற நாள்களில் குறிப்பிட்ட நேரத்தில் உறங்கச் செல்வதை உறுதிப்படுத்த வேண்டும். மறுநாள் விடுமுறை என்றால் இரவில் நீண்ட நேரம் கண் விழித்திருப்பது என்பது அறவே கூடாது. விடுமுறை நாள்களில் காலையில் கூடுதலாகக் கொஞ்சநேரம் தூங்கினால் தவறில்லை.

   தூங்கப் போகுமுன் புத்தகம் படிக்கலாமா? அப்படி தினம்தோறும் அரை மணி நேரம் படித்துவிட்டுத் தூங்குவது நல்லது. ஆனால் படுக்கையில் படுத்துக்கொண்டோ சாய்ந்து கொண்டோ படிப்பது கெட்டது; மிகவும் கெட்டது. செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களில் படிப்பது உடல் நலத்தை அதிலும் குறிப்பாக கண் நலத்தைக் கெடுக்கும். “கண்களை விற்று ஓவியம் வாங்கினால் கைகொட்டிச் சிரியாரோ” என்ற பாரதியின் பாடல் வரியை நீங்கள் படித்ததில்லையா?

   எரிச்சலோடும் கோபத்தோடும் துயரத்தோடும் படுக்கையில் விழுந்தால் தூக்கமா வரும்; கண்ணீர்தான் வரும். ஒரு சாதாரண கணினியைக் கூட நம் வேலை முடிந்ததும் சரியாக ஷட் டவ்ன் செய்கிறோம். ஆனால் பல்லாயிரம் மடங்கு சக்தியுள்ள மூளையை முறையாக   ஓய்வில் வைக்காமல் உறங்கச் சென்றால் எப்படித் தூக்கம் வரும்?

    இரவில் பல்துலக்கி, சிறுநீர் கழித்து, கைகால்களை கழுவிக்கொண்டு படுக்கைக்குச் செல்ல வேண்டும். நாள் முழுவதும் நம் செயல்களுக்குத் துணையாக இருந்த மூளையைப் பாராட்டி நன்றி சொல்லிவிட்டு, மற்ற எந்த நினைவும் இல்லாமல், உறக்கம் கண்களைத் தழுவட்டும் என்ற ஒரு நினைப்போடு மட்டும் படுக்கையில் படுத்து கண்களை மெல்ல மூடிக்கொள்ள வேண்டும்.

   இறை நம்பிக்கை உடையோர் தாம் வழிபடும் தெய்வத்தை மனதில் நிறுத்தி ஒரு நிமிட தியானம் செய்துவிட்டு உறங்கலாம்.

    முது நிலைப் படிப்பில் உளவியல் பட்டம் பெற்றவன் என்பதால் இப்படி எதையாவது எழுதிக்கொண்டிருப்பேன்.

படித்துவிட்டுத் தள்ளுவதும் கொள்ளுவதும் உங்கள் விருப்பம்.
............................................................
முனைவர் அ.கோவிந்தராஜூ, கனடாவிலிருந்து.

     

8 comments:

  1. அருமையான ஆலோசனைகள்
    எனக்கு இன்று தகவல் தொழில் நுட்பத்துறையில் பணியாற்றும் இளைஞர்கள் பற்றி மிகவும் கவலையாக உள்ளது
    இரவிலனில் ஆட்டம் பகலினில் தூக்கம்
    என இளமையைத்தொலைக்கும் அவர்களுக்கு என்ன சொல்வது ஐயா!

    ReplyDelete
  2. 15 ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு நிகழ்வு. இரவு 11.15 மணி இருக்கும். பத்திரிக்கை நண்பர் ஒருவர் என் ஆய்வு தொடர்பாக என்னை தொலைபேசியில் அழைத்துள்ளார். நல்ல உறக்கத்தில் அவருக்கு மறுமொழி அளித்தேன். நான் தந்த மறுமொழியில் தெளிவில்லை என்பதை நான் அறியவில்லை. மறுநாள் காலை அவர் தொடர்புகொண்டு முதல் நாளிரவு கேட்ட ஐயங்களைக் கேட்டார். அப்போது தெளிவாகக் கூற, அவர் அறிந்துகொண்டார். அப்போது அவர் வழக்கமாக அறிஞர்களும், ஆய்வாளர்களும் இரவு நெடுநேரம் விழித்துக்கொண்டும், படித்துக்கொண்டும் இருப்பார்கள் என்ற நிலையில் என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டதாகக் கூறினார். நான் அவரிடம் தினமும் எப்படியும் 10.00 மணிக்கு தூங்கச் சென்றிடும் பழக்கம் என்னிடம் உள்ளது என்றபோது வியந்தார். எங்கு களப்பணி சென்றாலும், எவ்வளவு படித்தாலும் எழுதினாலும், பேரன்களுடன் விளையாண்டாலும்கூட இரவு 10.00க்கு எனக்கு நித்திரை வந்துவிடும். தொடர்ந்து கடைபிடிக்கிறேன்.

    ReplyDelete
  3. அருமையான பதிவு! மிக மிக நல்ல பதிவு ஐயா. நல்ல தூக்கம் தான் ஒருவரை நல்ல மன நிலையிலும் மிகவும் மகிழ்ச்சியாகவும் வைத்திருக்கும். இரவு குறிப்பிட்ட நேரத் தூக்கம் மிகவும் அவசியம். எழுதுங்கள் ஐயா. நல்ல விஷயம்தானே!

    கீதா: ஐயா நீங்கள் முதுநிலைப் படிப்பில் உளவியல் படித்திருக்கிறீர்களா! வெகுச் சிறப்பு ஐயா..எனவே அது தொடர்பான பதிவுகள் எழுதுங்கள் ஐயா. மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

    நானும் உளவியல் புத்தகங்கள் பல வாசித்துள்ளேன். அதுவும் மன நோய் பற்றிய மருத்துவப் புத்தகங்களும் வாசித்துள்ளேன்... பட்டம் பெறவில்லை. நல்ல பதிவு ஐயா.

    ReplyDelete
  4. நல்ல பயனுள்ள பதிவு ஐயா!
    நன்றி!

    ReplyDelete
  5. நல்ல பயனுள்ள பதிவு ஐயா!
    நன்றி!

    ReplyDelete
  6. Discipline makes one's life happy and enjoyable;but now the present generation think differently.If one believes in God,he will correct in due course of time.Fundamental Qualities of anyone can never be changed.You keep on writing;it may correct someone,someday

    ReplyDelete
  7. நல்ல அறிவுரை - நீதிபதி மூ.புகழேந்தி

    ReplyDelete
  8. பிரச்சனையும் தீர்வும் தங்கள்பதிவில் அழகுற கூறியிருப்பீர்கள்.மிக்க நன்றி அய்யா.

    ReplyDelete